பிரதமர் மோதி – சௌதி இளவரசர் சந்திப்பு: பாகிஸ்தானை ஓரங்கட்டும் முயற்சி பலிக்குமா?

பிரதமர் மோதி - சௌதி இளவரசர் சந்திப்பு: பாகிஸ்தானை ஓரங்கட்டும் முயற்சி பலிக்குமா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காணொளிக் குறிப்பு,

ஜி20 கூட்டுத் தீர்மானம் மாநாட்டின் முதல் நாளிலேயே எப்படி சாத்தியமானது?

டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டு அரங்கில் சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சந்தித்து கைகுலுக்கியபோது, ​​பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் இருவரின் கைகளையும் பற்றிக்கொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மூன்று தலைவர்களும் ஒன்றாக கைகோர்த்து நிற்கும் இந்தக் காட்சி ராஜ்ஜீய ரீதியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்தக் காட்சியை அரசியல் விமர்சகர்கள் பல கோணங்களில் பார்க்கின்றனர்.

உண்மையில், அண்மைக் காலமாக பிரதமர் மோதிக்கும், சௌதி அரேபிய பட்டத்து இளவரசருக்கும் இடையே வளர்ந்து வரும் நெருக்கமான நட்பு உலகம் முழுவதும் நடைபெற்ற பல சந்திப்புகளின் போது தெரிய வந்துள்ளது.

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இரண்டு நாள் ஜி20 உச்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் அவர்களுடைய சொந்த நாடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். ஆனால் சௌதி அரேபிய பட்டத்து இளவரசர் இன்னும் டெல்லியில் இருக்கிறார்.

அவர் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில், இன்று பிரதமர் மோதியுடன் அதிகாரப்பூர்வமாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது.

ஜி20 மாநாட்டுச் சந்திப்புகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஜி 20 மாநாட்டு அரங்கில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சௌதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானும் கை குலுக்கிக்கொண்ட போது பிரதமர் மோதி இருவரின் கரங்களையும் பற்றிக்கொண்டார்.

சௌதி – இந்தியா பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் எட்டப்படுமா?

பிரதமர் பதவியேற்ற பிறகு, நரேந்திர மோதி வளைகுடா நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவதில் தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். இதில் சௌதி அரேபியாவின் பங்கு மிக முக்கியமானது.

பிரதமர் மோதி 2016 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை சௌதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது இந்தியாவுக்கும் சௌதி அரேபியாவுக்கும் இடையே பல முக்கிய இருதரப்பு நடவடிக்கைகள் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் நிறைவேற்றப்பட்டன.

சௌதி அரேபியா மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு பெரிய சக்தியாக உள்ளது. குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் இந்நாட்டின் தாக்கம் அதிகமாக உள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோதி, சௌதி அரேபியாவுடனான நெருக்கத்தை அதிகரித்து பாகிஸ்தானை ஓரங்கட்ட பெரிய அளவில் முயற்சி செய்ததாகவும், அதன் விளைவுகள் போகப் போகத் தெரியும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவிற்கு 2019ஆம் ஆண்டு வருகை தந்த பின்னர் சௌதி அரேபிய பட்டத்து இளவரசர் தற்போது இரண்டாவது முறையாக இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ளார். அரசியல் நோக்கர்களின் கூற்றுப்படி, இந்த இருதரப்பு பேச்சு மூலம் மேலும் பல்வேறு முக்கிய முடிவுகள் எட்டப்படும் எனக் கருதப்படுகிறது.

ஜி20 மாநாட்டுச் சந்திப்புகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பிரதமர் மோதி – சௌதி பட்டத்து இளவரசரின் சந்திப்பு இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கும் சௌதி அரேபியாவுக்கும் இடையில் ஐந்து டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வர்த்தகம் நடந்து வருகிறது. இந்தியா 2022-23ஆம் ஆண்டில் சௌதி அரேபியாவுக்கு சுமார் ஒரு பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. அத்துடன், இறக்குமதியும் கணிசமாகச் செய்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த வர்த்தகம் இருமடங்காக அதிகரித்துள்ளது.

டாடா, விப்ரோ உள்ளிட்ட 700க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் சுமார் 200 கோடி அமெரிக்க டாலர்களை சௌதி அரேபியாவில் முதலீடு செய்துள்ளன.

இதேபோல், இந்தியாவில் சௌதி அரேபிய நிறுவனங்கள், மார்ச் 2021 வரை 300 கோடி அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளன. இதில் சௌதி அராம்கோ, சாபிக், இ-ஹாலிடே போன்ற பெரிய நிறுவனங்களும் அடங்கும்.

இது மட்டுமின்றி, ஃபர்ஸ்ட்கிரை, க்ரோஃபர்ஸ், ஓலா, ஓயோ, பேடிஎம் மற்றும் பாலிசிபஜார் போன்ற இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் சௌதி அரேபிய நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்துள்ளன.

இந்திய சந்தையின் மீது உலக நாடுகளின் கண்கள்

ஜி20 மாநாட்டுச் சந்திப்புகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

எண்ணெய் வளங்களை மட்டும் சார்ந்திருப்பதில் இருந்து விலகி, சௌதி அரேபியா பொருளாதாரத்தை பன்முகப்படுத்த பட்டத்து இளவரசர் விரும்புகிறார்.

உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலின் மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் ஃபஸூர் ரஹ்மான் சித்திக் இதுகுறித்துப் பேசுகையில், “சௌதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தனது நாட்டை சமூக, கலாசார, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பன்முகப்படுத்த விரும்புகிறார்.

எண்ணெய் பொருளாதாரத்தை மட்டும் சார்ந்திருப்பதைத் தவிர, உற்பத்தி, சுற்றுலா மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் அதிக முதலீடுகளை ஈர்க்க அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியா அவர்களுக்கு முன்னால் வளர்ந்து வரும் சந்தையாக உள்ளதால் சௌதி அரேபியா இந்தியாவுடன் இணைந்து செயலாற்றுவது மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது,” எனத் தெரிவித்தார்.

இந்தியாவின் பொருளாதாரத்தை 2030ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர்களாக அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக பிரதமர் நரேந்திர மோதி பேசி வருகிறார்.

இதுபோன்ற சூழ்நிலையில் உலகமே இந்தியாவை ஒரு பெரிய சந்தையாகப் பார்க்கிறது. இமேஜ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ராபிந்திர சச்தேவ் பேசிய போது, ​​“சௌதி அரேபியாவிடம் நிறைய பணம் இருக்கிறது. எனவே அந்த பணத்தை முதலீடு செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எதிர்காலத்தில் சௌதி அரேபியா நல்ல வருவாய் ஈட்டக்கூடிய சிறந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது சௌதி அரேபிய பட்டத்து இளவரசருக்குத் தெரியும்,” என்றார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காணொளிக் குறிப்பு,

டெல்லியில் நடக்கும் ஜி20 மாநாடு இந்தியாவுக்கு எப்படி பயனளிக்கும்?

சச்தேவ் தொடர்ந்து பேசுகையில், “சௌதி அரேபியா நியோம் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. அத்திட்டத்தின் பட்ஜெட் 500 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 37 லட்சம் கோடி). இத்திட்டத்தை நிறைவேற்றத் தேவையான பணியாளர்களையும், முதலீட்டையும் இந்தியாவில் இருந்து பெற அவர் முயல்கிறார். இதேபோல் இந்தியாவின் உதவியுடன் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் ஆலைக்கான பணிகளும் அங்கு தொடங்கப்பட்டுள்ளன,” என்றார்.

இந்தத் திட்டத்தின் கீழ், சௌதி அரேபியாவில் எதிர்காலத்தில் ஒரு பசுமை சூழல் நகரத்தை நிறுவும் எண்ணம் உள்ளது. இந்த நகரத்தில் உள்ள அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும். இது கச்சா எண்ணெய் இல்லாத சௌதி அரேபியாவின் ‘விஷன் 2030’ என்ற இலக்கின் ஒரு பகுதியாகும்.

இந்த சுற்றுச்சூழல் நகரத்தை உருவாக்கும் நிறுவனங்களின் கூற்றுப்படி, இந்த நகரம் சுமார் 26,500 சதுர கி.மீ. பரப்பளவில் இருக்கும் (இது இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்திற்கு நிகரான பெரிய பகுதி). சௌதி அரேபியாவின் நீதி நடைமுறைகள் இங்கு இயங்காது. அதற்குப் பதிலாக இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர்களே அதற்கான தன்னாட்சியுடன் கூடிய சட்ட அமைப்பை உருவாக்குவார்கள்.

இந்தியாவின் மீதான சௌதி அரேபியாவின் நம்பிக்கை

சௌதி அரேபியா பல தசாப்தங்களாக அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுநிலையைப் பேணி வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அது அதன் வெளியுறவுக் கொள்கையில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளது.

பேராசிரியர் ஃபஸுர் ரஹ்மான் சித்திக், “ஒரு புதிய வகை பலதரப்பு உலக நடைமுறை உருவாகி வருகிறது. அதில் சௌதி அரேபியா தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விரும்புகிறது. அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து விலகி, சீனா, ரஷ்யா, இந்தியா, பிரிக்ஸ் போன்ற இலக்குகளுடன் ஒருங்கிணைந்து முன்னேறி வருகிறது,” என்றார்.

ஜி20 மாநாட்டுச் சந்திப்புகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சனிக்கிழமையன்று பிரதமர் மோதி அறிவித்த இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பாவுக்கான பொருளாதார வழித்தடத் திட்டத்தில் சௌதி அரேபியாவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

“பெட்ரோலியம் பொருட்களை விற்பது, அல்லது மெக்கா மற்றும் மதீனாவின் காரணமாக இஸ்லாமிய கண்ணோட்டத்தில் உலக நாடுகள் சௌதி அரேபியாவை பார்ப்பதை அந்நாட்டு அரசு விரும்பவில்லை. இதனால் உலகளாவிய சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்கத் தேவையான நடவடிக்கைகளை சௌதி அரேபியா மேற்கொண்டு வருகிறது,” என்கிறார் சித்திக்.

ராபிந்திர சச்தேவும் இதேபோன்ற கருத்துக்களைத் தான் கூறுகிறார். இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவை நம்பத் தகுந்த நண்பராக சௌதி அரேபியா பார்க்கிறது என்கிறார் அவர்.

“ஒரு புதிய உலக அணி உருவாகி வருகிறது. உலகம் தற்போது தன்னைத் தானே புனரமைத்துக்கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் சௌதி அரேபியா தனக்கென வெவ்வேறு நட்பு சக்திகளைத் தேடுகிறது. முன்பு அது அமெரிக்காவுடன் மட்டுமே நட்புறவை மேம்படுத்தி வந்தது. ஆனால் முகமது பின் சல்மான் வந்த பிறகு, அனைத்தும் படிப்படியாக மாறி வருகின்றன,” என்றார்.

மேலும், இதன் விளைவாக, மகாராஷ்டிராவில் 4,400 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் ‘மேற்கு கடற்கரை சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் திட்டம்’ அமைக்க சௌதி அரேபியா தயாராகி வருகிறது.

இதில் சௌதி அரேபியாவின் அராம்கோ, அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம், இந்தியாவின் இந்திய எண்ணெய் கழகம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

ஒரு புதிய வர்த்தக பாதையின் வடிவம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காணொளிக் குறிப்பு,

ஜி20 மாநாடு: ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் வருகை தராதது ஏன்?

பிரதமர் நரேந்திர மோதி செப்டம்பர் 9ஆம் தேதியன்று டெல்லியில், ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்தை உள்ளடக்கிய ‘இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பாவுக்கான பொருளாதார வழித்தடத்தை’ தொடங்கி வைத்தார் . இந்தத் திட்டத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் சக்தி அரேபியாவும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

திங்கள்கிழமை பிரதமர் மோதியை சௌதி அரேபிய பட்டத்து இளவரசர் சந்தித்தபோது, ​​இந்த திட்டமே முக்கிய விவாதமாக இருந்தது என நிபுணர்கள் நம்புகின்றனர்.

இந்த திட்டத்தின் கீழ், மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடுகள் ரயில் நெட்வொர்க் மூலம் இணைக்கப்படும். அதன் பிறகு அவை கப்பல் பாதை மூலம் இந்தியாவுடன் இணைக்கப்படும்.

தற்போது, ​​இந்தியா அல்லது அதைச் சுற்றியுள்ள நாடுகளில் இருந்து உற்பத்தியாகும் பொருட்கள் சூயஸ் கால்வாய் வழியாக கப்பல்களில் மத்தியதரைக் கடலைச் சென்றடைகின்றன. அங்கிருந்து, அந்தப் பொருட்கள் ஐரோப்பிய நாடுகளை அடைகின்றன. அமெரிக்கா, கனடா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்ல, மத்தியதரைக் கடல் வழியாக கப்பல்கள் பயணம் மேற்கொண்டு, அட்லாண்டிக் பெருங்கடலைத் தாண்டிச் செல்லவேண்டும்.

இந்தத் திட்டம் நிறைவேறிய பிறகு, துபாயில் இருந்து இஸ்ரேலில் உள்ள ஹைஃபா துறைமுகத்திற்கு ரயிலில் சரக்குகள் சென்று அங்கிருந்து எளிதாக ஐரோப்பாவுக்குள் நுழைய முடியும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஜி20 மாநாட்டுச் சந்திப்புகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இந்தியாவின் மீதான சௌதி அரேபியாவின் நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பேராசிரியர் ஃபஸூர் ரஹ்மான் சித்திக் பேசியபோது, ​​“இந்தத் திட்டத்திற்கான பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை (பிஆர்ஐ) எதிர்கொண்டு வெற்றிபெற இந்தியா விரும்புகிறது,” என்றார்.

வரலாற்று காலத்தின் பட்டுப்பாதை வரிசையில்தான் சீனா தற்போது பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை உருவாக்குகிறது. இதன் மூலம் ஐரோப்பா மற்றும் பிற நாடுகளுடன் தன்னை இணைத்துக் கொள்ள சீனா திட்டமிட்டுள்ளது.

சீன அதிபர் ஷி ஜின்பிங் 2013ஆம் ஆண்டு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தகப் பாதையின் கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார். பத்து ஆண்டுகளுக்குள், இந்த சீன திட்டம் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஓசியானிகா வரை பரவியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், உலகம் முழுவதும் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களில் சீனா முதலீடு செய்கிறது.

‘இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடத்தின்’ உதவியுடன், இந்தியா ‘உலகளாவிய தெற்கின்’ தலைவராகி, சீனாவுக்கு சவால் விடலாம் என்கிறார் ராபிந்திர சச்தேவ்.

இந்தியாவுடன் பலநூற்றாண்டுகளாகத் தொடரும் சௌதி அரேபியாவின் உறவு

இந்தியாவும் சௌதி அரேபியாவும் பல நூற்றாண்டுகளாக பொருளாதார, சமூக உறவுகளைக் கொண்டுள்ளன. 1947இல் ராஜ்ஜீய உறவுகள் உருவானதிலிருந்து இரு நாடுகளின் தலைவர்களும் ஒருவரையொருவர் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.

கடந்த 1955 ஆம் ஆண்டு முதல்முறையாக சௌதி அரேபியாவின் மன்னர் சௌதி பின் அப்துல் அஜீஸ் 17 நாள் சுற்றப் பயணமாக இந்தியாவுக்கு வந்தார். அதன்பிறகு ஓராண்டு கழித்து அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு சௌதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொண்டார்.

சௌதி அரேபியா - இந்தியா

பட மூலாதாரம், Getty Images

அதைத் தொடர்ந்து, பிரதமர் இந்திரா காந்தியும் 1982இல் சௌதி அரேபியாவுக்கு சென்று இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு மன்னர் அப்துல்லாவின் இந்தியப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு முக்கியமான தருணமாக அமைந்தது. அதன் பிறகு டெல்லி பிரகடனம் கையெழுத்தானதுடன், இருதரப்பு உறவுகளுக்கு புதிய வேகம் கிடைத்தது.

பிரதமர் மன்மோகன் சிங்கும் 2010ஆம் ஆண்டில், சௌதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொண்டார். அதன் பிறகு ரியாத் பிரகடனம் கையெழுத்தானது. இது வியூகரீதியான இருதரப்பு உறவை மேம்படுத்த உதவியது.

பிறகு, 2014ம் ஆண்டு அப்போதைய பட்டத்து இளவரசர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல்-சௌத் இந்தியாவுக்கு வந்தார். இதேபோல் பிரதமர் மோதி 2016ஆம் ஆண்டு ரியாத்துக்கு சென்றிருந்தார். இந்தப் பயணத்தின் போது, ​​​​அவருக்கு நாட்டின் மிக உயர்ந்த குடிமகன் விருதை மன்னர் சல்மான் வழங்கினார்.

இதையடுத்து, பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் 2019ஆம் ஆண்டு இந்தியா வந்தபோது, ​​பத்தாயிரம் கோடி அமெரிக்க டாலர்களை முதலீடு செய்வதற்கான பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

இந்தக் காலகட்டத்தில், இந்தியாவின் ஹஜ் ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக இப்போது ஆண்டுதோறும் சுமார் இரண்டு லட்சம் இந்தியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடிகிறது.

தலைவர்களின் வருகையைத் தவிர, சௌதி அரேபியாவில் சுமார் 2.4 கோடி இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். இது அங்குள்ள மிகப்பெரிய வெளிநாட்டவர் சமூகம் என்பதுடன், இந்தச் சமூகம் இரு நாடுகளையும் இணைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *