பட மூலாதாரம், Getty Images
நீலகிரியில் போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு போலீஸார் கைவிலங்கிட்டு விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக புகார் எழுந்துள்ளதால், இது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியின் தாய், தன் குழந்தையை 22 வயதான இளைஞர் ஒருவர் பாலியல் வல்லுறுவு செய்ததாக அக்டோபர் 6-ஆம் தேதி சைல்டு லைனுக்குப் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், இந்த புகார் தொடர்பான விசாரணைக்காக கோத்தகிரி நீதிமன்றத்துக்கு அந்தச் சிறுமியை அழைத்துச் சென்ற போலீஸார் கைவிலங்கிட்டு சிறுமியை அழைத்துச்சென்றதாக, நவம்பர் 16-ஆம் தேதி சிறுமியின் தாய் மாவட்ட போலீஸ் எஸ்.பி சுந்தரவடிவேலிடம் புகார் கொடுத்திருந்தார். சிறுமியின் தாயின் புகாரை போலீஸார் மறுத்திருந்தனர்.
இப்படியான நிலையில், நவம்பர் 28-ஆம் தேதி கோத்தகிரியில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நடத்திய குறைதீர்ப்புக்கூடத்தில், சிறுமியுடன் வந்த அவரது தாய் மற்றும் அவரது வழக்குரைஞர் புகார் கொடுத்திருந்தனர்.
நிகழ்ச்சி முடித்து நிருபர்களைச் சந்தித்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங் கனுங்கோவிடம், சிறுமியின் புகார் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு விளக்கமளித்த பிரியங் கனுங்கோ, “இந்த போக்சோ வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரியிடம் (விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் சரஸ்வதி) விசாரணை நடத்தியுள்ளேன். புகாரளித்த சிறுமி மற்றும் அவரது தாயிடமும் விசாரணை நடத்தியுள்ளேன். இது தொடர்பாக விரிவான விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன், சிறுமியின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார் அவர்.

இச்சம்பவம் தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தினர் விசாரணை நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
‘போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் தாமதம்’
பிபிசி தமிழிடம் பேசிய பாதிக்கப்பட்ட சிறுமியின் சட்ட ஆலோசகரான வழக்குரைஞர் மாலினி பிரபாகரன், அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார்.
நடந்த சம்பவம் குறித்து பிபிசியிடம் விரிவாகப் பேசினார் மாலினி பிரபாகரன்.
அப்போது அவர், “15 வயதான சிறுமியை திருமணம் செய்வதாகக்கூறி 22 வயதான வாலிபர் பாலியல் வல்லுறவு செய்துள்ளார். இது குறித்து அந்த சிறுமியின் தாய், அக்டோபர் 6-ஆம் தேதியே புகாரளித்துள்ளார். அதன்பின், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி விசாரித்து அந்த சிறுமியை காப்பகத்தில் சேர்த்தினர்.
ஆனால், FIR கூட பதிவிடாமல் குற்றவாளிக்கு ஆதரவாக போலீஸார் செயல்பட்டு காலம் தாழ்த்திய நிலையில், வழக்குரைஞர்களுக்கு இது தெரியவந்தது. அதன்பின், நவம்பர் 2-ஆம் தேதி தான் மகளிர் போலீஸார் வழக்குபதிவே செய்தனர்,” என போலீஸார் மீது குற்றம்சாட்டினார் அவர்.
வழக்கு தொடர்பான விசாரணைக்காக சிறுமியிடம் வாக்குமூலம் வாங்க அழைத்துச் சென்றபோது, போலீசார் சிறுமிக்கு கைவிலங்கிட்டு அழைத்து சென்றதாக அவர் தெரிவித்தார்.
“நவம்பர் 7-ஆம் தேதி, வாக்குமூலம் பெற சிறுமியை கோத்தகிரி நீதிமன்றத்துக்கு அழைத்துச்சென்ற பெண் காவலர் ஜமுனா என்பவர், சிறுமிக்கு கையில் விலங்கை அணிவித்து, பஸ் நிலையத்தில் இருந்து, 400 மீட்டர் தொலைவில் இருக்கும் நீதிமன்றம் வரையில் அழைத்துச் சென்று திரும்ப அழைத்து வந்துள்ளார்,’’ என்றார்.
இச்சம்பவத்திற்க பிறகு, புகார் கொடுத்த சிறுமியை மிரட்டுவதாகவும் மாலினி குற்றம்சாட்டினார்.
“கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றது கண்காணிப்பு கேமரா காட்சிகளில் பதிவாகியுள்ளது, ஆனால், போலீஸாரோ கைவிலங்கிடாமல் கூட்டிச்சென்றது போலான காட்சிகளை வெளியிட்டுள்ளனர். சிறுமியை போலீஸார் மிரட்டி வருகின்றனர். குற்றவாளிக்கு ஆதரவாக இருப்பதால் தான் போலீஸார் இன்னமும் குற்றவாளியை கைது செய்யவில்லை,” எனறார் மாலினி.

போலீஸார் கைவிலங்கிடாமல் கூட்டிச்சென்றது போலான காட்சிகளை வெளியிட்டுள்ளனர் என்கிறார் வழக்கறிஞர் மாலினி பிரபாகரன்
‘போலீசார் என்னை மிரட்டினார்கள்’
இதுதொடர்பாக சிறுமி புகார் தெரிவிக்கும் வீடியோவை சிறுமி தரப்பு வழங்கறிஞர்கள் பகிர்ந்தனர்.
அந்த வீடியோவில் பேசும் பாதிக்கப்பட்ட சிறுமி, “நவம்பர் 17-ஆம் தேதி டி.எஸ்.பி மேம், வேறொரு போலீஸ் அதிகாரி வந்து என்கிட்ட விலங்கு போட்டாங்களானு கேட்டாங்க. நான் ஆமானு சொன்னேன். விலங்கு போட்டாங்கனு யார்கிட்டயாது சொன்னா, 18 வயசு வரைக்கும் ஹோம்லயே (காப்பகம்) வெச்சுப்போம்னு சொல்லி டி.எஸ்.பி மேடம் என்னைய மிரட்டுனாங்க. பக்கத்துல இருந்த இன்னொரு போலீஸ் என்னமோ எழுத்திட்டு இருந்தாங்க, அது என்னனு என்கிட்ட காட்டாமலேயே அதுல என்கிட்ட கையெழுத்து வாங்கிட்டாங்க,” எனக்கூறுகிறார்.
இதுகுறித்து கேட்க நீலகிரி டி.எஸ்.பி யசோதாவை தொடர்புகொண்டபோது, அவர் வழக்கு விசாரணையில் இருப்பதால், பிறகு விளக்கமளிக்கிறேன் என்றார்.

‘பழிவாங்கத்தான் பொய் கூறுகிறார்கள்’
பட மூலாதாரம், Getty Images
சிறுமிக்கு கைவிலங்கிட உத்தரவிட்டதாக சிறுமி மற்றும் வழக்கறிஞர் குற்றம்சாட்டும் இன்ஸ்பெக்டர் சரஸ்வதியை போனில் தொடர்புகொண்டு பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது.
அப்போது அவர், “சிறுமி மற்றும் வழக்கறிஞர்கள் சொல்லும் புகார் முற்றிலும் பொய்யானது. சம்பவம் நடந்ததாக அவர்கள் சொல்லும் நாளில் நான் மருத்துவ விடுப்பில் இருந்தேன். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கைவிலங்கிட்டு அழைத்துச்செல்ல போலீஸாருக்கு அவசியமே இல்லை,” என்றார்.
மேலும், “வழக்குரைஞர் என்னை இங்கிருந்து டிரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும் அது தான் அவர்கள் நோக்கம், தனிப்பட்ட முறையில் ஏதோ எண்ணத்தில் என்னை பழிவாங்கத்தான் இது போன்ற பொய்யான புகார்களை கூறுகிறார்கள்,” எனக் குற்றச்சாட்டுகளை மறுத்தார் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி.
ஆனால், இன்ஸ்பெக்டர் சரஸ்வதியின் வாதத்தை மறுத்தார் மாலினி பிரபாகரன்.
இது குறித்து விளக்கிய வழக்குரைஞர் மாலினி பிரபாகரன், “எனக்கு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸார் மீது எந்த தனிப்பட்ட முன்விரோதமும் இல்லை. அவர்களுக்கும் எனக்கும் என்ன பிரச்சினை இருக்கு? பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் என்னிடம் கேட்டுக்கொண்டதால் தான் அந்தச்சிறுமிக்கு சட்ட ஆலோசகராக உள்ளேன். அதுமட்டுமின்றி, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டியும் இந்த வழக்கை ஏற்று நடத்துமாறு கேட்டுக்கொண்டதால் சிறுமியின் பக்கம் நீதிக்காக நிற்கிறேன். விசாரணை முடியட்டும் உண்மை வெளியில் வரும்,” என்கிறார் அவர்.
போலீசார் என்ன சொல்கிறார்கள்?
பட மூலாதாரம், HANDOUT
குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபிப்பதற்கு தங்களிடம் ஆதாரம் இருப்பதாகக் கூறினார் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல்
குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) சுந்தரவடிவேல், “போக்சோவில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு யாரும் கைவிலங்கிட்டு அழைத்துச்செல்ல மாட்டார்கள். அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது. கைவிலங்கிடாமல் சிறுமியை காவலர் அழைத்துச் செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் நாங்கள் வெளியிட்டுள்ளோம். எங்கள் பக்கம் உண்மை உள்ளது,” என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், “நடந்த உண்மையை குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடமும் தெரிவித்துள்ளோம், எங்கு விசாரணை நடந்தாலும் உண்மை ஆதாரங்களை காண்பிப்போம். என்ன காரணத்துக்காக இந்த குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள் எனத்தெரியவில்லை,” என காவல்துறையினர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தார் சுந்தரவடிவேல்.
இந்தச்சம்பவம் தொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “போக்சோ பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியை தப்பவிட்டு, பாதிக்கப்பட்ட சிறுமியை கைவிங்கிட்டு அழைத்துச்செல்வதா?” என கடுமையான கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
பா.ஜ.க மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, “போக்சோவில் பாதிக்கப்பட்ட சிறுமியை குற்றவாளி போல் பொதுமக்கள் முன்னிலையில் அழைத்துச்சென்ற அவலம். தமிழக அரசும் காவல்துறையும் வெட்கித் தலைகுனிய வேண்டிய செயல்,” என எக்ஸ் பக்கத்தில் அரசை சாடி பதிவிட்டுள்ளார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
