சென்னை பள்ளிக்கரணை: சுயமரியாதை திருமணம் செய்த நான்கு மாதத்தில் பட்டியல் சாதி இளைஞர் ஆணவக் கொலை, ஐவர் கைது – என்ன நடந்தது?

சென்னை பள்ளிக்கரணை: சுயமரியாதை திருமணம் செய்த நான்கு மாதத்தில் பட்டியல் சாதி இளைஞர் ஆணவக் கொலை, ஐவர் கைது - என்ன நடந்தது?

சென்னையில் சாதி ஆணவக் கொலை

பட மூலாதாரம், Getty Images

சென்னை பள்ளிக்கரணையில் நான்கு மாதங்களுக்கு முன்பு சுயமரியாதை திருமணம் செய்த பட்டியல் சாதி இளைஞரை பெண்ணின் சகோதரர் உட்பட ஐந்து பேர் சேர்ந்து படுகொலை செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (சனிக்கிழமை, பிப்ரவரி 24) நடந்துள்ளது.

இவ்வழக்கில் இன்று (ஞாயிறு, பிப்ரவரி 25) பெண்ணின் சகோதரர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணின் சகோததர் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னை பள்ளிக்கரணை அருகே உள்ள ஜல்லடியன்பேட்டையைச் சேர்ந்தவர் ஷர்மிளா. பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர், இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த பிரவீன் (26) என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். பட்டியல் சாதியைச் சேர்ந்த பிரவீன், அதே பகுதியில் தனது தந்தையுடன் இரு சக்கர வாகன பழுதுநீக்கு நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதியினர்

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு,

பிரவீன் மற்றும் ஷர்மிளா

என்ன நடந்தது?

பிரவீன் மற்றும் ஷர்மிளாவின் காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவர, அவர்கள் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, ஷர்மிளா தனது வீட்டை விட்டு வெளியேறி, பிரவீனின் வீட்டுக்குச் சென்றுள்ளார். பின், இருவரும், பெண் வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி, சுயமரியாதை திருமணம் செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பெண் வீட்டார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். விசாரணையின்போது, ஷர்மிளா பிரவீனுடன் செல்வதாகக் கூறியதையடுத்து, இருதரப்பினரிடமும் ஒப்புதல் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியதாகப் பள்ளிக்கரணை போலீசார் தெரிவித்தனர்.

இவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த ஷர்மிளாவின் பெற்றோர் மற்றும் அவரது சகோதரர் தினேஷ், பிரவீன் மீது கோபத்தில் இதுந்துள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர்.

சென்னையில் சாதி ஆணவக் கொலை

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு,

சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் பிரவீன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்

மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்த பிரவீன்

திருமணம் நடந்து நான்கு மாதங்கள் ஆன நிலையில், பிரவீனும் ஷர்மிளாவும் பள்ளிக்கரணையில் உள்ள அம்பேத்கர் தெருவில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

நேற்று நேற்று (சனிக்கிழமை, பிப்ரவரி 24) பணி முடித்து வீட்டிற்கு வந்த பிரவீன், மாலை 7 மணிக்கு மேல் ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததை அடுத்து, அவர் வெளியே சென்றதாகப் பிரவீனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

வெளியே சென்ற பிரவீனை, இரவு 9 மணி அளவில், வழிமறித்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த பிரவீனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

ஆனால், மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாகக் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேதப் பரிசோதனை முடிவைந்து, இன்று காலை அவரது உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஐந்து பேர் கைது

சென்னையில் சாதி ஆணவக் கொலை

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு,

பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட ஐந்து பேர் சேர்ந்து பிரவீனை வெட்டிக் கொலை செய்துள்ளனர்

இது தொடர்பாக பள்ளிக்கரணை காவல்நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பிரவீன் மற்றும் ஷர்மிளா இருவரும் வெவ்வேறு சாதி என்பதும், இளம்பெண்ணின் சகோதரர் தினேஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரவீனை கொலை செய்ததும் தெரியவந்ததது.

இதனையடுத்து தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் ஸ்டீஃபன் (24), ஸ்ரீராம் (18), விஷ்ணு (25), ஜோதிலிங்கம் (25), ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, பிரவீன் மற்றும் அவரது மனைவியின் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உயிரிழந்த பிரவீன் மீது ஏற்கெனவே கொலை வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னையில் சாதி ஆணவக் கொலை

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு,

பிரவீன் மற்றும் ஷர்மிளா

‘எனது சகோதரர் எங்களை மிரட்டினார்’

இதுகுறித்து இன்று காலை ஊடகங்களிடம் பேசிய ஷர்மிளா, “திருமணம் நடந்ததில் இருந்து நாங்கள் மகிழ்ச்சியாகத்தான் இருந்துவந்தோம். ஆனால், இந்த நான்கு மாதத்தில் எனது சகோதரர் இரண்டு முறை எங்களை கொலை செய்துவிடுவோம் என மிரட்டினார். தற்போது என் கணவரை கொலை செய்த அவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்க வேண்டும்,”என்றார்.

தமிழ்நாட்டில் ஆணவக்கொலை

 சாதி ஆணவக்கொலைகள்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க உள்ள மாநிலங்களில், காதலித்து மாற்று சாதியில் திருமணம் செய்யும் தம்பதிகளை ஆணவக்கொலை செய்வது தொடர்கதையாகி வருகிறது. இது சமீப காலங்களில் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் சாதிய எதிர்ப்பாளர்கள் கூறினாலும், தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை இந்தியா முழுவதும் 203 ஆணவக்கொலைகள் நடந்துள்ளன.

இதுவே, தமிழ்நாட்டில், கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை மொத்தம் 23 ஆணவக்கொலைகள் நடந்துள்ளதாக தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குறையும் என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

மதுரையைச் சேர்ந்த எவிடன்ஸ் அமைப்பைச் சேர்ந்த கதிர் பிபிசியிடம் பேசுகையில், “ஆணவக்கொலைகளுக்காக தனிச்சட்டம் இயற்றினால், தான் குறைந்தபட்சம் ‘இப்படி ஒரு சட்டம் இருக்கிறது, நடவடிக்கை கடுமையாக இருக்கும்’ என்கிற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படும். அப்போதாவது இது குறையும். ஆனால், எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும், அந்தச் சட்டத்தை கண்டுகொள்வதே இல்லை,” என வருத்தம் தெரிவித்தார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *