பாலத்தீனம்: ஹமாஸ் ஆயுதக்குழுவின் தாக்குதல் குறித்து எச்சரித்த இஸ்ரேல் பெண்கள் படை – நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்?

பாலத்தீனம்: ஹமாஸ் ஆயுதக்குழுவின் தாக்குதல் குறித்து எச்சரித்த இஸ்ரேல் பெண்கள் படை - நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்?

பெண்கள் படை

காஸா எல்லையில் இருக்கும் இவர்கள் ‘இஸ்ரேலின் கண்கள்’ என அழைக்கப்படுகிறார்கள்.

இஸ்ரேல்-காஸா எல்லையில், பல ஆண்டுகளாக இந்த இளம் பெண்கள் படைப் பிரிவுக்கு ஒரு வேலை இருந்தது. அது, மணிக்கணக்கில் கண்காணிப்பு தளங்களில் அமர்ந்து, சந்தேகத்திற்கிடமான அறிகுறிகளைப் பார்ப்பதும், அவற்றை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பதும்தான்.

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்திய அக்டோபர் 7-ஆம் தேதிக்கு முன், அந்த ஆயுதக்குழுவினர் எல்லையில் இருந்து பார்க்கக்கூடிய தூரத்தில் பயிற்சி மேற்கொள்வது, பணயக்கைதிகளை அழைத்துச் செல்வதுபோல பயிற்சி எடுப்பது, மற்றும் இஸ்ரேல் வேலிக்கு மறுபுறம் உள்ள விவசாயிகள் விசித்திரமாக நடந்துகொள்வது ஆகியவற்றை இந்தப் பெண்கள் பார்த்துள்ளனர்.

எல்லையில் கண்காணிப்பு பணியில் இருந்த நோவா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிபிசியிடம் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். எல்லையில் தாங்கள் பார்ப்பதை உளவுத்துறையினருக்கும், ராணுவ உயர் அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்த மட்டும்தான் முடியுமே தவிர அதற்கு மேல் எதுவும் செய்வதற்கு அதிகாரமற்று இருந்ததாகக் கூறினார், நோவா.

“நாங்கள் வெறும் கண்கள்தான்,” என்றார் அவர். அங்கு கண்காணிப்பில் இருந்த சில பெண்களுக்கு ஹமாஸ் ஆயுதக்குழுவினர் ஏதோ செய்யப்போகிறார்கள் என மிகத் தெளிவாகத் தெரிந்துள்ளது.

நோவாவின் வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், “மிக விரைவில் ஒரு பலூன் வெடிக்கப்போவதை முன்னதாகவே உணர்வதைப்போல இருந்தது,” என்றார்.

எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்த இளம் பெண்களிடம் பிபிசி பேசியது. அந்தப் பெண்கள், அவர்கள் சந்தேகத்திற்கிமான செயல்களை கவனித்தது, அது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்ய அறிக்கை, அதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் எந்த பதிலும் சொல்லாமல் இருந்தது உள்ளிட்டவை குறித்து பிபிசியிடம் பகிர்ந்துகொண்டனர்.

ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்கு முன்பு, சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து தங்களுக்குள் பேசிக்கொண்ட வாட்ஸ் அப் உரையாடல்களையும் பிபிசி பார்த்தது. மேலும், ஹமாஸ் தாக்குதல் குறித்து இந்த இளம்பெண்கள் மட்டும் எச்சரிக்கவில்லை, மேலும் சிலரும் இது குறித்து எச்சரித்திருந்ததால், தற்போது அது குறித்து இஸ்ரேல் ராணுவம் எடுத்த நடவடிக்கையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.

இந்த இளம்பெண்களை இழந்த குடும்பங்களிடமும், இந்த பெண்களின் எச்சரிக்கையை பொருட்படுத்ததாத ராணுவத்தின் நடவடிக்கையை உளவுத்துறையின் தோல்விகளில் ஒன்று எனக் கூறும் நிபுணர்களிடமும் பிபிசி பேசியது.

“பிரச்னை என்னவென்றால், அவர்கள் [ராணுவம்] தங்களுக்கு கிடைத்த தகவல்களின் புள்ளிகளை இணைக்கவில்லை,” என எல்லைப் பாதுகாப்பு படைப் பிரிவு ஒன்றில் பணியாற்றிய முன்னாள் தளபதி ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

அவர்கள் தங்களுக்கு கிடைத்த தகவலை சரியாக இணைத்துப் பார்த்திருந்தால், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதலுக்கு தயாராகி வருவதை உணர்ந்திருப்பார்கள் என்றார் அந்த முன்னாள் அதிகாரி.

ஷாய் ஆஷ்ரம்
படக்குறிப்பு,

ஷாய் ஆஷ்ரம் ராணுவத்தில் பணியாற்றுவதை மிகவும் பெருமையாகக் கருதியதாக அவரின் பெற்றோர் கூறினர்.

ஷாய் ஆஷ்ரம், 19, அக்டோபர் 7 அன்று பணியில் இருந்த பெண்களில் இவரும் ஒருவர்.

ஷாய் அவரது குடும்பத்தினருடன் தொலைபேசி அழைப்பில் இந்தபோது, “எங்கள் தளத்தில் பயங்கரவாதிகள் இருக்கிறார்கள், ஒரு பெரிய சம்பவம் நடக்கப் போகிறது,” என்று அவர் கூறியுள்ளார். அவர் பேசும்போது பின்னணியில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுள்ளது.

கொல்லப்பட்ட 10-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு வீரர்களில் இவரும் ஒருவர். மற்றவர்கள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தத் தொடங்கியதும், காஸா எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நஹல் ஓஸில் இருந்த பெண்கள், தங்களுக்கான வாட்ஸ்அப் குழுவில் ‘விடைபெறுகிறேன்’ எனப் பதிவிடத் தொடங்கியுள்ளனர்.

பணியில் இல்லாத நோவா, வீட்டில் இருந்து அந்த வாட்ஸ் அப் உரையாடல்களை பார்த்தபோது, ‘இது தான் அது’ என நினைத்துள்ளார். அவர்கள் நீண்டகாலமாக அஞ்சிய தாக்குதல் அப்போது நடந்துள்ளது.

காஸாவிலிருந்து எல்லைகளை உடைத்துக்கொண்டு வந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர், இந்தப் பெண்கள் இருக்கும் ராணுத் தளத்திற்குத்தான் முதலில் வந்துள்ளனர். ஏனெனில், இவர்கள் பணியாற்றி வந்த ராணுவத் தளம், எல்லைக்கு மிக அருகில் இருக்கக்கூடியது.

‘எல்லா மக்களையும் பாதுகாப்பதே எங்கள் பணி’

ரோனி
படக்குறிப்பு,

எல்லையின் மறுபுறம் இருந்து ஹமாஸ் ஆயுதக்குழுவினர் வேலிகளை புகைப்படம் எடுத்ததை தான் பார்த்ததாகக் கூறினார் ரோனி.

இந்தப் பெண்கள் எல்லைக்கு அருகில் உள்ள அறைகளுக்குள் அமர்ந்து, வேலியில் வைக்கப்பட்டுள்ள கேமராக்கள் மற்றும் காஸா மீது வட்டமிடும் பலூன்கள் மூலம் கைப்பற்றப்பட்ட நேரடி கண்காணிப்பு காட்சிகளை ஒவ்வொரு நாளும் மணிக்கணக்கில் பார்க்கிறார்கள்.

இந்தப் பெண்கள் பணியாற்றும் ராணுவத்தளத்தைப்போல, காஸாவின் வேலிக்கு அருகில் பல கண்காணிப்பு அறைகள் உள்ளன. அவை அனைத்திலும், இப்படியான இளம்பெண்கள்தான் கண்காணிப்பு பணியில் அமர்த்தப்பட்டனர். இந்தப் பணியில் 18 வயது முதல் 25 வயது வரையிலான பெண்கள் தான் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் யாரும் தங்களுடன் துப்பாக்கிகளை எடுத்துச் செல்வதில்லை.

இவர்கள், தங்களது ஓய்வு நேரத்தில் நடனம் கற்றுக்கொண்டும், இரவு உணவை தாங்களே ஒன்றாக இணைந்து சமைத்து சாப்பிட்டுக்கொண்டும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டும் இருந்திருக்கிறார்கள்.

ராணுவத்தின் இந்தப் படைபிரிவில் பணியாற்றிய பெரும்பாலான பெண்கள், அப்போது தான் முதல் முறையாக தங்களது பெற்றோரை விட்டு தனியாக வாழ்த்துள்ளனர். அதனால், உடன்பணியாற்றும் பெண்களுடன் நல்ல சகோதரத்துவ உறவுகளைக் கொண்டிருந்ததாக் அவர்கள் விவரிக்கிறார்கள்.

இருந்தபோதிலும், அனைத்துச் சூழல்களிலும், தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பை அவர்கள் மிகத்தீவிரமாக எடுத்துக்கொண்டதாகக் கூறினார்கள்.

“அனைத்து மக்களையும் பாதுகாப்பதே எங்கள் வேலை. எங்களுக்கு வேலை மிகவும் கடினமாக இருந்தது. நாங்கள் ஷிப்டில் அமர்ந்தால், கண்களை சிறிய அளவில் கூட அந்தப்பக்கம் இந்தப்பக்கம் பார்க்க முடியாது, அதற்கு உங்களை அனுமதிக்கவும் மாட்டார்கள். நாங்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்,” என்றார் நோவா.

இஸ்ரேல்-காஸா எல்லை

செப்டம்பர் மாதத்தின் இறுதியில் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவுகளுடன் சேர்ந்து, இந்தப் பெண்கள் இருந்த படைப்பிரிவினருக்குத்தான் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பற்றி அனைத்து தகவல்களும் தெரியும் என குறிப்பிட்டள்ளது.

இந்தப் பெண்கள் சந்தேகத்திற்கிடமாக ஏதேனும் கண்டால், அவர்கள் அதனை தங்களின் படைப்பிரிவு தளபதிக்கு முதலில் தெரிவிக்க வேண்டும். பின், அவற்றை தங்களின் கணினி அமைப்பில் பதிவு செய்ய வேண்டும். இவர்கள் கொடுக்கும் தகவல்களைத்தான் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவெடுப்பார்கள்.

ஓய்வு பெற்ற இஸ்ரேல் ராணுவ தளபதி எய்டன் டாங்கோட் பேசுகையில், “எச்சரிக்கை ஒலி எழுப்புவதில் இந்தப் பெண்கள் படைப்பிரிவுக்குத்தான் முக்கியப் பங்கு இருக்கிறது. அவர்கள் தங்களின் படைப்பிரிவு தளபதியிடம் கூறும் தகவல்களைக் உளவுத்துறை அதிகாரி முதல் அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்ப வேண்டும்,” என்றார் அவர்.

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்திய முந்தைய மாதங்களில், ஹமாஸின் முந்தைய அச்சுறுத்தல்கள் கட்டுப்படுத்தப்பட்டதாக மூத்த இஸ்ரேலிய பாதுகாப்பு படை அதிகாரி ஒரு அறிக்கையை வெளியிட்டார். ஆனால், அப்போதே, எல்லையில் ஏதோ தவறு நடந்ததற்கான பல அறிகுறிகள் தென்பட்டன.

இஸ்ரேல்-காஸா எல்லை

செப்டம்பர் மாதத்தின் இறுதியில், நஹல் ஓஸில் உள்ள ராணுவத்தளத்தில் கண்காணிப்பில் உள்ள ஒரு பெண் தங்களுக்குள்ளான நண்பர்களின் வாட்ஸ் அப் குழுவில், “என்ன, இனியொரு சம்பவம் இருக்கா?” என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

அதற்கு, எல்லையில் பணியாற்றி வந்த மற்றொரு பெண், “நீ எங்க இருக்க? கடந்த இரண்டு வாரங்களாக தினமும் ஒரு சம்பவம் நடந்துள்ளது,” என பதிலளித்துள்ளார்.

இந்த உரையாடல்கள் அனைத்தும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்துவதற்கு முந்தைய மாதத்தில் அவர்களுக்குள் விவரித்துக்கொண்டது. அவர்கள் அனைவரும் எதோ ஒரு பெரிய தாக்குதல் நடக்கவிருக்கிறது என உணர்ந்திருந்தார்கள்.

“அவர்கள் நடத்தப்போகும் ‘ரெய்டு’ எப்படி இருக்கும் என ஒவ்வொரு நாளும் அவர்கள் பயிற்சி செய்வதை நாங்கள் பார்ப்போம்,” என்றார் இன்னும் ராணுவத்தில் பணியாற்றி வரும் நோவா.

“அவர்கள் பயிற்சியின்போது, ஒரு மாதிரி பீரங்கியைக் கூட வைத்திருந்தார்கள். அதை எப்படி எடுத்து கையாள்வது என்றும் பயிற்சி செய்தார்கள்,” என்றார் நோவா.

“அவர்கள் பயிற்சியின்போது, ஆயுதங்களின் மாதிரியை கையில் வைத்து, அவற்றை வேலியில் எப்படி வெடிக்கச் செய்வது, படைகளை எவ்வாறு கைப்பற்றுவது, எப்படி கொலை செய்வது, எப்படி கடத்துவது என்றும் பயிற்சி எடுத்து ஒருங்கிணைப்பார்கள்,”என்றார் நோவா.

ராணுவத் தளத்தில் மற்றொரு கண்காணிப்பாளரான ஈடன் ஹதர், தான் பணியில் இருந்தபோது, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்ததை பார்த்தது குறித்து நினைவு கூர்ந்தார். ஆனால், ஈடன் ஹதர் தாக்குதல் நடப்பதற்கு முன்பாகவே, ஆகஸ்ட் மாதம் ராணுவத்தில் இருந்து வெளியேறினார்.

எல்லையில் உள்ள மற்றொரு ராணுவத் தளத்தில் பணியாற்றிய கேல்(பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தங்களின் பயிற்சியை தினமும் அதிகரித்துக்கொண்டிருந்ததை தானும் பர்த்ததாகப் பகிர்ந்தார்.

இஸ்ரேலின் கண்காணிப்பு பலூன் வழியாக, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் எல்லையில் ஒரு தானியங்கி இஸ்ரேலிய ஆயுதத்தின் மாதிரியை காஸாவின் மையப்பகுதியில் வைத்து பயிற்சி எடுப்பதை பார்த்ததாக கேல் கூறினார்.

இஸ்ரேலின் இருப்புச் சுவர் என விவரிக்கப்படும் வேலியின் அருகே வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு வெடிக்கப்பட்டதாக பல பெண்கள் விவரித்தார்கள்.

தற்போதும் ராணுவத்தில் இருக்கும் ரோனி லிஃப்ஷிட்ஸ், ஹமாஸ் தாக்குதலின்போது ராணுவத்தில் தான் பணியாற்றியுள்ளார். ஆனால், தாக்குதல் நடந்த அன்று அவர் பணியில் இல்லை. “ஆனால், தாக்குதல் நடந்துவதற்கு முந்தைய வாரத்தில், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தங்களது வாகனங்களில் வந்து எல்லையில் சோதனையிடுவதை பார்த்தோம்,” என்றார். அவர்கள் பார்த்ததிலேயே மிகவும் கவலைக்குறியது அது தான் என்றார் ரோனி.

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் வேலியின் மறுபுறம் வந்து நின்று பேசுவது, வேலிக்கு மறுபுறம் உள்ள கேமராக்களை சுட்டிக்காட்டி பேசுவது ஆகியவற்றை நினைவு கூர்ந்தார்.

அவர்கள் அணிந்திருந்த ஆடையை வைத்து, அவர்கள் ஹமாஸின் உயர்மட்ட நுக்பா படையைச் சேர்ந்தவர்கள் என்பதை தன்னால் அடையாளம் காண முடிந்தது என்றார் ரோனி.

அக்டோபர் மாதம் நடந்த தாக்குதல்களுக்கு பிறகு, அந்தத் தாக்குதலில் முன்னணியில் இருந்தவர்களில் நுக்பா படையும் ஒன்று என இஸ்ரேல் ராணுவம் கூறியது.

கண்காணிப்பு பணியில் இருந்த பெண்கள், எல்லையில் ஊடுருவல் சம்பவம் நடந்தது குறித்தும் பிபிசியிடம் பேசினர்.

கண்காணிப்பு தளத்தில் பணியாற்றிய ஒரு பெண் ராணுவ வீரர் ஷஹாப் நிசானி, தனது அம்மாவுக்கு ஜூலை மாதம் அனுப்பிய குறுஞ்செய்தியை பகிர்ந்தார். அதில், “காலை வணக்கம், அம்மா. நான் இப்போதுதான் ஷிப்ட் முடித்தேன். இன்று ஒரு எல்லை ஊடுருவல் முயற்சி நடந்தது. அது எனக்கு மிகவும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனை தங்கள் வாழ்நாளில் யாரும் எதிர்கொண்டிருக்கமாட்டார்கள்,” என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

கண்காணிப்பு பணியில் இருந்த பெண்கள், எல்லையில் பல விசித்திரமான மாற்றங்களையும் காணத் தொடங்கியுள்ளனர்.

வேலிக்கு மறுபுறம் உள்ள விவசாயிகள், பறவைகளை பிடிப்பவர்கள், ஆடு மேய்ப்பவர்கள் எல்லாம் வேலிக்கு மிக அருகில் வரத் தொடங்கினர். இந்த நபர்கள் தாக்குதல்களுக்கு முன்னதாக உளவுத் தகவல்களை சேகரிப்பதற்காக வந்ததாக கண்காணிப்பு பணியில் இருந்த பெண்கள் நம்புகிறார்கள்.

“அந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொருவரையும் நாங்கள் அறிவோம். அவர்களின் வழக்கமான நேரத்தையும் நாங்கள் அறிவோம். ஆனால், திடீரென வந்த பறவை பிடிப்பவர்களையும், விவசாயிகளையும் எங்களுக்கு தெரியவில்லை. அவர்கள் புதிய இடங்களுக்குச் செல்வதை நாங்கள் பார்த்தோம்,” என்றார் கண்காணிப்பு பணியில் இருந்த அந்த பெயர் குறிப்பிட விரும்பாத பெண்.

அந்த விவசாயிளும், பறவைகளை பிடிப்பவர்களும் வேலிக்கு நெருங்கி வருவதையும் நினைவு கூர்ந்தார் நோவா.

“பறவைகளைப் பிடிப்பவர்கள் தங்களின் கூண்டுகளை வேலியின் மேல் வைப்பார்கள். அது விசித்திரமாக இருந்தது. ஏனென்றால், அவர்கள் எங்கு வேண்டுமானாலும் கூண்டு வைக்கலாம். விவசாயிகளும் விவசாயமே செய்யாத பகுதிகளான வேலிக்கு அருகில் உள்ள பகுதிகளுக்கு வந்தனர். இது அனைத்தும் தகவல் சேகரிப்பதற்குத்தானே தவிர வேறு எந்த காரணமும் இல்லை,”என்றார் நோவா.

“நாங்கள் அனைத்து நேரங்களிலுமு் அதைப் பற்றி பேசினோம்.”

பிபிசி அனைத்து பெண் கண்காணிப்பாளர்களிடமும் பேசியது. ஆனால், பிபிசி பேசிய அனைத்துப் பெண்களும் அவர்கள் பார்த்தவையின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கவில்லை.

“ஹமாஸ் குழுவினர் எப்போதும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், அக்டோபர் 7-ஆம் தேதி நடந்ததைப்போன்ற ஒரு தாக்குதலுக்கு தயாராகிறார்கள் என எங்களுக்கு தெரியவில்லை,” என்றார் ஒரு பெண்.

ஆனால், ஒரு பெரிய அசம்பாவிதம் நடக்கவிருக்கிறதாக முன்னதாகவே உணர்ந்த பெண்கள், தங்களின் எச்சரிக்கைகள் கவனிக்கப்படவில்லை என வருத்தம் தெரிவித்தனர்.

எல்லையில் வாகனங்களைப் பார்த்த ரோனி, அதனை முதலில் தன்னுடைய படைப்பிரிவு தளபதிக்கு தெரியப்படுத்துயுள்ளார். “பின், அந்த வாகனம் செல்லும் வரை நான் கண்காணிக்க வேண்டும். அந்த வாகனம் சென்ற பிறகு, அந்த அறிக்கையை கணிணியில் பதிவு செய்ய வேண்டும். ஆனால், அந்த அறிக்கைகள் எல்லாம் இப்போது எங்கு சென்றது எனத் தெரியவில்லை,” என்றார் ரோனி.

“அந்த அறிக்கைகள் பெரும்பாலும் உளவுத்துறைக்குத்தான் சென்றிருக்க வேண்டும். ஆனால், அந்த அறிக்கைகள் மீது என்ன நடவடிக்ககைள் எடுத்தார்கள், என்ன ஆனது என்பது பற்றி எங்களுக்கு யாருமே சொல்லவில்லை,” என்றார் ரோனி.

ரோனி, தான் எத்தனை முறை இப்படி எச்சரிக்கை அறிக்கை அனுப்பியிருப்பார் என்ற கணக்கே தெரியவில்லை என்றார். “எங்களின் படைப்பிரிவுக்குள் அனைவரும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, கவனமாக உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிவிடுவர், ஆனால், கடைசியில் மேல் அதிகாரிகள் எதுவும் செய்யவில்லை,” என்றார்.

ஷஹாஃபின் தயார் இலானா.
படக்குறிப்பு,

ஷஹாஃபி தன் தயார் இலானாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

‘யாரும் கேட்கவில்லை என்றால் நாங்கள் ஏன் இங்கே இருக்கிறோம்?’

பெண்கள் கண்காணிக்கும் ஒரு ராணுவப்பிரிவின் தளபதியாக உள்ள கேல், “கண்காணிப்பு பணியில் உள்ளவர்கள் தகவல் அனுப்புவார்கள். அதை எனது உயர் அதிகாரிகளுக்கு அனுப்புவேன். அவர்கள் அந்த அறிக்கைகள் குறித்து விவாதிப்பார்கள். ஆனால், அதற்கு மேல் ஒன்றும் செய்யவில்லை,” என்றார்.

பல பெண்கள் தங்களின் விரக்தியையும், கவலையையும், தங்களின் குடும்பத்தினருடன் பகிர்ந்ததாகக் கூறினர்.

“யாரும் கேட்கமாட்டார்கள் என்றால், நாங்கள் ஏன் இங்கே இருக்கிறோம்,” என தன் மகள் சொன்னதாக நினைவு கூர்ந்தார் ஷஹாஃபின் தயார் இலானா.

“அவள் அங்கு குழப்பம் இருப்பதை என்னிடம் சொன்னாள். நீங்கள் புகார் செய்தீர்களா எனக் கேட்டேன். எனக்கு ராணுவத்தைப் பற்றி சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், மேலே உள்ளவர்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மட்டும் புரிந்துகொண்டேன்,”என்றார்.

தன் மகள் குறித்த கவலை இருந்தாலும், இலானாவின் குடும்பத்தினரும் மற்றவர்களைப்போலவே இஸ்ரேல் ராணுவம் மற்றும் இஸ்ரேலிய அரசின் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தனர்.

“கடந்த மாதங்களில் அவர் மீண்டும் மீண்டும் சொன்னாள். ஒரு போர் நடக்கும், நீங்கள் பார்ப்பீர்கள் என்று. நாங்கள் அவளை மிகைப்படுத்தி சிரித்தோம்,” எனக் கூறி தன் பேச்சுக்கு நடுவில் பெருமூச்சுவிட்டார் இலானா.

அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நஹல் ஓஸைக் பகுதியைக் கைப்பற்றியபோது கொல்லப்பட்ட முதல் நபர்கிளில் ஷஹாஃபும் ஒருவர்.

இஸ்ரேல் அரசின் தகவல்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் 1,300 பேர் கொல்லப்பட்டனர், 240 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய வான் மற்றும் தரைவழித் தாக்குதல்களில் காஸாவில் 23,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *