
பட மூலாதாரம், SHUBHAM VERMA/BBC
அயோத்தியின் ராமர் பாதை அமைக்கப்படும் பகுதியில் பத்ர் மசூதி அமைந்துள்ளது
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் வளாகத்திற்கு அருகில் ‘பத்ர் மஸ்ஜித்’ என்ற சிறிய மசூதி உள்ளது.
அரசு நிலப் பதிவேடுகளில் அதன் மனை எண் 609 ஆகும்.
ராமர் பாதை அமைப்பதற்காக இந்த மசூதியின் சில பகுதியை அரசு ஏற்கனவே சட்டப்பூர்வமாக கையகப்படுத்தியுள்ளது.
ஆனால் தற்போது இந்த மசூதியை இடம் மாற்றுவதற்கான உடன்படிக்கை மேற்கொண்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பிபிசிக்கு கிடைத்த இந்த உடன்படிக்கையில், பத்ர் மஸ்ஜிதின் ‘முத்தவல்லி’ ரயீஸ் அகமது மற்றும் ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் இடையே இந்த உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளதாக எழுதப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், RAEES AHMED
மசூதியை இடமாற்றம் செய்ய உள்ளூர் மக்கள் அனைவரின் சம்மதமும் பெறப்பட்டதாக ரயீஸ் அகமது கூறுகிறார்.
உடன்படிக்கை என்ன சொல்கிறது?
இந்த உடன்படிக்கையின் படி, பத்ர் மஸ்ஜிதின் முத்தவல்லியாக இருக்கும் ரயீஸ் அகமதுவிடம் இருந்து இந்த ஒப்பந்தத்தின் நகலை பிபிசி பெற்றுள்ளது.
அதில், “இந்த மசூதி நிலம் எண் 609 இல் இருந்தது. அதன் 45 சதுர மீட்டர் பகுதி ராமர் பாதையின் விரிவாக்கத்திற்காக எடுக்கப்பட்டது,” என எழுதப்பட்டுள்ளது.
மசூதியை மாற்றுவதற்கான காரணங்கள் குறித்து, “மசூதி பழமை மற்றும் சீரமைப்புக்கு தேவையான நிதியை ஏற்பாடு செய்ய முடியாததால், இடிந்து விழும் நிலையை அடைந்து வருகிறது” என உடன்படிக்கையில் எழுதப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் ஜென்மபூமி கோவில் கட்டப்படுவதால், பக்தர்கள் வருகை அதிகரித்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மசூதிக்கு வருபவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அயோத்தியில் இந்த மசூதி ரயில் நிலையம் மற்றும் இது க்ஷீரேஷ்வர் நாத் கோவிலுக்கு அருகில் உள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு என்ற பெயரிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தில், மசூதியை மாற்ற நமாஜிகளின் சம்மதம் குறித்து எழுதப்பட்டுள்ளது, “முத்தவல்லி ரயீஸ் அஹமது, வக்பு வாரியத்தின் பொறுப்பு அதிகாரிகள் மற்றும் மசூதிக்கு வருகை தரும் உள்ளூர் முஸ்லிம்களுடன் கலந்தாலோசித்து, மசூதியை மாற்றுவது என்று ஒருமனதாக முடிவு செய்தார். பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்து இந்த மசூதியை அந்த இடத்திற்கு மாற்ற வேண்டும். மேலும் மசூதிக்கு தொழுகை செய்ய வரும் நபர்களுக்கு எந்த சிரமமும், எதிர்மறையான தாக்கத்தையும் உருவாக்காத வகையில் பத்ர் என்ற பெயரில் புதிய மசூதி கட்டப்பட வேண்டும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், RAEES AHMED
மசூதியின் உரிமையை மாற்றம் செய்ய வக்ஃப் வாரியத்தின் அனுமதி தேவை என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
அந்த ஒப்பந்தத்தில், சம்பத் ராய், “ராம ஜன்பூமி தீர்த்த க்ஷேத்திரத்தின் தேவைக்காக, மஸ்ஜித் பத்ரின் நிலத்தை வாங்க விரும்புவதாகவும், அக்கம் பக்கத்திலுள்ள பொறுப்புள்ள முஸ்லிம் மக்களுடன், இந்த விஷயத்தை மிகவும் சுமுகமான சூழ்நிலையில் விவாதித்ததாகவும் அதனால் எதிர்காலத்தில் எந்த விதமான மத தகராறும் ஏற்பட வாய்ப்பில்லை” என்றும் எழுதப்பட்டுள்ளது.
ரயீஸ் அகமது “மஸ்ஜித் பத்ரை ரூ. 30 லட்சத்திற்கு உரிமை மாற்றம் செய்ய ஒப்புக்கொண்டார்” என்று ஒப்பந்தம் கூறுகிறது.
மேலும், “இந்த நிலம் வக்ஃப் சொத்து என்பதாலும், சன்னி மத்திய வக்பு வாரிய பதிவேட்டில் வக்ஃப் சொத்தாக குறிப்பிடப்பட்டுள்ளதாலும், வக்ஃப் வாரியத்தின் அனுமதி பெற வேண்டும்” என்றும் கூறுகிறது.
ஒப்பந்தத்தில், மசூதியை மாற்ற, ஆறு மாத கால அவகாசம் விதிக்கப்பட்டு, ரயீஸ் அகமதுவுக்கு முன்பணமாக, 15 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின்படி, ரயீஸ் ஆறு மாதங்களுக்குள் மசூதியை மாற்ற வேண்டும் என்பதுடன் கோயில் அறக்கட்டளைக்கு ஆதரவாக விற்பனை பத்திரம் வழங்கி நிலத்தை ஒப்படைக்க வேண்டும்.

பட மூலாதாரம், SHUBHAM VERMA/BBC
ரயீஸ் அகமது பத்ர் மசூதியின் முத்தவல்லி அல்ல என்று ஆசம் காத்ரி கூறுகிறார்.
எதிர்ப்பவர்கள் யார்?
முகமது ஆசம் காத்ரி அயோத்தியின் அஞ்சுமன் முஹாபிஸ் மகாபிர்-மசாஜித் கமிட்டியின் பொதுச் செயலாளராக உள்ளார். இந்த அமைப்பு கல்லறைகள் மற்றும் மசூதிகளின் பாதுகாப்பிற்காக செயல்படுகிறது.
அயோத்தியின் அனைத்து வக்ஃப் சொத்துகளும், மசூதிகள், கல்லறைகள், தர்காக்கள் அனைத்தையும் இந்த அமைப்பு கவனித்துக் கொள்ள வேண்டும். அவற்றை யாரும் கைப்பற்ற முடியாது. அவற்றின் நிலத்திற்கு யாரும் தீங்கு செய்யக்கூடாது என்று இந்த அமைப்பு கூறுகிறது. இதேபோல் அவற்றை யாரும் சீர்குலைக்க விடாமல் தடுப்பதிலும் அல்லது யாரும் விற்பனை செய்வதைத் தடுப்பதிலும் இந்த அமைப்புக்குத் தான் முழுப் பொறுப்பு உள்ளது.
நகல் பதிவுகளின்படி, அயோத்தியில் 101 மசூதிகள் மற்றும் 185 கல்லறைகள் இருப்பதாக அவர் கூறுகிறார். பத்ர் மஸ்ஜிதை உரிமை மாற்றம் செய்யும் ஒப்பந்தத்திற்கு கமிட்டி எதிர்க்கிறது என்று ஆசம் காத்ரி கூறுகிறார்.
பத்ர் மஸ்ஜித் வக்ஃப் சொத்து என்பதற்கு சான்றாக பல ஆவணங்களை அவர் காட்டுகிறார். எழுத்துப்பூர்வ புகார்களுடன் அதே ஆவணங்களை அயோத்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் ராம் ஜென்மபூமி காவல் நிலையத்தின் எஸ்எச்ஓவிடம் அவர் ஒப்படைத்துள்ளார்.
ரயீஸ் அகமது பத்ர் மசூதியின் முத்தவல்லி அல்ல என்றும், மசூதியின் நிலம் தொடர்பாக ராம் மந்திர் அறக்கட்டளையுடன் ஒப்பந்தம் செய்ய அவருக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என்றும் ஆசம் காத்ரி கூறுகிறார்.
செப்டம்பரில் நடந்த கமிட்டி கூட்டத்தில் அப்படி ஒரு ஒப்பந்தம் பற்றிய விவாதம் வந்தபோது, பதிவு அலுவலகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒப்பந்தத்தின் நகலை அவர்கள் பெற்றனர்.

பட மூலாதாரம், SHUBHAM VERMA/BBC
இந்த உடன்படிக்கை தவறானது என வழக்கறிஞர்கள் கூறியதாக ஆசம் காத்ரி கூறுகிறார்.
முகமது ஆசம் காத்ரி கூறும்போது, ”வழக்கறிஞர்களுடன் முழுமையாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஒப்பந்தம் சட்டப்படி தவறானது என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர். வக்ஃப் சட்டத்தின் கீழ், வக்ஃப் சொத்துகளை விற்கவோ, வாங்கவோ, மாற்றவோ முடியாது. இது போன்ற நடவடிக்கைகளை எதிர்த்து நாங்கள் உச்ச நீதிமன்றம் வரை போகலாம் என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது,” என்றார்.
தொடர்ந்து பேசிய ஆசம் காத்ரி, “இந்த மசூதி 1902 ஆம் ஆண்டு முதல் நசூலின் காஸ்ரா எண்ணில் ‘வக்ஃப்’ என்று பதிவு செய்யப்பட்டு, அரசாங்க கெஜட் எண் 1282-லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இதன்படி, அதன் உரிமையாளர் யாரும் இல்லை, இது வக்ஃப் நிலம்,” என்றார்.
அயோத்தி மாவட்ட வக்ஃப் அதிகாரி வக்ஃப் சர்வே கமிஷனராகவும், பொறுப்பாளராகவும் இருக்கிறார், எனவே அஞ்சுமன் முஹாபிஸ் மகாபிர் மசாஜித் கமிட்டியும் எழுத்துப்பூர்வமாகத் தகவல் கொடுத்துள்ளதாக முகமது ஆசம் காத்ரி கூறுகிறார்.
எனவே இந்த ஒப்பந்தம் அரசு ஆவணமா என்று கேட்டபோது, ”இது இரண்டு பேரின் விவகாரம் அல்ல. அரசுப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதில் இ-ஸ்டாம்ப்கள் உள்ளன. இவை அரசு ஆவணங்களில் வந்துள்ளன. இதற்கு (மசூதி) உரிமையாளர் யாரும் இல்லை. அரசாங்க ஆவணங்கள் எதுவும் இல்லை. எனவே இந்த ஆவணம் குறித்து நீதிமன்றம் தான் முடிவுசெய்யவேண்டும்,” என்றார் அவர்.
பத்ர் மசூதியை இடம் மாற்ற அங்கு தொழுபவர்களின் சம்மதம் குறித்து, “சாலையை அகலப்படுத்துவற்காக எடுக்க சம்மதம். ஆனால், சம்மதம் கொடுத்தவர்கள் கூட தவறு என்று கூறுகிறார்கள். என்றாலும், ஒரு பகுதியினர் முழுவதுமாக ஒப்புக்கொண்டாலும், மசூதியை உரிமை மாற்ற முடியாது,” என ஆசம் காத்ரி விளக்கினார்.

பட மூலாதாரம், SHUBHAM VERMA/BBC
சட்டப்படி யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆசம் காத்ரி வலியுறுத்துகிறார்.
முத்தவல்லியின் உரிமைகளுக்கு எதிரான சவால்
இதில் யாரேனும் சட்டத்துக்கு புறம்பாக வேலை செய்திருந்தாலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என முகமது ஆசம் காத்ரி கோருகிறார்.
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ரயீஸ் அகமது ஒரு முத்தவல்லி என்று கருதப்படுகிறார். இது குறித்து ஆசம் காத்ரி கூறுகையில், “அவர் (ரயீஸ்) தான் முத்தவல்லி என யாராலும் அங்கீகரிக்கப்படவில்லை. அவர் மசூதியை தொழும் நபர்களில் ஒருவர் என்பதைத் தவிர வேறு உரிமைகள் அவருக்குக் கிடையாது. அவர் அந்த மசூதியின் முத்தவல்லியும் இல்லை. ஒருவேளை அவர் ஒரு முத்தவல்லியாக இருந்தாலும், அவர் இந்த உடன்படிக்கையை மேற்கொள்ள அவருக்கு எந்த உரிமையும் இல்லை,” எனக்கூறினார்.
தொடர்ந்து பேசிய ஆசம் காத்ரி, “அவர் ஒரு முத்தவல்லி என்றால், அவர் தான் முத்தவல்லி என்பதற்கான ஆதாரத்தைக் காட்டமுடியுமா? முத்தவல்லியை சன்னி மத்திய வக்ஃப் வாரியம் தான் நியமிக்க முடியும்,” என்றார்.
தொழுகை செய்பவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மசூதியை மாற்ற வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் எழுதப்பட்டுள்ளது. இதுபற்றி ஆசம் காத்ரி கூறுகையில், “அவர் எழுதிய அனைத்து வாதங்களும் தவறானவை,” என்றார்.
“ஒரு மசூதிக்கு பதிலாக 100 மசூதிகள் கட்டுவதில் எந்த பயனும் இல்லை. ஒரு மசூதி இருந்தால், அது ஆயுட்காலம் வரை மசூதியாகவே இருக்க வேண்டும்” என்கிறார் அவர்.

பட மூலாதாரம், SHUBHAM VERMA/BBC
உள்ளூரில் வசிக்கும் நபர்கள் தான் முத்தவல்லியாக நியமிக்கப்படுகிறார்கள் என ரயீஸ் கூறுகிறார்.
ஒப்பந்தத்தில், ரயீஸ் அகமது பத்ர் மஸ்ஜித்தின் முத்தவல்லி என்று அனைவரும் கூறுகின்றனர். ஆனால் இதுகுறித்து பிபிசி அவரிடம் கேட்டபோது, ரயீஸ் அகமது தன்னை பத்ர் மஸ்ஜித்தின் பராமரிப்பாளர் என்று விவரிக்கிறார்.
ரயீஸ் அகமதுவை பிபிசியிடம் பேச வேண்டுகோள் விடுத்தபோது, கேமரா முன் நேர்காணல்களை அளிக்க மறுக்கிறார், ஆனால் அவர் தனது அனுமதியுடன் பிபிசிக்கு ஆடியோ பேட்டி ஒன்றை அளித்தார். “நாங்கள் பராமரிப்பாளர்கள். முத்தவல்லிகள் அல்ல. நாங்கள் கவனித்துக் கொள்கிறோம். எழுத்தில் முத்தவல்லி என எங்கும் இல்லை என்கிறார்கள்,” என்றார்.
ஒப்பந்தம் மற்றும் பிற ஆவணங்களில் முத்தவல்லி என்று குறிப்பிடப்பட்டுள்ளதா என்று அவரிடம் கேட்டபோது,”ஒப்பந்தத்தில் அப்படி எழுதப்பட்டுள்ளது. அது சரியானது தான். மஸ்ஜித்களைக் கவனிப்பவர் முத்தவல்லி என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு எந்த நியமனமும் இல்லை. நீங்கள் உள்ளூரில் வசிக்கும் நபரைத் தான் இப்பொறுப்புக்கு நியமிக்கிறீர்கள்,” என்றார் ரயீஸ்.

பட மூலாதாரம், SHUBHAM VERMA/BBC
தொழுகை நடத்தும் அனைவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர் என ரயீஸ் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய ரயீஸ் அகமது, பத்ர் மஸ்ஜித்தின் உரிமையை மாற்றுவது குறித்த விவாதம் இந்த ஆண்டு ஜூலை கடைசி வாரத்தில் தொடங்கியது என்றும், இதுதொடர்பாக அவர் சம்பத் ராயை 6 முதல் 7 முறை சந்தித்துள்ளார் என்றும் கூறினார்.
மசூதியின் உரிமையை மாற்றியதன் நோக்கம் குறித்துப் பேசிய ரயீஸ், “நாங்கள் தொழுகையாளர்களிடம் பேசியபோது, அவர்கள் அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். வழிபாட்டாளர்களும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அதன் பிறகு மஸ்ஜித் அறக்கட்டளையுடன் பேச்சுகள் நடத்தப்பட்டன,” என்றார்.
பாதிப் பணத்தை எடுத்துக் கொண்டு, நிலத்தைப் பெற்று, வேலையைத் தொடங்குங்கள் என்றும், அந்த வேலை முடிந்தபின் இந்த இடத்தைக் காலி செய்துவிடும்படியும் எங்களிடம் அவர்கள் கூறியுள்ளனர். கடைசியில் குப்பைகளை அகற்றி, நிலத்தை காலியாக அவர்களிடம் நாங்கள் ஒப்படைக்கவேண்டும்.
அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ள திட்டத்தின் படி, பாஞ்சி தோலா மொஹல்லா பகுதி முழுவதும் அழிக்கப்படப் போகிறது என்று ரயீஸ் அகமது கூறுகிறார். பத்ர் மஸ்ஜித் இந்த பகுதியில் தான் உள்ளது.

பட மூலாதாரம், SHUBHAM VERMA/BBC
ராமஜென்ம பூமியின் முன்புறம் இருப்பதால் இந்த இடம் தானாகவே அரசால் எடுத்துக்கொள்ளப்படும் என ரயீஸ் தனது தரப்பு வாதகமாக முன்வைக்கிறார்.
அனுமதி வழங்கப்படா விட்டால் விற்பனை ரத்து செய்யப்படுமா?
ரயீஸ் அகமது ‘அரசின் புதிய திட்டம்’ தொடர்பான எந்த ஆவணத்தையும் காட்டவில்லை. ஆனால், “இது ராம ஜென்மபூமி கோவிலில் இருந்து முன்புறத்தில் இருப்பதால், இந்த பகுதி முழுவதும் தெளிவாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். பத்ர் மசூதியை மாற்றுவதற்கான முன்மொழிவு அவர்களுடையது” என்று கூறுகிறார். மேலும், அவர்கள் (ராம் மந்திர் டிரஸ்ட்) பக்கத்திலிருந்து இந்த முடிவு வந்தது. பிறகு எங்கள் மக்கள் தயாராகிவிட்டார்கள் என அவர் கூறினார்.
மசூதியை இடமாற்றம் செய்ய சம்பத் ராய் முன்வந்தாரா, பொதுமக்களிடம் ஒப்புதல் பெறப்பட்டதா என்று பிபிசி கேட்டது. அதற்கு ரயீஸ் அகமது, “ஆம்” என்று பதிலளித்தார்.
பத்ர் மசூதியை மாற்றும் திட்டம் குறித்து ரயீஸ் அகமது கூறும்போது, ”பல பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். பலர் ஆதரவாகவும் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆனால், கிட்டத்தட்ட எதிர்ப்பைத்தான் நாங்கள் பார்த்தோம். மாவட்ட ஆட்சியர் அனுமதித்தால்தான் வேலை தொடங்கும். இல்லையெனில் விற்பனை பத்திரம் ரத்து செய்யப்படும்,” என்றார்.
அப்போது ரயீஸ் அகமது அயோத்தி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய அக்டோபர் 3 தேதியிட்ட கடிதத்தைக் காட்டினார். அதில் அவர் மசூதியை மாற்றுவதற்கு ஆட்சியரிடம் அனுமதி கேட்டிருக்கிறார்.
மசூதியை மாற்றுவதற்கு அயோத்தியின் அஞ்சுமன் முஹாபிஸ் மகாபீர் மஸ்ஜித் கமிட்டி எதிர்ப்பு தெரிவித்தது குறித்து ரயீஸ் அகமது கூறும்போது, ”முடியவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அதை ரத்து செய்துவிடுவார். நாங்கள்தான் வக்ஃப் சொத்துகளை தருகிறோம். அங்கிருந்து இந்த புதிய இடத்துக்கு வந்துள்ளோம். இங்கு மசூதி அமைக்கப்பட்ட பின்னர் இதுவும் வக்ஃப் சொத்தாக மாறும். இதையும் வக்ஃப் சொத்தாக அறிவிப்போம். இது இனி எங்களின் (தனிப்பட்ட) சொத்தாக இருக்காது,” என்று கூறினார்.

பட மூலாதாரம், SHUBHAM VERMA/BBC
புதிய இடத்தில் மசூதியை கட்டிமுடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
புதிய மசூதி கட்டும் பணி நிறுத்தம்
ரயீஸ் அகமது தனது வீட்டின் வலதுபுறத்தில் உள்ள இடத்தை எங்களிடம் காட்டி, இந்த இடத்துககத் தான் பத்ர் மசூதியை மாற்ற விரும்புவதாக கூறுகிறார். அந்த நிலத்தில் தோண்டப்பட்ட குழிகளில் கம்பிகள் ஊன்றப்பட்டுள்ளன. ஆனால் இது தொடர்பான சர்ச்சைக்குப் பின் அங்கு கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
எனவே மசூதியை மாற்ற வேண்டும் என்று ரயீஸ் அகமது விரும்புகிறாரா?
இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கும் போது, “இப்போது, என் ஆசைக்காக அல்ல, நான் விரும்பியதைச் செய்தேன். இப்போது மாவட்ட ஆட்சியர் விரும்பினால் அது நடக்கும். இல்லையெனில் அது நடக்காது. போராட்டம் நடத்துபவர்கள் எங்கள் மசூதிக்கு வருபவர்கள் அல்ல. அவர்கள். வெளியில் இருந்து வந்தவர்கள். மசூதியில் அமர்ந்து கொண்டு சம்மதம் (நமாஜிகளின் சம்மதம்) பெற்றுள்ளேன். எங்கள் மசூதிக்கு வந்தவர்கள் கையெழுத்து போட்டு உள்ளனர்,” என்று ரயீம் கூறினார்.
இக்பால் அன்சாரி, அவரது தந்தை ஹாஷிம் அன்சாரியைப் போலவே, பாபர் மசூதி வழக்கில் வாதியாக இருந்தார். அவரும் அவரது குடும்பத்தினரும் பத்ர் மஸ்ஜிதில் இருந்து சில மீட்டர் தொலைவில் சாலையின் குறுக்கே வசிக்கின்றனர்.

பட மூலாதாரம், SHUBHAM VERMA/BBC
போதுமான முன் அனுமதி பெறாதது ரயீஸின் தவறு என்கிறார் இக்பால் அன்சாரி.
அவர் பத்ர் மஸ்ஜிதை தனது பகுதியின் மசூதி என்று அழைக்கிறார். அவரது மாமா காசிம் அன்சாரி பத்ர் மசூதியின் கடைசி முத்தவல்லி என்றும், அவர் இறந்த பிறகு யாரும் இந்த மசூதியின் முத்தவல்லி ஆகவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
இக்பால் அன்சாரி கூறுகையில், “மசூதியை நாங்கள் தான் பராமரித்து வந்தோம்.மேலும் இன்றும் மசூதியின் தண்ணீர் வரி மற்றும் மின் கட்டணம் ஆகியவை எங்கள் தந்தை ஹாசிம் அன்சாரி பெயரில் வருகின்றன,” எனத்தெரிவித்தார்.
மசூதி ஒப்பந்தம் குறித்து இக்பால் அன்சாரி கூறும்போது, ”மசூதியின் உரிமை மாற்றும் விவகாரம் முன்பே எழுந்த ஒன்று. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அயோத்தியில் மக்கள் அவதிப்படுகின்றனர். அரசிடம் அனுமதி பெறாதது ரயீஸ் அகமதுவின் தவறு. ராமர் பாதையை விரிவுபடுத்துவதற்குத் தேவையான நிலத்தை அரசாங்கம் ஏற்கனவே எடுத்துள்ளது,” என விவரித்தார்.
ஒப்பந்தத்திற்குப் பிறகு, இப்போது இக்பால் அன்சாரி, “இதில் எது சரியோ, தவறோ எதுவாக இருந்தாலும், அரசு தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், இது அரசியல் ஆக்கப்படக்கூடாது. அதுதான் நல்லது என்று நாங்கள் விரும்புகிறோம்,” எனக்கூறுகிறார்.
புதிய இடத்தில் மசூதி கட்டும் பணியை ரயீஸ் அகமது துவக்கி வைத்தது குறித்து, இக்பால் அன்சாரி பேசிய போது, ”அவர் வரைபடத்திற்கு ஒப்புதல் பெற்று பணியைத் தொடங்கவில்லை. தற்போது அது நின்று விட்டது,” என்றார்.

பட மூலாதாரம், SHUBHAM VERMA/BBC
பிபிசியின் கேள்விகளுக்கு முழுமையாகப் பதில் அளிக்க சம்பத் ராய் மறுத்துவிட்டார்.
சம்பத் ராய் என்ன சொல்கிறார்?
பத்ர் மசூதியை மாற்றுவதற்கான ஒப்பந்தம் ரயீஸ் அகமது மற்றும் ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் ஆகியோருக்கு இடையே செய்யப்பட்டது.
அக்டோபர் 26 அன்று அயோத்தியில் உள்ள கரசேவக்புரத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சம்பத் ராயிடம் பிபிசி பேசியது. அப்போது, “பத்ர் மசூதியை உரிமை மாற்றம் செய்ய ரயீஸ் அகமதுவுக்கும் உங்களுக்கும் இடையே ஏதாவது ஒப்பந்தம் உள்ளதா?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், “இந்த நேரத்தில் ஜனவரி 22 ல் நடைபெறவுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் பற்றி மட்டுமே நான் கவனம் செலுத்திவருகிறேன். வேறு எதுவும் பேசமுடியாது,” என்றார்.
இந்தச் சந்திப்பில் பிபிசி மீண்டும் ஒ ரு கேள்வியைக் கேட்க முயன்றது, ஆனால் சம்பத் ராய் கேள்வியை முடிக்க அனுமதிக்கவில்லை.இந்த பிரச்னை குறித்துக் கேள்வி கேட்கவேண்டாம் என கையைக் காட்டி எங்கள் பிபிசியின் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பின்னர், பிபிசி மீண்டும் ஒருமுறை அவரிடம் பத்ர் மஸ்ஜித் ஒப்பந்தம் தொடர்பான கேள்விகளைக் கேட்க முயன்றது. அப்போது, சம்பத் ராயிடம் இருந்து அவரது பதில் என்னவாக இருந்தது என அவரை மேற்கோள் காட்டி எழுத முடியும் எனக் கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், “நான் என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லிவிட்டேன்” என்றார்.

பட மூலாதாரம், SHUBHAM VERMA/BBC
நடந்தவை எல்லாம் அனைத்து சமுதாயத்திற்கும் நல்லது தான் என சம்பத் ராய் கூறினார்.
உண்மையில், ஆடியோ பதிவு செய்யப்படாமல் இருந்தபோது, பிபிசியிடம் பேசிய சம்பத் ராய், “எது நடந்ததோ, அது நல்லதுக்கே” என்று கூறினார். மீண்டும் ஒருமுறை பிபிசி அவரிடம் பேசியபோது, “நடந்தது எதுவாக இருந்தாலும் அது நல்லதுக்கே என்பதுடன், நீங்கள் இதை நம்புகிறீர்களா?” என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த சம்பத் ராய், “நடந்தது எதுவோ அது நல்லதுக்குத் தான். அது மசூதி மற்றும் முஸ்லிம் சமுதாயத்தின் நன்மைக்காக நடந்தது” என்று பதிலளித்தார்.
பிபிசி தனது கேள்வியை (ஆடியோவில்) மீண்டும் கேட்டது. “எனவே நாங்கள் உங்களிடம் கேட்க முயற்சித்தோம், நீங்கள் இதைச் சொன்னீர்கள் என்று நாங்கள் கூறலாமா…” என்று கேட்பதற்கு முன்பாகவே அவர் மீண்டும் பேசினார்.
“எது நடந்ததோ அது நன்மைக்காகவே நடந்தது. அது முஸ்லிம் சமுதாயத்தின் நன்மைக்காகவும், மசூதியின் நன்மைக்காகவும் நடந்தது,” என்றார்.
இறுதியில், பத்ர் மஸ்ஜித் விவகாரம் குறித்து விரிவாகப் பேச சம்பத் ராயிடம் பிபிசி நேரம் கேட்டபோது, அவர் நேரம் ஒதுக்க மறுத்துவிட்டார்.

பட மூலாதாரம், ANI
மசூதியின் உரமை மாற்றம் குறித்த ஒப்பந்தம் தனி நபர்களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டது என மாவட்ட ஆட்சியர் நிதீஷ் குமார் கூறுகிறார்.
அரசு அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்?
அஞ்சுமன் முஹாபிஸ் மசாஜித் மக்காபீர் கமிட்டியின் புகார் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக காவல் நிலையத்தின் எஸ்ஹெச்ஓ மணி சங்கர் திவாரியை பிபிசி சந்தித்தது.
கேமரா முன் பேட்டி கொடுக்க மறுத்த அவர், கமிட்டியின் புகாரைப் பெற்றதாகவும், அதன் விசாரணை நடந்து வருவதாகவும் மட்டும் கூறினார்.
பிபிசியும் அயோத்தி மாவட்ட ஆட்சியரிடமும் பேச முயன்றது.
அன்ஜுமன் முஹாபிஸ் மசாஜித் மகாபீர் கமிட்டியின் கூற்றுப்படி, அயோத்தி மாவட்ட ஆட்சியர் மாவட்டத்தின் உதவி சர்வே வக்ஃப் ஆணையராகவும் உள்ளார். மேலும் இதுபோன்ற விஷயங்கள் அவரது அதிகார வரம்பிற்கு உட்பட்டவை.
மாவட்ட ஆட்சியர் நிதீஷ் குமார், “இந்த விவகாரம் எங்களுக்கு சம்பந்தம் இல்லை, இந்த விவகாரம் இரண்டு தனிப்பட்ட தரப்புகளுக்கு இடையே உள்ளது. எனவே அவர்களுடன் பேசுங்கள். நீங்கள் பேசும் ஒப்பந்தம் அரசாங்கத்தால் செய்யப்படவில்லை,” என்று மட்டும் கூறினார்.

பட மூலாதாரம், SHUBHAM VERMA/BBC
வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் அப்படியே இருக்கவேண்டும் என்பது தான் பாஜகவின் கொள்கை என அப்பகுதி மக்கள் கூறினர்.
உள்ளூர் மக்கள் என்ன சொல்கிறார்கள்?
ஷாலிகிராம் பாண்டே பாஞ்சி தோலாவில் வசித்து வருகிறார். இவரது வீடு பத்ர் மசூதியிலிருந்து மூன்று-நான்கு வீடுகளுக்கு அப்பால் உள்ளது.
அவர் தன்னை அயோத்தியைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்றும், தனது முன்னோர்களும் அயோத்தியில் வசித்தவர்கள் என்றும் கூறுகிறார். அவருக்கு வயது 55. அவருடைய முன்னோர்களும் இந்த மசூதிக்கு வருகை தந்துள்ளனர்.
சப்கா சாத், சப்கா விகாஸ் என்பது பாஜகவின் முழக்கம். இங்குள்ள குடிமக்களும் அதையே விரும்புகிறார்கள். அயோத்தியில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் நிலைத்திருக்க வேண்டும். இந்துகளின் மத ஸ்தலங்களும் நிலைத்திருக்க வேண்டும், சகோதரத்துவமும் ஒற்றுமையும் பேணப்பட வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். யாருடைய மதமும் பாதிக்கப்படக்கூடாது,” என்றார்.
ஷாலிகிராம் பாண்டே வீட்டில் இருந்து சில வீடுகள் தாண்டி, ஜமில் அகமது தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் தன்னை பத்ர் மஸ்ஜித்தில் தொழுகை மேற்கொள்பவர் என்று அடையாளப்படுத்திக் கொண்டார். அவர் பத்ர் மஸ்ஜித்தை “அந்த வட்டாரத்தின் மசூதி” என்று விவரிக்கிறார்.
ஜமீல் அகமது கூறுகையில், பாஞ்சி தோலாவில் சுமார் 10 முஸ்லிம் குடும்பங்கள் உள்ளன என்ற அவர், மசூதிக்கான ஒப்பந்தம் குறித்துப் பேசிய போது, “ரயீஸ் சாஹிபுக்கு மசூதி பொறுப்பு கொடுக்கப்பட்டதால், ஒருவருடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்,” என்கிறார்.
ரயீஸ் அகமது மசூதியை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே சிலரிடையே பொதுவான ஒருமித்த கருத்து என்று அவர் கூறுகிறார். “ஆனால் அவர்கள் என்ன மாதிரியான ஒப்பந்தம் செய்தார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. இந்த மசூதி இங்கிருந்து எடுக்கப்படக் கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். மசூதி எங்கள் ஊரின் அடையாளம்.”

பட மூலாதாரம், SHUBHAM VERMA/BBC
மசூதியை உரிமை மாற்றம் செய்வதை வக்ஃப் வாரிய சட்டம் அனுமதிக்காது என வழக்கறிஞர் புனித் குப்தா கூறுகிறார்.
பத்ர் மஸ்ஜித் தொடர்பான ஒப்பந்தத்தில், சன்னி மத்திய வக்பு வாரிய பதிவேட்டில் பத்ர் மஸ்ஜித் வக்ஃப் சொத்தாக குறிப்பிடப்பட்டுள்ளதால், அதை மாற்ற சன்னி மத்திய வக்பு வாரியத்தின் அனுமதி அவசியம் என எழுதப்பட்டிருந்தது.
பத்ர் மஸ்ஜித் தொடர்பான ஒப்பந்தம் குறித்து உத்தரபிரதேசத்தின் சன்னி மத்திய வக்ஃப் வாரியத்தின் தலைவர் ஸுபர் அகமது ஃபரூக்கியிடம் இருந்து பிபிசி அவரது கருத்தைப் பெற முயன்றது. ஆனால் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. பிபிசி குழுவினர் லக்னோவில் உள்ள வக்ஃப் வாரிய அலுவலகத்தை அடைந்தபோது, தலைவர் ஃபரூக்கி நவம்பர் 11ம் தேதி வரை விடுமுறையில் இருப்பது தெரிய வந்தது.
வாரியத்தின் தலைவர் விடுப்பில் இருப்பதால் பிபிசி அதன் பொறுப்பு தலைவர் நயீம்-உர்-ரஹ்மானை சந்தித்தது. ஆனால் அவர் அயோத்தியின் பத்ர் மசூதியின் ஒப்பந்தம் குறித்து வக்பு வாரியத்திற்கு தகவல் கிடைத்துள்ளது என்று மட்டுமே கூறினார். அவர் பொறுப்பு தலைவர் என்பதால் வழக்கமான வேலைகளை மட்டும் கவனித்து வருகிறார். மேலும் இந்த விவகாரத்தில் வாரியத்தின் நிலைப்பாட்டை தலைவர் மட்டுமே தெரிவிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், SHUBHAM VERMA/BBC
2013-ம் ஆண்டு வக்ஃப் வாரிய சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது என்பதால் இந்த உடன்படிக்கை எந்த விதத்திலும் செல்லாது என வழக்கறிஞர் புனித் குப்தா கூறுகிறார்.
சன்னி மத்திய வக்ஃப் வாரியத்தின் வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞர் புனித் குப்தாவிடமும் பிபிசி பேசியது. உயர் நீதிமன்றத்தில் வக்பு வாரிய வழக்குகள் சார்பில் ஆஜரான புனித் குப்தா, பத்ர் மஸ்ஜித் ஒப்பந்தம் குறித்து தனக்கு எதுவும் தெரியாததால், அது குறித்து எதுவும் கூற முடியாது என்றார்.
பத்ர் மஸ்ஜித் மற்றும் அது தொடர்பான ஒப்பந்தம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல், வக்ஃப் தொடர்பான சட்டம் பற்றி புனித் குப்தாவிடம் இருந்து பிபிசி புரிந்து கொள்ள விரும்பியபோது, ”முன்னதாக 2013 வரை வக்ஃப் சட்டத்தில் வக்ஃப் வாரியத்தின் அனுமதியுடன் அதன் சொத்துக்களை உரிமை மாற்றம் செய்யலாம் என்ற விதி இருந்தது,” என்றார். .
“ஆனால் 2013 ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் செய்ததன் மூலம், வக்ஃப் சொத்து பரிமாற்றம் அல்லது விற்பனைக்கு எந்த அனுமதியையும் வழங்குவதற்கு வக்ஃப் வாரியத்தின் அதிகாரங்களுக்கு பாராளுமன்றம் முழு தடை விதித்துள்ளது. எனக்கு தெரிந்த வரையில், சட்டத்தின்படி, வக்ஃப் வாரியம் அல்லது ஒரு மசூதியின் முத்தவல்லி “வக்ஃப் சொத்தை எந்த வகையிலும் உரிமை மாற்றம் செய்ய அவர்களுக்கு உரிமை இல்லை,” என்று முடித்துக்கொண்டார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்