ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் எதிர்காலம் என்ன ஆகும்?
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கியுள்ளார் திரைக் கலைஞர் விஜய். இந்தக் கட்சியின் வெற்றி வாய்ப்புகள், அக்கட்சி பயணிக்கவிருக்கும் திசை என்ன?
தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் அரசியல் கட்சி ஒன்றைத் துவங்கி, அரசியலில் ஈடுபடுவார் என நீண்ட காலமாகவே பேசப்பட்டு வந்தது.
கடந்த சில மாதங்களில் இந்தப் பேச்சுகள் தீவிரமடைந்தன. இந்நிலையில்தான், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியிருப்பதாக அறிக்கை மூலம் விஜய் அறிவித்திருக்கிறார்.
விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை
மூன்று பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில், கவனிக்கத்தக்கதாக சில அம்சங்கள் இருந்தன. விஜய் கட்சி ஆரம்பிப்பது எதற்காக என்பதை முதலில் குறிப்பிட்டிருந்தார்.
“விஜய் மக்கள் இயக்கம் பல ஆண்டுகளாக சேவை செய்து வந்தாலும் முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவது தன்னார்வ அமைப்பால் முடியாத காரியம். அதற்கு ஓர் அரசியல் இயக்கம் தேவை,” என அந்தக் காரணத்தைக் குறிப்பிட்டார்.
அடுத்ததாக, தற்போதுள்ள அரசியல் கட்சிகளில் இருந்து தன்னுடைய கட்சி எந்த விதத்தில் மாறுபட்டிருக்கும் என்பதைக் குறிப்பிடுவதைப் போல சில வாக்கியங்கள் இடம்பெற்றிருந்தன.
அதாவது, “தற்போதைய அரசியல் சூழலில் நிர்வாகச் சீர்கேடுகளும் ஊழல் மலிந்த அரசியல் கலாசாரமும் ஒருபுறம் இருக்கின்றன. மக்களை சாதி, மதத்தின் மூலம் பிளவுபடுத்தும் கலாசாரம் மற்றொரு பக்கம் இருக்கிறது. சாதி, மத பேதமற்ற, லஞ்ச ஊழலற்ற அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய அரசியல் தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்தும் பிறப்பால் எல்லோரும் சமம் என்ற கொள்கை உடையதாகவும் இருக்க வேண்டும்,” என அந்த அறிக்கை குறிப்பிட்டது.
பட மூலாதாரம், Actor Vijay/Instagram
அடுத்ததாக ஜனவரி 25ஆம் தேதி நடந்த பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் கட்சியில் தலைவர் மற்றும் தலைமைச் செயல நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கட்சியின் சட்டவிதிகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என அறிக்கை குறிப்பிடுகிறது. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடந்ததாகத் திடீரென குறிப்பிட்டிருப்பது பல தரப்பினருக்கும் ஆச்சரியத்தை அளித்திருக்கிறது.
இந்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெறுவதுதான் இலக்கு என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.
மேலும், நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் கொடி, கொள்கை, கோட்பாடு, செயல் திட்டம் போன்றவை அறிவிக்கப்படும் என்றும் இடைப்பட்ட காலத்தில் தொண்டர்களை அரசியல்மயப்படுத்தி, பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
நடிப்பில் இருந்து விலகும் விஜய்
அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்திற்குப் பிறகு முழு நேர அரசியலில் ஈடுபடவிருக்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறார் விஜய்.
விஜய் தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கம் என்று மாற்றியதில் இருந்தே அவர் அரசியலுக்கு வரப் போகிறாரா என்ற பேச்சுகள் அடிபட ஆரம்பித்துவிட்டன.
அதற்குப் பிறகு தலைவா படத்திற்கு வைக்கப்பட்ட டாக் லைன், விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் சில சமூக சேவைகளில் ஈடுபட்டது, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதிவாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கும் நிகழ்வை கடந்த ஆண்டு சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தியது ஆகியவை இந்தப் பேச்சுக்கு வலு சேர்த்தன.
விஜயின் அரசியல் பிரவேசம்
பட மூலாதாரம், VIJAY / INSTAGRAM
விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் விஜய்யின் பெயரில் அரசியல் கட்சி ஒன்றைப் பதிவு செய்தார்.
இதற்குப் பிறகு, விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பிற கட்சிகளில் இருந்தால், அதிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டுமெனக் கூறப்பட்டது, ஊள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 170 பேர் சுயேட்சையாகப் போட்டியிட்டது ஆகியவை விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வரப் போகிறார் என்பதை உணர்த்தின.
இதற்கு நடுவில் நடந்த ஒரு நிகழ்வு விஜயின் அரசியல் பிரவேசம் குறித்த ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் விஜய்யின் பெயரில் அரசியல் கட்சி ஒன்றைப் பதிவு செய்தார்.
“அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்” என்ற பெயரில் இந்தக் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். இந்தச் செய்தி வெளியானதும் தனக்கும் அந்தக் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என விஜய் அறிவித்தார். அந்தக் கட்சி சார்பில் நடத்தப்படும் நிகழ்வுகளில் தனது பெயர் ஈடுபடுத்தப்படுமானால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
ஆனால், இந்தக் குழப்பங்கள் விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இடையிலான மோதலின் வெளிப்பாடாகப் புரிந்துகொள்ளப்பட்டதே தவிர, விஜய்க்கு அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை என்பதாகப் புரிந்துகொள்ளப்படவில்லை. அதை உறுதிப்படுத்தும் வகையில்தான் உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டனர்.
அரசியலில் திரைக் கலைஞர்கள்
பட மூலாதாரம், VIJAYAKATNTH FACEBOOK
விஜயகாந்த்
திரைக் கலைஞர்கள் அரசியலில் போட்டியிடுவதும் அதன் மூலம் உச்சகட்ட பதவிக்கு வருவதும் புதிதல்ல. எம்.ஜி.ஆர்., சிவாஜியில் தொடங்கி விஜயகாந்த், கமல்ஹாசன் வரை பல முன்னுதாரணங்கள் இதற்கு உண்டு.
ஆனால், இவர்கள் அனைவருமே நீண்ட காலமாக பொதுப் பிரச்னைகள் குறித்து தங்கள் கருத்துகளை முன்வைத்து வந்தனர். ரஜினிகாந்த் அரசியல் கட்சி எதையும் துவங்கவில்லை என்றாலும்கூட, அப்படி ஒரு எண்ணம் தனக்கு இருப்பதை வெளிப்படுத்திய காலகட்டத்தில், பொது விவகாரங்கள் குறித்து தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து வந்தார்.
அப்போது அவர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், அவர் செய்தியாளர்களைச் சந்திப்பதை நிறுத்தவில்லை.
ஆனால், விஜய்யின் அரசியல் பயணம் அப்படியானதாக இருக்கவில்லை. “எம்.ஜி.ஆர்., பாக்கியராஜ், டி. ராஜேந்தர் உள்ளிட்டவர்களின் அரசியல் பிரவேசம் என்பது வேறு மாதிரி இருந்தது. ஓர் அரசியல் சித்தாந்தத்தோடு ஏதோவொரு வகையில் நீண்ட காலம் இணைந்திருந்த பிறகு, அவர்கள் தனியாக அரசியல் கட்சியைத் துவங்கினார்கள், அல்லது தீவிர அரசியலில் ஈடுபட்டார்கள்.
அப்படியிருந்துமே பாக்கியராஜ், டி. ராஜேந்தர் போன்றவர்கள் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை. ஆனால், விஜய் எந்தத் தலைவரிடமும் நெருங்கிப் பழகியவரல்ல, எந்த அரசியல் இயக்கத்தோடும் சேர்ந்து செயல்பட்டவரும் அல்ல. விஜய்க்கு அரசியல் ஆசையைத் தூண்டியது முழுக்க முழுக்க அவரது தந்தைதான். தன் திரை பிரபலத்தை நம்பி களமிறங்கியிருக்கிறார்,” எனக் கூறுகிறார் மூத்த பத்திர்கையாளர் குபேந்திரன்.
விஜயின் மாற்றுப் பாதை?
பட மூலாதாரம், VIJAY MAKKAL IYAKKAM / YOUTUBE
“எப்போதுமே ஒரு நடிகர் தனது சினிமா பிரபலத்தை நம்பி இறங்குவது சரியாக வராது”
அதற்குப் பதிலாக, “இந்த திராவிடக் கட்சிகள் இத்தனை ஆண்டுகளில் செய்யாதது என்ன என்பதைச் சொல்லி, அதைச் செய்யப் போகிறோம் என்று கூறி, பத்திரிகையாளர்களைச் சந்தித்து வந்திருக்க வேண்டும்,” என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன்.
இதே கருத்தையே எதிரொலிக்கிறார் தன்னாட்சி தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளரும் மூத்த பத்திரிகையாளருமான ஆழி செந்தில்நாதன். “எப்போதுமே ஒரு நடிகர் தனது சினிமா பிரபலத்தை நம்பி இறங்குவது சரியாக வராது. அரசியல் சித்தாந்தப் பின்னணியோ, சாதிப் பின்னணியோ இருந்து, கூடுதலாக சினிமா பிரபலம் இருந்தால் அது பயன்படும். இல்லாவிட்டால் வலிமையான சித்தாந்தப் பின்புலம் தேவைப்படும்.
உதாரணமாக சீமானை சொல்லலாம். அவர் சினிமாவில் இருந்து வந்திருந்தாலும் தமிழ்த் தேசியம் என்ற அரசியலை முழுமையாக எடுத்துக்கொண்டார். அதனால்தான் தமிழ்த் தேசிய அரசியலைப் பேசியவர்களில் அதிக வாக்குகளை வாங்கியவராக இருக்கிறார்.
எம்.ஜி.ஆரை பொறுத்தவரை, அவர் தி.மு.கவில் இருந்து வந்தவர். அண்ணாவின் பாரம்பரியம் தன்னுடையது என்று கூறி, வெற்றி பெற்றவர். ஜெயலலிதா சினிமாவில் இருந்து வந்தாலும் அவர் எம்.ஜி.ஆரின் பாரம்பரியத்தை தனதாக்கிக் கொண்டு வெற்றி பெற்றார்.
மாறாக எந்த சித்தாந்தப் பின்புலமும் இல்லாமல் கட்சி துவங்கிய விஜயகாந்த், கமல், சரத்குமார் போன்ற யாரும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இவர்களைவிட விஜய் பெரிய ஆளாக இருக்கலாம். ஆனால், அவர் யாரை, எந்தத் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தப் போகிறார் என்பதில்தான் எல்லாம் இருக்கிறது,” என்கிறார் செந்தில்நாதன்.
அரசியலின் தொடக்கத்திலேயே தவறான அணுகுமுறையா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கியது பற்றி மக்கள் கூறுவது என்ன?
ஆனால் விஜயின் அறிக்கையை வைத்துப் பார்க்கும்போது, சாதி, மத பேதமற்ற ஒரு கொள்கைப் பற்றோடு வருவதாகச் சொல்வதை பா.ஜ.கவுக்கு எதிரான ஒரு கூற்றாகப் பார்க்கலாம் என்கிறார் குபேந்திரன்.
“ஆனால், பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்தியது போன்ற விஷயத்தையெல்லாம் ரகசியமாக வைத்திருந்தது, ரகசியமாகப் பதிவு செய்வது இதிலெல்லாம் என்ன கிடைக்கப் போகிறது?” என்கிறார் அவர்.
மேலும், மக்கள் முன்னிலையில் வராமல் அறிக்கை வெளியிட்டு, இந்த டிஜிட்டல் உலகில் பின்னணியில் இருந்தே வென்றுவிடலாம் என விஜய் நினைத்தால் அது மிகப்பெரிய பாதகமாகத்தான் முடியும் என்றும் எச்சரிக்கிறார் குபேந்திரன்.
கட்சியில் தொண்டர்களைச் சேர்க்காமல் எப்படி பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள் எனக் கேள்வியெழுப்புகிறார் ஆழி. செந்தில்நாதன்.
“கட்சியைப் பதிவு செய்து தொண்டர்கள் சேர்க்கை நடத்த வேண்டும். அதிலிருந்து பொதுக் குழு, செயற்குழு உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். பிறகு, பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்த வேண்டும். ஆனால், இதெல்லாம் நடப்பதற்கு முன்பே பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்தியது எப்படியெனத் தெரியவில்லை,” என்கிறார் செந்தில்நாதன்.
கடந்த ஆண்டு செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மக்கள் இயக்கத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் மட்டும் மூன்று லட்சம் பேர் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். ஆகவே விஜய்யின் மிக முக்கியமான பலம், விஜய் மக்கள் இயக்கம்தான். இதிலுள்ள லட்சக்கணக்கான ரசிகர்கள்தான் இவருடைய பலம். ஆனால், இவர்கள் அனைவரும் விஜய்க்கு வாக்களிப்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார் குபேந்திரன்.
“விஜயகாந்த் தனது ரசிகர் மன்றங்களை எவ்வளவு கட்டுக்கோப்பாக வைத்திருந்தார் என்பது தெரிந்ததுதான். ஆனால், அவர் காலத்திலேயே வாக்கு சதவீதம் வெகுவாகக் குறைந்துவிட்டது. ஆகவே, ரசிகர்கள் எல்லோரும் தாங்கள் விரும்பிய நடிகருக்கே வாக்களிப்பார்களா, அவர்கள் மட்டும் வாக்களித்தால் வெற்றி பெற்றுவிட முடியுமா என்பதெல்லாம் கேள்விக்குறிதான்.
மாறாக, எல்லாத் தரப்பு மக்களையும் ஈர்க்க வேண்டும். தொடர்ந்து அரசியல் களத்தில் போராட வேண்டும். தி.மு.க., அ.தி.மு.க, பா.ஜ.க. போன்ற சக்தி வாய்ந்த கட்சிகளுக்கு நடுவில் சமாளிப்பது சாதாரணமான விஷயமல்ல. விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது அவருடன் பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றவர்கள் உடன் இருந்தார்கள். விஜயுடன் அதைப் போன்ற தலைவர்கள் இல்லாதது ஒரு பலவீனம்தான்,” என்கிறார் குபேந்திரன்.
எந்த சித்தாந்தத்தையும் முன்வைக்காமல் ஊழலை ஒழிக்கப் போகிறேன் என்று களமிறங்கினால், கமல்ஹாசனுக்கு என்ன நேர்ந்ததோ அதுதான் விஜய்க்கும் நடக்கும் என்கிறார் ஆழி செந்தில்நாதன்.
நடுநிலை உதவாது
பட மூலாதாரம், VIJAY / INSTAGRAM
ஒன்று பா.ஜ.கவை ஆதரிக்க வேண்டும். அல்லது முழுமையாக எதிர்த்து நிற்க வேண்டும்.
“இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகம் வேறு விதமாகப் போகப் போகிறது. இந்தச் சூழலில் பா.ஜ.க. மாதிரியான சக்தி வாய்ந்த கட்சியை கணக்கில் எடுத்துக்கொண்டுதான் செயல்பட வேண்டும். ஒன்று பா.ஜ.கவை ஆதரிக்க வேண்டும். அல்லது முழுமையாக எதிர்த்து நிற்கவேண்டும்.
இடையில் ஒரு சக்தியாக இருக்கிறேன் என்ற பேச்சே கிடையாது. இந்திய அரசியல் அடுத்த 10 – 15 ஆண்டுகளுக்கு இப்படித்தான் இருக்கும் எனத் தீர்மானிக்கப்பட்டு விட்டது. இந்தச் சூழலில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தங்கள் சித்தாந்தத்தை முன்வைத்து பா.ஜ.கவை கடுமையாக எதிர்த்து நிற்கின்றன.
அரவிந்த் கேஜ்ரிவால், மமதா பானர்ஜி போன்றவர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறுகிறார்கள். இந்தச் சூழலில் ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லி வாக்கு வாங்கவே முடியாது. அரசியல் சித்தாந்தம்தான் முக்கியம். கமலுக்கு, ரஜினிக்கு என்ன நடந்ததோ, அதுதான் விஜய்க்கும் நடக்கும்,” என்கிறார் செந்தில்நாதன்.
விஜய் 2026ஆம் ஆண்டில் களத்தில் இறங்கும்போது யார் வாக்குகளைப் பிரிப்பார் என்பது இப்போதைக்கு கேள்விக்குறிதான். குபேந்திரனை பொறுத்தவரை, எல்லாக் கட்சிகளிலும் உள்ள இளைஞர்களின் வாக்குகளைச் சற்றுப் பிரிக்கலாம் எனக் கருதுகிறார். செந்தில்நாதன், சீமானின் வாக்குகளை விஜய் சற்றுப் பிரிக்கலாம் எனக் கருதுகிறார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
