பட மூலாதாரம், DIPR
மிக்ஜம் புயல் காரணமாக நாளை சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பபட்டுள்ளது.
அதன்படி, இன்றும், நாளையும் வட கடலோர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது 20.4 செ.மீக்கு மேல் மழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது.
மிக்ஜம் புயல் நாளை தமிழகத்தை ஒட்டி கடக்கவுள்ளதால், 60-70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், நாளை சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளித்த தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்த பொது விடுமுறையின்போது, அத்தியாவசிய சேவைகளான பால், தண்ணீர் மற்றும் பெட்ரோல் பங்க் சேவைகள் இருக்கும் என்றும், மழை, வெள்ளம், புயல் பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பது மற்றும் மீட்பு சேவையில் ஈடுபடும் ஊழியர்கள் மட்டும் பணியில் இருப்பார்கள் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தற்போது, மிக்ஜம் புயல், சென்னையில் இருந்து தென் கிழக்கே சுமார் 250 கி.மீ தூரத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது என்றும் நாளை இந்தப் புயல் 110 கி.மீ வேகத்தில் நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, சனிக்கிழமை காலை 5.30 மணியளவில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) புயலாக வலுப்பெற்றது.
மிக்ஜம் புயல் எப்போது கரையைக் கடக்கும்?
பட மூலாதாரம், NDRF
மக்ஜம் புயல் நாளை தீவிர புயலாக வலுப்பெற்ற பின்னர், தமிழக கடலோரப் பகுதியைக் கடக்கும்போது, மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 90 கி.மீ வேகத்தில் காற்று வீசம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து, நாளை மறுநாள் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே புயல் கரையைக் கடக்கும்போது, சுமார் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் உள்ள மீனவர்களும் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
‘தயவு செய்து வீட்டைவிட்டு வெளியே வராதீர்கள்’
பட மூலாதாரம், DIPR
கடற்கரை ஓரத்தில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்ல சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் கூறியுள்ளார்.
“படகுகளைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில் மற்றும் விமானம் ரத்து காரணமாகப் பாதிக்கப்படும் பயணிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்றார் அமைச்சர் ராமச்சந்திரன்.
புயல் முன்னெச்சரிக்கை குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, “மக்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் அரசு எடுத்துள்ளது. ஆனால், மக்கள் அரசுக்கு ஒரே ஒரு உதவியை மட்டும் செய்ய வேண்டும். யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது,” என்றார்.
மிக்ஜாம் புயல் எச்சரிக்கையை அடுத்து, சென்னையின் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க சென்னை பெருநகர மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
அடுக்குமாடி கட்டுமானத் தளங்களில் வேலை செய்வோர் என்ன செய்ய வேண்டும்?
பட மூலாதாரம், NDRF
மிக்ஜம் புயல் மற்றும் மழையின்போது, அடுக்குமாடி கட்டுமானத் தளங்களில் முன்னெச்சரிக்கையாகப் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை பெருநகர வளர்ச்சிக் கழகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்,
- கிரேன் ஏற்றம் குறைக்கப்பட வேண்டும்.
- டவர் கிரேன் பூம் சுழற்சியைத் தவிர்க்க பூட்டப்பட வேண்டும்.
- உயரமான கூரைகளில் உள்ள பொருள் அகற்றப்பட வேண்டும்.
- ஃப்ளெக்ஸ் பேனரை குறைக்க வேண்டும் அல்லது காற்றின் பாதையில் எதிர்ப்பைத் தவிர்க்க வேண்டும்.
- அனைத்து தற்காலிக சாதனங்களும் சரி செய்யப்பட வேண்டும்.
- அனைத்து மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட வேண்டும்.
- வெல்டிங் செய்யக்கூடாது.
- பொதுவாக, அனைத்து வேலைகளும் தளத்தில் நிறுத்தப்பட வேண்டும். அவசரகாலத்தில், தொழிலாளி தனது தலையில் கடினமான ஹெல்மெட் அணிந்தபடி மட்டுமே கட்டுமானப் பகுதிக்குள் செல்ல வேண்டும்.
- ஆபத்தான முறையில் ஊசலாடும் மரங்களின் கிளைகளை வெட்ட வேண்டும்.
பொதுமக்கள் செய்யக்கூடாதவை என்ன?
பட மூலாதாரம், NDRF
புயல் மற்றும் கன மழையின்போது பொது மக்கள் செய்யக்கூடாத முக்கியமான சில விஷயங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
புயல் வரும் நேரத்தில் வெளியே, குறிப்பாக கடற்கரைப் பகுதிகளுக்குச் சென்று வீடியோ எடுப்பது, செல்ஃபி எடுப்பது போன்றவற்றில் ஈடுபடக் கூடாது. இது உயிருக்கே ஆபத்தாக அமையலாம்.
வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும். வீட்டின் கதவோ, ஜன்னல் கதவோ நல்ல நிலையில் இல்லாவிட்டால், அதை உடனடியாகச் சரி செய்துகொள்வது நல்லது.
காற்றின் அழுத்தத்தால் ஜன்னல் கண்ணாடிகள் விரிசல் விட்டு உடையவோ, உடைந்து சிதறவோ வாய்ப்புண்டு. மரப்பலகை, துணி ஏதேனும் இருந்தால், ஜன்னலை அதை வைத்து மூடிக்கொள்ளுங்கள். கண்ணாடித் துண்டுகள் காற்றின் வேகத்தில் வீட்டுக்குள் சிதறுவதை அது தடுக்கும்.
சிதிலமடைந்த கட்டடங்கள் மற்றும் பழைய கட்டடங்களுக்கு உள்ளேயோ அருகிலோ இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பலத்த காற்றின் காரணமாக மின் இணைப்பு துண்டிப்பு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டார்ச் லைட், பவர் பேங்க், மெழுகுவர்த்தி, இன்வர்ட்டர் போன்றவற்றைத் தயார் செய்து வைத்துக் கொள்வது பாதுகாப்பானது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
