
பட மூலாதாரம், Getty Images
டெல்லியில் எதிர்வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் ஜி-20 மாநாட்டுக்காக அரசும், காவல்துறையும் தயார் நிலையில் உள்ளன.
இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்களும், இந்நடுகளைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
இந்நிலையில், ஜி-20 அமைப்பு என்றால் என்ன? இது ஏன் உருவாக்கப்பட்டது? இந்த மாநாட்டின் பொருளாதார, அரசியல் முக்கியத்துவம் என்ன? இந்த மாநாட்டை நடத்துவதால் இந்தியாவுக்கு என்ன பயன் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
ஜி-20 என்றால் என்ன, அது ஏன் உருவாக்கப்பட்டது?
‘ஜி-20’ என்ற பெயரிலிருந்தே தெளிவாகத் தெரிவதுபோல, இது 20 நாடுகளின் குழுவாகும்.
1999-ம் ஆண்டு ஆசியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, அனைத்து நாடுகளின் நிதி அமைச்சர்களும் மத்திய வங்கி ஆளுநர்களும் ஒன்றிணைந்து உலகப் பொருளாதாரம் மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து விவாதிக்கக்கூடிய ஒரு மன்றத்தை உருவாக்க நினைத்தனர்.
அதற்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகு, 2007-இல், பொருளாதார மந்தநிலையின் நிழல் உலகம் முழுவதும் பரவியது. அத்தகைய சூழ்நிலையில், நிதியமைச்சர்கள் மட்டத்தில் இருந்த ஜி-20 குழு மேம்படுத்தப்பட்டு, அது நாடுகளின் தலைவர்களை உள்ளடக்கியக் குழுவாக மாற்றப்பட்டது.
அனைத்து நாடுகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள்.
இந்த வகையில், ஜி-20 அமைப்பின் முதல் கூட்டம், 2008ல், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்தது. இதுவரை மொத்தம் 17 கூட்டங்கள் நடந்துள்ளன. இதன் 18வது கூட்டத்தைதான் இந்தியா நடத்த உள்ளது.
இந்தக் குழுவின் கவனம் பொருளாதாரம் தொடர்பான பிரச்சினைகளை விவாதிப்பதாக இருந்தாலும், காலப்போக்கில் அதன் நோக்கம் விரிவடைந்து, நிலையான வளர்ச்சி, சுகாதாரம், விவசாயம், எரிசக்தி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் ஊழல் எதிர்ப்பு போன்ற விஷயங்களும் இதில் சேர்க்கப்பட்டன.

பட மூலாதாரம், Reuters
ஒவ்வொரு ஆண்டும் இக்குழுவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நாடு சில நாடுகளையும் அமைப்புகளையும் விருந்தினர்களாக அழைக்கிறது
ஜி-20 குழுவின் அதிகாரம் என்ன?
இக்குழுவில் இடம் பெற்றுள்ள நாடுகளின் பெயர்களைப் பார்த்தாலே இந்தக் குழுவின் பலம் என்னவென்று நமக்குத் தெரியும்.
ஜி-20 குழுவில் அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சௌதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து ஆகிய 19 நாடுகள் உள்ளன. இவற்றோடு ஐரோப்பிய ஒன்றியம் இந்தக் குழுவில் 20வது உறுப்பினராக உள்ளது.
இது தவிர, ஒவ்வொரு ஆண்டும் இக்குழுவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நாடு சில நாடுகளையும் அமைப்புகளையும் விருந்தினர்களாக அழைக்கிறது.
இந்த முறை தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியா, வங்கதேசம், எகிப்து, மொரிஷியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின், மற்றும் ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஜி-20 குழுவின் உறுப்பு நாடுகள், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதமும், உலக வர்த்தகத்தில் 75 சதவீதமும், உலக மக்கள் தொகையில் 2/3 பங்கையும் அதன் உறுப்பு நாடுகள் கொண்டிருப்பதில் இருந்து இதன் வலிமையை நாம் மதிப்பிட முடியும்.
இவ்வாறான நிலையில் இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானம் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.
ஜி-20 எவ்வாறு செயல்படுகிறது?
எந்த நாடு ஜி-20யின் தலைவர் பதவியில் இருக்கிறதோ, அந்த ஆண்டில் அந்நாடு ஜி-20 கூட்டங்களை ஏற்பாடு செய்கிறது.
ஜி-20 இரண்டு தடங்களில் செயல்படுகிறது.
ஒன்று அனைத்து நாடுகளின் நிதி அமைச்சர்களும் மத்திய வங்கி ஆளுநர்களும் இணைந்து செயல்படும் நிதித் தடம் – Finance Track.
இரண்டாவது ஷெர்பா டிராக் – Sherpa Track. இதில் உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள் இடம்பெறுவர். இதில் விவசாயம், ஊழல் எதிர்ப்பு, காலநிலை, டிஜிட்டல் வர்த்தகம், கல்வி, வேலைவாய்ப்பு, ஆற்றல், சுற்றுச்சூழல், ஆரோக்கியம், சுற்றுலா, வர்த்தகம், மற்றும் முதலீடு ஆகியவை பற்றி விவாதிக்கப்படும்.
ஜி20 தலைவர் பதவியை ஒரு நாடு எப்படிப் பெறும்?
இது Troika எனப்படும் குழுவால் தீர்மானிக்கப்படுகிறது. இது உறுப்பினர் நாடுகளின் கடந்த, தற்போதைய மற்றும் எதிர்கால ஜனாதிபதிகளை உள்ளடக்கியது.

இந்தியாவிலிருக்கும் தொழில்நுட்ப முன்னேற்றம், உட்கட்டமைப்பு, மற்றும் திறன்மிக்க மனிதவளம் ஆகியவற்றை இந்தச் சர்வதேச நாடுகள் அறிந்துகொள்ள இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு என்கிறார் பொருளாதார ஆலோசகர் சோம வள்ளியப்பன்
ஜி20 மாநாட்டால் இந்தியாவுக்கு என்ன பயன்?
ஜி-20 மாநாட்டின் பொருளாதார முக்கியத்துவத்தையும், இது இந்தியாவுக்கு எத்தகைய பொருளாதார மேம்பாட்டினை வழங்கும் என்பதையும் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ், பொருளாதார ஆலோசகர் சோம வள்ளியப்பனிடம் பேசியது.
ஜி-20 நாடுகள் உலகின் 85% ஜி.டி.பி.யையும், 75% சர்வதேச் வர்த்தகத்தையும், 70% உலக மக்கள்தொகையையும் உள்ளடக்கியதாகக் கூறிய அவர், இத்தகைய ஒரு மாநாடு இந்தியாவில் நடப்பது, இந்தியாவிலிருக்கும் தொழில்நுட்ப முன்னேற்றம், உட்கட்டமைப்பு, மற்றும் திறன்மிக்க மனிதவளம் ஆகியவற்றை இந்தச் சர்வதேச நாடுகள் அறிந்துகொள்ள ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு என்றார்.
மேலும் பேசிய அவர், “இது இரண்டு முக்கிய வழிகளில் இந்தியாவுக்குப் பயனுள்ளதாக இருக்கும். ஒன்று, இது இந்தியாவின் பலத்தையும், இந்தியா அடைந்திருக்கும் முன்னேற்றத்தையும் உலக நாடுகள் அறிந்துகொள்ள ஒரு சிறந்த வழியாக இருக்கும். இரண்டாவது, இந்தியாவின் நேர்மறையான பிம்பத்தை வலுப்படுத்தும்,” என்றார்.
ஜி20 மாநாட்டால் சர்வதேச அரசியலில் இந்தியா பயன் பெறுமா?
இந்த மாநாடு தொடர்பாக இதுவரை ஜி-20 நாடுகள் பங்குபெற்ற 18 அமைச்சரவைக் கூட்டங்கள், 80 செயல் குழு கூட்டங்கள், 33 எங்கேஜ்மென்ட் குழு கூட்டங்கள் என இந்தியாவின் 56 வெவ்வேறு இடங்களில் பல கூட்டங்களும் சந்திப்புகளும் நடைபெற்றதாகக் கூறுகிறார் வள்ளியப்பன்.
“இதற்காக சர்வதேச நாடுகளைச் சேர்ந்தவர்களோடு இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பல வழிகளில் தொடர்பில் இருந்திருப்பார்கள். இது இந்தியா மீதான சர்வதேசப் பார்வையை அதிகப்படுத்தும். மேலும் வேலைவாய்ப்பு, ஏற்றுமதி, வெளிநாடுகளில் தொழில் துவங்குதல் ஆகியவற்றுக்கு இது உதவும்,” என்கிறார் அவர்.
கடந்த ஒரு வருடமாக தனது ஜி-20 தலைமைப் பொறுப்பை இந்தியா சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டதாகக் கூறும் வள்ளியப்பன், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் உறுப்பினர்களாக இருக்கும் இக்குழுவின் தலைமைப் பொறுப்பில் இருப்பது மிகப்பெரிய வாய்ப்பு என்கிறார்.
“அரசியல் ரீதியாக உலக நாடுகள் பிளவுபட்டுக் கிடக்கையில், இதுபோன்ற ஒரு தலைமைப் பொறுப்பின் மூலம், உலக நாடுகளும், இந்தியாவின் அண்டை நாடுகளும் இந்தியப் பிரதமரும் நிதியமைச்சரும் பேசுவதைக் கூர்ந்து கவனிப்பார்கள். இந்த அதிகாரம் இந்தியாவிடம் இருப்பது அரசியல் சர்வதேச அரசியல் ரீதியாகவும் நமக்குப் பயனுள்ளதாக இருக்கும்,” என்கிறார் வள்ளியப்பன்.

மூன்றாம் உலக நாடுகள், தீவு நாடுகள், மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் ஆகியவற்றின் சர்வதேசக் குரலாக இந்தியா இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் பரவலாக இருப்பதாகக் கூறுகிறார் சர்வதேசிய அரசியல் துறையின் நிபுணர் பெர்னார்ட் டி சாமி
வளர்ந்து வரும் நாடுகளின் குரலாக இந்தியா பார்க்கப்படுகிறதா?
ஜி-20ம் மாநாட்டின் சர்வதேச அரசியல் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசிய சர்வதேசிய அரசியல் துறையின் நிபுணரும் சமூக அறிவியல் ஆய்வாளருமான பெர்னார்ட் டி சாமி, இது பல நாடுகள் ஒன்றாகக் கூடும் மாநடாக இருப்பினும், இரு நாடுகள் தனித்தனியே தங்களுக்குள் என்ன மாதிரியான விவாதங்களை முன்னெடுக்கின்றன என்பதைப் பொறுத்தே தனிப்பட்ட நாடுகளுக்கான அடைவுகள் இருக்கும் என்றார்.
“உதாரணமாக இந்தியா, அமெரிக்காவுடனும் மற்ற நாடுகளுடனும் தனிப்பட்ட முறையில் என்ன பேசுகிறது என்பதைப் பொறுத்து இந்தியாவுக்கான அடைவுகள் இருக்கும்,” என்றார்.
அதேபோல், மூன்றாம் உலக நாடுகள், தீவு நாடுகள், மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் ஆகியவற்றின் சர்வதேசக் குரலாக இந்தியா இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் பரவலாக இருப்பதாக சாமி கூறுகிறார். இதற்குச் சான்றாக, “ஜி-20 தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியா ஜி-20 கூட்டமைப்பில் இல்லாத நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கும் அதிகாரம் பெற்றது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, வங்கடேசம், எகிப்து, நைஜீரியா போன்ற நாடுகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்திருக்கிறது,” என்கிறார் சாமி.
மேலும் பேசிய அவர், BRICS கூட்டமைப்பு விரிவாக்கப்பட்டது போலவே, ஜி-20 கூட்டமைப்பும் விரிவாக்கப்படவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதாகச் சொல்கிறார் சாமி.
“முன்னர் ஜி-20 கூட்டமைப்பின் உறுப்பினர் நாடுகள் தங்களுக்குள் உலகப் பொருளாதாரத்தின் 90%-த்தை வைத்திருந்தனர். ஆனால் இப்போது அது 75%-ஆகக் குறைந்திருக்கிறது. இதனால், ஜி-20 கூட்டமைப்பின் பொருளாதார அதிகாரத்தை மேம்படுத்த, பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டுவரும் நாடுகளைச் சேர்க்க வெண்டும் என்ற பார்வையும் இருக்கிறது,” என்கிறார் அவர்.
உதாரணத்திற்கு, போலாந்து, நைஜீரியா, தாய்லாந்து, ஆகிய நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ந்து வருகிறது, அந்நாடுகளை ஏன் ஜி-20 கூட்டமைப்பில் சேர்க்கக்கூடாது என்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுவதாகக் கூறுகிறார் சாமி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்