
இந்தியா – கனடா உறவு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இந்த நேரத்தில் கனடாவின் ஃப்ரான்ட்ஃபோர்ட் மெசிஸ்வாகா நகரில் பிபிசி சிலரிடம் பேச முயற்சி செய்தது.
அவர்கள் இந்தியா-கனடா உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்தும் வளர்ந்து வரும் சர்வதேச அரசியல் சூழல் குறித்தும் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள பிபிசி முயன்றது.
அப்போது பலரும் பேச அஞ்சினர். சிலர் விவகாரம் என்னவென்றே புரியவில்லை என்று கூறினர். இன்னும் சிலர் இதுவோர் அரசியல் பிரச்னை என்றும் தேர்தல் வரவுள்ள நிலையில், கனடா தேர்தலுக்கும் இந்தப் பதற்றக்கும் இடையே தொடர்பு இருக்கக்கூடும் என்றும் கருதுகின்றனர்.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவுகள் இயல்பாகிவிடும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்தனர். அவர்கள் இதுவொரு சாதாரணமான, தற்காலிக நிலைமை என்றும் குறிப்பிட்டனர்.
காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புடைய சிலரிடமும் பிபிசி பேசியது. அவர்கள் கனடா தங்களுக்கு நீதியைப் பெற்றுத் தரும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், REUTERS/MIKE SEGAR
கனடா வாழ் இந்தியர்களில் சிலர் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு எப்போதுமே நன்றாக இருந்துள்ளது, அது இனியும் தொடரும் என அங்குள்ள இந்தியர்கள் சிலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கனடா வாழ் இந்தியர்கள் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான இந்த தூதாண்மை பதற்றம் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து இனி பார்ப்போம்.
‘நாங்கள் இங்கே நிம்மதியாக இருக்கிறோம்’
இதுகுறித்துப் பேசிய கனடாவாழ் இந்தியர் ஒருவர், “கடந்த திங்கட்கிழமை முதல் இந்தப் பதற்றம் காணப்படுகிறது. இது வரவுள்ள தேர்தல் மற்றும் வாக்கு வங்கியை மனதில் வைத்து நடப்பதாகத் தான் கருதுவதாக,” கூறினார்.
மேலும், “நாம் புள்ளிவிவரங்களைப் பார்த்தால் சர்ரியில் மட்டும் பல லட்சம் சீக்கியர்களின் வாக்குகள் உள்ளன. அவர்களுடைய வாக்குகளைப் பெறுவதற்காக இது நடப்பதாக நான் நினைக்கிறேன்.

நாங்கள் இங்கே நிம்மதியாக இருக்கிறோம். மக்களுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பொது மக்கள், அதிலும் குறிப்பாக இளைஞர்கள் இதற்குள் வரக்கூடாது என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். மதம் பரஸ்பர வெறுப்பைத் தூண்டுமாறு நமக்குக் கற்றுத் தரவில்லை,” என்று தெரிவித்தார்.
அதோடு, “அரசியல்வாதிகள் வருவார்கள், போவார்கள். ஆனால், நமக்குத் தீமை விளைவிக்கக் கூடிய பரஸ்பர பகைமை, வெறுப்பு ஆகியவை நமக்குள் இருக்கக் கூடாது, நம் நாட்டுக்கும் சேதம் ஏற்படக்கூடாது என்பதையே நான் விரும்புகிறேன்,” என்று கூறினார்.
‘அனைவரின் நலனுக்காகவும் நல்லுறவு இருக்க வேண்டும்’
அனைவருடைய பொருளாதார நன்மைகளுக்காக இரு நாடுகளுக்கு இடையிலும் நல்லுறவு இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் என்று மற்றொரு கனடா வாழ் இந்தியர் கூறுகிறார்.
“இரண்டு நாடுகளுமே பெரிய பொருளாதாரங்கள். பெரிய பொருளாதாரமான இந்தியாவை புறக்கணிக்க முடியாது. கனடாவும் பெரிய செல்வந்த நாடுகளில் ஒன்று.”

“பொருளாதார ரீதியாக இரு நாடுகளுக்கு இடையிலான உறவு சிறப்பாக இருந்தால், அதன் மூலம் அனைவருக்கும் நன்மை கிடைக்கும். இதுபோன்ற விவகாரங்களில் அரசியலுக்காக செய்யப்படும் விஷயங்களில் சிக்கிக் கொண்டால் இழப்புதான் ஏற்படும்,” என்று அவர் கருதுகிறார்.
மேலும், “இப்போது மக்களுக்கு உணவுப் பொருட்கள் நன்றாக, குறைந்த விலையில் கிடைக்கின்றன. வீடு விலை, வாடகை போன்றவை ஸ்திரமான நிலையில் இருக்கிறது. இவற்றின் மேல் இருக்கும் அரசின் கவனம் இந்த விவகாரங்களின் மூலம் போய்விடும்.
முக்கியமற்ற விஷயங்கள் மீது கவனம் செலுத்துவதைக் காட்டிலும் இரு நாடுகளும் ஒன்றிணைந்து முன்னேறுவதில் கவனம் செலுத்த வேண்டும். அதன்மூலம் அனைவருமே மகிழ்ச்சியாக இருப்பார்கள்,” என்று ஒருவர் கருதுகிறார்.
‘அன்பாக இணைந்திருப்பதே முக்கியம்’

மக்கள் ஒருவரோடு ஒருவர் அன்பாக இணைந்திருப்பதே முக்கியம் எனக் கருதுகிறார் கனடா வாழ் இந்தியரான மற்றொரு பெண்.
“இங்கு நாங்கள் அனைவரும் பிசியாக இருக்கிறோம். இந்தியாவில் இருப்பதைப் போலவே அதே பண்டிகைகளைக் கொண்டாடுகிறேம். இங்கு நான் பிள்ளையார் சிலை கூட வைக்கிறேன். இன்று நான் பிள்ளையார் சிலை வாங்கத்தான் வந்திருக்கிறேன்.
இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் மக்கள் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவதைப் போலவே நானும் கொண்டாடுகிறேன்.
இந்நிலையில், இத்தகைய விஷயங்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டிய அவசியம் இல்லையென்றே நான் நினைக்கிறேன். மக்கள் ஒருவரோடு ஒருவர் அன்பாக இணைந்திருக்கிறோம்,” என்று தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, இங்குள்ள அனைத்து இந்தியர்களும் இந்தியாவில் காணப்படுவதைப் போலவே இருக்கிறார்கள் என்றும் இரண்டு பெரிய அரசியல் தலைவர்கள் சம்பந்தப்பட்டுள்ள இரு நாடுகளுக்கு இடையே இப்படிச் செய்துகொண்டிருப்பது மிகவும் தவறு என்றும் அவர் கூறுகிறார்.
இந்நிலையில், “இந்தியா-கனடா பிரச்னை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் தான் அங்கு மகிழ்ச்சியாக வாழ்வதாகவும்” கூறினார் மற்றொரு பெண்மணி.
‘கனடா மிகவும் நல்ல நாடு’

இரு நாடுகளின் உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் தற்காலிகமானது என்று சிலர் நினைக்கின்றனர்.
“சிலருக்கு அரசியல் உள் நோக்கங்கள் இருக்கலாம். அடிப்படை விஷயங்களை விட்டுவிட்டு வேறு பிரச்னைகளில் கவனம் செலுத்தும் சிலர் இருக்கலாம்.
ஆனால், இங்கு ஏதோ பெரிய பிரச்னை இருப்பதாக யாரும் நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கு மக்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நாம் யாரிடம் பேசினாலும் அவர்கள் அன்பாகவே பேசுகிறார்கள்.
சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி சேனல்களை தவிர அனைத்து இடங்களிலும் இங்கு நன்றாகவே இருக்கிறது. இது மிகவும் நல்ல நாடு. மக்களிடையே பரஸ்பர அன்பு இருக்கிறது,” என்று ஒருவர் கூறினார்.
அதை ஆமோதிப்பது போலவே மற்றொரு கனடாவாழ் இந்தியப் பெண்ணும் கூறினார்.
“இது எல்லாமே அரசியல் மட்டத்தில்தான் நடக்கிறது. பொது மக்களைப் பொருத்தவரை நாங்கள் இங்கு நன்றாகவே இருக்கிறோம். நிம்மதியாக வாழ்கிறோம். இங்கு அனைத்தும் பாதுகாப்பாக இருக்கிறது.”
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்