சென்னை வெள்ளம்: துண்டிக்கப்பட்ட புறநகர் மக்கள், தனித்தீவான அம்பத்தூர் – உண்மை நிலவரம்

சென்னை வெள்ளம்: துண்டிக்கப்பட்ட புறநகர் மக்கள், தனித்தீவான அம்பத்தூர் - உண்மை நிலவரம்

சென்னையிலிருந்து துண்டிக்கப்பட்ட புறநகர் மக்கள்
படக்குறிப்பு,

நீரில் மூழ்கியுள்ள அம்பத்தூர் வஉசி நகர்

மிக்ஜாம் புயலால் சென்னை மாநகர் மட்டுமின்றி சென்னையின் புறநகர் பகுதியான அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதி முழுமையும் தண்ணீரில் மூழ்கி சென்னை நகரோடு தொடர்பிழந்த நிலையில் உள்ளனர் அம்பத்தூரின் கிழக்கு பகுதி மக்கள்.

அந்தப் பகுதிகளின் சேதம் மற்றும் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த செவ்வாய் கிழமை அம்பத்தூர் பகுதிக்கு நான் சென்றிருந்தேன். அம்பத்தூர் தொழிற்பேட்டையை சேர்ந்த 500-க்கும் அதிகமான சிறுகுறு நிறுவனங்களும் நீரில் மூழ்கி இருள் சூழ்ந்திருந்தது.

அம்பத்தூரில் பட்டரவாக்கம், ஞானமூர்த்தி நகர், இந்திரா நகர், வ.உ.சி நகர், இபி காலனி, ஜிடிபி காலனி, கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டவை.

சென்னையிலிருந்து துண்டிக்கப்பட்ட புறநகர் மக்கள்
படக்குறிப்பு,

அம்பத்தூர் 82வது வார்டு வ.உ.சி நகர்

புயல் நீங்கியும் தண்ணீர் வடிய வழியில்லை

முதலில் அம்பத்தூர் 82-வது வார்டு வ.உ.சி நகரில் உள்ள தெருவுக்குள் இடுப்பளவு தண்ணீருக்குள் இறங்கி செல்லும்போதே தன் வீட்டிற்குள் வந்த தண்ணீரை வெளியே எடுத்து ஊற்றிவிட்டு மீண்டும் தண்ணீர் உள்ளே வந்து விடாமல் இருக்க தடுப்பு சுவர் கட்டிக் கொண்டிருந்தார் கூலித் தொழில் செய்யும் கமலக்கண்ணன். இந்தப் பகுதியில் 20 வருடங்களுக்கும் மேலாக வசிக்கும் இவர் ஒவ்வொரு மழைக்காலமும் தங்களது பகுதியில் இப்படித்தான் தண்ணீர் தேங்கி நிற்பதாக கூறினார்.

“இந்தப்பகுதி தேசிய நெடுஞ்சாலையின் பாலத்தை ஒட்டியுள்ள பகுதி. இந்த பாலம் 2008 – 2010 காலகட்டத்தில் கட்டப்பட்டது. அதற்கு முன்பு வரை இந்தப்பகுதிக்கு வரும் தண்ணீர் வடிந்து கொரட்டூர் ஏரியை நோக்கி சென்றுவிடும். ஆனால், மழைநீர் வடிதல் குறித்த எந்த விதமான ஆய்வும் செய்யாமல் பாலத்தை கட்டியதால் இந்த பகுதியில் தேங்கும் மழைநீர் வடியாமல் தேங்குகிறது,” என்கிறார் கமலக்கண்ணன்.

மேலும் கடந்த சில வருடங்களாகவே இங்கு அதிகமான குடியேற்றங்களும் நடைபெற்று வருவதாலும் தண்ணீர் தேங்குவதாக கூறுகின்றனர் இப்பகுதி மக்கள்.

சென்னையிலிருந்து துண்டிக்கப்பட்ட புறநகர் மக்கள்
படக்குறிப்பு,

கமலக்கண்ணன் வீட்டில் 1 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் வீணாகிவிட்டன

ஒருமாதம் நீரில் சிக்கும் அம்பத்தூர் மக்கள்

ஒவ்வொரு முறை மழைநீர் இங்கு வரும்போதும் குறைந்தபட்சம் ஒரு மாத காலமாவது தேங்கி விடுவதாக கூறும் கமலக்கண்ணன் இந்த முறை மீட்புக்கு கூட யாரும் வரவில்லை. அரசு தந்துள்ள புகார் எண்ணுக்கு தொடர்பு கொண்டால் ‘உங்கள் புகார் ஏற்கப்பட்டது’ என்று வருகிறதே தவிர எந்த அதிகாரிகளும் வந்தபாடில்லை என்று கூறுகிறார்.

