பட மூலாதாரம், Getty Images
காங்கிரஸுக்கு 11 தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
-
பிகார், மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ‘இந்தியா’ கூட்டணியில் தெளிவாகப் புலப்படும் அளவுக்கு ஏற்பட்டுள்ள உரசலுக்கு மத்தியிலும் அந்தக் கூட்டணிக்கு குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் ‘நம்பிக்கை’ துளிர்த்திருப்பதாகத் தெரிகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்வதைத் தடுக்கும் இலக்குடன் இந்தியா முழுவதும் உள்ள 28 கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ (The Indian National Developmental Inclusive Alliance) என்ற கூட்டணியை உருவாக்கியது. இதில், காங்கிரஸ், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அந்தந்த மாநிலங்களில் வலுவாக உள்ள கட்சிகளின் தலைமையில் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது என்ற குறைந்தபட்ச செயல் திட்டத்துடன் அக்கட்சிகள் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியுள்ளன.
’இந்தியா’ கூட்டணியில் பிகார், மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய சில மாநிலங்களில் உரசல்களும் சலசலப்புகளும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
எனினும், 80 மக்களவைத் தொகுதிகளுடன் பெரிய மாநிலமாக உள்ள உத்தர பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சிக்கு 11 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் அம்மாநில முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் சனிக்கிழமை (ஜன. 27) தெரிவித்திருந்தார். இதை அக்கூட்டணியில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தகுந்த முன்னேற்றமாக அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.
‘வரலாற்றை மாற்றும்’
பட மூலாதாரம், Getty Images
“காங்கிரஸுடனான எங்கள் நல்லுறவு கூட்டணி 11 வலுவான இடங்களுடன் நல்ல தொடக்கத்தில் உள்ளது” எனப் பதிவிட்டுள்ளார் அகிலேஷ்.
இதுதொடர்பாக, அகிலேஷ் யாதவ் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காங்கிரஸ் உடனான எங்கள் நல்லுறவு கூட்டணி 11 வலுவான இடங்களுடன் நல்ல தொடக்கத்தில் உள்ளது. இந்தப் போக்கு வெற்றி சமன்பாட்டுடன் முன்னேறும். பிற்படுத்தப்பட்டோர், தலித், சிறுபான்மையினருக்கான ’இந்தியா’ கூட்டணியின் வியூகம் வரலாற்றை மாற்றும்,” என இந்தி மொழியில் பதிவிட்டிருந்தார்.
காங்கிரஸுக்கு 11 தொகுதிகளையும் ராஷ்டிரிய லோக் தளத்திற்கு 7 தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாகவும் மீதமுள்ள 62 தொகுதிகளில் சமாஜ்வாதி போட்டியிடும் என, அக்கட்சியின் முதன்மை செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சௌத்ரி தெரிவித்துள்ளதாக, பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 11 தொகுதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
தொகுதி சமன்பாடு எட்டப்பட்டவுடன் இதுகுறித்து அறிவிப்போம் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ராம் ரமேஷ், தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அஷோக் கெலாட், சமாஜ்வாதி தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அது நேர்மறையாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். தொகுதி சமன்பாடு எட்டப்பட்டவுடன் இதுகுறித்து அறிவிப்போம் எனத் தெரிவித்தார்.
எனினும், சமாஜ்வாதி – காங்கிரஸ் கட்சிக்குள் தொகுதி உடன்பாடு கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது. காங்கிரஸுக்கு 11 தொகுதிகள் என்பது இறுதி செய்யப்பட்டால் இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு எட்டப்பட்ட முதல் மாநிலமாக உத்தர பிரதேசம் இருக்கும்.
உத்தர பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாஜக 62 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. அந்தத் தேர்தலில், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ராஷ்டிரிய லோக் தளம் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து ‘மஹாகத்பந்தன்’ என்ற மகா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில், பகுஜன் சமாஜ் 10 இடங்களையும் சமாஜ்வாதி 5 இடங்களையும் வென்றது. ராஷ்டிரிய லோக் தளம் எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
காங்கிரஸ் 2019 மக்களவை தேர்தலில் ஒரு இடத்தை மட்டுமே வென்றது. 2014 மக்களவை தேர்தலில் இரண்டு இடங்களை மட்டுமே வென்றிருந்தது. 2009 தேர்தலில் காங்கிரஸ் 21 இடங்களை வென்றிருந்தது. சுதந்திரத்திற்குப் பிந்தைய பொதுத் தேர்தல்களில் உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் பெரும்பாலான தொகுதிகளை வென்ற நிலை மாறி, தற்போது அந்த மாநிலத்தில் ஒன்றுமே இல்லாத நிலையை நோக்கிச் சென்றுள்ளது.
அகிலேஷ் யாதவின் வியூகம்
பட மூலாதாரம், Getty Images
“காங்கிரஸ் இந்தி பேசும் மாநிலங்களில் மாற்று சக்தியாக மாறியிருப்பது உண்மை,” என்கிறார் பத்திரிகையாளர் ப்ரியன்.
இந்நிலையில், இத்தேர்தலில் சமாஜ்வாதி – காங்கிரஸ்ஆகிய இரு கட்சிகளும் இணைந்துள்ள நிலையில், எதிர்மறையான செய்திகளுக்கு மத்தியில் மிக நேர்மறையான முன்னேற்றமாகவே இதைக் கருதலாம் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
“சமீபத்தில் இந்தி பேசும் மாநிலங்களில் (சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம்) நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் தோற்றாலும் மிக மோசமான தோல்வியைப் பெறவில்லை. நல்ல வாக்குகளைப் பெற்றுள்ளது,” என்கிறார் அவர்.
ராஜஸ்தானில் தேர்தல் முடிந்து ஒரு மாதத்திற்குள் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக அமைச்சர் சுரேந்திர பால் சிங் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோற்றதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
“காங்கிரஸ் இந்தி பேசும் மாநிலங்களில் மாற்று சக்தியாக மாறியிருப்பது உண்மை,” என்கிறார் ப்ரியன்.
பட மூலாதாரம், Getty Images
மேற்கு வங்கத்தில் தனித்து களம் காண்பதாக மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளும் குஜராத்தில் உள்ள 26 இடங்களும் பாஜகவுக்கு தன் ‘பாக்கெட்டில்’ உள்ள தொகுதிகள் போன்றது எனக் கூறும் ப்ரியன், அதற்கொரு ‘செக்’ வைக்கும் விதமாகவே காங்கிரஸுடன் கூட்டணியில் இணைந்து தொகுதிகளை சமாஜ்வாதி கட்சி பங்கு பிரித்துள்ளதாகக் கூறுகிறார் ப்ரியன். அகிலேஷ் யாதவின் உத்தியாகவே இதைக் கருதுகிறார் அவர்.
“இதனால், தலித் – இதர பிற்படுத்தப்பட்டோர் – முஸ்லிம் வாக்குகளைப் பெறுவது சமாஜ்வாதி – ராஷ்டிரிய லோக் தளம் – காங்கிரஸ் கூட்டணிக்கு சுலபம்,” என்கிறார் ப்ரியன்.
பாஜகவுக்கு சாதகமாக இல்லாத சில விஷயங்கள் இருக்கவே செய்கின்றன எனக் கூறும் அவர், அவை ’இந்தியா’ கூட்டணிக்கு சாதகமாக அமையலாம் என்றும் இது பாஜகவுக்கு நிச்சயம் சவாலாக இருக்கும் என்றும் தெரிவித்தார் அவர்.
தனித்து களம் காணும் கூட்டணிக் கட்சிகள்
‘இந்தியா’ கூட்டணியில் மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி, 42 மக்களவைத் தொகுதிகள் அடங்கிய அம்மாநிலத்தில் பாஜகவை தனித்து நின்று எதிர்கொள்வோம் என்று சமீபத்தில் உறுதிபடக் கூறியிருந்தார்.
காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்க திரிணாமுல் காங்கிரஸ் முன்வந்து, அதை காங்கிரஸ் கட்சி ஏற்க மறுத்ததாலேயே இந்த முடிவுக்கு மமதா பானர்ஜி வந்ததாக ஊகங்கள் உள்ளன.
மேற்கு வங்க மாநிலத்தில் 22 தொகுதிகளை கடந்த தேர்தலில் வென்றிருந்தார் மமதா பானர்ஜி. கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்ததால் மேற்கு வங்கத்தில் பெரிய வெற்றியை திரிணாமுல் காங்கிரஸால் பெற முடியவில்லை என்ற பேச்சு அப்போது நிலவியது.
மேலும், இது பாஜகவுக்கு சாதகமாக அமைந்து, 40 தொகுதிகளில் 18 தொகுதிகளை பாஜக வென்றதும் குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் வாக்குகளைப் பிரித்ததே, அதிக தொகுதிகளை திரிணாமுல் வெல்ல முடியாமல் போனதற்குக் காரணம் என்கிறார் ப்ரியன்.
பட மூலாதாரம், ANI
’இந்தியா’ கூட்டணியிலிருந்து பிரிந்து மீண்டும் பாஜகவுடன் நிதிஷ் குமார் இணைவார் என செய்திகள் வெளியாகி வருகின்றன.
மற்றொருபுறம், பிகாரில் மிகப்பெரும் அரசியல் திருப்பம் ஏற்படும் அளவுக்கு ‘இந்தியா’ கூட்டணி உருவாக முக்கியக் காரணமாக இருந்த ஐக்கிய ஜனதா தள தலைவரும் அம்மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார், அக்கூட்டணியில் இருந்து விலகி பாஜகவில் இணைவார் என்ற ஊகங்கள் கிளம்பியுள்ளன. இதற்கு சமீப நாட்களாக அவர் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரைத் தாக்கியும், பாஜகவையும் பிரதமர் நரேந்திர மோதியையும் புகழ்ந்தும் பேசியது காரணமாகச் சொல்லப்படுகிறது.
பிகாரின் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாகூரின் பிறந்தநாளான ஜன. 24 அன்று அவருக்கு அஞ்சலி செலுத்தும்போது நிதிஷ் குமார் வாரிசு அரசியலைத் தாக்கிப் பேசினார். லாலு பிரசாத் யாதவையே நிதிஷ் குமார் மறைமுகமாக சாடுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மேலும், கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருதை பாஜக அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இதற்காக பிரதமர் நரேந்திர மோதிக்கு நிதிஷ் குமார் நன்றி தெரிவித்திருந்தார். இது பாஜகவின் பக்கம் அவர் மீண்டும் சாய்வதற்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
பிகார் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் பாஜகவுடன் இணைவார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதையொட்டி, பிகாரில் சனிக்கிழமை மாலையை கடந்தும் ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆகிய கட்சிகள் கூட்டங்களை நடத்தி வந்தன.
நிதிஷ்குமார் மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்தால் அது 2005 நவம்பருக்கு பிறகு முதலமைச்சராக அவர் செய்யும் ஐந்தாவது ‘யு டர்ன்’ ஆக இருக்கும். 2022 ஆகஸ்ட் மாதம்தான் நிதிஷ் குமார் பாஜகவிடம் இருந்து விலகி ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கைகோர்த்தார்.
அதேபோன்று, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மியும் தெரிவித்துள்ளது.
நிதிஷ் குமார் நம்பகத்தன்மையை இழந்தாரா?
பட மூலாதாரம், ANI
’குடும்ப அரசியல்’ குறித்து லாலு பிரசாத் யாதவை நிதிஷ்குமார் மறைமுகமாக விமர்சிப்பதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
”பிகாரில் நிதிஷ் குமாரின் நம்பகத்தன்மை போய்விட்டது. ஏனென்றால் அவர் தொடர்ந்து பாஜக அல்லது ராஷ்டிரிய ஜனதா தளம் என ‘சடுகுடு’ ஆடிக்கொண்டிருக்கிறார். இனி அவர் எங்கு சென்றாலும் கவலைப்படத் தேவையில்லை,” என்றார் பத்திரிகையாளர் ப்ரியன்.
