பட மூலாதாரம், Getty Images
இதுபற்றிப் பேசும் பலரும் இதை ‘நண்பர்களுக்கு இடையிலான அரவணைப்பு’, ‘உணர்ச்சிகரமான பிணைப்பு’, ‘இரக்கம்’, ‘மற்றொருவருக்கு நல்லது செய்யும் விருப்பம்’ என்று பலவாறாகக் குறிப்பிடுகின்றனர்.
தென் கொரிய மக்கள் இந்த அத்தனை உணர்ச்சிகளும் சேர்ந்த ஒரு உணர்வை ‘ஜியோங்’ என்று அழைக்கின்றனர். இது 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக தென் கொரிய கலாசாரம் மற்றும் சமூகத்தின் ஒரு பகுதியாக உள்ளது.
நம்மில் பலரும் நிச்சயமாக இதேபோன்ற ஒன்றை உணர்ந்திருப்போம் — குறிப்பாக மேற்கத்திய கலாசாரம் சாராத, தொழில்வளம் மிக்க நுகர்வுக் கலாசாரத்தால் ஆட்கொள்ளப்படாதவர்கள்.
ஆனால் இந்த உணர்வை விவரிப்பது எளிதானதல்ல.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உளவியலாளரும், ‘மைண்ட் இன் மோஷன் சைக்காலஜிகல் தெரபி’ நிறுவனத்தின் இணை நிறுவனருமான மருத்துவர் ஜிஹீ சோ, இதுபற்றி பிபிசியுடன் பேசும்போது, இதை யாரும் வெளியிலிருந்து கற்றுக்கொள்வதில்லை என்றார்.
“இது நம்மில் வேரூன்றியிருக்கிறது. இது வாழ்ந்து பெறும் அனுபவத்திலிருந்து வருகிறது. இது உள்ளுணர்வு சார்ந்தது,” என்கிறார்.
மற்ற கலாசாரங்களிலும் ‘ஜியோங்’கை போன்ற அணுகுமுறைகள் உள்ளன என்றாலும், கொரியாவில் இது ஒரு கூட்டு சமூகப் பொறுப்பு என்ற அடிப்படையில் தனித்துவமாக இருக்கிறது.
ஜியோங் என்றால் என்ன?
தென் கொரிய கலாசாரம், விளையாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சகம் ‘ஜியோங்’கை ‘உணர்ச்சி மற்றும் உளவியல் ரீதியான பிணைப்பைப் பகிர்ந்து கொள்ளும் நபர்களிடையே உள்ள அன்பு, உறவு, இரக்கம் மற்றும் பிணைப்பு ஆகியவற்றின் கதகதப்பான உணர்வு’ என்று விவரிக்கிறது.
ஆனால், இது மக்களிடையே மட்டும் உருவாவதல்ல என்று மருத்துவர் சோ கூறுகிறார். “இது பொருட்கள், இடங்கள், செல்லப் பிராணிகளுடன்கூட ஒரு பிணைப்பாக இருக்கலாம். எதனுடனும் நீங்கள் ஒரு பிணைப்பை உருவாக்க முடியும்,” என்கிறார்.
ஜிஹீ சோ தென் கொரியாவில் பிறந்தவர். அங்கு அவர் தனது 13 வயது வரை வாழ்ந்தார். இவரது குடும்பத்தினர் 30 ஆண்டுகளாக அதே பகுதியில் வசித்து வந்தனர். அங்கு வாழ்ந்த குடும்பங்கள் மட்டுமின்றி, கடைகள், சலூன்கள் மற்றும் உணவகங்களின் உரிமையாளர்கள் அனைவரும் ஒருவரையொருவர் அறிந்திருந்தனர்.
“நான் எப்படி இருக்கிறேன், பள்ளியில் எப்படி இருக்கிறேன் என்று அவர்கள் என்னிடம் கேட்பார்கள். என் அம்மா வேலை செய்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு ஏதாவது தேவைப்பட்டால், பணம் வாங்காமல் கொடுத்தார்கள். என் பெற்றோர் பின்னர் பணம் செலுத்துவார்கள் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அதுவொரு பரிச்சய உணர்வு,” என்கிறார் ஜிஹீ சோ.
கொரிய கலாசாரத்தில், நெருக்கமாக இருப்பவர்களை ‘மாமா-அத்தை’ என்று அழைக்கிறார்கள். மேலும், அவர்கள் தங்கள் தாய்மார்களைக் குறிப்பிடும்போது அவர்கள் ‘என் அம்மா’ என்று சொல்லாமல், ‘எங்கள் அம்மா’ என்று சொல்வார்கள்.
அமெரிக்காவிற்கு சென்று, அங்கு அவர் படித்து, முனைவர் பட்டம் பெற்றார். பிறகு நியூயார்க்கில் தனது பயிற்சியைத் தொடங்கிய பிறகு, ஜிஹீ சோ ‘ஜியோங்’கை மறக்கவில்லை. குறிப்பாக, மக்கள் தனித்தனியாக வாழும் வாழும் நியூயார்க் போன்ற ஒரு பெரிய நகரத்தில்.
ஆரம்பத்திலிருந்தே அவர் இரண்டு அல்லது மூன்று குடும்பங்களுடன் நெருக்கமாக இருந்தார். அவர்கள் தேவாலயத்தில் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டார்கள். ஒன்றாக வேலைகளைச் செய்தனர். பெண்கள் ஒரே நேரத்தில் கருவுற்றதால் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
” எங்கள் பரஸ்பர அனுபவங்கள் மூலம் எங்களைப் பற்றியும் எங்கள் குடும்பத்தைப் பற்றியும் நிறைய தெரிந்து கொள்கிறோம்,” என்கிறார் சோ.
பட மூலாதாரம், Getty Images
‘ஜியோங்’ என்பது ‘உணர்ச்சி மற்றும் உளவியல் ரீதியான பிணைப்பைப் பகிர்ந்து கொள்ளும் நபர்களிடையே உள்ள அன்பு, உறவு, இரக்கம் மற்றும் பிணைப்பு ஆகியவற்றின் கதகதப்பான உணர்வு.
‘இது கருணைக்கும் மேல்’
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஜிஹீ சோவின் தந்தை கோவிட் பெருந்தொற்றின்போது மறைந்தார். அதனால் சோ அவசரமாக தென் கொரியாவுக்கு செல்ல வேண்டியிருந்தது. அவருடைய நண்பர்கள் ‘ஜியோங்’ அணுகுமுறையை வெளிப்படுத்திய ஒரு முக்கியமான தருணம் அது.
“விளக்கமே தேவையில்லாமல், அவர்கள் உடனடியாக உதவினர். எனது நண்பர்களில் ஒருவர் என் குழந்தைக்கு காலை உணவைத் தயாரித்தார், மற்றொரு குடும்பம் என் கணவருக்குத் தேவையான பொருட்களைக் கொண்டு வந்தது, வார இறுதி நாட்களில் அவருடன் இருக்க வீட்டுக்கு வந்தார்கள். ஜியோங்கிற்கு இது ஒரு எடுத்துக்காட்டு,” என்று அவர் கூறுகிறார்.
இது ஒரு எளிய கருணையாகவே பார்க்கப்படலாம். ஆனால் இது கடினமான காலங்களில் ஒருவருக்கு என்ன தேவை என்பதை உள்ளுணர்வாக அறிந்துகொள்வது என்கிறார் மருத்துவர் சோ. அது ஒரு நல்ல அண்டை வீட்டாராக இருப்பதற்கும் அப்பாற்பட்டது. அது மற்ற நபரைப் பற்றி உண்மையிலேயே அக்கறை கொள்வது, என்கிறார்.
“இது ஈடுபாடு, தொடர்ச்சியான உண்மையான தொடர்பில் இருப்பது, ஒருவரின் நல்வாழ்வைப் பற்றிய உண்மையான ஆர்வம் கொள்வது,” என்று அவர் கூறுகிறார்.
ஆனால் இது கடினமான தருணங்களில் மட்டும் வெளிப்படுத்தப்படுவதில்லை. இது அன்றாட வாழ்விலும், மகிழ்ச்சியான தருணங்களிலும் நிகழலாம், என்கிறார் அவர்.
“யாருக்காவது ஒரு நல்ல செய்தி வந்தால், நாங்கள் அனைவரும் அதற்காக மகிழ்ச்சியடைகிறோம்,” என்கிறார் சோ.
பட மூலாதாரம், Getty Images
ஆயிரக்கணக்கானோர் தங்கள் மோதிரங்கள், நெக்லஸ்கள், கைக்கடிகாரங்கள் மற்றும் பிற ஆபரணங்களை ஒப்படைக்க முன்வந்தனர்.
கூட்டு தியாகம்
‘ஜியோங்’கின் அடிப்படைக் கூட்டு வாழ்க்கை. குடும்பம், சமூகம், ஆகியவற்றைக் கடந்து, இதை பணியிடம் மற்றும் தேச அடையாளம் வரை நீட்டிக்க முடியும்.
மருத்துவர் சோ 1998இல் தென் கொரியாவில் நடந்த இரண்டு முக்கியமான நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.
அவற்றில் ஒன்று, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பில்லியன் கணக்கான டாலர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தை எதிர்கொண்டபோது அந்நாடு சந்தித்த ஆழ்ந்த நிதி நெருக்கடியின் போது நிகழ்ந்தது.
தென் கொரிய அரசாங்கம், கடனை அடைப்பதற்குப் போதுமான தங்கத்தைச் சேகரிக்க, குடிமக்களிடம் அவர்களது தங்கப் பொருட்களை நன்கொடையாக வழங்கும்படி ஒரு பெரிய ஊடக பிரசாரத்தைத் தொடங்கியது. ஆயிரக்கணக்கானோர் தங்கள் மோதிரங்கள், நெக்லஸ்கள், கைக்கடிகாரங்கள் மற்றும் பிற ஆபரணங்களை ஒப்படைக்க முன்வந்தனர்.
“யார் இப்படிச் செய்வார்கள்? தங்கள் சொந்த உடைமையான தங்கத்தை ஏன் தானம் செய்வார்கள்? ஆனால் அது ஒரு சிறந்த தருணம். அது தேசிய தியாகத்தின் ஒரு இயக்கம். இதன் மூலம் தென் கொரியாவால் பொருளாதாரச் சிக்கலைக் கடக்க முடிந்தது,” என்கிறார் அவர்.
அதேபோல், பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ‘தேசிய ஜியோங்’ மற்றொரு தருணத்தில் நிழந்தது. அது சியோல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முயன்றபோது நடந்தது. தென் கொரியர்கள் அந்த இலக்கை அடைய நிறைய உற்பத்தி செய்யக் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.
“ஆனால் அது நாட்டின் அரசாங்கத்தினுடைய குறிக்கோள் மட்டுமல்ல, மக்கள் அனைவரின் இலக்காகவும் இருந்தது. அவர்கள் நாட்டின்மீது அவர்களுக்கு இருந்த பற்றைக் காட்டினர்,” என்கிறார் மருத்துவர் சோ.
பட மூலாதாரம், Getty Images
சியோல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முயன்றபோது தென் கொரியர்கள் அந்த இலக்கை அடைய நிறைய உற்பத்தி செய்யக் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.
மாறி வரும் தென் கொரியா
இந்தப் பண்டைய பாரம்பரியம் இருந்தபோதிலும், நவீன தென் கொரியா மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த சமூகமாக மாறியுள்ளது. அதன் குடிமக்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், சிறந்த கல்வித் தகுதிகள் மற்றும் சிறந்த வேலைகளை அடையவும் தொடர்ந்து அழுத்தத்தில் வாழ்கின்றனர்.
இதன் விளைவாக, மக்கள் மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மைக்கு ஆளாகின்றனர். இது போதைப்பொருளுக்கு அடிமையாதல் மற்றும் தற்கொலைக்கு வழிவகுக்கிறது, என்கிறார் சோ.
“காலப்போக்கில் தென் கொரியாவிலும் தனிமனிதவாதம் அதிகரித்து வருகிறது,” என்று மருத்துவர் சோ கூறுகிறார்.
“முந்தைய காலங்களில் கூட்டுப் போக்கு அதிகமாக இருந்தது. இப்போது உலகமயமாக்கல், இணையம் போன்றவற்றால் நாம் சுயநலவாதிகளாக மாறிக்கொண்டிருக்கிறோம்,” என்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
பெருநகரங்களில் மக்கள் மிகவும் தனிமைப்பட்டுப் போகலாம். அவர்கள் தங்கள் குமிழியை விட்டு வெளியேறவில்லை என்றால், உறவுகளை உருவாக்குவதும் பராமரிப்பதும் மிகவும் கடினமாகிவிடும்.
பெரிநகரங்களின் தனிமையைச் சரி செய்யும் வழி
ஜிஹீ சோ மனச்சோர்வு, பதற்றம் மற்றும் தனிப்பட்ட உறவுச் சிக்கல்கள் சார்ந்த விஷயங்களில் நிபுணத்துவம் பெற்றவர். அவரது அலுவலகம் இருக்கும் நியூயார்க்கில் நகரத்தின் மக்கள் சந்திக்கும் உளவியல் சிக்கல்கள் இவை.
பெருநகரங்களில் மக்கள் மிகவும் தனிமைப்பட்டுப் போகலாம். அவர்கள் தங்கள் குமிழியை விட்டு வெளியேறவில்லை என்றால், உறவுகளை உருவாக்குவதும் பராமரிப்பதும் மிகவும் கடினமாகிவிடும் என்று அவர் கூறுகிறார். தன்னிடம் வரும் நோயாளிகளில் பலர் மனச்சோர்வடைந்து இருப்பர், அல்லது தஙகள் சுயத்தை மட்டுமே சார்ந்து இருப்பர், என்கிறார். அப்போதுதான் அவர் ஜியோங் முறையைப் பயன்படுத்துகிறார்.
“ஒரு சிகிச்சையாளராக எனது வேலை அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று போதிப்பதல்ல. ஆனால் அவர்களால் என்ன செய்ய முடியும் என்பதற்கான தொடக்கப் புள்ளியைக் கண்டறிய அவர்களுக்கு வழிகாட்டுவது,” என்று அவர் விளக்குகிறார்.
“அவர்கள் சமூக வட்டங்களை எவ்வாறு உருவாக்குவது, ஒத்த எண்ணம் கொண்டவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது மற்றும் உறவுகளை எப்படி வளர்ப்பது பற்றி நாங்கள் பேசுவோம்,” என்கிறார்.
ஜியோங்கை செயல்படுத்துவது ஒரு சிறிய தொடக்கம்தான். உண்மையில், நீங்கள் எதையும் எதிர்பார்க்காமல் பகிர்ந்து கொள்ள வேண்டும், அதைப் பயிற்சி செய்வதற்கான வாய்ப்பை இழக்கக் கூடாது.
“எனவே அதற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், அடுத்த நபரைப் பற்றித் தெரிந்துகொள்ள முயலுங்கள், மதிய உணவிற்கு அவர்களுடன் வெளியே செல்லுங்கள், அடுத்த நாள் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டு குறுஞ்செய்தி அனுப்புங்கள், அவர்கள் மீண்டும் சந்திக்க விரும்புகிறீர்களா என்று அறிந்துகொள்ளுங்கள்,” என்று அவர் தனது நோயாளிகளுக்கு அறிவுறுத்துவதாக ஜிஹீ சோ கூறூகிறார்.
‘சமநிலை முக்கியம்’
ஜியோங்கை பெறுபவர்களைவிட தருபவர்களே அதிக நன்மையடைகிறார்கள் என்று கூறும் சோ, அது பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று எச்சரிக்கிறார். ஒருதலைபட்சமான ஜியோங் உறவை சேதப்படுத்தும்.
“அதிகமாக ஜியோங்கை பெறும் நபர் திக்குமுக்காடிப் போகலாம். நீங்கள் பகிரும் நபருடன் ஒரு சமநிலை இருக்க வேண்டும். இதை அறிவியல் ரீதியாக அளவிட முடியாது என்றாலும், தென் கொரிய மொழியில் கருத்துக்கு மதிப்பு அளிக்கும் பல வெளிப்பாடுகள் உள்ளன,” என்கிறார் அவர்.
“உங்களிடம் ஜியோங் இல்லை என்றால், நீங்கள் மற்றவரைப் பாராட்டவில்லை, என்று அர்த்தம். நீங்கள் ஒரு உறவைத் தொடங்கும்போது ஜியோங்கை ‘விதைக்கிறீர்கள்’, ஆனால் அது தடுமாறத் தொடங்கினால், நீங்கள் ஜியோங்கைக் கைவிடுகிறீர்கள்,” என்கிறார் அவர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
