
தமிழக-கார்நாடக எல்லைப் பகுதியில் நடந்த பட்டாசு வெடிவிபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து சற்றுத் தொலைவில் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் அத்திப்பள்ளியில் கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 8) நடந்த பட்டாசு விபத்தில் 14 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
என்ன நடந்தது இச்சம்பவத்தில்? உயிர்பிழைத்தவர்கள் என்ன சொல்கின்றனர்?
அறிந்துகொள்ள பிபிசி தமிழ் களத்திற்குச் சென்றது.
என்ன நடந்தது?
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரத்திலிருந்து தமிழக எல்லை தாண்டி கர்நாடக மாநிலத்தில் அமைந்திருக்கும் ஊர் அத்திப்பள்ளியில். இங்கு சாலையின் இருபுறமும் ஏராளமான பட்டாசுக் கடைகள் மற்றும் குடோன்கள் உள்ளன. தீபாவளிப் பண்டிகை காலங்களில் இங்கு அதிகளவில் பட்டாசு கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். கர்நாடகம் மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இங்கு வந்து பட்டாசு வாங்கி செல்வர்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை, அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடைகளுக்கு 3 சரக்கு வாகனங்களில் பட்டாசுகள் அடங்கிய அட்டை பெட்டிகள் வந்து இறங்கின. அந்த பட்டாசுப் பெட்டிகளை இறக்கும்போது அவறிலிருந்த பட்டாசுகள் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் தருமபுரி மாவட்டம் டி. அம்மாபேட்டையைச் சேர்ந்த வேடப்பன், முனிவேல், இளம்பரிதி, ஆகாஷ், ஆதிகேசவன், விஜயராகவன்; திருவண்ணாமலை மாவட்டம் நீப்பத்துறையைச் சேர்ந்த, கிரி, பிரகாஷ்; திருப்பத்தூர் மாவட்டம் வெள்ளை குட்டை கிராமத்தைச் சேர்ந்த நிதிஷ், சந்தோஷ்; கள்ளக்குறிச்சி மாவட்டம் எடக்கல் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன், வசுந்தராஜ், அப்பாஸ்; ஓசூர் பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராஜ் என மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர்.
மேலும், காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வெடிவிபத்து தொடர்பாக கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து விசாரிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்படுள்ளன.
பட்டாசுகள் சிவகாசியில் இருந்து கொண்டு வரப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பட்டாசுக் கடையில் நடந்த விபத்தில் இருந்து வெளியேறும் கரும்புகை
செலவுக்குப் பணம்வேண்டி ‘சீசன் ஒர்க்’ தேடிச் செல்லும் பட்டதாரிகள்
விபத்து நடந்த இடத்தை நெருங்கும்போதே எரிந்த மனித உடல்களிலிருந்து வெளிப்படும் நெடியை உணர முடிந்தது. எரிந்துபோன வாகனங்களின் மிச்சங்கள் அங்கு கிடந்தன.
தீயணைப்பு மற்றும் காவல்துறையின் உயர் அதிகாரிகள் வரவிருந்ததையொட்டி பட்டாசுக் கடைகளை ஒழுங்குபடுத்தும் பணிகளை அவசர அவசரமாக செய்யப்பட்டுக்கொண்டிருந்தன. துப்புரவு பணியாளர்கள் அப்பகுதியில் கிடந்த எரிந்த பட்டாசுக் கழிவுகளையும் குப்பைகளையும் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர்.
அவர்களிடம் இந்த விபத்தைப் பறி விசாரித்தோம்.
விபத்தில் உயிர் தப்பிய இரண்டு இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். உடனடியாக அங்கிருந்து அத்திப்பள்ளியை அடுத்துள்ள ஆக்ஸ்ஃபோர்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்தோம்.
மருத்துவமனையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் அழுகுரல் நம்மை வரவேற்றது.
வெடிவிபத்தில் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய லோகேஸ்வரனிடம் பேசினோம். தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த டி. அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த அவர், அந்த ஊர் இளைஞர்கள் எல்லோரும் பட்டப்படிப்பும், பட்டயப்படிப்பும் படித்து வருவதாகச் சொன்னார்.
“எங்கள் குடும்பத்தில் போதுமான பொருளாதார வசதிகள் இல்லாததால் நாங்கள் இது போல் சீசன் காலங்களில் வேலைக்குச் செல்வது வழக்கம்,” என்றவர் மேலும் தொடர்ந்தார்.
“பெரிய நகரங்களுக்குச் சென்று துணிக்கடைகளில் வேலை செய்வது, பட்டாசுக் கடைகளில் வேலை செய்வது போன்ற பணிகளைச் செய்வோம். அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு பண்டிகைகளை கொண்டாடுவது, கல்விக் கட்டணம் செலுத்துவது, இ.எம்.ஐ மூலம் மொபைல் போன் வாங்குவது பொன்ற செலவுகளைச் செய்வோம். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இதைத்தான் செய்து வருகிறோம்,” என்றார்.
அதேபோலத்தான் செப்டம்பர் 30-ஆம் தேதி நாங்கள் லோகேஸ்வர உட்பட ஐந்து பேரும், மூன்று நாட்கள் கழித்து மேலும் ஐந்து பேரும் அத்திப்பள்ளிக்குச் சென்றதாகச் சொல்கிறார் அவர். “மொத்தம் இந்த கடையில் 30 பேர் வேலை செய்தோம். எப்பொழுதும் பட்டாசுகள் பேக்கிங் பண்ணுவதற்கு ஒரு டீமும் அதில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு ஒரு டீமும் மேலும் விற்பனை செய்வதற்கு ஒரு டீமும் இருக்கும்,” என்றார் அவர்.

வெடிவிபத்தில் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய லோகேஸ்வரன்
‘நடக்க இடமின்றி பட்டாசு வைக்கப்பட்டிருந்தது’
மேலும் தொடர்ந்த லோகேஸ்வரன் அவர்கள் விற்பனை செய்யும் டீமில் இருந்ததாகச் சொன்னார்.
“ஆனால் இந்த முறை சிவகாசியில் இருந்து பட்டாசுகளுடன் கண்டெய்னர் லாரி வந்தது. அத்தோடு சில்லறை விற்பனை செய்ய பட்டாசுகளை எடுத்துச் செல்ல இரண்டு மினி டெம்போக்கள் வந்திருந்தன. அந்தக் கடையில் முன்பக்கம் பட்டாசுக் கடையும், மத்தியில் ஒரு தடுப்பும், அதன் பிறகு பட்டாசு குடோனும் உள்ளன,” என்றார் அவர்.
ஏற்கனவே வாங்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள், குடோன் மற்றும் வாசல்களை அடைத்து அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாகச் சொன்ன அவர், அதில் ஒரு நபர் செல்லும் அளவிற்கு மட்டுமே இடைவெளி இருந்ததாகவும் தெரிவித்தார்.
“கண்டெய்னர் லாரியிலிருந்து பட்டாசுகளை இறக்க ஆட்கள் இல்லை என்பதால், பொருட்களை சீக்கிரம் இறக்குவதற்காக எங்களை உதவி செய்யச்சொன்னார். நாங்களும் உரிமையாளர் சொன்னதால் அவற்றை இறக்கி வைக்கத் தொடங்கினோம். 30 கிலோ எடை கொண்ட பட்டாசுப் பெட்டிகளை இறக்கி குடோனில் வைக்க வேண்டும். இந்த வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது, நான் சிறிதுநேரம் வெளிய வந்திருந்தேன்,” என்றார்.
மேலும் பேசிய அவர், மற்றவர்கள் பட்டாசுப் பெட்டிகளை இறக்கிக் கொண்டிருந்த போது பட்டாசுக் கடையின் முன்பக்கம் வெடிக்கத் துவங்கியது, என்றார். “உள்ளே இருந்தவர்கள் வெளியே வரமுடியாமல் குடோனில் மாட்டிக்கொண்டனர்,” என்றார்.
மேலும் பேசிய லோகேஸ்வரன், வெடிச்சத்தம் கேட்டதும் பட்டாசுக் கடை உரிமையாளர் வெளியே ஓடி வந்து விட்டதாகச் சொன்னார். “அவரைத் தொடர்ந்து என் ஊரைச் சேர்ந்த ஒருவர் தப்பித்து வந்தார். அதன் பிறகு அங்கு என்ன நடந்தது என்றே தெரியாத அளவுக்கு வெடிச்சத்தமும் புகை மூட்டமும் இருந்தன,” என்று கூறினார்.

வெடிவிபத்தில் இருந்து தப்பிய மற்றொருவரான பீமாராவ்
திருமணமாகி ஒரே மாதத்தில் இறந்த இளைஞர்
வெடிவிபத்தில் இருந்து தப்பிய மற்றொருவரான பீமாராவிடம் பேசினோம்.
பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் அவர், ஒவ்வொரு வருடமும் பண்டிகைக் காலங்களில் பட்டாசு கடைகளுக்கும் துணிக்கடைகளுக்கும் வேலைக்குச் செல்வதாகக் கூறுகிறார்.
“கடந்த ஆண்டு இதே பட்டாசு கடையில் வேலை செய்தேன். இந்த முறையும் சீசனுக்காக தற்காலிகமாக பட்டாசு விற்பனைப் பணிக்கு எனது ஊரைச் சேர்ந்த பத்து பேர் வேலைக்குச் சேர்ந்தோம். பட்டாசுப் பெட்டிகளை குறுகிய வழியில் எடுத்துச் சென்ற போது விபத்து நேர்ந்தது. உடனடியாக நான் தவழ்ந்து அங்கிருந்து தப்பிவந்துவிட்டேன்,” என பதற்றத்துடன் தெரிவித்தார்.
தீயில் கருகி இறந்த வேடப்பனின் தந்தை முருகனிடம் பேசினோம்.
தனது மகன் பட்டப்படிப்பை முடித்தவுடன் டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்காகப் படித்துக்கொண்டிருந்ததாகத் தெரிவித்தார்.
“அவன் ஒரு பெண்ணை காதலித்தான். கடந்த மாதம் தான் இரு குடும்பத்தினரும் இணைந்து பேசி திருமணம் செய்து வைத்தோம். அவன் வேலை செய்வதற்காக இங்கு வரவில்லை. நண்பர்கள் அழைத்தனர் என்பதால் இங்கு வந்தான். ஞாயுறி காலை ஊருக்கு வருவதாகத் தெரிவித்திருந்தான். அதற்குள் இப்படி ஆகிவிட்டது. எனது மருமகள் இந்த துயரத்தை எப்படித் தாங்கிக்கொள்ளப் போகிறாள் என்று நினைத்தால் பயமாக இருக்கிறது,” என்றார்.

பட்டாசு விபத்தில் வாகனங்கள் தீயில் எரிந்து எலும்புக் கூடு போல் காட்சியளித்தன.
‘பட்டாசு விற்க மட்டுமே அனுமதி, பேக்கிங் செய்ய அல்ல’
ஓசூர் தீயணைப்பு நிலைய அலுவலர் நாக விஜயனிடம் பேசினோம். அவர், “கர்நாடக எல்லைக்குட்பட்ட அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் தீ விபத்து என 3.30 மணிக்கு தகவல் வந்தது. அது கர்நாடக மாநிலத்திற்கு உட்பட்ட பகுதி என்றால் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக நாங்கள் அங்கு சென்று தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டோம்.
போக்குவரத்தில் சிக்கிய கர்நாடக தீ அணைப்புத் துறையினர் அங்கு வந்த பின் நாங்கள் எங்கள் அலுவலகத்துக்கு வந்துவிட்டோம். அதன் பின்னர் சுமார் 7 மணிநேரம் தீ அணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன,” என்றார்.
இந்த விபத்து குறித்து ஓசூர் சப் கலெக்டர் சரண்யா பிபிசி தமிழிடம் பேசிய போது, “பட்டாசுக் கடைகளில் பட்டாசுகளை விற்பனை செய்ய மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. பேக்கிங் செய்ய அனுமதி இல்லை. இந்த வெடி விபத்து சம்பந்தமாக கர்நாடக மாநில காவல்துறையும், தடயவியல் துறையும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர்,” என்றார்.
மேலும் பேசிய அவர், தமிழக அரசின் சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி மூலம் இறந்தவர் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாயும் அதிக தீ காயமடைந்தவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் சாதாரண காயமடைந்தவருக்கு 50,000 ரூபாயும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது, கடை உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், என்றார்.

விபத்து நடந்த இடத்தை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்
‘சிகிச்சை செலவை கர்நாடக அரசு ஏற்கும்’
இந்த வழக்கு விசாரணை குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
விபத்து நடந்த இடத்தை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சித்தராமையா, “இந்த வெடி விபத்து துரதிஷ்டவசமானது. தமிழகத்தை சேர்ந்த 14 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்களது குடும்பத்திற்கு கர்நாடக மாநில அரசு சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இதில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை செலவு முழுவதையும் அரசே ஏற்கும். இங்கு பட்டாசு கடை மற்றும் கிடங்கு என இரண்டு உரிமம் பெறப்பட்டுள்ளது. ஒன்று கடந்த மாதம் புதுப்பிக்க பட்டுள்ளது. மற்றொரு உரிமம் 2026 வரை பெறப்பட்டுள்ளது.
இந்த விபத்திற்கு கடை உரிமையாளர்களே முழு பொறுப்பாளர்கள். அவர்களது கவனக்குறைவு மற்றும் பாதுகாப்பு இன்மை காரணமாக விபத்து நடந்துள்ளது,” என்றார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்