உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் அரையிறுதியில் நுழைய என்ன செய்ய வேண்டும்?

உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் அரையிறுதியில் நுழைய என்ன செய்ய வேண்டும்?

உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் அரையிறுதி செல்ல என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஆப்கானிஸ்தான் அணி, உலகக்கோப்பைத் தொடரில் தொடர்ந்து 3வது முறையாக சேஸிங் செய்து வென்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி, உலகக்கோப்பை லீக் போட்டியில் 4 ஆட்டங்களில் வென்று 8 புள்ளிகளுடன் ஏறக்குறைய அரையிறுதிச் சுற்றை நெருங்கியுள்ளது. ஆனால் நாக்-அவுட் சுற்றுக்குள் செல்லுமா என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணி, கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்புதான் கிரிக்கெட் விளையாடப் பழகி, 2015ஆம் ஆண்டிலிருந்து உலகக்கோப்பையில் பங்கேற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையில் ஜாம்பவான் அணிகளுக்கு அதிர்ச்சிகரமான முடிவுகளையும் அளித்து வருகிறது.

கடந்த 2015 மற்றும் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்றாலும், பெரிதாக ரசிகர்களின் மனதில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சர்வதேச அணிகளுக்கு எதிராக அச்சுறுத்தலான பேட்டிங், பந்துவீச்சை வெளிப்படுத்தவில்லை.

ஆனால், 2019ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடர் வரை ஆப்கானிஸ்தான் அணியில் உள்ள வீரர்கள் ஏராளமான சர்வதேச அனுபவத்தைப் பெற்றுள்ளனர். பல்வேறு லீக் தொடர்களில் விளையாடி, பல்வேறு பாடங்களைப் படித்துள்ளனர்.

விஸ்வரூபம்

ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

2019ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடர் வரை ஆப்கானிஸ்தான் அணியில் உள்ள வீரர்கள் ஏராளமான சர்வதேச அனுபவத்தைப் பெற்றுள்ளனர்.

தாங்கள் கற்ற வித்தை அனைத்தையும், 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் இறக்கி பெரிய அணிகளுக்குக்கூட அச்சுறுத்தலாக இருந்து வருகிறார்கள்.

குறிப்பாக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன்கள் பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக அற்புதமான வெற்றியை ஆப்கானிஸ்தான் பதிவு செய்திருக்கிறது. அது மட்டுமின்றி உலகக்கோப்பைத் தொடரில் தொடர்ந்து 3வது முறையாக சேஸிங் செய்து வென்றுள்ளது.

ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட்டுக்கு வளர்ப்புத் தாயாக இருந்தது பாகிஸ்தான். ஆப்கானிஸ்தான் வீரர்கள் பலரும் கிரிக்கெட் ஆடப் பழகியது பாகிஸ்தான் வீரர்களைப் பார்த்துதான். தங்கள் திறமையை மெருகேற்றியதும், செதுக்கியதும் பாகிஸ்தான் மண்ணில்தான்.

அப்படியிருக்கும்போது, உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணியையே சேஸிங் மூலம் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான். அதிலும் 284 ரன்களை சேஸிங் செய்வது என்பது, மிகவும் கடினமானது. வலுவான பேட்டிங் வரிசையை வைத்திருக்கும் பெரிய அணிகளே சறுக்கும் வாய்ப்பு இருக்கும்போது, ஆப்கானிஸ்தான் அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

மேம்பட்ட பந்துவீச்சு, பேட்டிங்

உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் அரையிறுதி செல்ல என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பாகிஸ்தான், இலங்கைக்கு எதிராக சவாலான ஸ்கோரை சேஸிங் செய்து தங்களின் பேட்டிங் நிலைத்தன்மையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்த உலகக்கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என 3 பிரிவுகளிலும் மேம்பட்ட அணியாகவே இருந்து வருகிறது. ஜாம்பவான் அணிகள் ஆப்கானிஸ்தான் தானே என்று எளிதாக எடுத்துவிடக்கூடாது என்னும் அளவுக்கு பந்துவீச்சும், பேட்டிங்கும் இருப்பது அந்த அணிக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரம்.

குறிப்பாக குட்டி அணிகள்(மினோஸ்) என்று அழைக்கப்படும் ஆப்கானிஸ்தான் இதுநாள் வரை தங்களின் திறமையான சுழற்பந்துவீச்சுக்கு மட்டும்தான் பெயரெடுத்திருந்தது.

ஆனால் இந்த உலகக்கோப்பைத் தொடரில் தங்களால் பேட்டிங்கிலும் சோபிக்க முடியும், எந்த ஸ்கோரையும் சேஸிங் செய்ய முடியும் என்று போராட்ட குணத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

பாகிஸ்தான், இலங்கைக்கு எதிராக சவாலான ஸ்கோரை சேஸிங் செய்து தங்களின் பேட்டிங் நிலைத்தன்மையை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனால் ஆப்கானிஸ்தான் அணியில் பந்துவீச்சு மட்டும்தான் பலம், பேட்டிங் எதிர்பார்த்த அளவு வலுவில்லை என்று எந்த அணியும் இந்த உலகக்கோப்பையில் நினைத்துவிட முடியாது.

நிகர ரன்ரேட்டால் சிக்கல்

உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் அரையிறுதி செல்ல என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

நெதர்லாந்து அணி எப்படி தென் ஆப்ரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்ததோ அதேபோன்று ஆப்கானிஸ்தான் அணியாலும் அளிக்க முடியும்.

இதுவரை 7 போட்டிகளில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 4 வெற்றிகள், 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது.

இருப்பினும் அதன் நிகர ரன்ரேட் மைனஸில் இருப்பதுதான் பெரிய பின்னடைவு. ஆப்கானிஸ்தான் அணி தொடக்கத்தில் அடைந்த தோல்விகளும், வேகமாக எட்டாத வெற்றியும் நிகர ரன்ரேட்டை உயரவிடாமல் தடை செய்தன.

சவாலான ஆட்டங்கள்

உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் அரையிறுதி செல்ல என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

ஆப்கானிஸ்தான் அணி அடுத்து வரும் 7ம் தேதி மும்பையில் நடக்கும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியுடன் மோதுகிறது, 10ஆம் தேதி நடக்கும் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த இரு ஆட்டங்களும் ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்குள் செல்ல முக்கியமானவை.

இந்த இரு அணிகளும் சாதாரணமானவை அல்ல, வெல்வதும் எளிதானது அல்ல. இரு அணிகளிலும் பந்துவீச்சும், பேட்டிங்கும் அதீத வலிமையாவை.

குறிப்பாக தென் ஆப்பிரிக்க அணி இந்தத் தொடர் முழுவதுமே ராட்சதத்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது. ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் சில போட்டிகளில் வீழ்ந்தாலும் மீண்டும் விஸ்வரூமெடுத்துள்ளது.

இந்த இரு அணிகளையும் ஆப்கானிஸ்தான் வெல்வது சாத்தியமில்லை என்றாலும், திட்டமிட்ட அணுகுமுறையால் நெருக்கடி கொடுத்து வெற்றியை வசப்படுத்த முடியும். நெதர்லாந்து அணி எப்படி தென் ஆப்ரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்ததோ அதேபோன்று ஆப்கானிஸ்தான் அணியாலும் அளிக்க முடியும்.

அரையிறுதி செல்ல என்ன செய்ய வேண்டும்?

உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் அரையிறுதி செல்ல என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சேஸிங்கில் தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சையும், ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சையும் சமாளித்து ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் பொறுமையாக ஆடுவதும் வெற்றியை முடிவு செய்யும்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் மும்பை வான்ஹடே அரங்கிலும், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டி ஆமதாபாத்திலும் நடக்கிறது. இரு ஆடுகளங்களுமே பேட்டர்களுக்கு சொர்க்கபுரி. இந்த ஆடுகளத்தில் ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து நல்ல ஸ்கோரை அதாவது 300 ரன்களுக்கு மேலாவது ஸ்கோர் செய்தால்தான் சமாளிக்க முடியும்.

ஆனால், ஒருவேளை தென் ஆப்பிரிக்கா, அல்லது ஆஸ்திரேலிய அணிகள் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தால், தொடக்கத்திலேயே டாப்-ஆர்டர் பேட்டர்களை வீழ்த்தி நெருக்கடிக்குள் தள்ளவேண்டும். 250 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும் இவை நடந்தால்தான் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற முடியும்.

அது மட்டுமல்லாமல், சேஸிங்கில் தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சையும், ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சையும் சமாளித்து ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் பொறுமையாக ஆடுவதும் வெற்றியை முடிவு செய்யும்.

எப்படி இருப்பினும், இரு அணிகளையும் ஆப்கானிஸ்தான் வெல்வது கடினம்தான் என்றாலும், கடைசி வரை போராட்ட குணத்தை ஆப்கானிஸ்தான் வெளிப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

பந்துவீச்சுதான் பலம்

உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் அரையிறுதி செல்ல என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

வேகப்பந்துவீச்சில் பரூக்கி தவிர பெரிதாக எந்தப் பந்துவீச்சாளரும் பந்துவீசவில்லை என்பது பலவீனம்.

ஆப்கானிஸ்தான் அணியின் வலிமையே அதன் சுழற்பந்துவீச்சுதான். முகமது நபி, முஜிபுர் ரஹ்மான், ரஷித் கான், நூர் அகமது ஆகிய 4 சுழற்பந்துவீச்சாளர்கள் சர்வதேச பேட்டர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கிறார்கள்.

குறிப்பாக ரஷித் கான் பல்வேறு அணிகளின் வீரர்களுக்கு எதிராக பந்துவீசிய அனுபவத்தைப் பெற்றுள்ளார். உலக நாடுகளில் பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடிய அனுபவம் ரஷித் கானுக்கு நிச்சயம் கை கொடுக்கும்.

ஐபிஎல் தொடரில் பங்கேற்ற ரஷித் கான் இந்திய ஆடுகளங்களின் தன்மையை நன்கு அறிந்தவர் என்பது கூடுதல் பலம். இந்தியாவில் 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ரஷித் கான் 23 விக்கெட்டுகளை இதுவரை வீழ்த்தியுள்ளார் என்பதே இந்திய ஆடுகளங்களின் தன்மையை அவர் அறிந்துள்ளதற்கு சாட்சி.

முகமது நபி 167 போட்டிகளில் பங்கேற்ற அனுபவ சாலி, இளம் பந்துவீச்சாளர் முஜிபுர் ரஹ்மான், சினாமேன் நூர் அகமது ஆகியோர் இந்திய ஆடுகளங்களுக்கு ஏற்ப சிறப்பாகப் பந்துவீசி வருவது மிகப்பெரிய பலம்.

ஆனால், வேகப்பந்துவீச்சில் பரூக்கி தவிர பெரிதாக எந்தப் பந்துவீச்சாளரும் பந்துவீசவில்லை என்பது பலவீனம். ஓமர்ஜாய், நவீன் உல் ஹக் இன்னும் லைன் லென்த்தில் வீசினால் ஓரளவுக்கு அணிக்கு பக்கபலமாக இருக்கும்.

பலவீனங்கள் என்ன?

உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் அரையிறுதி செல்ல என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஆப்கானிஸ்தான் அணியில் இருக்கும் பெரும்பாலான வீரர்கள் பெரிதாக அனுபவம் இல்லாதவர்கள்.

ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சு எந்த அளவுக்கு வலு சேர்க்கிறதோ, நிலைத்தன்மையுடன் இருக்கிறதோ அதற்கு நேர்மாறாக பேட்டிங்கில் நிலைத்தன்மை இல்லாமல் இருக்கிறது. ரஹ்மத் ஷா, கேப்டன் ஷாகிதி மட்டுமே தொடர்ந்து நிலைத்தன்மையான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

தொடக்க ஆட்டக்காரர்கள் குர்பாஸ், ஜாத்ரன் இருவருமே கடந்த 5 போட்டிகளில் பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து வருவது பெரிய பின்னடைவு. 10 ஓவர்களில் டாப் ஆர்டர் விக்கெட்டுகள் வீழ்ந்தாலே நடுவரிசை வீரர்களுக்கு அழுத்தம் ஏற்பட்டு ரன் சேர்ப்பதில் சிக்கல் ஏற்படும். ஆதலால் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடுவது அவசியம்.

ரஷித் கான், முகமது நபி, நஜ்புல்லா ஜாத்ரன் ஆகிய 3 பேருமே ஓரளவுக்கு பேட் செய்யக் கூடியவர்கள். இவர்களும் உலகக்கோப்பையில் பெரிதாக இதுவரை ரன் சேர்க்கவில்லை. இதனால் கடைசி வரிசையில் எந்த பேட்டர்களும் இல்லாத நிலை இருப்பது ஆப்கானிஸ்தானுக்கு பெரிய பின்னடைவு.

ஐபிஎல் தொடரில் பிஞ்ச் ஹிட்டராக ரஷித் கான் செயல்பட்டதைப் போன்று அடுத்து வரும் இரு போட்டிகளில் செயல்பட்டால், நம்பிக்கையாக இருக்கும். நெருக்கடியான நேரங்களில் பேட்டர்கள் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் விரைவாக ஆட்டமிழந்து வருவது மிகப்பெரிய பலவீனம்.

உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் அரையிறுதி செல்ல என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

இந்த உலகக்கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்த போட்டிகளில் முழுமையாக 50 ஓவர்கள் பேட்ட செய்யவில்லை என்பதே சாட்சி.

ஆப்கானிஸ்தான் அணியில் இருக்கும் பெரும்பாலான வீரர்கள் பெரிதாக அனுபவம் இல்லாதவர்கள். ஏறக்குறைய 50 போட்டிகளுக்கும் குறைவாகவே சர்வதேச ஆட்டங்களில் பங்கேற்றவர்கள். இதனால் நெருக்கடியான நேரங்களில் எவ்வாறு விளையாடுவது, தேவையான நேரத்தில் எவ்வாறு ரன் சேர்ப்பது, எந்தப் பந்துவீச்சாளரை குறிவைப்பது, நுணுக்கத்துடன் எவ்வாறு பந்துவீசுவது போன்றவற்றில் பின்னடைவைச் சந்திக்கிறார்கள்.

இது தவிர ஃபீல்டிங்கில் ஆப்கானிஸ்தான் அணி சராசரிக்கும் குறைவாகவே இருக்கிறார்கள். உலகக்கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி ஃபீல்டிங்கில் மோசமாகவே செயல்படுகிறது, ஃபீல்டிங் விஷயத்தில் ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. ஆதலால் ஃபீல்டிங்கை மேம்படுத்துவது முக்கியம்.

அடுத்து வரும் இரு ஆட்டங்களும் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி செல்லவும், புதிய பரிமாணத்தை எட்டவும் முக்கியமானவை. இந்த ஆட்டங்களில் வெற்றி பெற்றால், ஆப்கானிஸ்தான் நிச்சயம் உலகத்தை திரும்பிப் பார்க்க வைக்கும். தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி கிட்டுவது கடினம் என்றாலும், ஆப்கானிஸ்தான் தனது போராட்டக் குணத்தை கடைசிவரை விடாது என்பதை ரசிகர்கள் ரசிக்கலாம்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *