பட மூலாதாரம், RSarathKumar/X
சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.கவுடன் இணைத்திருக்கிறார். தமிழக அரசியல் வரலாற்றில் இதுபோல இணைக்கப்பட்ட கட்சிகளுக்கு என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது.
திரைக்கலைஞர் சரத்குமார் கடந்த 2007ஆம் ஆண்டில் தான் துவங்கிய சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியை, 17 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ.கவுடன் இணைத்திருக்கிறார்.
தமிழக அரசியல் வரலாற்றில் இப்படி கட்சிகள் துவங்கப்படுவதும், பின்னர் வேறொரு பெரிய கட்சியுடன் இணைக்கப்படுவதும் புதிதல்ல. தமிழ்நாட்டில் சமத்துவ மக்கள் கட்சியைப் போல பெரிய கட்சியில் கரைந்த சில கட்சிகளின் பட்டியல் இது.
தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி (Tamilnadu Toilers’ Party)
பட மூலாதாரம், Getty Images
சி. ராஜகோபாலாச்சாரி
தென்னாற்காடு மாவட்டத்திலும் சேலம் மாவட்டத்திலும் செல்வாக்குடன் இருந்த எஸ்.எஸ். ராமசாமி படையாச்சி 1951இல் இந்தக் கட்சியை துவங்கினார். 1952இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க ஆதரவுடன் இந்தக் கட்சி போட்டியிட்டது.
நாடாளுமன்றத் தேர்தலில் 4 இடங்களையும் சட்டமன்றத் தேர்தலில் 19 இடங்களையும் இந்தக் கட்சி கைப்பற்றியது. தி.மு.க ஆதரவுடன் வெற்றி பெற்றிருந்தாலும் தேர்தல் முடிந்த பிறகு, சி. ராஜகோபாலாச்சாரி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு ஆதரவளித்தது.
இந்தக் கட்சியை 1954இல் காங்கிரசுடன் இணைத்த ராமசாமி படையாட்சி, காமராஜரின் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சரானார். 1962இல் காங்கிரசில் இருந்து விலகி மீண்டும் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை உருவாக்கினார் ராமசாமி படையாட்சி.
அப்போது நடந்த தேர்தலில் சுதந்திரா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். ஆனால் அத்தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து அவர் கட்சியை மீண்டும் காங்கிரசுடன் இணைத்துவிட்டார்.
காமன்வீல் கட்சி
வட ஆற்காடு, செங்கல்பட்டு மாவட்டங்களில் செல்வாக்குடன் இருந்த எம்.ஏ. மாணிக்கவேலு நாயகரால் 1951இல் துவங்கப்பட்ட கட்சி இது. உழைப்பாளர் கட்சியைப் போலவே இந்தக் கட்சியும் தி.மு.க ஆதரவுடன் போட்டியிட்டது.
நாடாளுமன்றத் தேர்தலில் 3 இடங்களையும் சட்டமன்றத் தேர்தலில் 6 இடங்களையும் இந்தக் கட்சி கைப்பற்றியது. உழைப்பாளர் கட்சியைப் போலவே சி. ராஜகோபாலாச்சாரி தலைமையிலான அரசுக்கு காமன்வீல் கட்சி ஆதரவளித்தது.
சி. ராஜகோபாலாச்சாரியின் அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சர் பதவி எம்.ஏ. மாணிக்கவேலுவுக்கு அளிக்கப்பட்டது. 1954இல் காமராஜர் முதலமைச்சரான போது விற்பனை வரித்துறையும் கூடுதலாக அளிக்கப்பட்டது. 1954இல் இந்தக் கட்சி காங்கிரசுடன் இணைக்கப்பட்டது.
தமிழ் தேசியக் கட்சி
பட மூலாதாரம், Indian National Congress/Facebook
ஈ.வெ.கி. சம்பத்
ஈ.வெ.கி. சம்பத்தால் 1961இல் தொடங்கப்பட்ட கட்சி இது. பெரியாரின் அண்ணன் மகனான ஈ.வெ.கி. சம்பத், திராவிடர் கழகத்தில் செயல்பட்டு வந்தார். 1949இல் திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறிய சி.என். அண்ணாதுரை, திராவிட முன்னேற்றக் கழகத்தைத் துவங்கியபோது அந்தக் கட்சியில் இணைந்துகொண்டார்.
தி.மு.கவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும் உருவெடுத்தார். ஆனால், 1961இல் அவருக்கு கட்சிக்குள்ளும் தலைவர்களுடனும் முரண்பாடுகள் ஏற்பட்டன. இந்த முரண்பாடுகள் சம்பத்திற்கும் அண்ணாவுக்கும் இடையிலான முரண்பாடுகளாகவும் மாறின.
இதையடுத்து 1961 ஏப்ரல் 2வது வாரத்தில் தி.மு.கவில் இருந்து சம்பத் வெளியேறினார். கண்ணதாசன், எம்.பி. சுப்பிரமணியன் ஆகியோருடன் இணைந்து தமிழ் தேசியக் கட்சி என்ற கட்சியை ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கினார் சம்பத். சிவாஜி கணேசன், பழ. நெடுமாறன் ஆகியோரும் இந்தக் கட்சியில் இணைந்தனர்.
கடந்த 1962ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 9 இடங்களில் போட்டியிட்ட இந்தக் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. இதையடுத்து 1964இல் சம்பத் தன் கட்சியை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார்.
மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம்
கடந்த 1977ஆம் நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. அபார வெற்றிபெற, தி.மு.க. படுதோல்வியடைந்தது. இதையடுத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் நெடுஞ்செழியன், ராசாராம், மாதவன், ப.உ.சண்முகம் போன்றவர்கள், மு. கருணாநிதி கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்று கலகக் குரல் எழுப்பினர்.
பிறகு இவர்கள் இணைந்து மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை உருவாக்கினர். இதன் பொதுச் செயலாளராக நெடுஞ்செழியனும் துணை பொதுச் செயலாளராக ராசாராமும் இருந்தனர். 1977ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் தி.மு.க. ஆதரவளித்தது. தேர்தல் முடிந்த பிறகு இந்தக் கட்சி அ.தி.மு.கவில் இணைக்கப்பட்டது.
எம். ஜி. ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
பட மூலாதாரம், Su.Thirunavukkarasar/X
சு. திருநாவுக்கரசு
அ.தி.மு.கவில் இருந்த சு. திருநாவுக்கரசு ஜெயலலிதாவுடன் கொண்டிருந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக, எம்.ஜி.ஆர். அண்ணா தி.மு.கவை துவங்கினார். 1998இல் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து மூன்று இடங்களில் போட்டியிட்ட இந்தக் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை.
பின்னர் 1999இல் தி.மு.க. இடம்பெற்றிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட இந்தக் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. 2001இல் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த இந்தக் கட்சி மூன்று இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. 2002இல் இந்தக் கட்சி பா.ஜ.கவுடன் இணைக்கப்பட்டது.
இதற்கு முன்பாக, அண்ணா புரட்சித் தலைவர் தமிழக முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை நடத்தி வந்தார் திருநாவுக்கரசு. அந்தக் கட்சி 1991ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு, இரு இடங்களில் வெற்றிபெற்றது. பிறகு அ.தி.மு.கவில் இணைக்கப்பட்டது.
நமது கழகம்
இந்தக் கட்சி முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரத்தால் ஆரம்பிக்கப்பட்டது. எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்த எஸ்.டி. சோமசுந்தரம், 1984இல் திடீரென அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து நமது கழகம் என்ற கட்சியைத் துவங்கினார் எஸ்.டி. சோமசுந்தரம். திருச்சியில் மிகப் பெரிய மாநாடு ஒன்றையும் நடத்தினார். 1984இல் நடந்த தேர்தலில் போட்டியிட்ட இந்தக் கட்சி எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. இருந்தாலும் தொடர்ந்து தீவிரமான அரசியல் செயல்பாட்டில் ஈடுபட்டது இந்தக் கட்சி.
தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக 1985இல் மதுரையில் மிகப் பெரிய ரயில் மறியல் போராட்டத்தை நடத்தினார். மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த எம்.ஜி.ஆர். 1987இல் திரும்பியபோது அவரைச் சென்று சந்தித்தார் எஸ்.டி.எஸ். அதற்குப் பிறகு நமது கழகம் அ.தி.மு.கவுடன் இணைக்கப்பட்டது.
பட மூலாதாரம், G.K.Vasan/X
தமிழ் மாநில காங்கிரஸ்
கடந்த 1996ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது, அ.தி.மு.க. மீது கடுமையான அதிருப்தி இருந்த நிலையில், அந்தக் கட்சியுடன் கூட்டணி தேவையில்லை என தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால், அப்போதைய காங்கிரஸ் கட்சித் தலைவரும் பிரதமருமான பி.வி. நரசிம்மராவ், அ.தி.மு.கவுடனேயே கூட்டணி தொடரும் என அறிவித்தார்.
இதற்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்குப் பிறகு ஜி.கே. மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி என்ற புதிய கட்சி துவங்கப்பட்டது. இந்தக் கட்சி 1996ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது.
தி.மு.க. – த.மா.கா. கூட்டணி 1998 நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடர்ந்தது. 1999ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க., பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்க முடிவெடுத்தது. இதனால், அந்தக் கூட்டணியில் இருந்து விலகிய த.மா.கா., வி.சி.க., புதிய தமிழகம் கட்சிகளுடன் தேர்தலைச் சந்தித்தது. 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து 23 இடங்களைப் பிடித்தது.
ஜி.கே. மூப்பனாரின் மறைவுக்குப் பிறகு, அந்தக் கட்சியின் தலைவரான ஜி.கே. வாசன், சில நாட்களுக்குப் பின் 2002இல் அந்தக் கட்சியை காங்கிரசுடன் இணைத்தார். ஆனால், 2014இல் காங்கிரஸ் மீது அதிருப்தியடைந்த ஜி.கே. வாசன் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் துவக்கி நடத்தி வருகிறார்.
தமிழக ராஜீவ் காங்கிரஸ்
பட மூலாதாரம், K.SAlagiri/Facebook
வாழப்பாடி ராமமூர்த்தி
அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் செயல்பாட்டால் அக்கட்சியிலிருந்து 1996இல் விலகிய பல தலைவர்களில் வாழப்பாடி ராமமூர்த்தியும் ஒருவர். இதே காரணத்திற்காக மூப்பனார் உள்ளிட்ட தலைவர்கள் கட்சியைவிட்டு வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியைத் துவங்கியிருந்தாலும், அதில் வாழப்பாடி ராமமூர்த்தி இணையவில்லை.
மாறாக, என்.டி. திவாரி உள்ளிட்டோர் துவக்கியிருந்த திவாரி காங்கிரசின் மாநிலத் தலைவரானார். அந்தத் தேர்தலில் இந்தக் கட்சி பாட்டாளி மக்கள் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. ஆனால், வெற்றி ஏதும் கிடைக்கவில்லை.
இதற்குப் பிறகு, 1998ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியபோது, திவாரி காங்கிரஸ் கலைக்கப்பட்டு, அதன் தலைவர்கள் காங்கிரசுடன் இணைந்துவிட்ட நிலையில், தமிழக ராஜீவ் காங்கிரஸ் என்ற கட்சியைத் துவங்கினார் வாழப்பாடி.
இந்தக் கட்சி அந்தத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க., ம.தி.மு.க, பாட்டாளி மக்கள் கட்சிக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. சேலத்தில் போட்டியிட்ட வாழப்பாடி ராமமூர்த்தி வெற்றி பெற்றார். 1999ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க., பா.ஜ.க., ம.தி.மு.க, பா.ம.க. கூட்டணியில் இணைந்து இந்தக் கட்சி போட்டியிட்டது. ஆனால், வெற்றி கிடைக்கவில்லை.
எந்தக் கட்சியிடனும் கூட்டணி வைக்காமல் 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட இக்கட்சி, எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. 2001இல் கட்சியைக் கலைத்துவிட்டு, மீண்டும் தன் ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் வாழப்பாடி.
காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை
பட மூலாதாரம், Getty Images
கடந்த 1996ஆம் ஆண்டில் அ.தி.மு.கவுடன் கூட்டணி வைப்பது என்ற காங்கிரஸ் தலைமையின் முடிவை எதிர்த்து ஜி.கே. மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் துவங்கியபோது அதில் முக்கியத் தலைவராக இடம்பெற்றவர் ப. சிதம்பரம்.
ஆனால், 2001ஆம் ஆண்டில் எந்த அ.தி.மு.கவுடனான கூட்டணியை எதிர்த்து த.மா.கா. துவங்கப்பட்டதோ, அதே அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டபோது, ப. சிதம்பரம் கடும் அதிருப்தி அடைந்தார்.
த.மா.கா. உருவானபோது மிக முக்கியமான பங்கை வகித்த தன்னிடம், அ.தி.மு.க. கூட்டணி குறித்து எவ்வித ஆலோசனையும் நடத்தப்படவில்லை, தான் விடுத்த எந்தக் கோரிக்கையும் ஏற்கப்படவில்லை எனக் கூறிய ப. சிதம்பரம் அக்கட்சியிலிருந்து வெளியேறினார்.
அவருக்கு வள்ளல் பெருமான், ப. ரங்கநாதன், சின்னையா, என். சுந்தரம், ஏ,எஸ். பொன்னம்மாள், கே. சொக்கர் ஆகியோர் ஆதரவளித்தனர். தன்னுடைய ஆதரவாளர்களுடன் இணைந்து த.மா.கா. ஜனநாயகப் பேரவை என தனியாக ஒரு அணியை உருவாக்கினார்.
கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவுடன் கூட்டணி அமைத்த இந்த அணிக்கு இரு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இரண்டு இடத்திலும் அந்த அணி வெற்றி பெற்றது. இதற்குப் பிறகு இது காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற பெயரில் தனிக் கட்சியாக மாறியது.
அதைத் தொடர்ந்து 2004ஆம் ஆண்டு தேர்தல் வந்தபோது, காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட ப. சிதம்பரம், மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார். இதற்குப் பிறகு காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை, அந்த ஆண்டு நவம்பரில் காங்கிரசுடன் இணைக்கப்பட்டது.
காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ்
தமிழக காங்கிரசின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன், 1977வாக்கில் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்ற பெயரில் தனியாக ஒரு கட்சியை உருவாக்கினார். இந்தக் கட்சி 1980ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து பத்து தொகுதிகளில் போட்டியிட்டு ஆறு இடங்களில் அக்கட்சி வெற்றிபெற்றது.
அ.தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில் 1984 நாடாளுமன்றத் தேர்தலின்போது இக்கட்சிக்கு ஒரு இடம் அளிக்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தலில் 4 இடங்கள் அளிக்கப்பட்டன. நாடாளுமன்றத் தொகுதியில் அக்கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. 2 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டும் அக்கட்சி வெற்றிபெற்றது.
இதற்கு சில காலத்திற்குப் பிறகு, இக்கட்சி காங்கிரசில் இணைந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு தொண்டர் காங்கிரஸ் என்ற கட்சியைத் துவங்கினார் குமரி அனந்தன். ஆனால், அக்கட்சியும் நீண்ட நாள் நீடிக்கவில்லை.
தாயக மறுமலர்ச்சிக் கழகம்
பட மூலாதாரம், INSTA @ELAKKIYA_RAJENDAR
நீண்ட காலமாக தி.மு.கவில் செயல்பட்டு வந்த இயக்குநர் டி.ராஜேந்தர், 80களின் இறுதியில் அக்கட்சியில் இருந்து விலகினார். 1991இல் தாயக மறுமலர்ச்சிக் கழகம் என்று கட்சியைத் துவங்கினார்.
அதே ஆண்டு நடந்த தேர்தலில் பர்கூரில் அ.தி.மு.க. தலைவர் ஜெ.ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகும், தொடர்ந்து கட்சியை நடத்தி வந்த டி. ராஜேந்தர் ஒரு கட்டத்தில் கட்சியை தி.மு.கவுடன் இணைத்துவிட்டார்.
இதற்குப் பிறகு, 2004இல் லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கிய டி. ராஜேந்தர், சில ஆண்டுகளுக்குப் பிறகு அதன் பெயரை அகில இந்திய லட்சிய தி.மு.கவாக மாற்றினார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
