அயோத்தி ராமர் கோவில்: வேதங்கள் புறக்கணிக்கப்படுவதாக சங்கராச்சாரியார் எதிர்ப்பது ஏன்?

அயோத்தி ராமர் கோவில்: வேதங்கள் புறக்கணிக்கப்படுவதாக சங்கராச்சாரியார் எதிர்ப்பது ஏன்?

ராமர் கோவில் சர்ச்சை

பட மூலாதாரம், FB/JAGADGURU SHANKARACHARYA SWAMI SHREE NISHCHALANAND SARASWATI

படக்குறிப்பு,

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் வேதங்கள் புறக்கணிக்கப்படுவதாக சங்கராச்சாரியார்கள் கூறுகின்றனர்.

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதில் இருந்து, அந்த விழாவில் யாரெல்லாம் பங்கேற்பார்கள் என்ற விவாதம் தொடங்கியது.

இந்நிலையில், அந்நாள் நெருங்கி வருவதால், விழாவில் யாரெல்லாம் பங்கேற்பார்கள், பங்கேற்க மாட்டார்கள் என்ற விவாதம் தொடர்ந்து தீவிரமடைந்துள்ளது.

இந்த விழாவில் காங்கிரஸ் பங்கேற்குமா எனப் பல நாட்களாக எழுப்பப்பட்டு வந்த கேள்விக்கு அக்கட்சி புதன்கிழமை (ஜன. 10) பதிலளித்தது.

ராமர் கோவிலை பாஜக அரசியலாக்குவதாக குற்றம்சாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க காங்கிரஸ் மறுத்துள்ளது.

காங்கிரஸ் மறுத்தது ஏன்?

ராமர் கோவில்
படக்குறிப்பு,

கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் அயோத்தி.

“கோடிக்கணக்கான இந்தியர்கள் ராமரை வழிபடுகின்றனர். மதம் என்பது ஒருவருடைய தனிப்பட்ட விஷயம். ஆனால், பல ஆண்டுகளாக பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் அயோத்தி ராமர் கோவிலை அரசியலாக்கியுள்ளன. பாதி மட்டுமே கட்டப்பட்ட கோவிலுக்கு தேர்தல் ஆதாயத்திற்காகத் தொடக்க விழா நடத்தப்படுகிறது,” என்று காங்கிரஸ் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று, மக்களின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து, மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சௌத்ரி ஆகியோர், இந்த நிகழ்ச்சிக்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் விடுத்த அழைப்பை மரியாதையுடன் நிராகரித்ததாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியும் கலந்துகொள்வார் என, விஷ்வ ஹிந்து பரிஷத் உறுதி செய்துள்ளது. முன்னதாக, இந்த விழாவில் அத்வானி கலந்துகொள்ள மாட்டார் என்று செய்திகள் வெளியாகின.

காங்கிரஸை தவிர, இரண்டு சங்கராச்சாரியார்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்துவிட்டனர். ஆனால், அனைவரும் இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என, இரு சங்கராச்சாரியார்களும் அறிக்கை வாயிலாக அழைப்பு விடுத்துள்ளனர்.

சங்கராச்சாரியார்களின் முக்கியத்துவம்

ராமர் கோவில் சர்ச்சை

பட மூலாதாரம், SHURAIH NIYAZI/BBC

படக்குறிப்பு,

சதானந்தா மகாராஜ், அவிமுக்தேஷ்வரானந்த மகாராஜ்

இந்து மத நம்பிக்கைகளின்படி, சங்கராச்சாரியார் மிக உயர்ந்த குருக்களாகக் கருதப்படுகிறார்.

இந்து மதத்தில், சங்கராச்சாரியார் மரியாதையுடனும் நம்பிக்கையுடனும் பார்க்கப்படுகிறார்.

ஆதி சங்கராச்சாரியார் இந்து மதத்தின் தத்துவ விளக்கத்திற்காகவும் அறியப்பட்டவர்.

ஆதி சங்கராச்சாரியார் இந்து மதத்தைப் பரப்புவதற்காக நான்கு மடங்களை நிறுவினார். மதத்தைப் பரப்புவதே இந்த மடங்களின் பணி.

ராமர் கோவில்
படக்குறிப்பு,

ஜனவரி 22 அன்று ராமர் கோவில் குடமுழுக்கு நடைபெற உள்ளது.

அந்த நான்கு மடங்கள்

  • சிருங்கேரி மடம், கர்நாடகா – சங்கராச்சாரியார் பாரதிதீர்த்த மகாராஜ்
  • கோவர்தன் மடம், பூரி ஒடிசா – சங்கராச்சாரியார் நிச்சலானந்த சரஸ்வதி மகாராஜ்
  • சாரதா மடம், துவாரகா குஜராத் – சங்கராச்சாரியார் சதானந்தா மகாராஜ்
  • ஜோதிர் மடம், பத்ரிகா உத்தராகண்ட் – சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த மகாராஜ்

இந்த மடங்கள் இந்து மதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

இத்தகைய சூழ்நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவின் தேதி முடிவு செய்யப்பட்டபோது, ​​​​சங்கராச்சாரியார்களின் அணுகுமுறையை அறியவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

சங்கராச்சாரியார்கள் பங்கேற்க மறுப்பது ஏன்?

ராமர் கோவில் சர்ச்சை

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு,

”சாஸ்திரங்களின்படி கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை” என சங்கராச்சாரியார்கள் குற்றச்சாட்டு.

ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் இந்த விழாவில் நாட்டின் நான்கு சங்கராச்சாரியார்களும் பங்கேற்க மாட்டார்கள் என்று ஜோதிர்மடத்தின் சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதியின் கூற்றுப்படி, ராமர் கோவில் கும்பாபிஷேக விழா சாஸ்திரங்களின்படி ஏற்பாடு செய்யப்படவில்லை.

சங்கராச்சாரியார் பாரதி தீர்த்தரின் படத்துடன் இதுதொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டதால், அவர் கும்பாபிஷேக விழாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அர்த்தம் கொள்ளப்பட்டதாக, சிருங்கேரி மடம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சங்கராச்சாரியாரால் அப்படி எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் இது தவறான பரப்புரை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்பாபிஷேக விழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என, சிருங்கேரி சங்கராச்சாரியார் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், சங்கராச்சாரியார் அயோத்திக்குச் சென்று அவ்விழாவில் பங்கேற்பாரா, இல்லையா என்பது குறித்து அந்த அறிக்கையில் எதுவும் தெளிவாகக் கூறப்படவில்லை.

ராமர் கோவில் சர்ச்சை

‘வேதம் புறக்கணிக்கப்படுகிறது’

சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்தாவின் வீடியோ ஒன்று, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில், சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த், “இது ராமர் கோவில் என்றால், சம்பத் ராய் அங்கு என்ன செய்கிறார்? அவர்கள் அங்கிருந்து வெளியேறி, ராமானந்தர் பிரிவினரிடம் கௌரவத்தை ஒப்படைக்க வேண்டும். நாங்கள் மோதிக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் இறையியலுக்கு எதிரானவர்களாக இருக்க விரும்பவில்லை,” என்று கூறுவதைக் காணலாம்.

ராமர் கோவில் ராமானந்தர் பிரிவினருக்குச் சொந்தமானது என, ஸ்ரீராம் ஜென்மபூமி அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் சமீபத்தில் கூறியிருந்தார்.

“நான்கு சங்கராச்சாரியார்களுக்கும் இதில் எந்த வெறுப்போ பற்றோ இல்லை. ஆனால், வேதத்தைப் பின்பற்றி அதை மேற்கொள்வது சங்கராச்சாரியார்களின் பொறுப்பு. இப்போது அங்கு வேதம் புறக்கணிக்கப்படுகிறது. கோவில் இன்னும் முழுமை பெறாமல் குடமுழுக்கு நடைபெறுகிறது.

குடமுழுக்கை திடீரென நடத்த வேண்டும் என்ற சூழ்நிலை இல்லை. சில நேரங்களில் அங்கு இரவில் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. 1992இல் கட்டடம் இடிக்கப்பட்டபோது, ​​சில நல்ல தருணங்கள் அனுசரிக்கப்பட்டன. அப்போது எந்த சங்கராச்சாரியாரும் கேள்வி எழுப்பவில்லை, ஏனென்றால் அன்றைய நிலை அப்படி இருந்தது,” என்றார்.

சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த், “இன்று நமது நற்பெயரைக் கட்டியெழுப்ப ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால்தான் நாங்கள் பேசினால் மோதிக்கு எதிரானவர்கள் என்று அழைக்கப்படுகிறோம். நாங்கள் சமய நூல்களைப் பின்பற்றி மக்களை வழிநடத்த விரும்புகிறோம்.

ராமர் இருக்கிறார் என்று இறையியலே நமக்குச் சொல்லியிருக்கிறது. வேதத்தில் இருந்து நாம் ராமரை அறிகிறோம். அதே வேதத்தில் இருந்துதான் குடமுழுக்கு குறித்தும் அறிகிறோம். அதனால்தான் சங்கராச்சாரியார் யாரும் அங்கு செல்வதில்லை,” என்றார்.

பூரி கோவர்தன் மடத்தைச் சேர்ந்த சங்கராச்சாரியார் என்ன சொன்னார்?

ராமர் கோவில் சர்ச்சை

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

“நான் கைதட்டி ஆரவாரம் செய்ய வேண்டுமா?” என நிச்சலானந்த சுவாமி கேள்வி எழுப்புகிறார்.

கோவர்தன் மடத்தைச் சேர்ந்த சங்கராச்சாரியார் நிச்சலானந்த சுவாமி ஒரு தொலைக்காட்சி சேனலில, “கும்பாபிஷேக விழாவுக்கு என்னை அழைத்தால் பெருமைப்படுவேன், அழைப்பிதழ் கொடுக்காவிட்டால் கோபப்படுவேன் என்று அர்த்தம் இல்லை.

வேதத்தின்படி ராமர் மதிக்கப்பட வேண்டியது அவசியம். தற்போது சாஸ்திரப்படி குடமுழுக்கு நடைபெறவில்லை. எனவே நான் அங்கு செல்வது ஏற்புடையதல்ல. உடன் ஒருவரை அழைத்து வரலாம் என எனக்கு அழைப்பு வந்துள்ளது,” என்றார்.

“சிலையை யார் தொட வேண்டும், யார் தொடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்,” என்கிறார் நிச்சலானந்த சுவாமிகள். சம்பிரதாயப்படி தான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என்று புராணங்களில் எழுதப்பட்டுள்ளது.

இதைச் சரியாகச் செய்யாவிட்டால் தேவர்களும், தெய்வங்களும் கோபமடைவர். இது நகைச்சுவை அல்ல. முறையாகச் செய்தால்தான் தெய்வத்தின் மகிமை அனைவருக்கும் கிடைக்கும். இல்லையெனில் ஆபத்து ஏற்படும்,” எனத் தெரிவித்தார்.

மேலும், ”மோதி சிலையைத் தொட்டு அதைத் திறந்து வைப்பார். நான் கைதட்டி ஆரவாரம் செய்ய வேண்டுமா? இது மிகப்பெரிய பதவி. எனது பதவியின் கண்ணியம் குறித்துக் கவலைப்படுகிறேன். எனக்கு அயோத்தி மீது வெறுப்பு இல்லை. அதனுடனான என்னுடைய தொடர்பு துண்டிக்கப்படாது. இந்த சந்தர்ப்பத்தில் அங்கு செல்வது ஏற்புடையதல்ல,” என்றார்.

​​“இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், மோதி மட்டும் குடமுழுக்கு செய்திருந்தால், சிலையை முறையாகப் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருப்பேன். தற்போது அயோத்தியில் வேதம் பின்பற்றப்படவில்லை. வேறு எந்த காரணமும் இல்லை. நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் அல்ல. எனக்கு கோபமே வராது,” என்றார்.

ராமர் கோவில்

‘கண்ணியத்தைப் பின்பற்ற விரும்புகிறோம்’

இது தொடர்பான அறிக்கையை சாரதாபீடத்தைச் சேர்ந்த சங்கராச்சாரியார் சமூக ஊடகங்களிலும் பகிர்ந்துள்ளார்.

அந்த அறிக்கையில், “சங்கராச்சாரியார் சதானந்த மகராஜ் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. அவர் ராமர் கோவிலுக்குப் பல முயற்சிகளை மேற்கொண்டார், இந்த சர்ச்சை 500 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.

குடமுழுக்கு விழாவை வேதம், சாஸ்திரம், மதம் ஆகியவற்றின் கண்ணியத்தைப் பின்பற்றி நடத்த விரும்புகிறோம்,” என்று கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த அறிக்கையில்கூட துவாரகா மடத்தின் சங்கராச்சாரியார் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பாரா இல்லையா என்பது குறிப்பிடப்படவில்லை.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *