
கோவை அருகே, முஸ்லிம் மாணவியை வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் ஆசிரியர்கள் திட்டி தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அந்த மாணவியின் பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர்.
கோவை துடியலூர் அருகே அசோகபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி ஆயிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நவம்பர் 21ம் தேதி பெற்றோருடன் சென்று, கோவை மாவட்ட கல்வி அலுவலரிடம் தனக்கு ஆசிரியர்கள் தொல்லை கொடுப்பதாகவும், தந்தையின் தொழிலை மையப்படுத்தி தன்னை திட்டி, அடித்ததாகவும் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில், நவம்பர் 22ம் தேதி பள்ளிக்கு சென்ற மாவட்ட கல்வி அலுவலர் பாலமுரளி மற்றும் துடியலூர் போலீஸார், மாணவியிடமும் ஆசிரியர்களிடமும் விசாரணையை துவங்கியுள்ளனர்.
முஸ்லிம் மாணவியிடம் ஆசிரியை வெறுப்புப் பேச்சு
புகார் குறித்தும், அதிகாரிகளின் விசாரணை குறித்தும் பிபிசி தமிழிடம் பேசிய மாணவியின் தந்தை முக்தார், ’’எனது ஒரே மகள் ஆயிஷா அசோகபுரம் அரசுப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார், நான் மாட்டுக்கறி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறேன்.
கடந்த இரண்டு மாதங்களாகவே, பள்ளியில் பாடம் நடத்தும் தற்காலிக ஆசிரியர் அபிநயா, ஆயிஷாவை திட்டி அடித்து வந்துள்ளார். கடந்த வாரம் ஆசிரியர் அபிநயா ஆயிஷாவை அடித்ததுடன், அப்பா என்ன வேலை செய்கிறார் என்று கேட்டுள்ளார். அதற்கு ஆயிஷா ஃபீப் ஸ்டால் வைத்திருக்கிறார் என்று கூறியதும், என் தொழிலை சுட்டிக்காட்டியே ஆயிஷாவை திட்டியுள்ளார். ஆங்கில ஆசிரியர் ராஜ்குமாரும் ஆயிஷாவை திட்டியுள்ளார்.
பள்ளியில் நடந்ததை ஆயிஷா என்னிடம் தெரிவித்தபோது, தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரியை சந்தித்து புகார் தெரிவித்திருந்தேன். ஆனால் எங்கள் புகார் மீது தலைமை ஆசிரியர் எந்த நடவடிக்கை எடுக்காமல் விட்டதால், துடியலூர் போலீஸ் ஸ்டேஷனிலும் தகவல் தெரிவித்திருந்தேன்.
நவம்பர் 16ம் தேதி பள்ளிக்கு எங்களை அழைத்த போலீஸார், ஆசிரியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி இனி தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கி, இனி பிரச்சினை இருக்காது என்று எங்களிடம் உறுதியளித்தனர். நாங்களும் அதை நம்பி ஆயிஷாவை பள்ளிக்கு அனுப்பினோம்,’’ என்றார்.

‘ஷூக்களை சுத்தம் செய்ய வைத்த மாணவிகள்‘
மேலும் தொடர்ந்த முக்தார், ‘‘ஆனால் இந்த வாரம் பள்ளிக்கு சென்ற ஆயிஷாவை, ‘என் மீதே புகார் கொடுக்குறியா’ என்று கூறி ஆசிரியை அபிநயா மீண்டும் திட்டியுள்ளார். தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி காலை நேர பள்ளி மாணவர் கூடுகையில் (Prayer) ‘7ம் வகுப்பு முஸ்லிம் மாணவி ஒருவர் புகார் கொடுத்து அட்டகாசம் செய்கிறார், இது போன்று யார் வந்தாலும் டி.சி. (மாற்றுச் சான்றிதழ்) கொடுத்து அனுப்பி விடுவேன்,’ என்று எச்சரித்துள்ளார்.
ஆசிரியர்களின் இதுபோன்ற செயல்களால் என் மகளை சக மாணவிகள் வேறுமாதிரி பிரித்து பார்ப்பதுடன், புர்காவை கழற்றி ஷூக்களை (காலணிகளை) சுத்தம் செய்ய வைத்துள்ளனர். சக மாணவிகளின் மனநிலை இப்படி மாறுவதற்கு ஆசிரியர்கள் தான் காரணம், இந்தச் சம்பவங்களால் என் மகள் கடும் மன உளைச்சலில் இருக்கிறார்,’’ என்றார் மாணவியின் தந்தை முக்தார்.
விசாரணையில் அதிகாரிகள் சொன்னது என்ன? என்பது குறித்து விளக்குகிறார் மாணவியின் தந்தை முக்தார்.
‘‘இன்று (நவம்பர் 22ம் தேதி) நான், என் மனைவி மற்றும் மகள் ஆயிஷாவை பள்ளிக்கு மாவட்ட கல்வி அலுவலர் விசாரணைக்காக அழைத்திருந்தார்கள். நாங்கள் பள்ளிக்குச் சென்று மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் போலீஸார் முன்னிலையில், நடந்ததைக் கூறியுள்ளோம். தற்காலிக ஆசிரியை அபிநயா, ஆங்கில ஆசிரியர் ராஜ்குமார் மற்றும் தலைமை ஆசிரியர் மீது புகார் தெரிவித்துள்ளோம், என் மகள் ஆயிஷாவிடம் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளனர், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். எங்கள் புகார் மீது விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும்,’’ என்றார் அவர் விரிவாக.

பள்ளி தலைமை ஆசிரியர் விளக்கம்
மாணவியின் பெற்றோர் சொன்ன புகார்கள் குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரியிடமே விளக்கம் கேட்டது பிபிசி தமிழ்.
நம்மிடம் பேசிய தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி, ‘‘மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தி வரும் நிலையில் இதுகுறித்து நான் பேசுவது நன்றாக இருக்காது. இருந்தாலும் உங்களிடம் உண்மையைச் சொல்கிறேன். மாணவி மற்றும் அவரது பெற்றோர் கூறுவதைப் போன்று எந்த ஒரு சம்பவமும் பள்ளியில் நடக்கவில்லை, அவர்களின் புகாரில் 1 சதவீதம் கூட உண்மையில்லை. மாவட்ட கல்வி அலுவலர் விசாரிக்கிறார், விசாரணை முடிந்து உண்மை என்ன என்பது அனைவருக்கும் தெரியவரும்,’’ என்றார் சுருக்கமாக.
விசாரணை தொடர்பாக விளக்கம் கேட்க, கோவை மாவட்ட கல்வி அலுவலர் பாலமுரளியை பலமுறை பிபிசி தமிழ் போனில் தொடர்பு கொண்டது. ஆனால், அவர் அழைப்பை ஏற்கவில்லை. அவர் பிபிசி தமிழுக்கு விளக்கமளித்தவுடன் இந்தச் செய்தியில் அந்த விவரம் சேர்க்கப்படும்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