பிகாரில் நிதிஷ் குமாருக்கு நேர் எதிரான மனநிலை கொண்ட மறைந்த ராம் விலாஸ் பஸ்வானின் கட்சியான லோக் ஜன சக்தி பாஜக கூட்டணியில் உள்ளது. அதன் தலைவராகத் தற்போது ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் உள்ளார்.
இந்நிலையில், நிதிஷ் குமார் அக்கூட்டணிக்குச் சென்றால், அதிருப்தியில் லோக் ஜன சக்தி ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் செல்வதற்கும் வாய்ப்பு உள்ளதாக ப்ரியன் தெரிவித்தார்.
அப்படி நடந்தால் பிகாரில் ‘இந்தியா’ கூட்டணியால் தலித் – முஸ்லிம் – யாதவ் சமூக வாக்குகளை ஒருங்கிணைக்க முடியும் எனக் கூறுகிறார் அவர்.
மமதா பானர்ஜி மீண்டும் இணைவாரா?
“இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் பிரிந்துவிட்டால், மமதா பானர்ஜி மீண்டும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை காங்கிரஸுடன் நடத்தலாம். ஏனென்றால், அவர் போட்டியாளராகக் கருதுவது நிதிஷ் குமாரைத்தான்.
அதனாலேயே, ’இந்தியா’ கூட்டணிக்கு தலைவராக மல்லிகார்ஜுன கார்கேவை மமதா பரிந்துரைத்தது நினைவிருக்கலாம். இதனால் மமதா மீண்டும் கூட்டணிக்கு வரலாம். காங்கிரஸுக்கு 2 தொகுதிகள் அல்லாமல் 6-7 தொகுதிகள் கொடுக்குமாறு மமதாவுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாகத் தகவல்கள் வருகின்றன,” எனத் தெரிவிக்கிறார் பிரியன்.
‘பாஜகவுக்கு சாதகம் இல்லை’
பட மூலாதாரம், Getty Images
’இந்தியா’ கூட்டணி சலசலப்புகள் பாஜகவுக்கு பலனளிக்காது என்கிறார், ‘தராசு’ ஷ்யாம்.
‘இந்தியா’ கூட்டணியில் ஏற்படும் சலசலப்புகள் பாஜகவுக்கு சாதகமாக அமையாது என்பது மூத்த பத்திரிகையாளர் ‘தராசு’ ஷ்யாம் கருத்தாக இருக்கிறது.
தராசு ஷ்யாம் கூறுகையில், “மேற்கு வங்கம், பிகாரில் இந்தியா கூட்டணியில் உள்ள பிரச்னைகள் பாஜகவுக்கு சாதகமாக அமையாது. பஞ்சாபில் ஆம் ஆத்மி ஜெயித்தால் தேர்தலுக்குப் பின்னர் இந்தியா கூட்டணிக்குதான் வரும்.
மேற்கு வங்கத்திலும் தேர்தலுக்குப் பின்னர் மமதா பானர்ஜி இந்தியா கூட்டணிக்குத்தான் வருவார். இந்த சலசலப்புகள், மக்களின் மனநிலையில் சில மாற்றங்களை உண்டு செய்யுமே தவிர, வெற்றி வாய்ப்புகளில் பாதிப்புகளை ஏற்படுத்தாது. தேர்தலுக்குப் பின் இந்தியா கூட்டணிக்குள் வருவதைத் தவிர மமதாவுக்கோ அரவிந்த் கேஜ்ரிவாலுக்கோ வேறு வழியில்லை,” என்றார்.
மேலும், “உத்தர பிரதேசம் நல்ல தொடக்கமாக இருக்கிறது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகியவை முக்கியமான மாநிலங்கள். இங்கு மொத்த தொகுதிகளை வெல்ல வேண்டும் என பாஜக நினைக்கும்.
அந்த மாநிலங்களில் பெரும்பான்மையான தொகுதிகள் பாஜகவின் ’பாக்கெட்டுக்குள்’ தான் இருக்கின்றன. ராமர் கோவில் திறப்பு உள்ளிட்டவை பாஜகவுக்கு பலன் தரும்” என்றார் தராசு ஷ்யாம்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
