பட மூலாதாரம், Southern Railway
கோவை – பெங்களூருவை இணைக்கும் வகையில் 6வது வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டுள்ளது. அதிநவீன வசதிகள் இந்த ரயிலில் இருந்தாலும், பயண நேரம் மற்ற ரயில்களைப் போல் உள்ளதாகவும், புறப்படும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் ரயில் பயணிகள்.
இந்தியா முழுவதும் பல நகரங்களை இணைத்து மக்களுக்கு விரைவான ரயில் சேவை வழங்க, இந்திய ரயில்வே வந்தே பாரத் ரயில் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக டிசம்பர் 30ஆம் தேதி 6 புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோதி துவக்கி வைத்துள்ளார்.
ஏற்கெனவே தமிழகத்தில் சென்னை – கோவை, சென்னை – பெங்களூரு, சென்னை – மைசூர், சென்னை – திருநெல்வேலி, சென்னை – விஜயவாடா என ஐந்து வந்தே பாரத் ரயில்கள் இயங்கும் நிலையில், பிரதமர் மோதி தமிழகத்தின் 6வது வந்தே பாரத் ரயிலாக கோவை – பெங்களூரு ரயிலை தொடங்கி வைத்துள்ளார்.
முன்பு கோவையில் இருந்து பெங்களூருவுக்கு என பிரத்யேகமாக உதய் எக்ஸ்பிரஸ் ரயில் மட்டுமே இயக்கப்பட்டது. இது தவிர கோவை – மும்பை ரயில் பெங்களூரு வழியாகவும், கேரளாவில் இருந்து கோவை வழியாக பெங்களூருக்கு 4 ரயில்கள் என மொத்தம், 6 ரயில்கள் கோவையில் இருந்து பெங்களூருவுக்கு இயக்கப்பட்டன. தற்போது, 7வது ரயிலாக கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டு உள்ளது.
இப்படியான நிலையில் கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயிலின் பயண நேரம் மற்றும் சிறப்புகள் என்ன?
வந்தே பாரத் ரயில் பயண நேரத்தில் தாமதம் ஏற்படுவதாக பயணிகள் குற்றச்சாட்டை முன் வைப்பது ஏன்?
கோவை – பெங்களூரு பயண நேரம் என்ன?
பட மூலாதாரம், Southern Railway
இந்த ரயில் வியாழக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் கோவையில் ரயில் நிலையத்தில் இருந்து (ரயில் எண் 20642) காலை 5:00 மணிக்கு புறப்பட்டு, 5:40 மணிக்கு திருப்பூர், 6:22 மணிக்கு ஈரோடு, 7:15 மணிக்கு சேலம், 8:30 மணிக்கு தருமபுரி, 10:03 மணிக்கு ஓசூர் சென்று இறுதியாக 11:30 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் நிலையத்தைச் சென்றடையும்.
மறு முனையில் பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து (ரயில் எண் 20641) மதியம் 1:40 மணிக்குப் புறப்பட்டு மாலை 4:14 மணிக்கு தருமபுரி, 5:50 மணிக்கு சேலம், இறுதியாக இரவு 8:00 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை அடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோவையில் புறப்பட்டு 380 கி.மீ தொலைவில் உள்ள பெங்களூரை, இந்த ரயில் 6 மணிநேரம் 30 நிமிடத்தில் கடக்கும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
வந்தே பாரத் ரயிலின் புதிய வசதிகள் என்ன?
பட மூலாதாரம், Southern Railway
வந்தே பாரத் ரயிலில் மொத்தம் 8 பெட்டிகள் உள்ளன. இதில், 32 இருக்கைகள் கொண்ட ஒரு எக்ஸிக்யூட்டிவ் சேர் கார், தலா 72 இருக்கைகளைக் கொண்ட 5 ஏசி சேர் கார் இடம் பெற்றுள்ளன. இது தவிர இன்ஜினுடன் இணைந்த வகையில் மேலும் 2 ஏசி சேர் கார் பெட்டிகளும் இடம் பெற்றுள்ளன. இவற்றில் 40 இருக்கைகள் உள்ளன.
இந்த ரயிலில் உணவு (சைவம் மற்றும் அசைவம்), தின்பண்டங்கள் உடன் கூடிய ஏசி சேர் கார் டிக்கெட் கட்டணம் ரூ.1025, எக்ஸிகியூட்டிவ் சேர் கார் டிக்கெட் கட்டணம் ரூ.1,930 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தானியங்கி கதவுகள், தனித் தனி சார்ஜ் போர்ட்கள், டிஜிட்டல் அறிவிப்பு திரை, ஜன்னலை நோக்கி இருக்கைகளைத் திருப்பிக்கொள்ளும் வசதி, சூடான குடிநீர் மற்றும் தரமான உணவு, செளகரியமாக உணவு உட்கொள்ளும் கால் வைத்துக்கொள்ளும் வசதி, விமானத்தில் இருக்கக்கூடிய தரத்தில் கழிவறை, அவசர காலத்தில் லோகோ பைலட் உடன் பேசும் வசதி எனப் பல அதிநவீன வசதிகள் இந்த ரயிலில் உள்ளன.
‘பயண நேரத்தை குறைக்க வேண்டும்’
பட மூலாதாரம், Southern Railway
வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டு உள்ளதால், பெங்களூருவுக்கு ரயிலில் அடிக்கடி பயணம் செல்லும் சில பயணிகளிடம் பேசினோம்.
பிபிசி தமிழிடம் பேசிய பொள்ளாச்சியைச் சேர்ந்த ஸ்ரீராம், ‘‘நான் பெங்களூருவில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிகிறேன். இரண்டு வாரத்துக்கு ஒரு முறையாவது கோவைக்கு உதய் எக்ஸ்பிரஸ் ரயிலில் அங்கிருந்து ஏசி சேர் கார் டிக்கெட் கட்டணம் 650 ரூபாய் செலுத்தி வந்து செல்வேன்.
உணவு, தின்பண்டங்கள் என அனைத்துக்கும் தனிச் செலவு செய்தாலே 300 ரூபாயைக் கடந்து விடும். தற்போது, உணவு, ஸ்நாக்ஸ் சேர்த்து 1,025 ரூபாயில் அதிக வசதிகள் உள்ள வந்தே பாரத் ரயிலில் என்னால் பயணம் செய்ய முடியும்.
வந்தே பாரத் ரயில் வசதி தொடங்கப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், பயண நேரம் மற்ற பெங்களூரு ரயில்களைப் போன்றே உள்ளது தான் ஏமாற்றமாக உள்ளது,’’ என்கிறார் அவர்.
வந்தே பாரத் ரயிலை மக்கள் புறக்கணிப்பா?
பட மூலாதாரம், Southern Railway
பெங்களூருவில் தங்கி ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் கோவையைச் சேர்ந்த சரவணக்குமார் வாரம் ஒருமுறையாவது கோவைக்கு ரயிலில் வந்து செல்கிறார்.
தற்போதைய வந்தே பாரத் ரயிலில் உணவுடன் சேர்த்து டிக்கெட் கட்டணம் ரூ.1,000 ஆக உள்ளது. ஆனால், அதிகாலை 5:00 மணிக்கு ரயில் புறப்படுவதால், காலை 3:00 மணிக்கு எழுந்து ரயில் நிலையம் வரவேண்டிய சூழல் உள்ளது சிரமமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஆகவே, புறப்படும் நேரத்தை மாற்றி, பயண நேரத்தைக் குறைத்தால் வந்தே பாரத் ரயில் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.
இல்லையென்றால், “இதைப் புறக்கணித்து விட்டு வழக்கம் போல மக்கள் 625 ரூபாய் செலுத்தி உதய் எக்ஸ்பிரஸ் ரயிலில்தான் பயணிப்பார்கள், இல்லையென்றால் அதே 1,000 ரூபாய் செலவு செய்து ஆம்னி பேருந்துகளில் பயணிப்பார்கள்,’’ என்கிறார் அவர்.
இது உண்மையில் வந்தே பாரத் ரயில் தானா?
பட மூலாதாரம், Southern Railway
பிபிசி தமிழிடம் பேசிய, கோவை குடியிருப்பாளர்கள் விழிப்புணர்வு சங்கத்தின் (Residents Awareness Association of Coimbatore) இணைச் செயலாளர் சதீஸ், ‘‘வந்தே பாரத் ரயில் கோவைக்கு விடப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், அதன் மொத்த பயண நேரத்தை கணக்கில் கொண்டால் இது உண்மையில் அதிவேக திறன் கொண்ட வந்தே பாரத் ரயிலா? இல்லை பழைய எக்ஸ்பிரஸ் ரயில் திறன்தான் இதற்கு உள்ளதா?” என்ற சந்தேகம் எழுவதாகக் கூறினார்.
கோவையில் இருந்து ஆந்திரா குப்பம் வழியாக பெங்களூரு செல்லும் உதய் எக்ஸ்பிரஸ் 410 கி.மீ தொலைவை 6 மணிநேரம் 40 நிமிடங்களில் கடக்கிறது.
ஆனால், “வந்தே பாரத் ரயில் 380 கி.மீ. மட்டுமே பயணிக்கும் நிலையில் அதற்கே 6 மணிநேரம் 30 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது,’’ என்கிறார் சதீஸ்.
வந்தே பாரத் 30 – 45 நிமிடம் தாமதம்!
எர்ணாகுளம் – பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் “3 நிறுத்தங்களில் நின்றும்கூட, சேலத்தில் இருந்து பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தைச் சென்றடைய 3 மணிநேரம் 50 நிமிடங்கள்” எடுத்துக்கொள்கிறது.
பட மூலாதாரம், Southern Railway
ஆனால், “இரண்டு நிறுத்தங்களில் நின்று செல்லும் புதிய வந்தே பாரத் ரயில் சேலத்தில் இருந்து பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தைச் சென்றடைய 4 மணிநேரம் ஆகிறது.
மற்ற ரயிலைவிட இதில் பயண நேரம் அதிகமாக உள்ளதால்தான் இது வந்தே பாரத் ரயிலா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது,” என்றார் சதீஸ்.
உண்மையில் வந்தே பாரத் ரயில் மற்ற ரயில்களைவிட 30 – 45 நிமிடங்கள் விரைவாக பெங்களூருவை சென்றடைய வேண்டும் என்றும் கூறுகிறார் சதீஸ்.
அதேபோல், “அதிகாலை, 5:00 மணிக்கு ரயில் சேவை தொடங்குதால் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாவார்கள். ஆகவே, ரயிலின் பயண நேரத்தைக் குறைத்து, வந்தே பாரத் ரயிலை காலை 5:00 மணிக்கு பதிலாக 6:00 மணிக்குப் புறப்படுமாறு பயண நேரத்தை மாற்ற ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றும் கோரிக்கை விடுத்தார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
