பட மூலாதாரம், PA MEDIA
இஸ்ரேலின் மீது ஹமாஸ் குழு நடத்தியிருக்கும் தாக்குதலைத் தொடர்ந்து, கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு ஒரு விமானம் தாங்கி கப்பல், கப்பல்கள் மற்றும் ஜெட் விமானங்களை அனுப்பவிருப்பதாக அமெரிக்கா கூறியிருக்கிறது.
மேலும், இஸ்ரேலுக்கு கூடுதல் உபகரணங்கள் மற்றும் வெடிபொருட்களை வழங்கப்போவதாகவும் அமெரிக்கா கூறியிருக்கிறது.
முன்னர், தெற்கு இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலை அமெரிக்க அதிபர் பிடன் ‘இதுவரை நடந்திராத பயங்கரமான தாக்குதல்’ என்று வர்ணித்திருந்தார்.
இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் சிறைபிடிக்கப்பட்டவர்களில் அமெரிக்கக் குடிமக்களும் அடங்குவர் என்று வெளியாகியிருக்கும் அறிக்கைகளைச் அமெரிக்கா சரிபார்த்து வருவதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறைச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்திருக்கிறார்.
இத்தாக்குதலில் 700க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 100 பேர் கடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறுகிறது.
காஸாவில், பதிலடி கொடுக்கும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
‘தாக்குதலுக்கு இரான் உதவியது’
வரும் நாட்களில், அமெரிக்காவின் யு.எஸ்.எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு என்ற விமானம் தாங்கிக் கப்பல், ஒரு ஏவுகணைக் கப்பல் மற்றும் நான்கு ஏவுகணை அழிப்புக் கப்பல்கள் இப்பகுதியை நோக்கிச் செல்லும் என அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார். அமெரிக்க போர் விமானங்களும் அப்பகுதிக்கு அனுப்பப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கு மேலும் ராணுவ உதவி அனுப்பப்படும் என்று கூறியிருக்கும் அமெரிக்க அசராங்கம், இஸ்ரேலின் எதிரிகள் இந்தச் சூழ்நிலையில் இருந்து ஆதாயம் தேட முயற்சிக்கக் கூடாது என்பதற்காக அமெரிக்கா செயல்படுவதாகக் கூறியது.
இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, ஹமாஸ் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்து, பாலஸ்தீனப் பகுத்களுக்கு ஆபத்து ஏற்படுத்தியதற்கு இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
தங்களது தாக்குதலை நடத்த இரானின் உதவி பெரிதும் பயன்பட்டதாக ஹமாஸ் குழு தெரிவித்திருக்கிறது. இத்தாக்குதலில் நூற்றுக்கணக்கான ஹமாஸ் குழுவினர், ராக்கெட்டுகள், ட்ரோன்கள் மற்றும் பாராகிளைடர்களின் மூலம், காசா பகுதியைச் சுற்றியுள்ள இஸ்ரேலிய எல்லைக் கோட்டைகளை உடைத்து தாக்குதல் நடத்தினர்.
அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறுகையில், இரானின் நேரடி தலையீட்டிற்கான ஆதாரங்களை அமெரிக்கா காணவில்லையெனினும், காஸாவை தளமாகக் கொண்ட ஹமாஸ் குழுவிற்கு இரான் பல ஆண்டுகளாக உதவி செய்து வருகிறது என்றார்.
“இரான் பல ஆண்டுகளாக அளித்துவரும் ஆதரவு இல்லாமல் ஹமாஸ் குழுவல் இயங்க முடியாது. இந்தக் குறிப்பிட்ட தாக்குதலுக்குப் பின்னால் இரான் இருந்ததற்கான நேரடி ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால் ஹமாஸிற்கு இரான் பல ஆண்டுகளாக ஆதரவு கொடுத்து வருவது உறுதி,” என்று அவர் அமெரிக்கத் தொலைகாட்சியில் தெரிவித்தார்.
பட மூலாதாரம், EPA
இஸ்ரேலின் ஐ.நா தூதர் ஹமாஸால் பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பெண்ணின் படத்தைக் காட்டுகிறார்
அமெரிக்கக் குடிமக்கள் சிக்கியுள்ளனரா?
இந்தத் தாக்குதலில் அமெரிக்க குடிமக்கள் சிக்கியுள்ளனர் என்று வெளிவரும் தகவல்கள் பற்றி அமெரிக்க அதிகாரிகள் சரிபார்த்து வருவதாக பிளிங்கன் கூறினார்.
“இறந்தவர்களில் பல அமெரிக்கர்கள் இருப்பதாக எங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த அறிக்கைகளை சரிபார்க்க நாங்கள் மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறோம்,” என்று அவர் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கத் தொலைக்காட்சிக்கு தெரிவித்தார். இங்கிலாந்து, பிரான்ஸ், யுக்ரேன் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட பிற நாடுகளும் தங்கள் குடிமக்கள் இந்தத் தாக்குதலில் இறந்திருப்பதாகப் பதிவு செய்துள்ளன.
மேலும் பேசிய பிளிங்கன், “இது ஒரு மிகப்பெரும் பயங்கரவாத தாக்குதல். இதில் இஸ்ரேலிய குடிமக்கள் அவர்களின் நகரங்களில், அவர்களின் வீடுகளில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் பலர் காசாவின் எல்லைக்குள் இழுத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். உலகம் இதைக்கண்டு அதிர்ச்சியடைய வேண்டும்,” என்றார்.
மேலும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களில் 23 வயதான அமெரிக்க-இஸ்ரேலியர் ஹெர்ஷ் கோல்பெர்க்-பொலின் ஒருவர். அவர் ஒரு இசைவிழாவில் பங்கேற்ற போது ஹமாஸ் குழுவினர் அங்கு தாக்குதல் நடத்தினர். அவரிடமிருந்து ‘ஐ லவ் யூ’ மற்றும் ‘என்னை மன்னிக்கவும்’ என்ற இரண்டு குறுஞ்செய்திகள் வந்ததாக அவரது பெற்றோர் ‘ஜெருசலேம் போஸ்ட்’ இதழிடம் தெரிவித்தனர்.
பட மூலாதாரம், Getty Images
ஹமாஸின் திடீர் தாக்குதல் மற்றும் இஸ்ரேலின் பதிலடியைத் தொடர்ந்து இரு தரப்பிலும் 1,100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர்
இஸ்ரேலுக்கு அமெரிக்கா அனுப்பும் ராணுவ உதவிகள்
அமெரிக்காவிற்கான இஸ்ரேலின் தூதர் மைக்கேல் ஹெர்சாக், தெற்கு இஸ்ரேலில் கடத்தப்பட்ட வீரர்கள் மற்றும் பொதுமக்களில் அமெரிக்கர்களும் இருப்பதாகத் தகவல்கள் வருவதாகவும் ஆனால் அதுபற்றி மேற்படி விவரங்கள் இல்லை என்றும் கூறினார்.
அமெரிக்கா, தனது நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேலுக்கு ஒவ்வொரு ஆண்டும் பலநூறு கோடி டாலர்கள் அளவிலான இராணுவ உதவியை அனுப்புகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இஸ்ரேல் அமெரிக்க வெளிநாட்டு உதவியைப் பெறும் மிகப்பெரிய நாடாக உள்ளது.
இஸ்ரேல் மற்றும் காஸா வன்முறைகள் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரைவில் நியூயார்க்கில் கூட உள்ளது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
