இந்திய சந்தையில் 10,000 கோடி முதலீடு செய்யும் 4 ஐரோப்பிய நாடுகள் – பலன்கள் என்ன?

இந்திய சந்தையில் 10,000 கோடி முதலீடு செய்யும் 4 ஐரோப்பிய நாடுகள் - பலன்கள் என்ன?

இந்தியா: 100 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் ஐரோப்பிய நாடுகள் – வேலைவாய்ப்புகள் அதிகரிக்குமா?

பட மூலாதாரம், PIYUSHGOYAL/X

இந்தியா நான்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒரு புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் அடுத்த 15 ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த நான்கு ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவில் 100 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யும் என எக்ஸ் பக்கத்தில் நாட்டின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, லைகென்ஸ்டைன் ஆகிய ஐரோப்பிய ஒன்றியத்தில் பங்கு வகிக்காத நான்கு நாடுகளுடன் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள் 2008ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் 2018 நவம்பரில் நிறுத்தப்பட்டன.

இந்த ஒப்பந்தம் முடிவாவதற்கு முன்பு மொத்தம் 21 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தன. இறுதியாக தற்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தம் ஏற்றுமதி, இறக்குமதியை இடையூறின்றி மேற்கொள்வதற்கான வர்த்தக உடன்படிக்கையின் அடிப்படையில் ஒரு பெரிய ஒப்பந்தமாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், இதில் முதலீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்ட அறிக்கையில், “இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும்,” என்று தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் குறித்து நார்வேவின் வர்த்தக அமைச்சர் ஜான் கிறிஸ்டியன் வாஸ்ட்ரே பேசுகையில், “இந்தியா-நார்வே உறவுகள் எப்போதும் சிறந்த முறையில் உள்ளன,” என்றார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா பெரும் முதலீட்டைப் பெறும் அதேவேளையில், ஐரோப்பிய நாடுகளின் பதப்படுத்தப்பட்ட உணவு, பானங்கள், மின்னணு இயந்திரங்கள் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரங்களில் ஒன்றான இந்தியாவின் 140 கோடி மக்களின் சந்தைக்கு எளிதாக வரும்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம்

இந்தியா: 100 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் ஐரோப்பிய நாடுகள் – வேலைவாய்ப்புகள் அதிகரிக்குமா?

பட மூலாதாரம், PIYUSHGOYAL/X

இது மருந்து, மருத்துவ உபகரணங்கள், உணவு, ஆராய்ச்சி, மேம்பாடு போன்ற வணிகங்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் என இந்த ஒப்பந்தத்தில் பியூஷ் கோயல் கூறினார்.

இந்தியா, EFTA நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் ஒரு வரலாற்றுத் தருணம் என்று பிதமர் மோதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“பல அம்சங்களில் கட்டமைப்பு வேறுபாடுகள் இருந்தபோது, நமது பொருளாதாரங்களில் அனைத்து நாடுகளுக்கும் வெற்றி என்ற சூழ்நிலைகளை உருவாக்குவதற்கான ஒருங்கிணைப்பு உள்ளது. நான்கு நாடுகளும் வெவ்வேறு விஷயங்களில் உலகளாவிய தலைமைத்துவம் அடைந்துள்ளன. நிதி சேவைகள், வங்கி, போக்குவரத்து, தளவாடங்கள், மருந்து, இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னணியில் இருக்கும் இந்த நாடுகள் எங்களுக்கு ஒத்துழைப்பின் புதிய கதவுகளைத் திறக்கும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

நார்வேவின் வர்த்தக அமைச்சர் ஜான் கிறிஸ்டியன் வாஸ்த்ரே செய்தியாளர் சந்திப்பின்போது, “இது உண்மையிலேயே வரலாற்று நூல்களில் பதிவு செய்யப்பட வேண்டிய நாள். நிலையான வணிகம் செய்வதற்கான புதிய வழி இது. இந்த ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட நோக்கங்களை அடைய, முதலீட்டை அதிகரிக்க, வேலைகளை உருவாக்க நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்,” என்று கூறினார்.

இந்தியாவுக்கு என்ன லாபம்?

இந்தியா: 100 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் ஐரோப்பிய நாடுகள் – வேலைவாய்ப்புகள் அதிகரிக்குமா?

பட மூலாதாரம், Getty Images

ஒப்பந்தங்கள் கையெழுத்தான நான்கு நாடுகளில், இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சுவிட்சர்லாந்து உள்ளது. 2022-23ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 17.14 பில்லியன் டாலராக இருந்தது. இந்த நான்கு நாடுகளுடனான ஒருங்கிணைந்த வர்த்தகம் 18.66 பில்லியன் டாலராக இருந்தது. இந்நிலையில், தற்போது கையெழுத்தாகியுள்ள இந்தப் புதிய ஒப்பந்தத்தை ஒரு மைல்கல் என்று சுவிஸ் அரசு கூறியுள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, சுவிஸ் கைக்கடிகாரங்கள், சாக்லேட்கள், பிஸ்கட்கள் போன்ற உயர்தர சுவிஸ் தயாரிப்புகளுக்கான சுங்க வரியை இந்தியா சிறிது காலத்திற்கு நீக்கும். இந்த ஒப்பந்தத்தின்படி, சுவிட்சர்லாந்தில் இருந்து தங்கம் தவிர சுமார் 95% தொழில்துறை இறக்குமதிகள் மீதான சுங்க வரிகளை இந்தியா உடனடியாகவோ அல்லது காலப்போக்கிலோ நீக்கும்.

இதன்மூலம், சூரை மீன், காலா மீன், காபி, பல்வேறு வகையான எண்ணெய்கள், பல வகையான இனிப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற கடல் உணவுகளின் விலை இந்தியாவில் குறையும். இதுதவிர, ஸ்மார்ட்ஃபோன்கள், சைக்கிள் பாகங்கள், மருத்துவ உபகரணங்கள், சாயங்கள், ஜவுளிகள், எஃகு பொருட்கள், இயந்திரங்களின் விலை குறைவாக இருக்கும்.

உலக வர்த்தக ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் அஜய் ஸ்ரீவஸ்தவா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “சுவிஸ் பொருட்களின் விலை இந்தியாவில் மலிவாக இருக்கும். ஏனெனில் அவற்றின் மீது விதிக்கப்பட்ட வரிகள் நீக்கப்படும். 5 டாலர் முதல் 15 டாலர் வரையிலான ஒயின்கள் மீதான வரி சுமார் 150 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக குறைக்கப்படும்,” என்று தெரிவித்தார்.

ஸ்ரீவஸ்தவாவின் கூற்றுப்படி, வரும் ஆண்டுகளில் கட்-பாலிஷ் வைரங்களுக்கான ஐந்து சதவீத வரி 2.5 சதவீதமாகக் குறைக்கப்படும்.

முதலீடுகள், வேலைவாய்ப்புகள்

இந்தியா: 100 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் ஐரோப்பிய நாடுகள் – வேலைவாய்ப்புகள் அதிகரிக்குமா?

பட மூலாதாரம், PIYUSHGOYAL/X

வரும் 15 ஆண்டுகளில் இந்த நான்கு நாடுகளும் இந்தியாவில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்வதன் மூலம் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பதால் இந்த ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது என அழைக்கப்படுகிறது. இதில், இந்த நாடுகள் நான்கும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன.

தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில், சுவிட்சர்லாந்தின் பொருளாதார விவகார அமைச்சர் ஹெலன் பட்லிகர் ஆர்டிடா, “சுவிஸ் நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் இந்தியாவில் அதிக ஆர்வம் கொண்டுள்ளன என்பதை நான் உங்களுக்குச் சொல்ல முடியும்,” என்றார்.

“நாங்கள் ஒரு மதிப்பீட்டின் மூலம் 100 பில்லியன் டாலர்கள் என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளோம். இதற்காக, 2022ஆம் ஆண்டில் 10.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணிப்புகள் மற்றும் இங்குள்ள மிகப்பெரிய சந்தை ஆகியவை இதை வரவழைப்பதற்கான அடிப்படை.”

“இந்த நான்கு ஐரோப்பிய நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியத்தில் பங்கு வகிக்கும் பிற அண்டை நாடுகளுக்கு முன்பே இந்த ஒப்பந்தத்தை உறுதி செய்ய முடிந்தது. இது இந்தியா மீதான மற்ற நாடுகளின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஆனால், இந்த முதலீடு சுவிஸ் அரசால் செய்யப்படாது, மாறாக தனியார் நிறுவனங்கள் அதைச் செய்யும் என்பதை நான் மிகத் தெளிவாகக் கூற விரும்புகிறேன்,” என்றும் அவர் கூறினார்.

இந்தியா: 100 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் ஐரோப்பிய நாடுகள் – வேலைவாய்ப்புகள் அதிகரிக்குமா?

பட மூலாதாரம், Getty Images

“சில காரணங்களால் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய முடியாமல் பொனால், நாங்கள் திரும்பிச் சென்றுவிடுவோம்,” என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் குறித்துப் பேசிய சுவிட்சர்லாந்தின் பொருளாதார அமைச்சர் கய் பார்மெலின், இந்தியா “வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான மகத்தான வாய்ப்புகளை” வழங்கும் நாடு என்றார்.

இந்த ஒப்பந்தம் மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் துறைக்கும் பயனளிக்கும். இந்திய ஏற்றுமதியாளர்களும் இந்த நாடுகளின் சந்தைகளுக்கு நல்ல அணுகலைப் பெறுவார்கள்.

இந்த ஒப்பந்தத்தில் அரசு கொள்முதல், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒத்துழைப்பு, வர்த்தக விலக்குகள், அறிவுசார் சொத்து பாதுகாப்பு உள்ளிட மொத்தம் 14 அத்தியாயங்கள் உள்ளன. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மறுபரிசீலனை செய்வதற்கான ஏற்பாடு உள்ளது.

முதல் மதிப்பாய்வுக்குப் பிறகு, EFTA மற்றும் இந்தியா ஆகிய இருதரப்பினரும் ஒவ்வோர் இரண்டு ஆண்டுகளுக்கும் ஒப்பந்தத்தை மதிப்பாய்வு செய்யும். இந்த ஒப்பந்தம் எப்போது நடைமுறைக்கு வரும்?

இந்தக் கேள்விக்கு பதிலளித்த ஆர்டிடா தி இந்து நாளிதழிடம், “ஒவ்வொரு நாட்டிற்கும் வெவ்வேறு காலங்கள் உள்ளன. சுவிட்சர்லாந்தில் இலையுதிர்க்கால அமர்வில் நாடாளுமன்றத்தில் சமர்பிப்போம். இந்த ஆண்டு இறுதிக்குள் இது நடைமுறைக்கு வரும் என நம்புகிறோம். மீதமுள்ள EFTA நாடுகளும் அதற்குள் தங்கள் செயல்முறைகளை நிறைவு செய்யும் என நான் நினைக்கிறேன்,” என்று கூறினார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *