கோவை: பிரதமர் நரேந்திர மோதியின் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்த விவகாரத்தில் நீதிமன்றம் என்ன சொன்னது?

கோவை: பிரதமர் நரேந்திர மோதியின் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்த விவகாரத்தில் நீதிமன்றம் என்ன சொன்னது?

கோவையில் பிரதமர் நரேந்திர மோதி வாகன பேரணி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

பட மூலாதாரம், Getty Images

வரும் 18-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி கோவை நகரில் வாகனப் பேரணி நடத்த பா.ஜ.க-வினர் அனுமதி கேட்டிருந்த நிலையில், கோவை காவல்துறையினர் பாதுகாப்புக் காரணங்களை காரணம் காட்டி அனுமதி மறுத்திருந்தனர். இதனால் பா.ஜ.க-வினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். அதனை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம், பிரதமர் மோதியின் பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கிறது.

என்ன நடந்தது இச்சம்பவத்தில்?

இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி, நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது அரசியல் பரப்புரையை துவங்கியுள்ளன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும், தனது பரப்புரையின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டிற்கு அவ்வப்போது வந்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

இன்று (வெள்ளி, மார்ச் 14) மதியம் கன்னியாகுமரியில் நடந்த பாஜகவின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

அடுத்ததாக, கோயம்புத்தூருக்கு வரும் மார்ச் 18-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

அன்றைய தினம் பிரதமர் மோதியை வைத்து வாகனப் பேரணி நடத்த பாஜக-வினர் திட்டமிட்டிருந்தனர். இதற்காக அனுமதி கோரி கோவை மாநகர காவல்துறைக்கு பாஜக சார்பாக விண்ணப்பம் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக பேரணி நடத்த கோவை காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் பிரதமர் நரேந்திர மோதியின் பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கிறது.

ஜனவரி முதல் தமிழ்நாட்டிற்கு 4 முறை வந்துள்ள பிரதமர் மோதி

கோவையில் பிரதமர் நரேந்திர மோதி வாகன பேரணி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

பட மூலாதாரம், Getty Images

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோதி இந்தியாவின் பல மாநிலங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, ‘ரோடு ஷோ’ எனப்படும் வாகனப் பேரணி நடத்தி மக்களைச் சந்தித்து வருகிறார்.

அந்த வகையில், கடந்த ஜனவரி முதல் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பிரதமர் மோதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

அண்மையில் பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் நிறைவு விழாவுக்காக பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார்.

இதன் நிறைவு விழா திருப்பூர் அடுத்த பல்லடம் பகுதியில் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி நடந்த போது அதில் பிரதமர் மோதி பங்கேற்றுப் பேசியிருந்தார். இன்று கன்னியாகுமரியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று உரையாற்றினார்.

இந்த ஆண்டில் மட்டும், ஜனவரி முதல் இதுவரையில் நான்கு முறை பிரதமர் தமிழ்நாடு வந்துள்ள நிலையில், மார்ச் 18-ஆம் தேதி திங்கட்கிழமை கோவை மாநகரில் பிரதமர் வாகன பேரணி நடத்த பா.ஜ.க-வினர் திட்டமிட்டிருந்தனர்.

கோவை நகரின் சாய்பாபா காலனியில் துவங்கி, வடகோவை, சிந்தாமணி, காமராஜபுரம், ஆர்.எஸ்.புரம் பகுதி வரை, 4கி.மீ. தூரத்திற்கு பிரதமர் மோதி வாகன பேரணியாக செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்கு அனுமதி கேட்டு, கோவை பா.ஜ.க மாவட்டத்தலைவர் ரமேஷ்குமார், கோவை மாநகர ஆணையாளரிடம் அனுமதி கேட்டிருந்தார்.

பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு

கோவையில் பிரதமர் நரேந்திர மோதி வாகன பேரணி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

இப்படியான நிலையில், பாதுகாப்புக் காரணங்களுக்காக பிரதமர் நரேந்திர மோதி பேரணி நடத்த, கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அனுமதி மறுத்திருந்தார்.

வாகனப் பேரணிக்கு தடை விதித்ததற்கான காரணங்களை முன்வைத்து நேற்று, பா.ஜ.க மாவட்ட தலைவர் ரமேஷ்குமாருக்கு அவர் கடிதமும் அனுப்பியுள்ளார்.

அனுமதி மறுத்து கடிதம் அனுப்பப்பட்ட நிலையில், இன்று பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் சிறப்பு பாதுகாப்புக்குழு (SPG) அதிகாரிகள், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாட்டீல் உடன் ஆலோசனை நடத்தினர்.

காவல்துறை அனுமதி மறுத்தது ஏன்?

கோவையில் பிரதமர் நரேந்திர மோதி வாகன பேரணி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

கோவை மாநகரின் ஆர்.எஸ்.புரம் பகுதி பல்வேறு மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள், சந்தைகள் அடங்கிய பகுதியாக உள்ளது. இதனால், இப்பகுதி போக்குவரத்து மிகுந்த பகுதியாக உள்ளது. இங்கு பிரதமரின் பேரணிக்கு அனுமதி அளித்தால் மக்களின் அன்றாட பணிகள், வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படும் என்று காவல்துறை விளக்கம் அளித்திருந்தது.

இதுதொடர்பாக காவல்துறை அளித்துள்ள விரிவான விளக்கத்தில் பின்வரும் காரணங்களை சுட்டிக் காட்டி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

  • கோவை மாநகர் முழுவதிலும், 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. பொதுத்தேர்வு நடக்கும் 18-ஆம் தேதி வாகன பேரணி அனுமதிக்கப்பட்டால், மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும்.
  • பிரதமர் மோதி பாதுகாப்பு தொடர்பான தகவல்கள், மத்திய மற்றும் மாநில நுண்ணறிவுப்பிரிவு வாயிலாக பெறப்பட்டு வருகிறது. இந்த தகவல்களின் அடிப்படையில், பிரதமருக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மத மற்றும் பிற தீவிரவாத அமைப்புகளால் மிகுந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுக்கூட்டம் போன்ற நிகழ்ச்சி நடத்தினால், நிகழ்ச்சிக்கு வரும் ஒவ்வொருவரையும் கண்காணிக்க முடியும். 4 கி.மீ. தொலைவுக்கு பேரணி நடத்தப்படும் நிலையில், இருபுறமும் கூடுவோர் கைகளில் அபாயகரமான பொருட்கள் இருப்பதை ஒவ்வொருவராக கண்காணிப்பது மிகவும் கடினமானது.
  • கோவை மாநகரானது மத ரீதியில் உணர்வு மிக்க நகரமாக இருக்கிறது. மத பிரச்சினைகள் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளால் கோவை நகரம் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமையின் கண்காணிப்பில் உள்ளது.
  • மேலும், இதுவரையில் கோவை மாநகரில் எந்த ஒரு அரசியல் மற்றும் அரசியல் சாராத தலைவருக்கும் சாலை மார்க்கமாக பேரணி நடத்தி மக்களை சந்திக்கும் நிகழ்விற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த காரணங்களால் பிரதமர் மோதியின் வாகன பேரணிக்கு அனுமதி மறுக்கப்படுவதாக, கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

காவல்துறையின் இந்த உத்தரவை எதிர்த்து, கோவை மாவட்ட பாஜக தலைவர் ரமேஷ் குமார், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார்.

நீதிமன்றத்தில் முறையீடு

கோவையில் பிரதமர் நரேந்திர மோதி வாகன பேரணி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

பட மூலாதாரம், Getty Images

அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜகவின் கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார், மார்ச் 18-ஆம் தேதி கோவையில் பிரதமர் மோதி பேரணி நடத்த அனுமதி கேட்டு கோவை மாவட்ட பாஜக சார்பில் மனு கொடுத்திருந்தோம். ஆனால், காவல்துறையினர் இத்ற்கு அனுமதி மறுத்துள்ளனர் என்று தெரிவித்தார்.

“சர்ச்சைக்குரிய இடமாக இருந்துவரும் காஷ்மீரில் பிரதமரின் பேரணி அண்மையில் நடந்துள்ளது. ஆனால், அமைதிப்பூங்கா என அழைக்கப்படும் தமிழ்நாட்டில் பேரணி நடத்த அனுமதி மறுக்கப்படுவது வருத்தமளிக்கிறது,” என்றார்.

காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், ரமேஷ் குமார் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பேரணிக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடரப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் அமர்வின் முன்பாக இதை அவரச வழக்காக எடுத்து விசாரிக்குமாறு ரமேஷ் குமார் தரப்பில் கோரப்பட்டது.

அனுமதி வழங்கிய நீதிமன்றம்

பிரதமர் மோதியின் வாகனப் பேரணிக்கு கோவை மாநகர காவல்துறை அனுமதி மறுத்த விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மாலை நடந்த விசாரணைக்கு பிறகு 18-ஆம் தேதி வாகனப் பேரணி நடத்த அனுமதி வழங்கி நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பிரதமர் மோதி பங்கேற்கும் பேரணியின் தூரம், வழித்தடத்தை காவல்துறை முடிவு செய்து கொள்ளலாம் என அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.

பா.ஜ.க-வைச் சேர்ந்த ரமேஷ் குமார் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், “4.கி.மீ. தூரத்திற்கு பேரணி திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் காவல்துறை அனுமதி பெற்று இது போன்று பல பேரணி நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது,” என்று வாதிட்டார்.

காவல்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், பாதுகாப்பு காரணங்கள் மற்றும் பொதுத்தேர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறினார். மேலும், இது போன்ற பேரணிகளுக்கு எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை எனவும் தெரிவித்தார்.

அனுமதி அளிப்பதில் என்ன பிரச்னை என கேள்வி எழுப்பிய நீதிபதி பாதுகாப்பு விவகாரத்தை பிரதமரின், சிறப்பு பாதுகாப்பு படை கவனித்துக்கொள்ளும் எனவும், பாதுகாப்பு குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் பேரணிக்கு அவர்கள் எப்படி ஒப்புதல் அளித்திருப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.

அதைத் தொடர்ந்து, வரும் 18-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி வாகன பேரணி நடத்த அனுமதி வழங்கி நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் உத்தரவிட்டார். பேரணி செல்லும் வழி, தூரம் மற்றும் நேரம் ஆகியவற்றை காவல்துறை முடிவு செய்து கொள்ளலாம் என்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கல்வீச்சு

கோவையில் பிரதமர் நரேந்திர மோதி வாகன பேரணி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

பட மூலாதாரம், UGC

2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்காக பா.ஜ.க தலைவரும், உத்தர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சருமான யோகி ஆதித்யநாத் கோயம்புத்தூருக்கு வந்திருந்தார்.

அங்கு கோவை தெற்கு தொகுதியில், பா.ஜ.க வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட போது பேரணியில் கலந்து கொண்டவர்கள் அங்கிருந்த கடைகளின் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுப்பட்டனர்.

யோகி ஆதித்யநாத் பரப்புரையின் போது இருசக்கர வாகனப் பேரணியில் வந்த வாகனங்களில் வந்த அவரது ஆதரவாளர்கள் சிலர் அந்த பகுதியில் திறந்திருந்த கடைகளை மூட வலியுறுத்தி கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது அப்போது சர்ச்சையானது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *