கர்நாடகா அணைகளில் உள்ள தண்ணீர் இருப்பை ஆய்வு செய்த ஆணையம், கடந்த 13-ம் தேதி, தமிழ்நாட்டுக்கு காவிரியிலிருந்து விநாடிக்கு 12,400 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசைக் கேட்டுக்கொண்டது. ஆனால், ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடகா நீர் தர மறுத்துவிட்டது. இந்த நிலையில், கடந்த 18-ம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு அடுத்த 15 நாள்களுக்கு விநாடிக்கு 5,000 கன அடி காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என நீர் அளவைக் குறைத்து காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டது. ஆனால், அதையும் எதிர்த்து கர்நாடகா அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட, மேலாண்மை வாரியத்தின் உத்தரவை ரத்து செய்ய முடியாது எனக் கூறிவிட்டது.

இந்த நிலையில்தான், தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறந்துவிடக் கூடாது எனக் கூறி கர்நாடகா மாநில பா.ஜ.க, மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போராட்டத்தில் கலந்துகொண்ட கர்நாடக முன்னாள் முதல்வரும், பா.ஜ.க தலைவருமான பசவராஜ் பொம்மை, “கர்நாடகாவில் போதுமான மழை இல்லை; இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடுவது எங்கள் மாநில நலனுக்கு எதிரானது. காவிரி கர்நாடகாவில்தான் உற்பத்தியாகிறது. எனவே, காவிரி கர்நாடகாவுக்கே சொந்தம். இது தமிழகத்தின் சொத்து அல்ல. ஆனால், அவர்கள் காவிரி நீரை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்!” என எதிர்த்துப் பேசினார். அதேபோல, கர்நாடகாவைச் சேர்ந்த விவசாய அமைப்புகளும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கக் கூடாது எனக்கூறி முழுநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தியிருக்கின்றன. தொடர் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்திருக்கின்றன.

இது குறித்துப் பேசிய கார்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், “காவிரி விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை. நாங்கள் மேக்கேதாட்டூ அணை திட்டத்துக்காக பாதயாத்திரை நடத்தினோம். விவசாய மக்களைக் காப்பாற்ற எங்கள் காங்கிரஸ் அரசு தயாராக இருக்கிறது. எதிர்க்கட்சிகள் எங்கள்மீது தேவையில்லாமல் குறை சொல்லிக்கொண்டிருக்கின்றன; இதில் அரசியல் செய்துகொண்டிருக்கின்றன. தற்போது நாங்கள் மேல்முறையீடு செய்தாலும், காவிரி மேலாண்மை ஆணையத்தை அணுகுங்கள் என்றுதான் உச்ச நீதிமன்றம் கூறும். நீங்கள் போராட்டம் நடத்துங்கள். ஆனால் முழு கடை அடைப்பு நடத்தினால் பொதுமக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். மேலும், மேக்கேதாட்டூ திட்டத்தைச் செயல்படுத்த நாங்கள் ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கிறோம். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம். எல்லாவற்றையும் பேசித் தீர்த்துகொள்ளலாம். மத்திய அரசு எப்போது தேதி நிர்ணயம் செய்கிறதோ, அப்போது நாங்கள் டெல்லிக்குச் செல்ல தயாராக இருக்கிறோம்!” என்றிருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com
