
பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானில், அசிஃபா பூட்டோ ஜர்தாரி நாட்டின் முதல் பெண்மணியாக ஆக்கப்பட்டிருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
பொதுவாக, முதல் பெண்மணியாக ஒரு நாட்டின் குடியரசுத் தலைவர் அல்லது பிரதமரின் மனைவியாக இருப்பவரே கருதப்படுகிறார். ஆனால், பாகிஸ்தானில் குடியரசுத் தலைவர் ஆசிஃப் அலி ஜர்தாரி தனது மகள் ஆசிஃபாவை நாட்டின் முதல் பெண்மணியாக அறிவித்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பாகக் கருதப்படுகிறது.
ஆசிஃப் அலி ஜர்தாரியின் மனைவியும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான பெனாசிர் பூட்டோ 2007ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அப்போது ஆசிஃபா பூட்டோவுக்கு 14 வயது. முஸ்லிம் நாடான பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரான பெனாசிர் பூட்டோ, 1998 இல் பிரதமரான பிறகு மூன்று குழந்தைகளுக்குத் தாயானார்.
ஜர்தாரி முதன்முதலில் 2008இல் குடியரசுத் தலைவர் ஆனார். அந்த நேரத்தில் யாரும் அதிகாரப்பூர்வமாக முதல் பெண்மணியாக நியமிக்கப்படவில்லை. ஆசிஃப் அலி ஜர்தாரி 2013 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானின் குடியரசுத் தலைவராக இருந்தார்.
இம்முறை பாகிஸ்தானில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதும், கடந்த ஞாயிறு அன்று நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக ஆசிஃப் அலி ஜர்தாரி பதவியேற்றார். இந்நிலையில், முதல் பெண்மணி பதவிக்கு அவரது இளைய மகள் ஆசிஃபாவின் பெயர் அறிவிக்கப்பட்டது. தற்போது ஆசிஃபாவுக்கு 31 வயதாகிறது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, முதல் பெண்மணியாக மகளை எப்படி அறிவிக்க முடியும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
அரசியலில் தீவிரமாக இருக்கும் ஆசிஃபா

பட மூலாதாரம், X/@MEDIACELLPPP
பக்தவார் பூட்டோ ஜர்தாரி ஆசிஃபாவின் மூத்த சகோதரி. அவர் தனது சமூக ஊடக பக்கத்தில், “முதல் பெண்மணிக்கு வழங்கப்படும் வசதிகளை ஆசிஃபா அலி ஜர்தாரியும் பெறுவார். பாகிஸ்தானின் இளைய முதல் பெண்மணி என்ற பெருமையை ஆசிஃபா பெற்றுள்ளார்,” என்று எழுதினார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின், அதாவது பிபிபியின் தேர்தல் பிரசாரத்தின்போது அவர் தீவிரமாக இருந்தார். ஆசிஃபா தனது அரசியல் வாழ்க்கையை நவம்பர் 2020இல் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பேரணியுடன் தொடங்கினார்.
இத்தகைய சூழ்நிலையில், அவரை பாகிஸ்தான் முதல் பெண்மணியாக்க முடிவு செய்யப்பட்டபோது, அதுகுறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
சட்ட வல்லுநர்கள் கூறுவது என்ன?
பாகிஸ்தானின் ஆங்கில பத்திரிகையான தி எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் இதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் பேசியுள்ளது. அதன்படி, குடியரசுத் தலைவருக்குத் தனது குடும்பத்தில் உள்ள எந்தப் பெண்மணிக்கும் முதல் பெண்மணி பதவியை வழங்கும் உரிமை உண்டு என சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக சட்டத்தில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 1975ஆம் ஆண்டு சட்டத்தில் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட உரிமைகளில் முதல் பெண்மணி பற்றிக் குறிப்பிடப்படவில்லை. உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆவணங்களில்கூட முதல் பெண்மணி அல்லது முதல் கணவர் என்ற குறிப்பு இல்லை.

பட மூலாதாரம், FB/ASEEFA BHUTTO ZARDARI
அரசமைப்பு சட்டத்தின்கீழ் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்படும் வசதிகள் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிள்ளைகளுக்கும் கிடைக்கின்றனர். இச்சட்டத்தின் கீழ், குடியரசுத் தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் அரசாங்க குடியிருப்புகள் மற்றும் விமானங்களைப் பயன்படுத்தலாம்.
ஜியோ டிவி(Geo TV) இணையதளத்தில் வெளியான செய்தியின்படி, ராணுவ ஆட்சியின்போது குடியரசுத் தலைவரான பிறகு, 1958ஆம் ஆண்டில் அயூப் கான் தனது மகள் நசீம் ஔரங்கசீப்பை முதல் பெண்மணியாக ஆக்குவதாக அறிவித்தார். அப்போது அயூப் கானின் மனைவி உயிருடன் இருந்தார்.
முகமது அலி ஜின்னாவின் சகோதரி பாத்திமா ஜின்னாவும் பல சந்தர்ப்பங்களில் அவரது சகோதரருடன் காணப்பட்டார். கடந்த காலங்களில், இதுபோன்ற வழக்குகள் பல நாடுகளில் காணப்பட்டன. அதில் மனைவி இல்லாத நிலையில், குடியரசுத் தலைவர்கள் தங்கள் மகள்கள் மற்றும் சகோதரிகளை முதல் பெண்மணியாக ஆக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஆண்ட்ரூ ஜாக்சனுக்கு மனைவி இல்லை. அவர் தனது மருமகள் எமிலி டோனல்சனை முதல் பெண்மணியாக வருமாறு கேட்டுக்கொண்டார்.
பிடிஐ செய்தி முகமையின்படி, செஸ்டர் ஆர்தர், க்ரோவர் க்ளீவ்லேண்ட் ஆகிய மேலும் இரண்டு அமெரிக்க அதிபர்கள் தங்கள் சகோதரிகளை முதல் பெண்மணிகளாகப் பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டனர்.
பாகிஸ்தானில் குடியரசுத் தலைவருடன் தங்குவதைத் தவிர, முதல் பெண்மணி, சுகாதார, சமூக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். இருப்பினும், பாகிஸ்தானை பொறுத்தவரை, சில முதல் பெண்மணிகள் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஆசிஃபாவின் பாட்டி நுஸ்ரத் பூட்டோ, ஜியோ உல் ஹக்கின் மனைவி ஷஃபிக் ஜியா, முதல் பெண்மணியாக மட்டுமல்ல, அரசியலிலும் தீவிரமாக இருந்தார்.
ஆசிஃபாவின் பின்னணி

பட மூலாதாரம், FB/ASEEFA BHUTTO ZARDARI
பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவின் சகோதரி ஆசிஃபா. அவர் தனது தந்தையுடன் அதிகம் காணப்பட்டுள்ளார்.
ஆசிஃபா ஆக்ஸ்போர்ட் புரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் சமூக மற்றும் அரசியல் அறிவியல் படித்துள்ளார். ஆசிஃபா தனது 21வது வயதில் ஆக்ஸ்ஃபோர்ட் யூனியனில் உரை நிகழ்த்தினார். அவர் சமூகப் பணிகளிலும் தீவிரமாகக் காணப்பட்டார்.
சிகிச்சை பெற்று வரும் மலாலா யூசுப்சாயை சந்திக்க ஆசிஃப் அலி ஜர்தாரி பர்மிங்ஹாம் சென்றபோது, அவருடன் ஆசிஃபாவும் சென்றார். ஆசிஃபா சமூக ஊடகங்களிலும் ஆக்டிவாக காணப்படுகிறார்.
போலியோ பிரச்னையைச் சமாளிக்க இன்னமும் போராடி வரும் பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ மருந்து கொடுப்பது சவாலாக உள்ளது. ஆசிஃபா இந்தப் பிரச்னையில் தீவிரமாக போலியோ தொடர்பான பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்.
சகோதரர் பிலாவல் பூட்டோவின் ஆளுமை

பட மூலாதாரம், PPP
டிசம்பர் 27, 2007 அன்று, தாய் பெனாசிர் பூட்டோவின் படுகொலைக்குப் பிறகு பிலாவல் பூட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சியின் வாரிசாக அறிவிக்கப்பட்டார்.
அந்த நேரத்தில், 19 வயதாக இருந்த பிலாவல் பூட்டோ ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்ட் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் தனது பட்டப்படிப்பை முடித்துக் கொண்டிருந்தார். தற்போது பிலாவல் 33 வயதாகும்போது, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு, பிலாவல் பூட்டோ அமெரிக்கா-பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் உச்சிமாநாட்டில் பாகிஸ்தான் தூதுக் குழுவின் ஒரு பகுதியாக இருந்தார். அப்போது பிலாவலுக்கு 21 வயது.
அவரது தந்தை ஆசிஃப் அலி ஜர்தாரி பாகிஸ்தான் குடியரசுத் தலைவராக இருந்தார். இந்த சர்வதேச தூதுக்குழுவைத் தவிர பிலாவலுக்கு ராஜ்ஜீய விவகாரங்களில் அனுபவம் இல்லையென்று கூறப்படுகிறது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்