
பட மூலாதாரம், அபயன் ஜி எஸ்
இந்தியாவில் உலகின் ஆரம்பகால நகர நாகரிகங்களில் ஒன்றிற்குச் சொந்தமான ஒரு விரிவான கல்லறைத் தளத்தைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பகால இந்தியர்கள் எவ்வாறு வாழ்ந்து இறந்தார்கள் என்பதற்கான தகவல்களை இந்தக் கல்லறைகள் நமக்குத் தரலாம் என்பதைப் பற்றி பிபிசியின் சௌதிக் பிஸ்வாஸ் ஆராய்கிறார்.
2019 ஆம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு அருகில் உள்ள இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில், குறைந்த மக்கள் தொகை கொண்ட கட்ச் பகுதியில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்திற்கு அருகில், மணல் மண் குன்றை அகழ்வாராய்ச்சி செய்யும் போது, அங்கு கிடைக்கவிருக்கும் ஆச்சரியத்தைப் பற்றி அறிவியலாளர்களுக்கு எதுவும் தெரியாது.
“நாங்கள் அகழத் தொடங்கியபோது, அது ஒரு பண்டைய குடியிருப்பு என்று நினைத்தோம். ஒரு வாரத்திற்குள், அது ஒரு கல்லறைத் தளம் என்று உணர்ந்தோம்” என்று அகழ்வாராய்ச்சியை வழிநடத்திய கேரள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர் ராஜேஷ் எஸ் வி கூறுகிறார்.
மூன்று கட்டங்களாக-150 இந்திய, சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் இந்த 40 ஏக்கர் பரப்பளவிலான தளத்தில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. உலகின் ஆரம்பகால நகர நாகரிகங்களில் ஒன்றான சிந்து சமூகத்தைச் சேர்ந்த குறைந்தது 500 கல்லறைகள் இந்த தளத்தில் இருப்பதாக இப்போது ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர். (இந்தக் கல்லறைகளில் சுமார் 200 கல்லறைகள் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டுள்ளன.)
ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படும் இந்தச் சமூகம், சுமார் 5,300 ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய வடமேற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் சுடு செங்கல் நகரங்களில் வாழ்ந்த எளிமையான விவசாயிகள் மற்றும் வணிகர்களால் நிறுவப்பட்டது. இந்த நாகரிகம் முதலில் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டில், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் 2,000 தளங்கள் வரை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பட மூலாதாரம், அபயன் ஜி எஸ்
குஜராத்தில் உள்ள கதீயா கிராமத்திற்கு அருகிலுள்ள விரிவான கல்லறைத் தளம் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட இந்தச் சமூகத்தின் மிகப்பெரிய “நகர நாகரிகத்துக்கு முந்தைய” கல்லறைத் தளமாக இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இது சுமார் 3200 கி.மு. முதல் 2600 கி.மு. வரை சுமார் 500 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்ததாக அவர்கள் நம்புகிறார்கள். இதனால், இங்குள்ள மிகப் பழமையான கல்லறைகள் சுமார் 5,200 ஆண்டுகள் பழமையானவை.
இதுவரையிலான அகழ்வாராய்ச்சிகள் ஒரே ஒரு முழுமையான ஆண் மனித எலும்புக்கூட்டையும், மண்டை ஓடு துண்டுகள், எலும்புகள் மற்றும் பற்கள் உட்பட பகுதியளவில் பாதுகாக்கப்பட்ட எலும்புக்கூட்டு எச்சங்களையும் கொடுத்துள்ளன.
ஆய்வாளர்கள் கல்லறைப் பொருட்களின் வரிசையையும் கண்டுபிடித்துள்ளனர் – 100க்கும் மேற்பட்ட வளையல்கள் மற்றும் 27 ஓடுகளால் ஆன மணிகள். பீங்கான் பாத்திரங்கள், கிண்ணங்கள், தட்டுகள், பானைகள், சிறிய குடங்கள், குவளை, களிமண் பானைகள், தண்ணீர் கோப்பைகள், பாட்டில்கள் மற்றும் ஜாடிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிறிய பொக்கிஷங்களில் அரை விலைமதிப்புள்ள கல், லாபிஸ் லாசுலி என்னும் நீலக் கல் ஆகியவற்றால் செய்யப்பட்ட மணிகள் அடங்கும்.
கல்லறைகளில் தனித்துவமான அம்சங்கள் உள்ளன, இதில் வெவ்வேறு திசைகளில் சுட்டிக்காட்டும் மணற்கள் கொண்ட கல்லறைத் குழிகள் அடங்கும். சில முட்டை வடிவமானவை; மற்றவை செவ்வக வடிவமானவை. குழந்தைகள் புதைக்கப்பட்ட சிறிய கல்லறைகள் உள்ளன. உடல்கள் மல்லாந்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அமில மண் காரணமாக பெரும்பாலான எலும்புகள் கரைந்துவிட்டன.
“இது மிகவும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு” என்று மிச்சிகனில் உள்ள ஆல்பியன் கல்லூரியில் மானுடவியல் பேராசிரியரான பிராட் சேஸ் கூறுகிறார்.

பட மூலாதாரம், அபயன் ஜி எஸ்
“குஜராத்தில் பல நகர நாகரிகத்துக்கு முந்தைய கல்லறைத் தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, ஆனால் இது, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய கல்லறைத் தளமாகும் – எனவே, இந்தப் பகுதியில் நகர நாகரிகத்துக்கு முந்தைய சமூகத்தைப் பற்றி தொல்லியலாளர்கள் முழுமையாகப் புரிந்துகொள்ள உதவும் பல்வேறு வகையான கல்லறைகளை கண்டுபிடிக்க முடியும். மேலும், ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட பிற சிறிய கல்லறைத் தளங்களுக்கு முக்கிய மேலும் புரிந்து கொள்ள உதவும்,” என்று பேராசிரியர் சேஸ் கூறுகிறார்.
இன்றைய பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் உள்ள சிந்து தளங்களின் முந்தைய அகழ்வாராய்ச்சிகள் சிந்து மக்களின் கல்லறை வழக்கங்கள் பற்றி சில தகவல்களை வழங்குகின்றன.
எகிப்து மற்றும் மெசபடோமியாவில் உள்ள மேல் தட்டு மக்களின் இறுதிச் சடங்குகளைப் போலல்லாமல், இவர்களின் இறுதிச் சடங்குகள் எளிமையானவை இருந்தன. இறந்தவர்களுடன் எந்த நகைகளும் ஆயுதங்களும் வைக்கப்படவில்லை.
இங்கு, பெரும்பாலான உடல்கள் துணியால் சுற்றி, செவ்வக வடிவிலான மரப் பெட்டிகளில் வைக்கப்பட்டன. கல்லறைக்குழி பெரும்பாலும் மண்பாண்ட பொருட்களால் நிரப்பப்பட்டிருக்கும், பின்னர் பெட்டி அதில் இறக்கப்படும் என்று விஸ்கான்சின்-மடிசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிந்து சமவெளி நாகரிகத்தின் அறிஞரான ஜொனதன் மார்க் கெனோயர் கூறுகிறார்.
சிலர் , மற்றவர்களுக்குக் கடத்தப்பட முடியாத தனிப்பட்ட அலங்காரங்களுடன் புதைக்கப்பட்டனர் – வளையல்கள், மணிகள், அலங்காரப் பொருட்கள் ஆகியவை அதில் அடங்கும். சில பெண்கள் செம்பால் செய்யப்பட்ட கண்ணாடியுடன் புதைக்கப்பட்டனர்.
பெரியவர்கள், உணவைப் பரிமாறுவதற்கும் சேமிப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட வெவ்வேறு வகையான பாத்திரங்களுடன் புதைக்கப்பட்டனர், மேலும் சிலர் குறிப்பிட்ட அலங்காரங்களுடன் புதைக்கப்பட்டனர் – ஓடுகளினால் வளையல்கள் பொதுவாக பெரிய பெண்களின் இடது கைகளில் காணப்பட்டன. சிசுக்கள் மற்றும் குழந்தைகள் பொதுவாக எந்த மண்பாண்ட பொருட்கள் அல்லது அலங்காரங்களுடனும் புதைக்கப்படவில்லை.
கல்லறைகளில் அதிகமான செல்வத்திற்கான எந்த ஆதாரமும் இல்லை, மேலும் அவர்களின் ஆரோக்கியத்தை பொறுத்தவரை, “சிலருக்கு மூட்டுவலி மற்றும் உடல் அழுத்தத்திற்கான அறிகுறிகள் இருந்தாலும் பெரும்பாலானோர் நன்றாக உணவளிக்கப்பட்ட மற்றும் ஆரோக்கியமானவர்களாக இருந்தனர்” என்பதைக் குறிக்கிறது.
ஆனால் குஜராத்தில் உள்ள இந்த மாபெரும் கல்லறைத் தளத்தின் மர்மம் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.
அறிவியலாளர்களுக்கு இந்தக் கண்டுபிடிப்பு தற்செயலானது. கேரள பல்கலைக்கழக தொல்லியல் மாணவர்கள் குழுவை கிராம தலைவர் ஒருவர் அழைத்துச் சென்றபோது, அவர் அவர்களுக்கு அந்தத் தளத்தை காண்பித்தார்.
400 பேர் கொண்ட சிறிய கிராமமான கதீயாவிலிருந்து வெறும் 300 மீட்டர் (985 அடி) தொலைவில் அது இருந்தது. அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மழைநீரை நம்பி நிலக்கடலை, பருத்தி மற்றும் ஆமணக்கு பயிரிட்டனர். அவர்களில் சிலரின் பண்ணைகள் கல்லறைக்கு அருகில் இருந்தன.
“மழைக்குப் பிறகு, சில மட்பாண்டங்களும் பிற பொருட்களும் மேற்பரப்புக்கு வருவதைப் பார்க்கலாம். சிலர் இங்கு பேய்கள் இருப்பதாக சொல்வார்கள். ஆனால் நாங்கள் இவ்வளவு பெரிய கல்லறைக்கு அருகில் வசிப்பதாக எங்களுக்குத் தெரியாது” என்று முன்னாள் கிராமத் தலைவர் நாராயண் பாய் ஜஜானி கூறினார்.

பட மூலாதாரம், அபயன் ஜி எஸ்
“இப்போது ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து விஞ்ஞானிகள் எங்கள் கிராமத்திற்கு வருகிறார்கள், இங்கு புதைக்கப்பட்ட மக்களைப் பற்றி மேலும் அறிய முயற்சிக்கிறார்கள்.”
குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சமீபத்திய கல்லறைகளில் என்ன ரகசியங்கள் உள்ளன? இங்கு புதைக்கப்பட்டவர்கள் யார்?
ஒரே இடத்தில் அதிகமான கல்லறைகள் இருப்பது இந்தக் கல்லறைத் தளத்தின் முக்கியத்துவம் குறித்து கேள்விகளை எழுப்புகிறது. அருகிலுள்ள குடியிருப்புகளுக்கு இது பொதுவான கல்லறை இடமாக இருந்ததா, அல்லது பெரிய குடியிருப்பு இருப்பதைக் குறிக்கிறதா?
மேலும், இந்தக் கல்லறைகளில் காணப்படும் லாபிஸ் லாசுலி என்னும் நீல நிற கற்கள் தூரத்தில் உள்ள ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தது என்று கருதும்போது, இது நாடோடிப் பயணிகளுக்கான புனித கல்லறைத் தளமாக செயல்பட்டிருக்க முடியுமா? அல்லது இறந்தவர்களின் எலும்புகள் தனித்தனியாகப் புதைக்கப்பட்ட “இரண்டாம் நிலை” கல்லறைத் தளமாக இது செயல்பட்டிருக்க முடியுமா?
“எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. அந்தப் பகுதியில் இன்னும் குடியிருப்பு எதையும் கண்டுபிடிக்கவில்லை. இன்னும் அகழ்வாராய்ச்சி செய்து வருகிறோம்” என்று கேரள பல்கலைக்கழக தொல்லியலாளர் அபயன் ஜி எஸ் கூறுகிறார்.

பட மூலாதாரம், AFP
கெனோயர் “இந்தக் கல்லறைத் தளத்துடன் தொடர்புடைய சில குடியிருப்புகள் இருக்க வேண்டும், ஆனால் அவை நவீன குடியிருப்புகளின் கீழ் இருக்கலாம் அல்லது இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் இருக்கலாம்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். கல்லறைகள் நன்றாக வரையறுக்கப்பட்ட கல் சுவர்களுடன் கட்டப்பட்டிருப்பது, மக்கள் கற்களைக் கொண்டு கட்டுவதில் தேர்ச்சி பெற்றிருந்ததைக் குறிக்கிறது, மேலும் இதுபோன்ற கல் கட்டிடங்கள் மற்றும் சுவர்களால் சூழப்பட்ட குடியிருப்புகள் கல்லறைத் தளத்திலிருந்து 19-30 கிலோமீட்டர் (11-18 மைல்) தொலைவில் காணப்படக் கூடும்.
மனித எச்சங்களின் மேலும் வேதியியல் ஆய்வுகள் மற்றும் டிஎன்ஏ பரிசோதனைகள் இங்கு வாழ்ந்து இறந்த ஆரம்பகால இந்தியர்கள் பற்றி மேலும் அறிய உதவும்.
சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய மர்மங்கள் நீடிக்கின்றன: எடுத்துக்காட்டாக, எழுத்து இன்னும் புரிந்து கொள்ளப்படவில்லை. இந்த குளிர்காலத்தில், கதீயா அருகேயுள்ள கல்லறைக்கு வடக்கே ஒரு தளத்தை அகழ்வாராய்ச்சி செய்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர், இதன் மூலம் ஒரு சாத்தியமான குடியிருப்பை கண்டுபிடிக்கலாம். ஒன்றை கண்டுபிடித்தால், புதிரின் ஒரு பகுதி தீர்க்கப்படும். இல்லையெனில், அவர்கள் தொடர்ந்து தோண்டி எடுப்பார்கள். “ஒருநாள், விரைவில் , எங்களுக்கு சில பதில்கள் கிடைக்கும்,” என்று ராஜேஷ் கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்