ஜியோர்ஜியா மெலோனி: சீனாவுக்கு எதிராக இத்தாலி பிரதமர் எடுத்த முக்கிய முடிவு இந்தியாவுக்கு சாதகமாக மாறியது எப்படி?

ஜியோர்ஜியா மெலோனி: சீனாவுக்கு எதிராக இத்தாலி பிரதமர் எடுத்த முக்கிய முடிவு இந்தியாவுக்கு சாதகமாக மாறியது எப்படி?

இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி

பட மூலாதாரம், Getty Images

சீனாவின் பட்டை மற்றும் பாதை முன்னெடுப்பு திட்டத்தில் (Belt and Road Initiative – BRI) இருந்து விலகுவதாக இத்தாலி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தாண்டு இறுதிக்குள் இந்தத் திட்டத்தில் இருந்து இத்தாலி வெளிவரும் என்று பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் நிர்வாகம் சீனாவுக்குத் தெரிவித்துள்ளது.

சமீபத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற COP-28 எனப்படும் காலநிலை உச்சி மாநாட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஜார்ஜியா மெலோனி உட்பட பல தலைவர்களை சந்தித்தார்..

பிரதமர் மோதியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட மெலோனி, நரேந்திர மோதியை ‘நல்ல நண்பர்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

சீனாவின் லட்சியத் திட்டமான பிஆர்ஐ-இல் 2019-ஆம் ஆண்டு கையெழுத்திட்ட ஒரே பெரிய மேற்கத்திய நாடு இத்தாலி மட்டுமே.

அப்போது அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் பல மேற்கத்திய நாடுகள் இத்தாலியை விமர்சித்தன.

இந்தத் திட்டத்தின் மூலம் சீனா பிற நாடுகளை ‘கடன் வலையில்’ சிக்க வைத்து, தனது சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்துகிறது என்று அமெரிக்கா கூறுகிறது.

ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், REUTERS

இந்த முடிவு இந்தியாவுக்கு சாதகமாக இருக்குமா?

பிஆர்ஐ திட்டத்தில் இருந்து இத்தாலி வெளியேறியது இந்தியாவுக்கு சாதகமான செய்தியாக பார்க்கப்படுகிறது. இந்தியா எப்போதும் பிஆர்ஐ-க்கு எதிராகத் தான் இருந்துள்ளது. இந்த திட்டத்தில் பாகிஸ்தானும் பங்கெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா- பாகிஸ்தான் பொருளாதார பாதை அதாவது சிபிஇசி(CPEC) என்பது பி.ஆர்.ஐ-இன் ஒரு பகுதியாகும். சிபிஇசி-இன் கீழ் பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் பல கட்டுமானங்கள் காஷ்மீரிலும் நடந்துள்ளன. இது தனது இறையாண்மையை மீறும் செயல் என இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், பிஆர்ஐ-யில் இருந்து இத்தாலி வெளியேறியிருப்பது இந்தியாவுக்கு சாதகமான ஒன்று தான்.

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா வழித்தடமானது சீனாவின் பிஆர்ஐ-க்கு பதிலடியாக கருதப்படுகிறது. இந்தாண்டு செப்டம்பரில் டெல்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டில் இந்த திட்டத்திற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.

இதில் இந்தியா, இஸ்ரேல், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டான் ஆகியவை அடங்கும். ஆனால், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் காரணமாக இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா வழிப்பாதை குறித்து கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், GETTY IMAGES

சீனாவுடன் இத்தாலி கைகோர்த்தபோது நடந்தது என்ன?

இந்த ஒப்பந்தத்தைப் பொறுத்தவரையில் மார்ச் 2024-இல் காலாவதியாகும், பின்னர் தானாகவே புதுப்பிக்கப்படும். இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த விரும்பவில்லை என்று ஒரு தரப்பினர் மற்றவருக்குக் குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும், இப்போது இத்தாலி அத்தகைய தகவலை சீனாவிடம் தெரிவித்துள்ளது.

பிஆர்ஐ திட்டத்தில் இத்தாலியை இணைத்தது முந்தைய அரசாங்கம் செய்த மிகக் கடுமையான தவறு என பிரதமர் மெலோனி விவரித்திருந்தார். இந்த திட்டத்தில் இருந்து விலகத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

2019-ஆம் ஆண்டில், அப்போதைய இத்தாலியின் பிரதமர் கியூசெப் கோன்டே சீனாவுடன் பிஆர்ஐ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இத்தாலியின் நிதியமைச்சர் ஜியோவானி ட்ரியா 2018-இல் சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட பின்னர், அந்த திட்டத்தில் சேருவது என இத்தாலி முடிவு செய்திருந்தது.

பிஆர்ஐ ஒப்பந்தத்தில் இருந்து விலகினாலும் கூட சீனாவுடனான நல்லுறவை பேண விரும்புவதாக மெலோனி அரசு கூறியுள்ளது.

ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், GETTY IMAGES

சீனா- இத்தாலி இடையேயான வர்த்தகத்தில் முன்னேற்றம்

பிஆர்ஐ திட்டத்தின் கீழ், சீனா இத்தாலிக்குள் 20 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான திட்டத்தைத் தொடங்கியது. இருப்பினும், அந்த திட்டத்தின் ஒரு சிறிய பகுதி மட்டுமே இதுவரை முடிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி கடந்த ஆண்டு சீனாவுக்கு 16.4 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான பொருட்களை அனுப்பியுள்ளது. 2019-ஆம் ஆண்டில் இந்த ஏற்றுமதி 13 பில்லியன் யூரோவாக இருந்தது.

இதற்கு மாறாக, சீனாவின் ஏற்றுமதி 31.7 பில்லியன் யூரோக்களிலிருந்து 57.3 பில்லியன் யூரோக்களாக அதிகரித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டு பெரிய பொருளாதார சக்திகளான பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி, பிஆர்ஐ-இல் உறுப்பினர்களாக இல்லாவிட்டாலும் கூட சீனாவுடன் மிகப்பெரிய அளவில் வர்த்தகம் செய்கின்றன.

கடந்த ஆண்டு பிரதமராக பதவியேற்றதில் இருந்து, முந்தைய இத்தாலி பிரதமரை விட அதிக மேற்கத்திய சார்பு செயல்பாடுகள் மற்றும் நேட்டோவுக்கு (NATO) சாதகமான வெளியுறவுக் கொள்கையையும் ஆதரித்து வருகிறார் மெலோனி.

இத்தாலியின் இந்த முடிவு ஐரோப்பிய யூனியன் கமிஷன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரின் முக்கியமான சந்திப்புக்கு முன்பாகவே வந்துள்ளது.

இந்த சந்திப்பின் போது, ​​ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சோலார் பேனல்கள் மற்றும் மின்சார கார்கள் உள்ளிட்ட மலிவான பொருட்களை ஏற்றுமதி செய்வதை நிறுத்துமாறு சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு டெர் லேயன் எச்சரிக்கை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - சீனா

பட மூலாதாரம், GETTYIMAGES

சீனாவின் பட்டை மற்றும் பாதை முன்னெடுப்பு என்றால் என்ன?

பிஆர்ஐ திட்டம் என்பது பண்டைய காலத்தின் பட்டுப் பாதையை மீண்டும் உருவாக்கும் யோசனையை அடிப்படையாகக் கொண்டது. இதன் மூலம் ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பிற நாடுகளுடன் இணைய விரும்புகிறது சீனா.

கி.மு. 130 முதல் கி.மு. 1453 வரை, அதாவது சுமார் 1,500 ஆண்டுகளாக, வர்த்தகர்கள் கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்குச் செல்ல இந்த பாதைகளைப் பயன்படுத்தினர்.

பட்டுப் பாதை என்பது ஒரு சாலை அல்லது பாதை அல்ல, மாறாக அது வர்த்தகம் மட்டுமின்றி நாடுகளிடையே கலாசார பரிமாற்றமும் நடந்த பாதைகளின் ஒரு வலையமைப்பாகும்.

இந்த கருத்தாக்கத்தையும் பாதையையும் மீட்டுக் கொண்டு வர, 2013-இல் சீன அதிபர் ஷி ஜின்பிங், பட்டை மற்றும் பாதை திட்டத்தைத் தொடங்கினார். இதன்கீழ், உலகெங்கிலும் உள்ள பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களில் சீனா முதலீடு செய்கிறது. இதன் மூலம் பொருட்களை பல்வேறு நாடுகளுக்குக் கொண்டு செல்ல முடியும்.

மோதி, மெலோனி

பட மூலாதாரம், Getty Images

சீனாவின் இந்த லட்சியத் திட்டம் ஒரு பெரும் ஆயுதம், இதன் மூலம் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கை அதிகரிக்க சீனா முயற்சிக்கிறது என்று அந்நாட்டின் அரசியல் விமர்சகர்கள் நம்புகின்றனர்.

பிஆர்ஐ மூலம் முழு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் சுமார் ஒரு டிரில்லியன் டாலர்களை முதலீடு செய்வதே சீனாவின் நோக்கம்.

சீனா 100-க்கும் மேற்பட்ட நாடுகளை பிஆர்ஐ திட்டங்களுடன் இணைத்துள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 2600 பிஆர்ஐ திட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ், சீனாவுடனான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட நாடுகளில் 770 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்துள்ளது சீன அரசு.

பாகிஸ்தான்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

பாகிஸ்தானின் குவாடர் துறைமுகம்

இந்தியாவின் எதிர்ப்பு

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடமும் சீனாவின் லட்சிய திட்டமான பிஆர்ஐ-இன் ஒரு பகுதியாகும். இந்த பொருளாதார வழித்தடம் சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதை என்றும் அழைக்கப்படுகிறது.

இது சுமார் 3,000 கிலோமீட்டர் நீளமுள்ள பாதையாகும், இது சீனாவின் வடமேற்கு பகுதியை பாகிஸ்தானின் மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள குவாடர் துறைமுகத்துடன் இணைக்கிறது.

பாகிஸ்தானின் உதவியுடன், குவாடர் துறைமுகத்தை மேம்படுத்த சீனாவும் முயற்சித்து வருகிறது. இதனால் கடல் வழியாக ஐரோப்பாவிற்கு பொருட்களை எளிதாக அனுப்ப முடியும்.

இந்தப் பாதை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகச் செல்வதால், சீனாவின் இந்தத் திட்டத்துக்கு ஆரம்பம் முதலே இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *