பள்ளியில் உயிரியல் பாடமே படிக்காமல் மருத்துவப் படிப்பில் சேர முடியுமா? புதிய விதிகள் கூறுவது என்ன?

பள்ளியில் உயிரியல் பாடமே படிக்காமல் மருத்துவப் படிப்பில் சேர முடியுமா? புதிய விதிகள் கூறுவது என்ன?

உயிரியல் பாடம் இல்லாமல் மருத்துவம் படிக்க முடியுமா?  தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பு என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், Getty Images

நீட் தேர்வு குறித்து ஏற்கெனவே சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பு புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். தமிழ்நாட்டில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேலானவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கிறார்கள்.

தமிழக அரசு நீட் தேர்வை எதிர்த்து அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எதிர்த்து வருகிறது. இந்நிலையில், அந்தத் தேர்வுக்கான கட்டுப்பாடுகள் சிலவற்றை தேசிய மருத்துவ ஆணையம் தளர்த்தி கடந்த புதன்கிழமை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புதிய விதி என்ன கூறுகிறது?

பன்னிரண்டாம் வகுப்பில் உயிரியலை ஒரு பாடமாக எடுத்து படிக்காதவர்களும்கூட மருத்துவப் படிப்பில் சேரலாம் என தேசிய மருத்துவ ஆணையத்தின் சமீபத்திய விதி கூறுகிறது.

இப்போது வரை, இந்திய மருத்துவ கவுன்சிலின் மருத்துவக் கல்வி பட்டப் படிப்புக்கான ஒழுங்குமுறைகள் 1997-இன் படி எம்பிபிஎஸ் அல்லது பிடிஎஸ் படிக்க, இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்ப பாடங்களை இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து படித்திருக்க வேண்டும்.

தனித் தேர்வராக அல்லாமல் வழக்கமான பள்ளிக்குச் சென்று இந்தப் பாடங்களைப் படித்திருக்க வேண்டும். கூடுதலாக ஆங்கிலமும் பயின்றிருக்க வேண்டும்.

ஆனால் இப்போது வெளியிடப்பட்டிருக்கும் விதியின் படி, இந்தப் பாடங்களை இரண்டு ஆண்டுகள் படித்திருக்கத் தேவை இல்லை. பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு, கூடுதல் பாடமாக இதை எடுத்து படித்து தேர்வு எழுதினால் போதும் என தேசிய மருத்துவ ஆணையம் கூறுகிறது.

உயிரியல் பாடமே படிக்காமல் மருத்துவப் படிப்பில் சேரலாமா?

உயிரியல் பாடம் இல்லாமல் மருத்துவம் படிக்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

அப்படி இல்லை. உயிரியலை முக்கியப் பாடமாக பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ந்தெடுக்கவில்லை என்றாலும் மருத்துவப் படிப்பு படிக்கலாம் என்றுதான் தேசிய மருத்துவ ஆணையம் கூறுகிறது.

அதாவது இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல் பாடப் பிரிவில் படிப்பவர்களும், உயிரியல் பாடத்தை பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு கூடுதலாகப் படித்து மருத்துவப் படிப்பில் சேரலாம்.

வேறு என்னென்ன பாடங்கள் கட்டாயமாக தேவை?

மருத்துவப் படிப்பில் நுழைவதற்கு இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது பயோடெக்னாலஜி எனப்படும் உயிரி தொழில்நுட்பம் ஆகிய பாடங்கள் இப்போதும் கட்டாயம்.

ஆனால் இவற்றை பதினொன்றாம் வகுப்பு சேரும்போதே தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்று தேசிய மருத்துவ ஆணையம் கூறுகிறது. இந்தப் பாடங்களுடன் ஆங்கிலமும் பயின்றிருக்க வேண்டும்.

இந்த விதி ஏன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?

தேசிய கல்விக் கொள்கை, பாடங்களை மாணவர்கள் விருப்பப்பட்ட படி படிக்க சுதந்திரம் கொடுக்கிறது. அதன் அடிப்படையில், விரிவான விவாதங்களுக்குப் பிறகு இந்த புதிய நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த முடிவு ஜூன் மாதம் நடைபெற்ற தேசிய மருத்துவ ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டு தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனால் மாணவர்களுக்கு என்ன புதிய வாய்ப்புகள் கிடைக்கும்?

உயிரியல் பாடம் இல்லாமல் மருத்துவம் படிக்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

தற்போது நடைமுறையில் உள்ள பள்ளிக்கல்வி முறையின்படி, ஒரு மாணவர் தனது 15 வயதிலேயே தான் வாழ்க்கையில் என்னவாகப் போகிறார் என்பதற்கான முடிவை எடுத்துவிட வேண்டும். பத்தாம் வகுப்பில் அவர் எடுக்கக்கூடிய மதிப்பெண்கள் அவர் வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளுக்கு ஆதாரமாகி விடுகிறது.

பத்தாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பாடங்களே கற்பிக்கப்படுகின்றன. அதன் பிறகு பத்தாம் வகுப்பில், பொதுவாக அதிக மதிப்பெண்கள் பெறுபவரே மாநில பாடத்திட்டத்தில் A-Bio எனப்படும் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்க முடியும்.

அதில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் பாடங்கள் இருக்கும். இந்தப் பாடப்பிரிவை எடுத்தால், பொறியியல் படிப்பிலும் சேரலாம், மருத்துவமும் படிக்கலாம். எனவே அதிக மாணவர்கள் இந்த பிரிவைத் தேர்ந்தெடுக்க விரும்புவார்கள்.

இயற்பியல், வேதியில், தாவரவியல், விலங்கியல் என அறிவியல் பாடங்களை மட்டுமே கொண்டுள்ள பாடப்பிரிவும் உள்ளது. இந்தப் பிரிவை எடுத்துப் படிப்பவர்களும் மருத்துவம் படிக்கலாம். ஆனால் பொறியியல் படிக்க முடியாது.

உயிரியலுக்கு பதிலாக கணினி அறிவியல் பாடத்தைப் படிப்பவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியாது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விதிப்படி, உயிரியல் படிக்க முடியாத மாணவர்களும்கூட மருத்துவப் படிப்பில் நுழைவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கே.சிவபிரகாசம் இந்தப் புதிய விதி மிகவும் வரவேற்கத்தகது என்கிறார். மாணவர்களுக்கான கல்வியில் கட்டுப்பாடுகள் இருக்கக் கூடாது என்கிறார் அவர்.

உயிரியல் பாடம் இல்லாமல் மருத்துவம் படிக்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

“மாணவர்கள் விரும்புவதைப் படிப்பதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும். இந்தப் புதிய விதியின் காரணமாக அதிகமான மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும். அப்போது உருவாகும் போட்டியும்கூட ஆரோக்கியமானதே.

இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து உயிரியல் படிக்க வேண்டிய அவசியமில்லை. நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு டபிள் ப்ரமோஷன் வழங்கப்படும். அதே போலத்தான் இதுவும். எத்தனை ஆண்டுகள் உயிரியல் படிக்கிறார்கள் என்பது முக்கியமில்லையே. அதற்கான தகுதி பெற்றிருந்தால் படிக்கட்டுமே,” என்று கூறுகிறார்.

கூடுதல் பாடம் என்பது என்ன?

பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்பத்தைக் கூடுதல் பாடமாகப் படிக்கலாம் என தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பு கூறுகிறது.

ஆனால் கூடுதல் பாடம் என்றால் என்ன, அதற்கான தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து தெளிவாகக் கூறவில்லை. பன்னிரண்டாம் வகுப்பில் இருக்கும் அதே பாடங்களுக்கான தேர்வு நடைபெறுமா, அல்லது வேறு பாடத்திட்டம் உருவாக்கப்படுமா என்பது குறித்தும் தேசிய மருத்துவ ஆணையம் எதுவும் கூறவில்லை.

தற்போது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் ஒரு மாணவர் ஐந்து பாடங்கள் தவிர கூடுதலாக ஆறாவது பாடமாக உயிரி தொழில்நுட்பம், கணிதம், பொருளாதாரம் உள்ளிட்ட ஏதாவது ஒன்றை பள்ளி படிக்கும்போதே தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் கூடுதல் பாடம் என்பதே கிடையாது. எனவே இது எப்படி அமல்படுத்தப்படும் என்பது தெளிவாகக் கூறப்படவில்லை.

உயிரியல் பாடம் இல்லாமல் மருத்துவம் படிக்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

புதிய விதியால் மருத்துவக் கல்வியின் தரம் குறையுமா?

உயிரியல் பாடத்தை பள்ளியில் இரண்டு ஆண்டுகள் படிப்பதே மருத்துவக் கல்விக்கான அடிப்படை என்று கூறுபவர்கள் இந்த விதியை ஏற்றுக்கொள்ளவில்லை.

தமிழ் வழியில் பள்ளிக்கல்வி பயின்ற மருத்துவ மாணவர்களுக்கு தமிழில் மருத்துவம் படிக்க உதவி வரும் தமிழினி கல்விக்குழுவின் உறுப்பினர் மருத்துவர் சுபாஷ் காந்தி, இந்த விதி மருத்துவக் கல்வியின் தரத்தைக் குறைக்கும் என்கிறார்.

“மனிதர்களின் உயிர்களைக் கையாளும் மருத்துவர்கள் அடிப்படை அறிவு கொண்டிருப்பது அவசியம். பதினொன்றாம், பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கும் பாடங்களை தான் விரிவாக மருத்துவ படிப்பின் முதல் இரண்டு ஆண்டுகளில் படிக்கிறார்கள். தவளை இதயத்தைப் பற்றி செய்முறை மூலம் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மனிதர்களின் இதயத்தைப் படிப்பது எளிதாக இருக்கும்,” என்றார்.

அதேபோல, கவ்லியாளர் நெடுஞ்செழியனும் இந்த விதியை எதிர்க்கிறார். இந்த விதியால் சமூகத்தில் எதிர்காலத்தில் தரமான மருத்துவர்களே இல்லாத நிலை ஏற்படும் என்கிறார்.

“மருத்துவக் கல்வியில் படிக்கும் பாடங்கள் என்பது, பதினொன்றாம், பன்னிரண்டாம் வகுப்புகளில் படிக்கும் உயிரியல் பாடங்களின் நீட்சியே ஆகும். நீட் தேர்வில் ஏற்கெனவே கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைந்து வருகிறது. உயிரியல் படிக்காத மருத்துவர்களிடம் இந்த விதியைக் கொண்டு வந்தவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்வார்களா?” எனக் கேள்வி எழுப்புகிறார்.

இந்த புதிய விதிப்படி, வெளிநாட்டுக்கு சென்று மருத்துவம் படிக்க முடியுமா?

உயிரியல் பாடம் இல்லாமல் மருத்துவம் படிக்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

வெளிநாட்டில் சென்று மருத்துவம் படிக்க விரும்புவோர் நீட் தேர்வு எழுதி, தேசிய மருத்துவ ஆணையத்தின் eligibility certificate எனப்படும் தகுதிச் சான்றிதழைப் பெற வேண்டும்.

புதிய விதிகளின் படி, உயிரியலை கூடுதல் பாடமாக எடுத்துப் படித்தவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால், இந்த தகுதிச் சான்றிதழ் தேசிய மருத்துவ ஆணையத்தால் வழங்கப்படும். பிறகு, அவர்கள் வெளிநாட்டில் மருத்துவம் படிக்கலாம்.

இதுவரை தகுதிச் சான்றிதழ் பெறாத மாணவர்களுக்கு என்னவாகும்?

பன்னிரண்டாம் வகுப்பில் உயிரியல் படிக்காமல், வெளிநாட்டில் மருத்துவம் படிக்க தகுதிச் சான்றிதழ் கேட்டவர்களுக்கு இதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை.

அப்படி இதுவரை நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கும் இந்தப் புதிய விதி பொருந்தும். அதாவது இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருந்தாலும், அவர்கள் தற்போது உயிரியல் பாடத்துக்கான தேர்வு எழுதி, வெளிநாட்டில் மருத்துவம் படிக்கச் செல்லலாம்.

இந்தியாவில் படிக்க விரும்புவோருக்கும் இது பொருந்துமா?

இல்லை. இந்தியாவில் படிக்க விரும்புவோர், இந்த அறிவிப்பு வெளியான பிறகு பன்னிரண்டாம் வகுப்பு எழுதுபவராக இருக்க வேண்டும். ஏற்கெனவே பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது.

இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு படிப்பவர்களுக்கு புதிய விதி பொருந்துமா?

உயிரியல் பாடம் இல்லாமல் மருத்துவம் படிக்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

ஆம். தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே இது அமலுக்கு வருகிறது. எனவே இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு படிப்பவர்களும், கூடுதல் பாடமாக உயிரியலை எடுத்து படித்தால், வரும் 2023-24ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்பில் சேரலாம்.

பழைய விதிகளை எதிர்த்து நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்குகள் என்னவாகும்?

ஏற்கெனவே இருந்த பழைய விதிகளை எதிர்த்து நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளில் தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதியைச் சுட்டிக்காட்டி ஆணையம் வழக்குகளைத் திரும்ப பெறும் என்றும் கூறியுள்ளது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *