
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (புதன், நவம்பர் 15) நடக்கும் உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில இந்திய அணி் நியூசிலாந்துடன் இன்னும் சிறிது நேரத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இந்தியா, நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுக்கும் மிக முக்கியமான ஆட்டமாக அமையப்போகும் இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் உண்டாக்கியிருக்கிறது.
மும்பை வான்கடே மைதானத்திற்கு அருகே குவிந்திருந்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடனும் ஆரவாரத்துடனும் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்திய அணியின் பேருந்து மைதானத்திற்குள் நுழைந்தபோது மிகப் பெரும் ஆரவாரம் செய்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
பட மூலாதாரம், Getty Images

வான்கடே மைதானத்திற்கு வெளியே உற்சாகம்
போட்டியைப் பார்க்க மும்பைக்குச் சென்றிருக்கும் சென்னையைச் சேர்ந்த கார்த்திக் என்ற ரசிகர் ஆட்டத்தைப் பார்க்க மிகவும் உற்சாகமாக இருப்பதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
மைதானத்திற்குள் சென்று போட்டியைப் பார்க்க டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள், மைதானத்திற்கு வெளியே குழுமி தங்கள் உற்சாகத்தையும் ஆரவாரத்தையும் தெரிவித்தனர்.
பிபிசி தமிழிடம் பேசிய மும்பையைச் சேர்ந்த தமிழரான இங்கர்சால், டிக்கெட் கிடைக்காதது வருத்தமாக இருந்தாலும் இந்திய அணிக்குத் தனது ஆதரவைத் தெரிவிப்பதற்காக மைதானத்திற்கு வெளியே வந்து நிற்பதாகத் தெரிவித்தார்.
“பும்ரா, ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோருக்கு இது ‘ஹோம் கண்டிஷனாக’ இருக்கும். ஆனாலும் அனைத்து வீரர்களுக்கும் ஆதரவு தெரிவிப்போம்,” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
‘நல்ல கிரிக்கெட்டை ஆதரிப்போம்’
கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணியிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்திய அணியின் ஆட்டம் இருக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திக்கின்றனர்.
இருந்தாலும், வான்கடே மைதானத்திற்கு அருகே வெளியில் குழுமியிருந்த ரசிகர்கள் எந்த அணி சிறப்பாக ஆடினாலும் அந்த அணியை ஆதரிப்போம் என்று தெரிவித்தனர்.
மும்பை மைதானத்திற்கு அருகே இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ‘கிரிக் ஆனந்தா’ என்ற கிரிக்கெட் விமர்சகர், இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், மும்பைக்கு சென்றிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ரசிகர்கள், “20 ஆண்டுகள் கழித்து இந்தியா நியூசிலாந்தை வென்றிருக்கிறது. அதேபோல் அனைத்து இந்திய ரசிகர்களும் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். அதனால் இந்திய அணியின் மீது நம்பிக்கை உள்ளதாக,” தெரிவித்தனர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