2015-ஐ விட இந்த முறை அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கமலக்கண்ணன் வீட்டில் 1 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் வீணாகிவிட்டன. இதனால் எப்படி எங்கள் வாழ்க்கையை மீண்டும் தொடங்க போகிறோம் என்றே தெரியவில்லை என்று தெரிவித்தார் அவர்.

சென்னையிலிருந்து துண்டிக்கப்பட்ட புறநகர் மக்கள்
படக்குறிப்பு,

மின்சாரம் இல்லாத சமயத்தில் வீட்டிற்குள் புகுந்த நீருடன் நல்ல பாம்பு ஒன்றும் வந்து விட்டது

வெள்ளநீரோடு வீட்டிற்குள் வந்த பாம்பு

இதே பகுதியை சேர்ந்த 60 வயதாகும் பெண்மணி ஒருவரும் தனது வீட்டிற்குள் முழங்கால் அளவு தண்ணீர் புகுந்ததால் உள்ளே செல்லாமல் வெளியே அமர்ந்திருந்தார். அவரிடம் பாதிப்பு குறித்து கேட்டபோது, இங்கு தண்ணீர் வந்தாலே பாம்பும் சேர்ந்து வந்துவிடுகிறது என்றார்.

கடந்த ஞாயிற்று கிழமை கூட இரவு மின்சாரம் இல்லாத சமயத்தில் வீட்டிற்குள் புகுந்த நீருடன் நல்ல பாம்பு ஒன்றும் வந்து விட்டது. கிட்டத்தட்ட 4 மணிநேரம் அது வீட்டிற்குள்ளேயே சுற்றி கொண்டிருந்திருக்கிறது. அதன் பின்னர் அதை கண்டுபிடித்து நாங்களேதான் அகற்ற வேண்டியிருந்தாக கூறினார் அவர்.

இந்த பகுதியில் அதிக காலியிடங்கள் உள்ளதால் மழை இல்லாத காலங்களிலும் கூட தண்ணீர் குட்டை போல் தேங்கியுள்ளது. அதில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் இருக்கின்றன. இதனால், இது போன்ற மழைக்காலத்தில் வீட்டிற்குள் நீர் வரும்போது இந்த விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வந்து விடுகின்றன. முன்னெச்சரிக்கையாக இந்த காலியிடங்களில் தேங்கியிருக்கும் நீரை அகற்றும் பணியில் சமீபத்தில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். மழை தொடர்ந்து பெய்து வந்ததால் அதுவும் பலனளிக்கவில்லை.

சென்னையிலிருந்து துண்டிக்கப்பட்ட புறநகர் மக்கள்
படக்குறிப்பு,

சாலை மறியலில் ஈடுபட்ட அம்பத்தூர் மக்கள்

அம்பத்தூரின் கிழக்கு பகுதி

அம்பத்தூர் பகுதியில் மேலும் அதிக பாதிப்பை அடைந்தது அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு பின்னால் இருக்கும் பட்டரவாக்கம், இ.பி. காலனி, கருக்கு, ஜிடிபி காலனி மற்றும் ஞானமூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளாகும். இந்த பகுதி மக்களுக்கு மின்சாரம், மீட்பு பணி, உணவு என எதுவும் கிடைக்கவில்லை என்று செவ்வாய்கிழமை அன்று பிரதான சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட பாலகிருஷ்ணன் என்பவரிடம் இதுகுறித்து கேட்டபோது, “அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருந்து வரும் தண்ணீரை அடைக்காமல் நேராக இந்த மூன்று பகுதிகளில் விடுகின்றனர். மூன்று ஏரியாக்களையும் சேர்த்து 50க்கும் அதிகமான தெருக்களில் 1,000த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன. அனைவருமே முழங்கால் அளவு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து இருளில் அவதிப்பட்டு வருகிறோம். அதிகாரிகளை கேட்டால் எல்லா இடத்திலும்தான் தண்ணீர் இருக்கிறது என்று அலட்சியமாக பதிலளிக்கின்றனர்,” என்று தெரிவித்தார்.

அதன்பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் கைது செய்து விடுவோம், தடியடி நடத்துவோம் என்று மிரட்டி அந்த மக்களை அப்புறப்படுத்தி விட்டனர்.

சென்னையிலிருந்து துண்டிக்கப்பட்ட புறநகர் மக்கள்

பட மூலாதாரம், LENIN SUNDHAR

படக்குறிப்பு,

கால்வாய் ஆக்கிரமிப்பே நீர் தேங்க காரணம், என்கிறார் அரசியல் செயற்பாட்டாளர் லெனின் சுந்தரி

அம்பத்தூர் எனும் தனித்தீவு

சென்னை புறநகர் பகுதியான அம்பத்தூர் ஒவ்வொரு ஆண்டும் இந்த பிரச்னையை எதிர்கொள்ள என்ன காரணம் என்று அந்த பகுதியை சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளர் லெனின் சுந்தரிடம் கேட்டபோது, அம்பத்தூர் கால்வாயை ஆக்கிரமித்ததே இதற்கு முக்கிய காரணம் என்று கூறுகிறார்.

“அம்பத்தூரை பொறுத்தவரை 2015 வெள்ளத்திற்கு பிறகுதான் அதிகம் பேசப்பட்டது. அந்த சமயத்திலேயே தண்ணீர் தேங்காமல் பல இடங்களில் வழி செய்யப்பட்டிருந்தது. ஆனால், அம்பத்தூர் தொழிற்பேட்டை கிழக்கு பகுதியில் உள்ள பட்டரவாக்கம், ஆவின் ரோடு, கொரட்டூர் பகுதிகள் ஆகியவை அதிகம் பாதிக்கப்பட்டன. 300-க்கும் மேற்பட்ட சிறுகுறு நிறுவனங்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

“தற்போது மீண்டும் அதே பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இவர்கள் கால்வாயை தூர்வாரியதாக சொன்னார்கள். ஆனால், இந்த 8 வருடங்களில் எதுவமே மாறவில்லை. மழை நீர் வடிகால்வாயை பொறுத்தவரை சென்னை மாநகராட்சிக்குள்ளேயே பல இடங்களில் மாற்ற வேண்டிய தேவை இருந்தது. அதே போல் இங்கேயும் நிலை. பல இடங்களில் மழைநீர் வடிகால்வாய்கள் வேலை செய்யவில்லை.

இதற்காக கட் & கவர் முறையில் இந்த முறை புதிய வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது. அதே தான் அம்பத்தூர் பகுதிகளிலும் செய்யப்பட்டது. ஆனால், அந்த குழாய்கள் ஏற்ற இறக்கமாகவும், அவற்றை கொண்டு போய் இணைக்கும் இடங்களையும் சரியாக செய்யவில்லை என்று இந்த பகுதி மக்கள் மற்றும் சிறுகுறு நிறுவன முதலாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்,” என்கிறார் அவர்.

மேலும், மேனாம்பேடு கருக்கு, ஜி.டி.பி காலனி, இ.பி காலனி உள்ளிட்ட பகுதி மக்களும் கூட 6 வருடங்களாகவே மழை நீர் வடிகால்வாய் சரியில்லை என்று புகார் கூறி வருவதாகவும், இங்கிருக்கும் கொரட்டூர் ஏரியின் நீரேற்று நிலையமும் சரியாக வேலை செய்யாததால் மழை நீரோடு, கழிவு நீர் கலந்து வருவதாகவும் தெரிவித்தார் லெனின் சுந்தர்.

குறுகிப்போன அம்பத்தூர் கால்வாய்

“அம்பத்தூர் கனரா வங்கி ராமர் கோவில் அருகில் அம்பத்தூர் ஏரியில் இருந்து வரும் தண்ணீர் வெளியேறும் கால்வாய் ஒன்று உள்ளது. அம்பத்தூர் ஏரியில் இருந்து தொடங்கும் இந்த ஏரி 135 அடியாக ஆரம்பமாகிறது. ஆனால், அதன் வழித்தடத்தில் 35 அடிக்கும் கீழாக குறைந்து பாடிபுதுநகரில் உள்ள நல்லான் கால்வாயில் சென்று இணைகிறது. நல்லான் கால்வாயும், பக்கிங்காம் கால்வாயும் இணைந்து கூவத்தில் கலந்து அந்த நீர் கடலில் கலக்கிறது.

கால்வாய் குறுகியதற்கு காரணம் அந்த பகுதியில் கடந்த 25 வருடங்களில் ஏற்பட்டுள்ள குடியேற்றங்கள் தான்” என்று கூறுகிறார் அவர்.

“இந்த நீர் வழித்தடங்கள் எல்லாமே தற்போது நிறைந்து காணப்படுகிறது. இதனால், அம்பத்தூர் ஏரியை திறந்து விடும்போது அம்பத்தூர் வார்டுகள் 82,85,86 ஆகியவை மூழ்கி விடுகின்றன. இதே போல் திருமங்கலம் ஏசிஎஸ் காலனியை பொறுத்தவரை நல்லான் கால்வாய் நீர் வழித்தடம் குறுகியுள்ளதால் வார்டு 90, 93 உள்ளிட்டவை தண்ணீர் வெளியேறாமல் மூழ்கியுள்ளது என்று கூறுகிறார் லெனின் சுந்தர்.

அம்பத்தூருக்கு நிரந்தர தீர்வு என்ன?

அம்பத்தூர் பகுதிக்கான நிரந்தர தீர்வு குறித்து கேட்டபோது, “பழைய முறையிலான மழைநீர் வடிகால்வாய் அமைப்பை மாற்றிவிட்டு புதிய அமைப்பை நிறுவ வேண்டும். அ.தி.மு.க ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் போடப்பட்ட எந்த மழைநீர் வடிகால்வாயும் உதவவில்லை. இது தவிர 1970, 80கள் காலகட்டத்தில் போடப்பட்ட பழைய மழைநீர் வடிகால்வாய்கள் அம்பத்தூர் பகுதிகளில் உள்ளது. அதன் வழித்தடங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

“எனவே எம்.ஐ.டி.எஸ் , ஐ.ஐ.டி உள்ளிட்ட வல்லுனர்கள் ஏற்கனவே கொடுத்த வழிகாட்டுதல்களின்படி புதிய மழைநீர் வடிகால்வாய் அமைப்புகளை வரையறுத்து செயல்படுத்த வேண்டும். அம்பத்தூரை பொறுத்தவரை கனரா வங்கி ஏரியாவில் உள்ள கால்வாயை விரிவுபடுத்த வேண்டும். இந்த பகுதிகள் முழுவதும் நீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து அங்கு சிறு நீர்தேக்கங்களை உருவாக்க வேண்டும். ஏற்கனவே உள்ள குளம், குட்டை போன்றவற்றை தூர்வார வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார் லெனின் சுந்தர்.

சென்னையிலிருந்து துண்டிக்கப்பட்ட புறநகர் மக்கள்

பட மூலாதாரம், DAYANAND KRISHNAN

படக்குறிப்பு,

சிட்லபாக்கம் முழுவதும் மழைநீர் வடிகால்வாய்

வெள்ளத்திலிருந்து தப்பிய சிட்லபாக்கம்

சென்னையின் புறநகர் பகுதிகளில் ஒன்றான சிட்லபாக்கமும் அதிக ஏரிகள் நிறைந்த பகுதிதான். இதன் அருகமை பகுதியான மேற்கு தாம்பரம், முடிச்சூர் பகுதி மக்கள் நீரில் சிக்கி தவிக்க, சிட்லபாக்கம் மக்கள் பெரியளவு இதிலிருந்து தப்பியுள்ளனர்.

இவ்வளவு கடும் மழைபொழிவிலும் கூட எப்படி சிட்லபாக்கம் மக்கள் தப்பிக்க முடிந்தது என்று இப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் ஜிஐஎஸ் ஆலோசகர் தயானந்த் கிருஷ்னன் அவர்களிடம் கேட்டேன். “சென்னை மாநகரைப் போலவே அதிக மக்கள் அடர்த்தியும், நீர்பகுதிகளும் நிறைந்த ஒரு இடம் சிட்லபாக்கம்.

நாங்கள் கடந்த சில வருடங்களாகவே அரசின் கவனத்தை ஈர்த்து 30 கோடி செலவில் இந்த பகுதி முழுவதும் ஆராய்ந்து மேக்ரோ கட் & கவர் மழைநீர் வடிகால்வாய்களை அமைத்தோம். அதோடு ஏரிகளின் இணைப்பை கண்டறிந்து அவற்றை தூர்வாரி இணைத்து உபரிநீரை அதில் சேமித்த காரணத்தால் மட்டுமே இப்பெரு மழையிலும் கூட வெள்ளம் தாக்காமல் நாங்கள் தப்பித்தோம்,” என்று தெரிவித்துள்ளார் அவர்.

சென்னையிலிருந்து துண்டிக்கப்பட்ட புறநகர் மக்கள்

பட மூலாதாரம், DAYANAND KRISHNAN

படக்குறிப்பு,

சென்னை மாநகராட்சி விரிவுபடுத்தப்பட்ட திட்டத்தை உருவாக்க வேண்டும்

விரிவுபடுத்தப்பட்ட சென்னை

விரிவுபடுத்தப்பட்ட சென்னையின் உள்கட்டமைப்பு வசதி குறித்து அவரிடம் கேட்டபோது, சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசு மழைநீர் வடிகால்வாய் தொடர்பான ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்குவது மட்டுமே பலனளிக்கும் என்று அவர் கூறுகிறார்.

“1,190 சதுர கிலோமீட்டராக இருந்த சென்னையை 5,900 சதுர கிலோமீட்டராக விரிவுபடுத்தியுள்ளது சி.எம்.டி.ஏ. ஆனால், அவர்களிடத்தில் இதற்கான நிபுணத்துவம், புரிதல் இருக்குமா என்றால் எல்லாமே இருக்காது. 5,900 சதுர கிலோமீட்டருக்கு ஒரு நிலப்பரப்பை சோதனை செய்து எங்கெல்லாம் வெள்ளபாதிப்பு இருக்கும், நீர் தேங்கும் என்ற முடிவுகளை செய்ய தனித்துறையே வேண்டும்.

அம்பத்தூர் மாநகராட்சி, குன்றத்தூர் பஞ்சாயத்து என தனித்தனி தீவுகளாக இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயன்றால் பலன் தராது. இதற்காக அரசு தனித்துறையையே உருவாக்கி ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்க வேண்டும். இந்த துறை விரிவான ஆய்வை செய்து எங்கு நீர் தேங்கும், எங்கு வெளியேறும் என்ற புரிதலுடன் செயல்பட வேண்டும். மேலும், காணாமல் போன ஏரிகளின் இணைப்புகளை கண்டறிந்து அவற்றை இணைத்து விட்டாலே மழை நீரும் சேமிக்கப்படும், வெள்ளபாதிப்பும் குறைந்துவிடும்,” என்ற ஆலோசனையை முன்வைக்கிறார் அவர்.

அம்பத்தூர் மாநகராட்சி அதிகாரிகள் சொல்வது என்ன?

இந்தப் புகார்கள் குறித்து கேட்பதற்காக அம்பத்தூர் மாநகராட்சி மண்டல அதிகாரிக்கு தொடர்பு கொண்ட போது, பெயர் சொல்ல விரும்பாத மாநகராட்சி பொறியாளர் ஒருவர் நம்மிடம் பேசினார்.

“இது வரலாறு காணாத மழை. இதனால், அயப்பாக்கம், அன்னனூர் ஏரி, பருத்திப்பட்டு ஏரி, திருமுல்லைவாயல் ஏரி உள்ளிட்ட 6 ஏரிகளின் தண்ணீர் அம்பத்தூர் ஏரிக்குள் வந்து விட்டது. இங்கிருந்து கொரட்டூர், ரெட்ஹில்ஸ், புழல், ரெட்டேரி வழியாக நீர் சென்று விடும். அதிகப்படியான மழை பெய்து விட்டதால் ஏரி நிரம்பி தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டது,” என்று கூறினார்.

மேலும், “கடந்த இரண்டு வருடங்களாக இந்தப் பகுதிகளில் சென்னை மாநகராட்சி சார்பாக கால்வாய் பணிகளை மேற்கொண்டதன் காரணமாக அம்பத்தூர் கால்வாய் மற்றும் கொரட்டூர் ஏரி பகுதிகளில் மட்டும்தான் தண்ணீர் தேங்கியுள்ளது. இதர அம்பத்தூர் பகுதிகளில் தண்ணீர் தேங்கவில்லை. அம்பத்தூர் ஏரியில் தொடங்கும் கால்வாயை பொறுத்தவரை அது நீர்வளத்துறைக்கு சொந்தமானது. அதில் பல ஆண்டுகளுக்கு முன்பே சுவர் கட்டி வைத்துள்ளனர். அங்கிருக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் மாநகராட்சிக்கும் தொடர்பு கிடையாது,” என்று தெரிவித்தார்.

மேலும், மழைநீர் வடிகால் குறித்து கேட்டபோது, அம்பத்தூர் பகுதியில் 90% பணிகள் முடிவுபெற்று விட்டதாகவும், அதனால் தான் பல இடங்களில் தண்ணீர் தேங்காமல் தடுக்க முடிந்ததாகவும் கூறும் அவர் சமீபத்தில் அமைச்சர்கள் வந்து ஆய்வு செய்து செய்துள்ளதாகவும், அம்பத்தூர் ஏரிக்கு வரும் தண்ணீரை வேறு பக்கம் திருப்பி விடுவதற்காக நீர்வளத்துறை சார்பில் திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *