பட மூலாதாரம், TNDIPR
தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கிவைத்தார்.
அண்ணா பிறந்தநாளை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில் பெண்கள் 13 பேருக்கு ஏடிஎம் கார்டு போன்ற அட்டையை முதலமைச்சர் வழங்கினார்.
“நிதிநிலை சரியில்லாத காரணத்தினாலேயே ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை” என்று ஸ்டாலின் பேசினார்.
தனது தாய் தயாளு அம்மாள், மனைவி துர்கா உள்ளிட்டோரையும் குறிப்பிட்டு முதலமைச்சர் பேசினார்.
மகளிர் உரிமைத் தொகை தருவதாகக் கூறி செல்போன்களுக்கு குறுஞ் செய்திகள் மூலம் ஏமாற்றுபவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
2 கட்ட முகாம்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 1.63 கோடி பேர் இதற்காக விண்ணப்பித்திருந்தனர். அதில் இருந்து 1.06 கோடி பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
மகளிர் உரிமைத் திட்டத்தை வரவேற்கும் விதமாக மாநிலத்தின் பலபகுதிகளில் பெண்கள் கோலங்களை வரைந்திருந்தனர்.

ரூ.1,000 உரிமைத் தொகையைப் பெற அரசு நிர்ணயித்த தகுதிகள் என்னென்ன?
கீழ்காணும் தகுதியின் அடிப்படையில் உரிமைத் தொகை வழங்குவதற்கான பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
- குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் எனப் பெயரிடப்பட்ட பெண்
- ஆண் குடும்பத் தலைவராக குறிப்பிடப்பட்டிருந்தால் அவரது மனைவி
- திருமணமாகாத பெண், கைம்பெண், திருநங்கை தலைமையில் குடும்பம் இருந்தால் அவர்களும் குடும்ப தலைவியாகக் கருதப்படுவர்.
- ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால் ஒருவர் மட்டும் தேர்வாவார்.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?
மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் தமிழ்நாடு அரசின் புள்ளி விவரங்களின்படி சுமார் 60 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன்.
அப்படி ஒருவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் அவர் தனது விண்ணப்பத்தில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்து மேல்முறையீடு செய்யலாம்.
விண்ணப்பத்தின் முடிவு என்னவாயிற்று என்பது குறித்து, விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் 18ஆம் தேதி முதல் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை என்றால் அதற்கான காரணங்களை அந்தக் குறுஞ்செய்தியில் உள்ள தொலைபேசி எண் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பட மூலாதாரம், Getty Images
நிராகரிப்பு காரணம் பற்றிய பயனாளிகள் தரப்பு விளக்கத்தை, மேல்முறையீடாக தாக்கல் செய்யலாம். ஒருவேளை விண்ணப்பத்தில் குறைகள் இருந்தால், அவற்றை நிவர்த்தி செய்ய அவர்கள் மேல்முறையீடு செய்யலாம்.
குறுஞ்செய்தி கிடைக்கப் பெற்ற நாட்களில் இருந்து மேல்முறையீட்டு விண்ணப்பங்களைப் பெற 30 நாட்கள் கால அவகாசம் இருக்கிறது.
தனி நபர்கள் மூலம் பெறும் புகார்களுக்கு வருவாய் கோட்டாட்சியரே விசாரணை அலுவலராகச் செயல்படுவார்.
நேரில் செல்ல இயலாதவர்கள் இ-சேவை மையம் மூலமும் மேல்முறையீடு செய்யலாம். அதற்கும் 30 நாட்கள்தான் அவகாசம் உள்ளது. இணையம் மூலம் பெறப்பட்ட மேல்முறையீடுகள் அரசு தகவல் தரவுகளோடு ஒப்பிடப்பட்டு மீண்டும் சரிபார்க்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும்.
பட மூலாதாரம், MK STALIN
யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது?
ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் பின்வருவனவற்றில் ஏதேனும் ஒரு காரணம் பொருந்துவதாக இருந்தால் உரிமைத் தொகை நிராகரிக்கப்படலாம்.
- ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்ப உறுப்பினர்கள் இருந்தால் அந்தக் குடும்பத்தில் பெண்களுக்கு உரிமைத் தொகை கிடையாது.
- ரூ. 2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டி வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்கள்/ வருமான வரி செலுத்துபவர்கள்
- ஐந்து ஏக்கருக்கும் அதிகமாக நன்செய் அல்லது 10 ஏக்கருக்கும் அதிகமான புன்செய் நிலம் வைத்திருப்போர்.
- ஆண்டுக்கு வீட்டு உபயோகத்திற்கு 3,600 யூனிட் மின்சாரத்தைவிட அதிகமாகப் பயன்படுத்தும் குடும்பங்கள்
- மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் ஊழியர்கள்
- வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள்
- ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்
- நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள்
- மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள்
- ஊராட்சி மன்ற தலைவர்கள். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்
- சொந்த பயன்பாட்டிற்காக கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற வாகனங்களை வைத்திருப்பவர்கள்
- ஆண்டுக்கு ரூ.50 லட்சத்திற்கும் மேல் விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்
- ஏற்கெனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் பெறுவோர்
- சமூகப் பாதுகாப்பு திட்ட ஓய்வூதியமும், அரசிடமிருந்து ஓய்வூதியமும் பெறும் குடும்பங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
