
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் பொது அரசாங்கக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட (GDP) 100% அதிகரிக்கும் என, சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் எச்சரிக்கை விடுத்திருந்தது.
காலநிலை நெருக்கடி மற்றும் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையிலான திட்டங்களுக்கான முதலீடுகளை அதிகரிக்க வேண்டிய சூழலில், இத்தகைய கடன் நெருக்கடி நீண்ட கால ஆபத்துகளை ஏற்படுத்தும் என அந்த அறிக்கை கூறியுள்ளது.
ஆனால், இந்த அறிக்கையை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்த நெருக்கடியைச் சமாளிக்க தனியார் துறைகளில் அதிக அளவிலான முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர் நாடுகளிடையே நிதி கண்காணிப்பு செயல்பாட்டின் ஒரு பகுதியாக இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
அது தவிர, இதனால் நீண்ட கால கடன் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளதால், இந்திய அரசு புதிய திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2028ஆம் ஆண்டுக்குள் மோசமான சூழல்கள் இத்தகைய நிலைமையால் ஏற்படும் என இடைக்கால அறிக்கையாக இதை வெளியிட்டுள்ளது ஐ.எம்.எஃப்.
அரசு என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், Getty Images
இந்த அறிக்கையை திட்டவட்டமாக இந்திய அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து சர்வதேச நாணய நிதியத்தின் இந்தியாவுக்கான செயல்-இயக்குநர் கே.வி.சுப்பிரமணியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், இந்தியாவில் பெரும்பாலும் உள்நாட்டு நாணயத்திலேயே கடன்கள் பெறப்பட்டுள்ளதால், இதனால் அதிக பாதிப்புகள் ஏற்படாது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “கடந்த இருபது ஆண்டுகளாக உலகப் பொருளாதாரம் சந்தித்த பல்வேறு மோசமான சூழல்களுக்கு இடையிலும் இந்தியாவின் பொது அரசாங்கக் கடன் 2005-2006இல் 81 சதவீதத்தில் இருந்து 2021-2022இல் 84 சதவீதமாக அதிகரித்தது. பின்னர் 2022-2023இல் 81 சதவீதமாக குறைந்தது,” என அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இதே கருத்தை இந்திய நிதி அமைச்சகமும் வலியுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையிலேயே, சாதகமான சூழல்களில் இந்தியாவின் ஜிடிபி விகிதத்திற்கு ஏற்ப இந்தியாவின் பொது அரசாங்கக் கடன் 70%க்கும் குறைவாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
கோவிட்-19, உலகளாவிய நிதி நெருக்கடிகள், ரஷ்யா-யுக்ரேன் போரைப் போன்ற புவிசார் அரசியல் நெருக்கடிகள் போன்ற மோசமான சூழ்நிலைகளிலேயே இந்தியாவின் கடன் அதிகரிக்கும் என ஐ.எம்.எஃப். அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அது “தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக” அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே காலகட்டத்தில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் ஜிடிபி விகிதத்திற்கு ஏற்ப கடன் சுமை முறையே 160, 140, 200 சதவீதம் அதிகரிக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை நிதியமைச்சகம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
“சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீடுகள் அனுமானங்களே, அவை உண்மை நிலையைப் பிரதிபலிக்கும் வகையில் இல்லை” என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
உண்மை நிலை என்ன?
இந்திய அரசு சொல்வது போல் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை உண்மை நிலையைப் பிரதிபலிக்கவில்லையா? அல்லது இது இந்திய அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையா?
முதலில் இந்த அறிக்கை பொது அரசாங்க கடன் குறித்துப் பேசுகிறது. அதாவது மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளின் கடன் அளவைச் சேர்த்து 100 சதவீதம் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் மத்திய அரசும் சரி, மாநில அரசுகளும் சரி எவ்வளவு கடன் வைத்திருக்கலாம் என வரையறுக்கப்பட்டுள்ளது.
நிதி பொறுப்பு மற்றும் நிதிநிலை நிர்வாகச் சட்டத்தின்கீழ் (FRBM Act-எஃப்.ஆர்.பி.எம்) இந்த அளவு வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களும் தங்கள் நிதி பொறுப்புச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளன.
இந்த சட்டத்தின்கீழ், பொது அரசாங்கக் கடன் 60 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும். இதில், மத்திய அரசின் கடன் 40 சதவீதமாகவும் மாநில அரசுகளின் கடன் 20 சதவீதத்திற்கு உள்ளும் இருக்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், 2023 மார்ச் மாதத்திலேயே இந்த அளவு தாண்டிவிட்டது. இந்த காலகட்டத்தில் மத்திய அரசின் கடன் 155.6 லட்சம் கோடி ரூபாயாகவும் அல்லது 57.1% என்ற விகிதத்திலும் மாநில அரசுகளின் கடன் 28% எனும் விகிதத்திலும் இருப்பதாக, ‘மின்ட்’ இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படியென்றால், இரண்டும் சேர்ந்து 85% கடன் உள்ளது. இது இந்திய பொருளாதாரத்தைப் பாதிக்குமா, இல்லையா என்பதில் பொருளாதார நிபுணர்கள் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றனர்.
பொருளாதார ஆலோசகர் சோம வள்ளியப்பன் இதுதொடர்பாக பிபிசியிடம் பேசுகையில், “நாட்டில் இயற்கைப் பேரிடர் உள்ளிட்ட அசாதாரண சூழல்கள் ஏற்பட்டால் இப்படியான பாதிப்புகள் இருக்கும் என்பதன் அனுமானம்தான் இந்த அறிக்கை. அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் அதே சூழல்களில் கடன் தொகை பல மடங்கு அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்றார்.
ஐ.எம்.எஃப் அறிக்கையில் உண்மை உள்ளதா?
ஒப்பீட்டு அடிப்படையில் இந்தியா நல்ல நிலைமையிலேயே இருப்பதாகக் கூறும் சோம வள்ளியப்பன், “அமெரிக்கா, பிரிட்டன், சீனா போன்ற நாடுகள் மற்ற நாடுகளிடம் வாங்கியிருப்பதைக் கடன் எனக் கூறுவார்கள். ஆனால், இந்தியாவில் பெரும்பாலும் உள்நாட்டிலேயே கடன் வாங்குவார்கள். அதில் பெரிய பிரச்னை இல்லை. ஆகவே, இதை மோசமான அறிக்கையாகப் பார்க்க வேண்டாம்,” என்கிறார்.
ஆனால், சர்வதேச நாணய நிதியம் சரியான தகவல்களின் அடிப்படையிலேயே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாகக் கூறுகிறார், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்-இன் கௌரவ பேராசிரியர் முனைவர் உ. சங்கர்.
அவர் பிபிசியிடம் கூறுகையில், “FRMB சட்டத்தின்படி மத்திய அரசின் கடன் 40 சதவீதத்தைத் தாண்டக்கூடாது. மாநில அரசுகளின் கடன் 20 சதவீதமாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது எல்லா கடனையும் சேர்த்து 80%க்கும் அதிகமாகிவிட்டது. இதை நிரூபிக்கும் பல ஆய்வுகள் உள்ளன. மொத்த உள்நோட்டு உற்பத்தியில் 3% கடன் வாங்கிக் கொள்ளலாம் என அந்தச் சட்டம் கூறுகிறது,” என்றார்.
“இந்திய அரசு ’நாங்கள் உள்நாட்டில்தான் கடன் வாங்குகிறோம். வெளிநாட்டு கடன் குறைவு’ எனக் கூறுகிறார்கள். ஆனால், அந்த கடனை உள்கட்டமைப்புக்காகப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் பொருளாதாரம் வளர்ச்சி பெறும். அதிலிருந்து வரும் வருவாய், கடனை திருப்பி செலுத்துவதற்கும் வட்டி செலுத்துவதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.”

பட மூலாதாரம், Getty Images
ஆனால், “கடன் அதிகமாக வாங்கினால் வட்டியை வருவாயில் இருந்து அதிகமாக திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். அதனால் வேறு செலவுகளைச் செய்ய முடியாது. முதலீடுகளைச் செய்ய முடியாது. கடன் தொடர்ந்து அதிகரிக்கும்போது மற்றவர்கள் கடன் தர மாட்டார்கள். கடனை திருப்பிச் செலுத்துவதும் கடினமாக இருக்கும். இப்படி கடன் வாங்கிக்கொண்டே இருப்பது பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும்,” என்கிறார் முனைவர் உ. சங்கர்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2023-2024ஆம் ஆண்டுக்கான இரண்டாவது காலாண்டில் 7.6 சதவீதமாக உள்ளது. இது, இந்திய ரிசர்வ் வங்கி கணித்த அளவான 6.5%-ஐ விட 1.1% அதிகம். உற்பத்தித் துறையில் 13.9 சதவீதமாகவும் கட்டுமானத் துறையில் 13.3%-ஆகவும் வளர்ச்சி விகிதம் உள்ளது. பெரும்பாலும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சமீப ஆண்டுகளில் நிலையான வளர்ச்சியைப் பெற்று வருவதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
கடனைக் குறைப்பது தொடர்பாக இந்திய அரசு பல வழிகளை ஆலோசித்து வருவதாகவும் வளர்ந்து வரும் சந்தை பொருளாதாரங்களால் கடனைக் குறைக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைக் கண்காணித்து வருவதாகவும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த அக்டோபர் மாதம் தெரிவித்திருந்தார்.
‘முதலீடுகளில் கவனம் வேண்டும்’
முதலீடுகளில் கவனம் செலுத்துவதற்காகவே இந்திய அரசு கடனை அதிகரிப்பதாகத் தாம் நம்புவதாகக் கூறுகிறார், பொருளாதார நிபுணர் நாகப்பன்.
”அமெரிக்கா போன்ற முதிர்ச்சியடைந்த நாடுகளில், இதற்கு மேல் வளர்ச்சியில்லை என்னும்போது கடன் வாங்கலாம். 30 வயதுடைய ஒருவர் கடன் வாங்குவதற்கும் 80 வயதுடைய நபர் கடன் வாங்குவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
நாம் பற்றாக்குறை பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறோம். பற்றாக்குறை நிலவும்போது எப்படி திட்டங்களை நிறைவேற்றுவது?
அதனால் கடன் வாங்க வேண்டியுள்ளது. வாங்கிய கடனை வளர்ச்சி, உள்கட்டமைப்புக்குச் செலவிடும்போது இந்தக் கடன் என்பது பிரச்னையாக இருக்காது,” என்று விளக்கினார்.

பட மூலாதாரம், Getty Images
மேற்கொண்டு பேசிய நாகப்பன், 1980கள் வரை சொத்துகளை உருவாக்குவதற்காக கடன் வாங்கியதாகவும், ஆனால் கடந்த 40 ஆண்டுகளாகவே அரசு இயந்திரத்தை இயக்குவதற்கான செலவுகளைச் சமாளிக்க கடன் வாங்குகிறது என்று கூறினார்.
ஒரு கட்டத்தில், மக்கள் வரியை வைத்தே அரசாங்கத்தை நடத்துவது, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது என்ற நிலை உருவானது. ஆனால், அது இப்போது மாறத் தொடங்கியுள்ளதாகக் கூறுகிறார் அவர்.
“உள்கட்டமைப்புக்காக நிறைய செலவிடுகிறோம் என கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசு கூறி வருகிறது. இவையெல்லாம் உண்மையெனில் கடன் என்பது ஒரு பெரிய விஷயம் இல்லை. கடன் வாங்கி வீடு கட்டுகிறோமா, கல்யாணம் செய்கிறோமா என்பதில்தான் வித்தியாசம் இருக்கிறது.
வீடு கட்டினால் வாடகை செலவு மிச்சம், கல்யாண செலவு என்றால் கடனை எப்படி அடைப்பது? நாம் வீடு கட்டுவதற்காக கடன் வாங்குகிறோம் என நினைக்கிறேன்,” என உதாரணத்துடன் விளக்கினார் நாகப்பன்.
இந்திய பொருளாதாரத்தின் எதிர்மறை வளர்ச்சி

பட மூலாதாரம், Getty Images
உற்பத்தியைவிட நுகர்வு அதிகமாக இருக்கும் நாட்டில் கடன் அதிகமாகத்தான் இருக்கும் என்றும் பொருளாதார நிபுணர் நாகப்பன் கூறுகிறார். அமெரிக்கா, இந்தியா போன்றவை அத்தகைய நாடுகள். இந்த இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது.
“இந்தியாவில் 100 ரூபாய் சம்பளத்தில் 150 ரூபாய் செலவு செய்கிறோம் என்றால், 100 ரூபாயின் மதிப்பு அடுத்தடுத்த ஆண்டுகளில் உயரும். அப்போது வளர்ந்து வரும் நாடுகள் கடன் வாங்கித்தான் பொருளாதார-தொழில் வளர்ச்சிகளை ஊக்குவிக்க முடியும்,” எனத் தெரிவித்தார்.
ஆனால், பல்வேறு சர்வதேச நிதி முகமைகளின் அறிக்கைகளின்படி இந்தியா குறைவான முதலீட்டு தர மதிப்பீட்டைக் கொண்டுள்ளன. ஜூன், 2023இல் ‘எக்கனாமிக் டைம்ஸ்’ இதழில் வெளியான கட்டுரை ஒன்றில், Fitch, S&P, Moody போன்ற சர்வதேச தர மதிப்பீட்டு முகமைகள், இந்தியா குறைவான முதலீட்டு தர மதிப்பீட்டைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டியிருந்தது.
உதாரணமாக, ஃபிட்ச் முகமை கடந்த மே மாதம் வெளியிட்ட மதிப்பீட்டின்படி, ’BBB-‘ என மைனஸ் குறியீட்டில் தர மதிப்பீட்டை இந்தியாவுக்கு வழங்கியிருந்தது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது கடன் மற்றும் நிதிப் பற்றாக்குறை காரணமாக, இத்தகைய எதிர்மறை வளர்ச்சியைச் சந்தித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்