ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கரீபியன் தீவைச் சேர்ந்த பிரபலமான இசைக் கலைஞர்களுள் ஒருவர் பாப் மார்லி
பாப் மார்லியின் ஜடாமுடிக்கும் அவருடைய மதத்திற்கும் உள்ள தொடர்பு என்ன தெரியுமா?
கரீபியன் தீவைச் சேர்ந்த பிரபலமான இசைக் கலைஞர்களுள் ஒருவரான பாப் மார்லியின் ஜடாமுடி உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒன்று. ஆனால், அவர் பின்பற்றிய மதம் குறித்து உங்களுக்குத் தெரியுமா? அவர் ரஸ்தாஃபாரி எனும் மத இயக்கத்தைச் சேர்ந்தவர். 1930களில் ஜமைக்காவில் தோன்றிய ரஸ்தாஃபாரி, மதம் மற்றும் அரசியல் இயக்கமாகும்.
கிறிஸ்துவ மதத்துடன் மாயவாதம் மற்றும் ஆப்பிரிக்க அரசியல் நம்பிக்கைகளின் கலவையே இந்த இயக்கம். 1930-ம் ஆண்டில் எத்தியோப்பியாவின் மன்னராக ஹைலீ செலாஸீ முடிசூட்டியதையடுத்து இந்த மதம் வளர்ச்சி பெற்றது. தன்னை தெய்வீகமானவர் என்று பகிரங்கமாக கூறாத செலாஸீயை கிறிஸ்துவின் இரண்டாவது வருகை மற்றும் கடவுளின் அவதாரமாக ரஸ்தஃபாரிகள் பலரும் கருதுகின்றனர்.
மன்னராக முடிசூட்டுவதற்கு முன்பாக அவருடைய பெயரான ரஸ் தஃபாரி எனும் பெயரே இம்மதத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. இம்மதத்திற்கென முறையான நம்பிக்கைகள் இல்லை என்றாலும், பாரம்பரிய நம்பிக்கைகள் பல ஆண்டுகளாக மாறியுள்ளன. வெறுப்பை தவிர்த்து அனைத்து மனிதர்களையும் நேசித்தல், ஆன்மிக நோக்கத்திற்காக கஞ்சாவை புகைப்பது, இயற்கையையும் வாழ்க்கையையும் மதிப்பது உள்ளிட்டவை சில பொதுவான கோட்பாடுகளாக உள்ளன.
இம்மதத்தைச் சேர்ந்த பலரும் பாப் மார்லி போன்று ஜடா முடி வைத்துக்கொள்வது 1950-களில் மிகவும் பிரபலமான பழக்கமாக இருந்தது. ஜடாமுடி வைத்துக்கொள்வது ஆப்பிரிக்க அடையாளத்துடன் தொடர்புடைய ஆன்மிக மற்றும் குறியீட்டு அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது.
பாப் மார்லியின் உலகளாவிய வெற்றியின் விளைவாக, 1970களில் இருந்து ரஸ்தஃபாரி இயக்கம் பொதுவாக ரெக்கே இசையுடன் தொடர்புபடுத்தப்பட்டது. பாப் மார்லி இந்த மத நம்பிக்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவினார். அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளுக்கு அதனை பரப்ப உதவினார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்