
தோடர் இனப் பெண்கள் தங்கள் தையல் கலை மூலமாக தங்கள் குடும்பத்திற்காக சிறு வருமானம் ஈட்டி வருகின்றனர் என அவர்களை ஒருங்கிணைக்க உதவி வரும் ஷீலா பவல் தெரிவிக்கிறார்.
ஒரு பெண், கணவரின் வருமானத்தை மட்டுமே நம்பியிருக்காமல் தனக்கென வருமானத்தை ஈட்டும்போது என்ன நடக்கும்?
அந்தப் பெண்ணின் முன்னேற்றம், அந்தக் குடும்பத்தின் முன்னேற்றமாக மாறும். ஒரு கட்டத்தில் அவர் வாழும் சமூகத்தின் முன்னேற்றமாக மாறுகிறது என்பதுதான் நீலகிரியில் உள்ள தையல் கலைஞர் ஷீலாவின் பதில்.
ஷீலா பவல், திருமணத்திற்குப் பின்னர், தான் சம்பாதிக்கவேண்டும் என்ற முடிவில் 1992இல் ஷாலோம் ஊட்டி(Shalom Ooty) என்ற தையல் கடையைத் தொடங்கினார்.
இரண்டு குழந்தைகள் வளரும் அதே வேகத்தில் அவரின் நிறுவனம் வளரவில்லை. குடும்பத்திற்காகச் செலவிடும் நேரம், தன்னுடைய ‘மீ டைம்’ காக(ஒருவர் தனக்காக கொடுத்துக்கொள்ளும் நேரம்) செலவிடும் நேரம் என இரண்டிற்கும் இடையில் பல சமாதானங்களை அவர் செய்ய வேண்டியிருந்தது.
மாற்றத்தை ஏற்படுத்திய முடிவுகள்
ஒரு கட்டத்தில், அவர் தன்னுடைய தொழிலில் ஏற்றத்தை எட்ட காத்திருப்பதைப் போலவே, நல்ல எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யும் தோடர் இன பெண்களும் காத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டார்.
அவர்களுடன் தன்னையும், தன்னுடைய நிறுவனத்துடன் அவர்களையும் இணைத்துக்கொண்டார். அந்தப் பயணம் மேம்பட, நூற்றுக்கும் மேற்பட்ட தோடர் பெண்களை ஷாலோம் ஊட்டி சங்கத்தில் 2005இல் இணைத்திருக்கிறார்.
”எங்கள் பயணம் மிகவும் ஆச்சர்யமானது. நான் 1992இல் சிறிய கடை வைத்திருந்தேன். அவ்வப்போது மகளிர் சுய உதவிக் குழு மேளா நடக்கும். அப்போது என் கடைக்கு அருகில் தோடர் பெண்கள் சால்வை கடை போட்டிருப்பார்கள்.
எனக்கு சிறு வருமானம் கிடைக்கும். அவர்கள் ஒரு சிலர் எந்தப் பொருளையும் விற்க முடியாமல், மதிய உணவு இல்லாமல், தேநீர் குடித்துவிட்டு வீட்டுக்குச் செல்வதைப் பார்த்திருக்கிறேன்.
இவர்களின் பொருளை எப்படி சந்தைப்படுத்துவது என்று பலமுறை யோசித்தேன்,” என தோடர் பெண்களிடம் ஏற்பட்ட முதல் அறிமுகத்தை பிபிசி தமிழிடம் விளக்கினார் அவர்.
தோடர்கள் பல காலமாகத் தங்களது புனித சின்னங்களை எம்பிராய்டரி வேலைப்பாடுகளில் கருப்பு, சிவப்பு, வெள்ளை கலந்த நிறங்களில் சால்வை துணியில் போட்டு விற்று வந்துள்ளனர்.
ஆனால் ஒரு சால்வை தைக்க அவர்கள் குறைந்தது 15 முதல் 20 நாட்கள் வேலை செய்யவேண்டும். விலையும் ரூ.1,000 தொடங்கி ரூ.2,000 வரை இருக்கும். ஆனால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தான் வாங்க முடியும் என்ற நிலை இருந்தது.
கடந்த 2005ஆம் ஆண்டில் ஷீலா, இந்த வேலைப்பாடுகளை சால்வை அல்லாமல், சிறிய பரிசுப் பொருட்களாக மாற்றும் முயற்சியில் இறங்கினார்.
”தினசரி பயன்பாடு உள்ள பொருட்களில் இவர்களின் எம்பிராய்டரியை எப்படி இடம்பெற வைக்கலாம் என்று யோசித்தேன். வாடிக்கையாளர் எளிதில் வாங்கக்கூடிய பொருளாகவும், இந்தப் பெண்களுக்கு வருமானம் தரும் வேலையாகவும் இருக்கவேண்டும் என்று முடிவு செய்தேன்.
சால்வை பயன்பாடு குளிர்ப் பிரதேசங்களைத் தாண்டி பிறருக்குத் தேவையில்லை. மற்ற பொருட்களைப் பற்றி யோசித்தேன்.
லேப்டாப் கவர், கீ-செயின் கவர், பெரிய மெத்தை விரிப்புகள், தலையணை உரைகள், நகைப்பெட்டி கவர், சிறிய மற்றும் பெரிய துணி பைகள் , கிஃப்ட் பாக்ஸ் டேக் உள்ளிட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட பொருட்களில் இவர்களின் எம்பிராய்டரியை பயன்படுத்த முடியும் எனப் பட்டியலிட்டேன்,” என்று விவரிக்கிறார் ஷீலா.
தொழில்முனைவோராக மாறிய பெண்கள்

தோடர் இனப் பெண்கள், தங்கள் பாரம்பரிய வடிவங்களைக் கொண்டு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை அழகுபடுத்தி, தங்களுக்கு வருமானம் ஈட்டும் தொழிலாக மாற்றியுள்ளனர்.
ஒரு சின்ன கீ செயின் கவரை ஷீலா ரூ.20க்கு விற்பனை செய்தால், அதில் ரூ.10ஐ தையல் கூலியாக தோடர் பெண்களுக்குக் கொடுத்திருக்கிறார். அந்தப் பெண்களுக்கு தினமும் ஓரிரண்டு இன்ச் அளவுக்கு தைத்து கொடுத்தால்கூட பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுவதற்கு அந்த முயற்சி உதவியுள்ளது.
”தினமும் தையல் மூலமாக வருமானம் ஈட்ட முடியும் என்பதால், அவர்கள் தொடர்ந்து தைக்க முன்வந்தார்கள். அதில் கிடைத்த சிறிய வருமானம் பெரிய மாற்றங்களை அவர்களிடம் ஏற்படுத்தியது. நல்ல முறையில் உடை உடுத்திக்கொள்ளத் தொடங்கினார்கள்.
என்னிடம் வந்த பெண்கள் பலரும், தவணை முறையில் புடவைகள் வாங்கியதை பெருமையாகச் சொன்னார்கள். அது எனக்கு மேலும் ஊக்கம் தந்தது. தற்போது பல பெண்கள் தங்களது குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைக்கிறார்கள். தங்களால் சம்பாதிக்க முடியும் என்ற உணர்வை அவர்களிடம் ஏற்படுத்தியது எனக்கு சாதனையாகத் தெரிந்தது,” என்று பெருமிதம் கலந்த புன்னகையுடன் சொல்கிறார் ஷீலா.
நாம் ஷாலோம் ஊட்டி சங்கத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்த நேரத்தில், ஷீலாவிடம் தங்களது துணி வேலைப்பாடுகளை ஒப்படைக்க பல பெண்கள் வந்திருந்தார்கள். இதுபோல, ஷாலோம் ஊட்டி சங்கம், கடந்த 30 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட தோடர் பழங்குடிப் பெண்களை தொழில் முனைவோராக மாற்றியுள்ளது.
தற்போது, குறைந்தபட்சம் ரூ.1500ஐ ஒரு வாரத்தில் ஈட்டும் தோடர் பெண்கள், தாங்கள் சென்று விற்பனை செய்த காலம் மாறி, தங்களைத் தேடி வாடிக்கையாளர்கள் வரும் நிலை ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.

சுமார் 200 தோடர் இனப் பெண்கள் இணைந்து தையல் தொழில் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
முதல்முறையாக சம்பாதித்த அனுபவம்
பலவிதமான பூ வேலைப்பாடுகள் கொண்ட பைகளை தைத்து வந்திருந்தார் ஆர்த்தி சின்(37). அவரது இரண்டு குழந்தைகளின் பள்ளிக்கூட வேன் கட்டணமான ரூ.1,500ஐ அவர் உழைப்பின் மூலம் செலுத்த முடிவது ஒருவித நிம்மதியை தருவதாகச் சொல்கிறார்.
”முன்பெல்லாம் எங்கள் கணவரிடம் நாங்கள் எதிர்பார்ப்போம். இப்போது நாங்கள் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டோம். எங்கள் குழந்தைகளை ஆங்கில வழிப் பள்ளியில் படிக்க வைக்கிறோம்.நாங்கள் எம்பிராய்டயரி தைப்பதால் எங்களுக்கு உதவியாக இருக்கிறது.
எங்கள் குழந்தைகளுக்கான செலவுகளுக்கு நாங்களே பணம் ஈட்ட முடிகிறது. இதுவரை எங்கள் குடும்பப் பெண்கள் தானாக வருமானம் ஈட்டியதில்லை. நான்தான் எங்கள் குடும்பத்தில் வருமானம் ஈட்டும் முதல் பெண் என்பதில் பெருமை,” என்கிறார்.
ஆர்த்திசின் போல பல பெண்கள் ஷீலாவின் முயற்சியால் முதல்முறையாகத் தங்களது வருமானத்தை ஈட்டி, தங்களது மதிப்பை சமூகத்தில் உயர்த்திக் கொண்டவர்களாக உள்ளனர் என்று அறிய முடிந்தது.
மற்றொரு தையல் கலைஞரான ஜோதி லட்சுமியும்(47) நம்மிடம் பேசினார். இள வயது திருமணம் காரணமாகப் பல தோடர் பெண்களுக்கு இளமைக் காலம் முழுவதும் குடும்ப பொறுப்புகளுக்காகவே தங்களது காலத்தைச் செலவிட நேருவதால், தங்களது முன்னேற்றத்திற்கு எந்த யோசனையும் செய்ய முடியுமால் இருந்தது என்கிறார் ஜோதிலட்சுமி.

கொரோனா காலத்தில் தோடர் இனப் பெண்கள் அழகிய முக கவசங்கள் செய்து விற்று வந்தனர்.
கொரோனா கொடுத்த கொடை
சுமார் 10 ஆண்டுகள் வரைகூட, தோடர் பெண்கள் தங்களது இருப்பிடங்களைத் தாண்டி வெளியுலகத்திற்கு அதிகம் பயணிப்பதோ, சந்தைகளில் தாங்களாகவே வந்து பொருட்கள் வாங்கு வந்ததோ இல்லை என்கிறார் அவர்.
”எனக்கு திருமணம் ஆனபோது எனக்கு வயது வெறும் 16. எனக்கு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளும் பிறந்துவிட்டன. வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று யோசிப்பதற்குள் நம் மீது பல பொறுப்புகள் சுமத்தப்பட்டுவிடும்.
நாங்கள் குழந்தைகளை கவனிக்கவேண்டும், வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும். தோடர்கள் என்றால் எருமைகள் அதிகம் வைத்திருப்பார்கள். பால் கறக்கவேண்டும், எருமையின் கொட்டகையை சுத்தம் செய்ய வேண்டும் எனப் பல வேலைகள் இருந்துகொண்டே இருக்கும். இதற்கிடையில், அவ்வப்போது தையல் வேலை செய்வோம். இப்போது முழுநேரமாக தையல் கலைஞராக நான் இருப்பதில் மகிழ்ச்சி,” என்கிறார் ஜோதி லட்சுமி.
தீடீரென மாற்றங்கள் உருவாகவில்லை. ஒரு சில பெண்கள் தங்களது தையல் வேலைகளுக்காக நல்ல ஊதியம் கிடைப்பதை மற்ற பெண்கள் கண்டறிந்து, அவர்கள் பின்தொடர தற்போது சுமார் 200 பெண்கள் வரை தொடர்ந்து தையலில் ஈடுபடுகிறார்கள்.

டிஜிட்டல் விற்பனை செய்யத் தொடங்கியுள்ள தோடர் பெண்களின் பொருட்களுக்கு தற்போது வெளிநாடுகளில் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
கொரோனா ஊரடங்கின்போதுதான் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் பக்கம் சென்றிருக்கிறார் ஷீலா. அது ஷாலோம் ஊட்டி சங்கம் அடுத்த உயரத்தை எட்ட உதவியிருக்கிறது.
ஆரம்பத்தில் டிஜிட்டல் மார்கட்டிங் பற்றி ஷீலாவுக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை. ஆனால் கொரோனா காலத்தில் அது மட்டும்தான் ஒரே வழியாக இருந்தது என்பதால் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் எம்பிராய்டரி பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிந்தது.
கொரோனாவின்போது முகக் கவசம் தயாரிப்பது ஒரு வகையில் தோடர் பெண்களுக்கு உதவியது. கொரோனா ஊரடங்கு, முதல் அலை, இரண்டாம் அலை என சுமார் இரண்டு ஆண்டுகளில், 20,000க்கும் மேற்பட்ட தையல் வேலைப்பாடுகள் கொண்ட முகக் கவசத்தை ஷாலோம் ஊட்டி சங்கம் தயாரித்திருந்தது. தற்போதும் முகக் கவசம் கேட்டு வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்கிறார்கள்.
“தற்போது உலகம் முழுவதும் இருந்து பலரால்ஹம் எங்கள் பொருட்களைப் பார்க்க முடிகிறது. 10 பேர் விசாரித்தால் குறைந்தது இரண்டு பேர் வாடிக்கையாளராக மாறிவிடுகிறார்கள். ஒரு சிலர் தோடர்களின் வேலைப்பாடுகள் மிகவும் அழகாக இருப்பதை பார்த்துவிட்டு, அவர்களின் கலாசாரம், பண்பாடு குறித்து கேட்டுத் தெரிந்துகொள்கிறார்கள்.
என்னிடம் இதுவரை தோடர் பெண்கள் கொடுத்த ‘டிசைன் பேட்டன்’ வகைகளைக் கணக்கிட்டால், குறைந்தது 10,000 விதமான டிசைன்கள் இருக்கும். அவ்வளவு திறமையான, கற்பனை வளம் அதிகம் கொண்டவர்கள் இந்தப் பெண்கள்,” எனப் பூரித்துப் பேசுகிறார் ஷீலா.
ஷீலா பவல் தன்னுடைய செலவுகளுக்காகத் தொடங்கிய நிறுவனம், இன்று 200க்கும் மேற்பட்ட தோடர் பெண்கள் சேர்ந்து ஆண்டுக்கு சுமார் ரூ.75 லட்சம் வருமானம் ஈட்டும் நிறுவனமாக மாறியுள்ளது.
சிறிய செலவுகளுக்குத் தனது கணவரை எதிர்பார்க்காமல், தனது உழைப்பை நம்பி, பணம் ஈட்ட வந்த பெண்கள் பலர், தொழில் முனைவோராக வளர்ந்துள்ளனர்.
அதோடு, அவர்களின் பொருட்களை பல நாடுகளைச் சேர்ந்த வாடிக்கைளார்கள் பயன்படுத்திவிட்டு, மீண்டும் புதிய வரவுகளுக்காக காத்திருப்பதாக அனுப்பும் இணையவழி குறுஞ்செய்திகள், பெரிய பலத்தை இந்தப் பெண்களுக்கு கொடுக்கின்றன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்