நாடாளுமன்ற தேர்தல் 2024: தேர்தலில் யாரெல்லாம் வாக்களிக்க முடியாது? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

நாடாளுமன்ற தேர்தல் 2024: தேர்தலில் யாரெல்லாம் வாக்களிக்க முடியாது? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

நாடாளுமன்றத் தேர்தல் 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

2024 நாடாளுமன்றத் தேர்தல்

2024 மக்களவை தேர்தல் மற்றும் அதோடு சேர்த்து நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான அட்டவணையை இன்று மதியம் 3 மணியளவில் வெளியிட உள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.

இந்நிலையில் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு நிர்ணயிக்கப்பட்ட நடைமுறை உள்ளது. அந்த நடைமுறை என்றால் என்ன? அது எப்போதிருந்து செயல்பாட்டில் இருக்கும், அதன் வழிமுறைகள் என்ன? மற்றும் இந்த தேர்தல் குறித்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான செயல்முறைகள் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

தேர்தல் நடத்தை விதிகள் என்றால் என்ன?

இந்திய தேர்தல் ஆணையத்தால் சட்டப்பேரவை அல்லது மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும்.

நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் சில விதிகளைத் தயாரித்துள்ளது. இந்த விதிகள், மாதிரி நடத்தை நெறிமுறைகள் என்று அழைக்கப்படுகின்றன. தேர்தலில் போட்டியிடும் எல்லா அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களும் இந்த விதிகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும்.

எந்தவொரு வேட்பாளரோ அல்லது அரசியல் கட்சியோ தேர்தல் நடத்தை நெறிகளை மீறினால், தேர்தல் ஆணையம் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கலாம்.

அதாவது வேட்பாளரை தேர்தலில் போட்டியிடவிடாமல் தடுக்கலாம். தேவைப்பட்டால் கிரிமினல் வழக்கும் பதிவு செய்யலாம். நடத்தை நெறிகளை மீறியதற்காக சிறைக்கு அனுப்பும் விதிகள்கூட உள்ளன.

தேர்தல் நடத்தை விதிகள்

நாடாளுமன்றத் தேர்தல் 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

எந்தவொரு வேட்பாளரோ அல்லது அரசியல் கட்சியோ தேர்தல் நடத்தை நெறிகளை மீறினால், தேர்தல் ஆணையம் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கலாம்.

தேர்தல் நடத்தை விதிகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் பொது நடத்தை எப்படி இருக்க வேண்டும், தேர்தல் கூட்டங்கள் நடத்துவது, ஊர்வலம் செல்வது தொடர்பான விதிமுறைகள் என்ன, வாக்குப்பதிவு நாளில் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், வாக்குச் சாவடியில் எப்படிப்பட்ட ஒழுக்கம் இருக்கவேண்டும்? தேர்தல் ​​பார்வையாளர் மற்றும் ஆளுங்கட்சியின் பங்கு என்ன?

இவை பற்றிய விரிவான விளக்கம் அதில் உள்ளது.

அரசு எதுவும் செய்ய முடியாது

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு ஆளுங்கட்சியினர் எந்த விதமான அரசு அறிவிப்புகள், பதவியேற்பு, அடிக்கல் நாட்டல், பூமி பூஜை போன்ற நிகழ்ச்சிகளைச் செய்ய முடியாது என்று விதிமுறைகள் குறிப்பிடுகின்றன.

அரசு வாகனம், அரசு விமானம், அரசு பங்களா ஆகியவற்றை தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்த முடியாது.

ஒரு கட்சி, வேட்பாளர் அல்லது ஆதரவாளர்கள், பேரணி, ஊர்வலம் அல்லது தேர்தல் கூட்டத்தை நடத்துவதற்கு முன்பு காவல்துறையிடம் அனுமதி பெறுவது கட்டாயம்.

எந்தவொரு அரசியல் கட்சியும் சாதி அல்லது மத அடிப்படையில் வாக்காளர்களிடம் வாக்குகளைக் கோரக்கூடாது, மதம் அல்லது சாதி அடிப்படையில் வேறுபாடுகள் அல்லது பதற்றங்களை உருவாக்கக்கூடிய எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது.

அனுமதி பெறாமல் கட்சிக் கொடிகள், பேனர்கள், தகவல்களை ஒருவரது நிலம், வீடு, வளாக சுவர்களில் வைக்க முடியாது.

வாக்குப்பதிவு நாளிற்கான விதிகள்

நாடாளுமன்றத் தேர்தல் 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

வாக்குச் சாவடிகளுக்கு அருகில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் முகாம்களில் கூட்டம் கூடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

வாக்குப்பதிவு நாளில் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும். மேலும் மதுபானம் அல்லது பணம் விநியோகிப்பதும் மாதிரி நடத்தை நெறிமுறைகளின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது.

வாக்குச் சாவடிகளுக்கு அருகில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் முகாம்களில் கூட்டம் கூடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

முகாம்கள் எளிமையாக இருக்க வேண்டும் மற்றும் எந்தவிதமான பிரசார பொருட்களும் இருக்கக்கூடாது. உணவுப் பொருட்கள் எதுவும் வழங்கப்படக்கூடாது.

வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது குற்றம்

தேர்தல் நடத்தை விதிகளின் கீழ், ஊழல் மற்றும் குற்றங்கள் என்ற வகையின் கீழ் வரும் எல்லா நடவடிக்கைகளில் இருந்தும் எல்லா கட்சிகளும் வேட்பாளர்களும் விலகி இருக்க வேண்டும்.

உதாரணமாக, வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது, வாக்காளர்களை மிரட்டுவது, போலி வாக்குகளைச் செலுத்துவது, வாக்குச் சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் பிரசாரம் செய்வது, வாக்குப்பதிவுக்கு முன் பிரசாரம் நிறுத்தப்பட்ட பிறகும் பிரசாரம் செய்வது, வாக்குச் சாவடிக்கு சென்றுவர வாக்காளர்களுக்கு வாகனம் வழங்குவது போன்றவை.

தேர்தல் நடத்தை விதிகள் எப்படி தொடங்கியது?

நாடாளுமன்றத் தேர்தல் 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

1962 பொதுத் தேர்தலுக்குப் பிறகு 1967 மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களிலும் நடத்தை நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன.

இந்தத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் 1960ஆம் ஆண்டின் கேரள சட்டப்பேரவைத் தேர்தலுடன் தொடங்கியது. அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசித்த பிறகே தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான ஆவணம் தயாரிக்கப்பட்டது.

எந்த விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை கட்சிகளும் வேட்பாளர்களும் முடிவு செய்தனர்.

கடந்த 1962ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு 1967 மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களிலும் நடத்தை நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன. பின்னர் அதில் ஒன்றன் பின் ஒன்றாகப் பல விஷயங்கள் சேர்க்கப்பட்டன.

தேர்தல் நடத்தை நெறிமுறைகள் எந்தவொரு சட்டத்தின் பகுதியும் அல்ல. இருப்பினும் இவற்றின் சில விதிகள் இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவுகள் அடிப்படையிலும் செயல்படுத்தப்படுகின்றன.

இப்படியெல்லாம் இருந்தும் அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் அவற்றை முழுவதுமாகப் பின்பற்றுவதில்லை. இத்தகைய மீறல்களின் ஏதாவது ஒரு உதாரணத்தை ஒவ்வொரு தேர்தலிலும் பார்க்க முடிகிறது.

நாட்டின் முதல் பொதுத் தேர்தல் எப்படி இருந்தது?

நாடாளுமன்றத் தேர்தல் 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

முதல் வாக்கு 1951ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தில் போடப்பட்டது.

சுதந்திரம் அடைந்து சில ஆண்டுகளே ஆகியருந்த நிலையில் தனது முதல் பொதுத் தேர்தலை இந்தியா 1952இல் நடத்திக் காட்டியது. அதற்காக சுதந்திரம் அடைந்த இரண்டு ஆண்டுகளுக்குள், இந்தியாவில் தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டது. 1950 மார்ச் மாதம் நாட்டின் முதல் தலைமைத் தேர்தல் ஆணையராக சுகுமார் சென் நியமிக்கப்பட்டார்.

இந்தியாவில் 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட எல்லா குடிமக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் வளர்ந்த நாடுகள் என்று அழைக்கப்படும் பல நாடுகளில் அப்போதும் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கவில்லை.

முதல் தேர்தலின் செயல்முறை மொத்தம் நான்கு மாதங்களுக்கு நீடித்தது. தேர்தலின் முதல் வாக்கு 1951ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தில் போடப்பட்டது. பின்னர் 1952ஆம் ஆண்டு பிப்ரவரி கடைசி வாரத்தில் வாக்குப்பதிவுக்கான பணிகள் முடிந்தன.

மொத்தம் சுமார் 4500 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அதில் 499, மக்களவை இடங்கள்.

தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலைத் தயாரித்த போது ​​பல பெண்கள் தங்கள் பெயரை வெளியே சொல்ல மறுத்தனர். இதன் காரணமாக சுமார் 28 லட்சம் பெண்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியவில்லை.

சுமார் 17 கோடி மக்கள் பொதுத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இதில் 85 சதவீதம் பேருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவர்களுக்காகவே வாக்குச் சீட்டில் வேட்பாளர்களின் பெயருக்கு அருகில் தேர்தல் சின்னம் அச்சிடப்பட்டது. நாடு முழுவதும் சுமார் 45.7 சதவீத வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தம் 364 இடங்களில் வெற்றி பெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மொத்தம் 16 இடங்களைப் பெற்றது. சென்னையில் இருந்து 8 இடங்கள் அக்கட்சிக்கு கிடைத்தன.

பாரதிய ஜனசங்கம் 49 இடங்களில் போட்டியிட்டு 3 இடங்களில் வெற்றி பெற்றது. கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி 144 இடங்களில் போட்டியிட்டாலும் அதன் வேட்பாளர்களில் 9 பேர் மட்டுமே மக்களவைக்கு வர முடிந்தது.

ஜெயபிரகாஷ் நாராயண் மற்றும் ராம் மனோகர் லோஹியாவின் சோஷியலிஸ்ட் கட்சி 254 இடங்களில் போட்டியிட்டு 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

நாட்டின் முதல் சட்ட அமைச்சர் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் நாட்டின் முதல் பொதுத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தார்.

வாக்கு செலுத்தும் மையம் எப்படி தீர்மானிக்கப்படுகிறது?

நாடாளுமன்றத் தேர்தல் 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கடந்த 1951ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் வாக்கு மையம் தொடர்பாக விதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன

போலிங் ஸ்டேஷன் என்பது வாக்களிக்கும் வசதிகள் உள்ள கட்டடம் அல்லது வளாகமாகும். ஒரு போலிங் ஸ்டேஷனில் பல வாக்குச் சாவடிகள் இருக்கலாம். இங்குதான் ஈவிஎம் மெஷின் அல்லது வாக்குச் சீட்டு மூலம் மக்கள் வாக்களிக்கின்றனர்.

கடந்த 1951ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் வாக்கு மையம் தொடர்பாக விதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இது தவிர மக்கள் தொகையில் மாற்றங்கள் ஏற்படும்போது இந்திய தேர்தல் ஆணையமும் அவ்வப்போது வழிகாட்டுதல்களை வெளியிடுகிறது.

கடந்த 2020இல் உருவாக்கப்பட்ட விதிகளின்படி, 1500க்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு ஒரு வாக்கு மையம் இருக்க வேண்டும்.

எந்தவொரு தொகுதியிலும் வாக்களிக்க ஒரு வாக்காளர் இரண்டு கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கும் அவசியம் இருக்கக்கூடாது என்பதும் கவனத்தில் கொள்ளப்படுகிறது.

வாக்கு மையத்திற்கான வளாகம் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறது?

பொதுவாக மாவட்ட மாஜிஸ்ட்ரேட் அல்லது மாவட்ட அதிகாரி இந்த மையத்தை முடிவு செய்வார். ஆனால் இதற்கு தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெற வேண்டும். இதைச் செய்யாவிட்டால் இங்கு பதிவாகும் வாக்குகள் செல்லுபடியாகாது.

அதேபோல் தொலைதூர இடங்களான மலைப்பகுதிகளில்கூட வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இங்கு செல்லும் அதிகாரிகளுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இந்தியாவில் தேர்தல் ஆணையம் இருந்தாலும் அதற்கென்று தனி ஊழியர்கள் இல்லை. தேர்தல் நடத்த ஆசிரியர்கள், காவலர்கள் என அரசு ஊழியர்களையே ஆணையம் சார்ந்துள்ளது. இவர்களே வாக்குப்பதிவு இயந்திரம், வாக்காளர்களின் ஆய்வு, வாக்குச்சாவடி பாதுகாப்பு, வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றுக்குப் பொறுப்பு.

நாடாளுமன்றத் தேர்தல் 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஈவிஎம் இயந்திரங்கள் பேட்டரி மூலம் இயங்குகின்றன. அதாவது மின்சாரம் இல்லாத இடத்திலும் இந்த இயந்திரம் வேலை செய்யும்.

இந்தியாவில் வாக்குப்பதிவு

இந்தியாவில் தேர்தல்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அதாவது ஈவிஎம் (EVM) மூலம் நடத்தப்படுகின்றன.

இந்த இயந்திரங்கள் பேட்டரி மூலம் இயங்குகின்றன. அதாவது மின்சாரம் இல்லாத இடத்திலும் இந்த இயந்திரம் வேலை செய்யும். ஒரு VVPT சாதனம் அவற்றில் இணைக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்கும் செயல்முறை முடிந்தது பற்றிய தகவலை உறுதிப்படுத்தும் சீட்டை இதன் மூலம் வாக்காளர்கள் பெறுவார்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தேர்தல் மை 1960களில் இருந்து பயன்படுத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது.

தேர்தல் – மை: இரண்டுக்குமான தொடர்பு என்ன?

இந்தியாவில் தேர்தல்களில் மறு வாக்களிப்பைத் தடுக்க, ஒரு வாரம் வரை வாக்காளர்களின் விரலில் இருந்து அழியாத மையை இந்திய விஞ்ஞானிகள் தயாரித்தனர். இந்த மை 1960களில் இருந்து பயன்படுத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது.

இது தற்போது இந்தியாவில் இரண்டு இடங்களில் தயாரிக்கப்படுகிறது. தெலங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள ராயுடு ஆய்வகம் மற்றும் கர்நாடகாவின் மைசூரில் உள்ள, மைசூர் பெயின்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட் நிறுவனம் ஆகியவை இதைத் தயாரிக்கின்றன.

மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட மையை இந்திய தேர்தல் ஆணையம் பயன்படுத்துகிறது. அதே நேரத்தில் ராயுடு ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட மை உலகின் பிற நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

இந்த மை உலகின் சுமார் 90 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில் மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட் நிறுவனம் 30 நாடுகளில் விநியோகம் செய்கிறது.

இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தேர்தலின்போதும் லட்சக்கணக்கான மை பாட்டில்களை ஆர்டர் செய்கிறது. 2014 பொதுத் தேர்தலின்போது 21 லட்சம் மை பாட்டில்கள் ஆர்டர் செய்யப்பட்டன. இது 2019 பொதுத் தேர்தலில் 26 லட்சமாக அதிகரித்தது.

இந்த மையில் சில்வர் நைட்ரேட் 10 முதல் 18 சதவீதம் வரை உள்ளது. சூரிய ஒளி அதன் மீது விழுந்தவுடன் இதன் நிறம் மிகவும் உறுதியாகிறது. விரலில் தடவிய 40 விநாடிகளில் அது காய்ந்துவிடும். இதற்குப் பிறகு நான்கு மாதங்களுக்கு அதன் அடையாளம் அழியாது.

பதிவு செய்யப்பட்ட தொகுதியில் இல்லாமல், வேறு தொகுதியில் வாக்களிக்க முடியுமா?

மக்களில் பலரும் தங்களது பதிவு செய்யப்பட்ட தொகுதியில் வாசிக்காமல், பல்வேறு காரணங்களால் வேறு தொகுதிகளில் வசிப்பது இயல்புதான். ஆனால், அப்படி வசிப்பவர்கள் தாங்கள் வசிக்கும் தொகுதியில் வாக்களிக்க முடியாது.

அதற்கு நீங்கள் எந்தத் தொகுதியில் வசிக்கிறீர்களா அங்கேயே உங்கள் பதிவை மாற்றிக்கொள்ள வேண்டும். அல்லது உங்கள் தொகுதிக்குச் சென்றுதான் வாக்களிக்க வேண்டும்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள்(NRI) வாக்களிக்க முடியுமா?

நாடாளுமன்றத் தேர்தல் 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள்படி, 18 வயது நிரம்பிய வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் வாக்களிக்கலாம்.

இந்தியர்கள் பலரும் பணிநிமித்தமாக வெளிநாடுகளில் இருக்கிறார்கள். அவர்களும்கூட இந்திய தேர்தல்களில் தங்களது வாக்கைச் செலுத்த முடியும். ஆனால், அதற்கு அவர்கள் சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள்படி, 18 வயது நிரம்பிய வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் வாக்களிக்கலாம். ஆனால் அவர்கள் தாங்கள் வாழும் நாட்டின் குடிமக்களாக ஆகாமல் இருப்பது அவசியம்.

வாக்களிக்க விரும்புபவர்கள் உங்கள் தொகுதியில் படிவம் 6A உடன் விண்ணப்பிக்க வேண்டும். இந்தத் தொகுதி உங்கள் பாஸ்போர்ட்டில் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு அருகில் இருக்கும்.

இந்த விண்ணப்பத்தை நேரடியாக வாக்காளர் பதிவு அதிகாரியிடம் சமர்ப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களை நீங்களே அதிகாரியிடம் கொடுக்கலாம் அல்லது தபால் மூலம் அனுப்பலாம்.

படிவம் 6Aஇல் உங்கள் வண்ணப் புகைப்படத்தை ஒட்ட வேண்டும். நீங்கள் விண்ணப்பத்தை தபால் மூலம் அனுப்பினால், புகைப்படம் மற்றும் செல்லுபடியாகும் விசா பக்கங்களுடன் பாஸ்போர்ட் பக்கங்களின் நகல்களை அனுப்ப வேண்டும். இந்த எல்லா நகல்களும் இந்திய தூதரகத்தின் பொருத்தமான அதிகாரியால் சான்றளிக்கப்பட வேண்டும்.

நேரில் செல்கிறீர்கள் என்றால் பாஸ்போர்ட்டின் பக்கங்களின் நகல்களை எடுத்துச் செல்லவேண்டும். கூடவே அசல் பாஸ்போர்ட்டையும் உங்களுடன் வைத்திருக்க வேண்டும். பதிவுசெய்த பிறகு, உங்கள் தொகுதியில் தேர்தல் நடைபெறும் நாளில் உங்கள் பாஸ்போர்ட்டுடன் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் வாக்கைச் செலுத்தலாம்.

மக்களவைத் தேர்தலில் யார் வாக்களிக்க முடியாது?

நாடாளுமன்றத் தேர்தல் 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்தால் அவர் வாக்களிக்க முடியாது.

வாக்களிக்கும் உரிமையை 18 வயது நிரம்பிய அனைவருக்கும் இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்குகிறது. அரசமைப்புச் சட்டத்தின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். ஆனால் வாக்களிக்கவோ அல்லது தேர்தலில் நிற்கவோ முடியாத சிலர் உள்ளனர்.

  • இந்திய குடிமகன் அல்லாத ஒருவர் வாக்களிக்க முடியாது.
  • வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது.
  • ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்தால் அவர் வாக்களிக்க முடியாது.
  • ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்களும் வாக்களிக்க முடியாது.
  • வேறொரு நாட்டின் குடியுரிமை பெற்ற வெளிநாடு வாழ் இந்தியர் வாக்களிக்க முடியாது.
  • மனநலம் குன்றியவர்கள் மற்றும் நீதிமன்றத்தால் மனநலம் குன்றியவர்கள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுவதில்லை.

யார் தேர்தலில் போட்டியிட முடியாது?

நாடாளுமன்றத் தேர்தல் 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஒருவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் அந்த நபர் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர்

இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் யாரெல்லாம் போட்டியிட முடியாது என்ற பட்டியலும் உண்டு.

  • இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 84-ஏ பிரிவின்படி, இந்தியக் குடிமகனாக இல்லாத ஒருவருக்கு தேர்தலில் போட்டியிட உரிமை இல்லை.
  • 25 வயது நிரம்பாதவர் தேர்தலில் போட்டியிட முடியாது.
  • 1951இன் மக்கள் பிரதிநிதித்துவச் சட்த்தின் பிரிவு 4(d) இன் படி, ஒரு நாடாளுமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது.
  • ஒருவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் அந்த நபர் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் கூறுகிறது.
  • குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஒருவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமீனில் இருந்தாலும் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது.
  • ஒரு நபர் ஒரே நேரத்தில் இரண்டு சபைகளில் உறுப்பினராக இருக்க முடியாது. அவர் ஒரு சபையில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.
  • ஏதோ ஒரு காரணத்திற்காக நீதிமன்றம் ஒருவரை தேர்தலில் போட்டியிட தடை விதித்திருந்தால், அந்த நபரும் தேர்தலில் போட்டியிட முடியாது.
Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *