பட மூலாதாரம், Getty Images
“கதவுகளைத் திறந்து வையுங்கள், அவர் திரும்பி வரக்கூடும்…. கதவுகள் திறந்திருப்பதே ஒரு நம்பிக்கை.”
பாஜகவின் திறந்திருந்த கதவுகள் மற்றும் இந்தியா கூட்டணிக்கு அடித்தளமிட்ட நிதிஷ் குமார் அதே திறந்த கதவுகள் வழியாக மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பிய கதைக்கு, கேதர்நாத் சிங்கின் இந்த வரிகள் சிறப்பாகப் பொருந்தும்.
இந்த வருகையுடன் பிகாரில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மோதியின் உத்தரவாதம் என்ற பாஜகவின் அறிக்கைக்கு மாறாக, ‘அரசமைப்புச் சட்டம் ஆபத்தில் உள்ளது’ என்ற எதிர்க்கட்சிகளின் முழக்கம் வேகமெடுத்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 3) ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ், தீபாங்கர் பட்டாச்சார்யா, சீதாராம் யெச்சூரி, டி ராஜா, மல்லிகார்ஜுன கார்கே போன்ற தலைவர்கள் பாட்னாவில் நடைபெற்ற ’இந்தியா’ கூட்டணியின் முதல் கூட்டுப் பேரணியில் பங்கேற்றனர்.
பிகாரில் இருந்து யாரும் தங்கள் கண்களை எடுக்க விரும்பவில்லை என்பது இதன்மூலம் தெளிவாகிறது. இங்குள்ள 40 மக்களவைத் தொகுதிகள் ஆட்சி அமைப்பதற்கு எப்போதும் முக்கியமானவை. 2019இல் இங்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 39 இடங்கள் கிடைத்தன. இம்முறை இந்த இடங்களுக்கு என்ன ஆகும்?
’இந்தியா’ கூட்டணியாக இருந்தாலும் சரி, தேசிய ஜனநாயகக் கூட்டணியாக இருந்தாலும் சரி, இரண்டுமே எதையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை.
பிகாரில் 2019இல் கிடைத்த வெற்றியை மீண்டும் பதிவு செய்வது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கடினமாக இருக்குமா? வெற்றி கிடைத்தாலும் எத்தனை இடங்கள் கிடைக்கும்?
இந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவால் இதுவரை முதல்வர் பதவியைப் பெற முடியாத ஒரே மாநிலம் பிகார் என்பதால் இந்தக் கேள்வி இன்னும் முக்கியமானது. எல்லாவற்றுக்கும் மேலாக இதை ஒரு நீண்ட அரசியல் சமூக வரலாறு என்ற பின்னணியிலும் விவாதிக்கலாம். ஆனால் இப்போது காந்தி மைதானத்தின் பக்கம் திரும்புவோம்.
ஞாயிற்றுக்கிழமை ஆதரவாளர்களால் நிரம்பி வழிந்த பிரமாண்டமான காந்தி மைதானத்தைப் பார்க்கும்போது பிகாரில் போட்டி ஒருதலைப்பட்சமாக இருக்காது என்றே சொல்லலாம்.
நிதிஷின் விலகல் மற்றும் வருகை காரணமாக மாறிய தேர்தல் கணிதம்
பட மூலாதாரம், Getty Images
2019 மக்களவை தேர்தலில் நிதிஷ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தபோது இந்தக் கூட்டணி 40இல் 39 இடங்களைப் பெற்றது.
இந்தியா டுடே சமீபத்தில் நடத்திய கருத்துக்கணிப்பில், நிதிஷ் குமார் அடிக்கடி பக்கம் மாறுவது அவரது இமேஜுக்கு நிரந்தரக் கேடு விளைவித்துவிட்டதா என்று கேட்டிருந்தது. 71 சதவிகிதம் பேர் இதற்கு ஆம் என்று பதிலளித்துள்ளனர். இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேறியது, தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களை பெறுவதில் உதவி செய்யுமா? இந்தக் கேள்விக்கு 48 சதவீதம் பேர் ‘இல்லை’ என்று பதிலளித்துள்ளனர்.
கடந்த 2019 மக்களவை தேர்தலில் நிதிஷ் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தபோது இந்தக் கூட்டணி 40இல் 39 இடங்களைப் பெற்றது. ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு ஒரு இடம்கூடக் கிடைக்கவில்லை. பின்னர் நிதிஷ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸுடன் மகா கூட்டணியில் இணைந்தார்.
பாஜக வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் கூறினாலும் எதிர்க்கட்சி கூட்டணியிடம் இருந்து பாஜக கடும் சவாலை எதிர்கொள்ளக்கூடிய மாநிலமாக பிகார் பார்க்கப்பட்டது. இந்தியா பிளாக்கில் நிதீஷின் இருப்பு அதற்குப் பலம் சேர்த்தது.
சமூக அரசியலில் சாணக்கியரான நிதிஷ் குமாரின் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் குறித்த அறிவிப்பு, ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக் என வர்ணிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் தேசிய அளவில் விவாதிக்கப்பட்டார். ஓபிசி வாக்கு வங்கியின் ஒரு பெரும் பகுதியை தன்பக்கம் இழுக்கும் பாஜக, பின்னுக்குத் தள்ளப்பட்டதாகத் தோன்றியது.
ஹரியாணா, குஜராத், ராஜஸ்தான், ஹிமாச்சல், டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் போன்ற மேற்கு மற்றும் வட இந்தியாவின் இந்தி பேசும் மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்கெனவே அரசியல் உச்சத்தில் உள்ளது.
அதே நேரத்தில் தெற்கில் சிறப்பாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படும் பாஜகவுக்கு பிகாரில் சிறப்பான வெற்றியை நிலைநாட்டுவது மிகவும் முக்கியமானதாக இருந்தது. பிறகு எதிர்க்கட்சியில் இருந்து விலகி மீண்டும் பாஜக பக்கம் வந்தார் நிதிஷ்குமார். பிரதமர் மோதியுடன் ஒரு (மார்ச் 02, ஔரங்காபாத்) பேரணியில் சிரிப்பலைகளுக்கு மத்தியில் நிதிஷ் குமார், “இப்போது நான் அங்கும் இங்கும் செல்லப் போவதில்லை. நான் இனி உங்களுடன் மட்டுமே இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்,” என்றார்.
“மகாராஷ்டிராவின் அரசியல் அனைவரையும் பயமுறுத்தியது. அங்கு சிவசேனை, என்சிபி உடைந்தது. பிகாரில் உடையக்கூடிய ஒரே கட்சி ஜேடியு மட்டுமே. ஜேடியுவின் ஒரு பகுதி, வெளியில் இருக்கும் சூழலைப் பார்த்து நிதிஷ் மீது நிறைய அழுத்தம் கொடுத்தது. மேலும் தாங்கள் பாஜகவுடன் மிகவும் இயல்பாக இணைந்திருப்பதை ஜேடியு வாக்காளர்கள் காண்கிறார்கள்,” என்று டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸின் முன்னாள் பேராசிரியரும், டீனுமான புஷ்பேந்திரா கூறுகிறார்.
நிதிஷ் விலகியது எதிர்க்கட்சிகளுக்குப் பின்னடைவாகவே பார்க்கப்பட்டது.
பட மூலாதாரம், TWITTER
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் மூத்த உதவி ஆசிரியரும் எழுத்தாளருமான சந்தோஷ் சிங்
“இந்தியா கூட்டணியில் இருந்து நிதீஷை போகவிட்டது காங்கிரசின் ராஜதந்திர தோல்வி. இந்தியா கூட்டணியில் நிதிஷ் இருந்திருந்தால் பிகாரில் எதிர்க்கட்சிக்கு 25 இடங்களுக்கு மேல் கிடைத்திருக்கலாம். இதனால் எதிர்க்கட்சிக்கு தேசிய அளவில் நன்மை ஏற்பட்டிருக்கும்,” என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் மூத்த உதவி ஆசிரியரும் எழுத்தாளருமான சந்தோஷ் சிங் குறிப்பிட்டார்.
இபிசி, மகாதலித், பெண்கள் போன்ற பிரிவுகளைச் சேர்த்தால் நிதிஷ்குமாருக்கு ஆதரவாக 12-13 சதவீத வாக்குகள் இருப்பதாக நம்பப்படுகிறது.
“இவ்வளவு பெரிய கூட்டணி அமையும் போது சில நடைமுறைச் சிக்கல்கள் எழுகின்றன. ஆனால் அவர் (நிதிஷ்) மீது யாருடைய அழுத்தம் இருந்தது என்று எனக்குத் தெரியவில்லை. காத்திருக்க முடியாத அளவிற்கு பாஜகவிடம் இருந்து என்ன மாதிரியான அழுத்தம் இருந்தது என்று தெரியவில்லை. மேலும் நான் எங்கிருந்து வந்தேனோ அங்கேயே திரும்பிச் செல்கிறேன் என்று அவர் சொன்னார்,” என்று காங்கிரஸ் தலைவர் டாக்டர் ஷகீல் அகமது கான் கூறினார்.
நிதிஷ் விலகியதால் இந்தியா கூட்டணியுடன் கூடவே பாஜகவுக்கும் சவால்கள் அதிகரித்தன. இப்போது சீட் கேட்பவர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.
பாஜகவை தவிர சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி ராம் விலாஸ் (எல்ஜேபிஆர்), பசுபதி பாரஸின் ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி (ஆர்எல்ஜேபி), உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா மற்றும் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளனர்.
“நாங்கள் 100 சதவீத பாஜக இடங்களை வெல்வோம். ஜேடியு தொகுதிகளில் சில சந்தேகங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். பாஜக தொண்டர்கள் மற்றும் பிகார் மக்கள் எங்கள் திறமை மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நாங்கள் எங்கள் தொகுதிகளை வெல்ல முடியும். எங்கள் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் எல்லா தொகுதிகளிலும் தயாராகி வருகின்றனர். நிதிஷின் வருகைக்குப் பிறகு தாக்கம் இருக்கும். (ஆனால்) ஆதரவு தளத்தில் உற்சாகம் குறைந்துவிட்டது. ஜேடியு மீது எந்த அளவுக்கு இருந்திருக்க வேண்டுமோ, எங்களிடம் எந்த அளவுக்கு ஆக்ரோஷமான ஈர்ப்பு உள்ளதோ, அவர்களை நோக்கிய ஈர்ப்பு சற்று குறைவாகவே உள்ளது,” என்றார் பாஜகவின் மூத்த தலைவர் சஞ்சய் பாஸ்வான்.
வேலை வாய்ப்பு வாக்குறுதியில் ஆர்ஜேடியின் வாக்காளர்கள் உற்சாகமாக இருக்கும் அதேநேரம், நிதிஷ் குமாரின் மங்கிய இமேஜ் தேசிய ஜனநாயக கூட்டணியின் மொத்த வாக்கு சதவீதத்தையும் பாதிக்கலாம் என்ற எண்ணம் நிலவுகிறது.
சஹர்ஸாவின் தேஹத் கிராமத்தில் நிதிஷ் குமாருக்கு வாக்களிக்கும் மகாதலித் சமூகத்தினர் இந்த முறை அவருக்கு வாக்களிக்க மாட்டோம் என்று தெரிவித்தனர். தங்கள் கிராமத்தில் வளர்ச்சி வேகம் நின்று விட்டது என்று அவர்கள் குறிப்பிட்டனர். ஆனால் யாருக்கு வாக்களிப்போம் என்று அவர்கள் தெரிவிக்கவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு முன் இருக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு சவால்
பட மூலாதாரம், Getty Images
பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள்
பிகாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தகவல்கள் வெளியான பிறகு பல மாநிலங்களில் இதேபோன்ற எண்ணிக்கை குறித்த பேச்சுகள் தொடங்கியுள்ளன. இது அரசின் திட்டங்களை உருவாக்க உதவும் என்று பிகார் அரசு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களிலும் இது நடத்தப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவர்களுக்கு பங்கு அளிக்கப்பட வேண்டும் என்று அது கூறுகிறது.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பானது பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளுக்கு ஒரு முக்கியமான விஷயத்தை அளித்துள்ளது. மேலும் பாஜகவின் மதம் மற்றும் சாதி அரசியலை எதிர்க்க எதிர்க்கட்சிகள் விரும்புவதாகக் கூறப்படுகிறது.
ஓபிசியின் பெரும் பகுதியினர் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்ததால், அதை வெளிப்படையாக எதிர்க்கவோ ஆதரிக்கவோ அக்கட்சியால் முடியவில்லை. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பால் பாஜகவின் பாரம்பரிய இந்து வாக்குகள் சிதறும் அபாயம் இருப்பதாகப் பலரும் பேசத் தொடங்கினர்.
நிதிஷ் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரம் பின்வாங்கப்படாது என்று 49 சதவீதம் பேர் நம்புகிறார்கள் என்று இந்தியா டுடே இதழில் வெளியான ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. ராகுல் காந்தி தனது பொதுக் கூட்டங்களில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இழப்பு ஏற்படுமா?
ஜன் சுராஜ் ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த் கிஷோர் பிபிசியிடம் பேசுகையில், “சாதிவாரி கணக்கெடுப்பு என்ற பெயரில் இவ்வளவு முழக்கங்களை எழுப்பிய நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியை விட்டு ஓடிவிட்டார். மேலும் இந்தப் பிரச்னையை ராகுல் காந்தியின் தலையில் போட்டுவிட்டார். அதை வைத்துக்கொண்டு நாடு முழுவதும் சுற்றி வருகிறார் ராகுல் காந்தி. இதனால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இப்போது உருவாக்கப்படும் பிம்பம் என்ன? ஐந்து டிரில்லியன் பொருளாதாரம், நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வது, முற்போக்கான சிந்தனை, பெரிய முடிவுகள் என்று மோதி பேசுகிறார். ஆனால் ராகுல் காந்தி எதைப் பற்றி பேசுகிறார்? சாதி பற்றி…
அவர் (மோதி) எதிர்காலத்தை நோக்கிய பார்வையுடன் இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது, ஆனால் ராகுல் பின்னோக்கிய பார்வையுடன் இருப்பது போலத் தோற்றமளிக்கிறார்,” என்று குறிப்பிட்டார்.
“சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவிடாமல் UPA அரசைத் தடுத்தது யார்? அவர்கள் அதைச் செய்து முடித்திருந்தால் ஏன் அதை வெளியிடவில்லை? சாதிவாரி கணக்கெடுப்பு நடக்கட்டும், பிரச்னை இல்லை. ஆனால் இது தேர்தலின் மையப்புள்ளியாக ஆகமுடியுமா? என்ன ஆகும் என்று எனக்குத் தோன்றவில்லை,” என்று பிரசாந்த் கிஷோர் மேலும் கூறினார்.
சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரம் பாஜகவுக்கு பெரிய சிக்கலை உருவாக்கும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸின் சந்தோஷ் சிங்கும் நினைக்கவில்லை.
”நிதிஷ்குமாரின் கருத்தை அவர்கள் (காங்கிரஸ்) உள்வாங்கிக் கொண்டுள்ளனர். ஏனென்றால் அவர்களுக்குத் தெளிவு இல்லை. (அவர்களுக்கு) எந்தப் பிரச்னையும் கிடைக்கவில்லை. அவர்கள் (பாஜக) மதத்தைப் பற்றி பேசினால், நாங்கள் சாதியைப் பற்றி பேசுவோம் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஆட்சி நிர்வாகத்தில் அவர்களைவிட என்ன சிறப்பாகச் செய்யப் போகிறோம் என்று இவர்களால் கூற முடியவில்லை. நீங்கள் அவர்களின் தவறுகளை எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் இவர்கள் கொடுக்கப்போவது பற்றிக் கூறவில்லை,” என்றார் அவர்.
வேலையில்லா திண்டாட்டத்தால் பாஜகவுக்கு பின்னடைவா?
பட மூலாதாரம், Getty Images
2020 சட்டபேரவைத் தேர்தலில் தேஜஸ்வி யாதவ், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒரு பெரிய பிரச்னையாக்கி, தான் ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் வேலை வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
முந்தைய மாநில அரசுகள் மற்றும் கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் பாஜக அரசு இருந்தும்கூட பிகார் பின்தங்கிய நிலையில் இருப்பது ஏன் என்று பிரசாந்த் கிஷோர் தனது உரையில் கேள்வி எழுப்பி வருகிறார்.
கடந்த 2020 சட்டபேரவைத் தேர்தலில் தேஜஸ்வி யாதவ், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒரு பெரிய பிரச்னையாக்கி, தான் ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் வேலை வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
பிகாரில் ஒரு தலைவர் இவ்வாறு வேலையை தேர்தலின் மையமாக வைத்தது அதுவே முதல் முறை என்று நிபுணர்கள் கூறினர். ஆயினும் தேசிய அளவில் இதுகுறித்து ராஷ்ட்ரிய ஜனதா தளத்தால் எதுவும் செய்ய முடியாது என்பதை வாக்காளர்கள் அறிவார்கள். அப்படி இருக்கும்போது மக்களவைத் தேர்தலில் மக்கள் தங்கள் வாக்குகளை ஏன் வீணடிப்பார்கள் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
தேஜஸ்வி யாதவின் ஜன் விஷ்வாஸ் பேரணியில் பங்கேற்க 23 வயதான ஆக்கிப் அன்வர் தனது விவசாயி தந்தையுடன் சுபாலுக்கு வந்தார். இவர் பி.டெக் படித்து வருகிறார். தேஜஸ்வி யாதவ் பேரணியில் என்ன பேசுகிறார் என்பதைக் கேட்க அவர் வந்திருந்தார். தேர்தலில் இந்தியா கூட்டணி மீது அவர் அதிக நம்பிக்கை வைத்துள்ளார். வேலை கிடைக்காததால் இளைஞர்கள் மத்தியில் கோபம் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
“வேலைவாய்ப்பு பற்றி இவர்கள் பேசுகிறார்கள். வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகிவிட்டது, இளைஞர்களுக்கு வேலை வேண்டும். இளைஞர்கள் மத்தியில் ஆட்சியை மாற்ற விரும்புகிறார்கள். தேர்வு நன்றாக எழுதினால் பேப்பர் லீக் ஆகிவிடுகிறது. செய்யப்பட்ட எல்லா முயற்சியும் வீணாகிவிடுகிறது. ராகுல் காந்தி பிரதமராவார் என்று சூழல் கூறுகிறது,” என ராஷ்ட்ரிய ஜனதா தள கொடிகள் மற்றும் அதன் ஆதரவாளர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் அவர் குறிப்பிட்டார்.
வேலையின்மை மற்றும் இடப்பெயர்வு, பிகாருக்கு பெரும் சவாலாக உள்ளன. பிகாரில் இருந்து இடம்பெயர்ந்தவர்களின் புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் தெற்கு பிகாரை காட்டிலும் வடக்கு பிகாரில் இருந்து அதிக இடப்பெயர்வு உள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
பிகார் பின்தங்கியிருப்பதற்கு ஜமீன்தாரி முறை போன்ற ஆங்கிலேயர் காலத்துடன் தொடர்புடைய காரணங்கள் உட்படப் பல காரணங்கள் இருப்பதாக டாக்டர் ஷைபிள் குப்தா கூறுகிறார். ஆங்கிலேயர் ஆட்சியின் போது அநியாயமாக வளங்கள் விநியோகிக்கப்பட்டதும் ஒரு காரணம் என்றார் அவர்.
கடந்த 1990ஆம் ஆண்டின் பொருளாதார சீர்திருத்தங்களுக்குப் பிறகு நாட்டின் பல பகுதிகளில் ஐடி மற்றும் பிபிஓ துறையின் நிலைமை மாறிக்கொண்டிருந்தபோது பிகாரால் மாறி வரும் காலத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. கடந்த கால வேளாண் ஆதிக்கத்தின் உற்பத்தி முறைகளில் இருந்து விலகிச் செல்ல முடியவில்லை என்ற கருத்தும் உள்ளது.
பிகாரில் வேலையின்மை விகிதம் நாட்டிலேயே மிக அதிகமாக இருப்பதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. தனது 17 மாத பதவிக்காலத்தில் ஐந்து லட்சம் பேருக்கு வேலை கொடுத்ததாகவும், வேலையின்மைதான் உண்மையான எதிரி என்றும் ஜன் விஷ்வாஸ் யாத்திரையின்போது தேஜஸ்வி யாதவ் பிபிசியிடம் கூறினார்.
தேஜஸ்வியின் வாகன அணி சுபால் வழியாகச் சென்றபோது இளைஞர்கள் கூட்டம் தேஜஸ்வியின் பின்னால் ஓடி அவரை நோக்கி கை அசைத்து, அவரது புகைப்படங்களை கிளிக் செய்வதைப் பார்த்தோம். மறுபுறம், “வேலைவாய்ப்பு என்றால் நிதிஷ் அரசு” என்ற போஸ்டர்களும் பாட்னாவில் காணப்படுகின்றன.
கடந்த 2017இல் எதிர்க்கட்சித் தலைவராக தேஜஸ்வியின் உரை அவரது முதல் பெரிய வருகையைக் குறிப்பதாக இருந்தது. மேலும் 10 லட்சம் வேலைகள் என்ற வாக்குறுதி வெற்றி பெற்றது அவரது இரண்டாவது பெரிய வரவு,” என்று பிகார் அரசியலில் தேஜஸ்வியின் வளர்ச்சியை உன்னிப்பாகக் கவனித்து வரும் சந்தோஷ் சிங் குறிப்பிட்டார்.
“தேஜஸ்வி இப்போது மிகவும் முதிர்ந்த தலைவர். இப்போது அவர் சாதிக் கோணத்தைப் பற்றி பேசவில்லை. ஆனால் தந்தை – பகுஜன், அக்டா, மக்கள் தொகையில் பாதி (பெண்கள்) மற்றும் ஏழைகள் பற்றிப் பேசுகிறார். வேலைகள் பற்றிய பேச்சு, சாதி நடுநிலை வாக்காளர்களை இழுக்கிறது. அவர் முஸ்லிம், யாதவர் வாக்காளர்களிடம் இருந்து முன்னே செல்ல விரும்புகிறார். 2025இல் ஆர்ஜேடி மற்றும் பாஜகவின் நேருக்கு நேர் மோதலை நான் பார்க்கிறேன்,” என்றார் அவர்.
இருப்பினும், பிகாரில் வேலையின்மை பிரச்னையை அரசு வேலைகளால் தீர்க்க முடியாது. மேலும் பிகாரில் பெரிய அளவிலான தொழில்கள் வராத வரை, நிறுவனங்கள் முதலீடு செய்யாத வரை, சேவைத் துறை வேலைகள் அதிகரிக்காத வரை நிலைமை மேம்படாது என்று ஆசிய மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் அஸ்மிதா குப்தா சுட்டிக்காட்டினார்.
பாஜக முன் சோஷியலிசத்தின் சவால்?
பட மூலாதாரம், Getty Images
சோஷியலிச தலைவர்களின் நீண்ட பட்டியலில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் நிதிஷ் குமாரின் பெயர்களும் உள்ளன.
பிகாரில் சோஷியலிசத்தின் நீண்ட வரலாறுதான் இதுவரை பாஜகவை தனது சொந்த பலத்தில் அதிகாரத்திற்கு வரவிடாமல் வைத்துள்ளது என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். ஜேபி இயக்கத்தில் இருந்து உருவான பிகாரின் தலைவர்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக அம்மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
சோஷியலிச தலைவர்களின் நீண்ட பட்டியலில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் நிதிஷ் குமாரின் பெயர்களும் உள்ளன.
“நிதிஷை சோஷியலிசத்தின் உன்னதமான சட்டகத்தில் வைத்திருப்பது தவறு. அது 1994இல் முடிவுக்கு வந்தது. நிதிஷ் அதிகார அரசியல் செய்கிறார். அவர் சோஷியலிச பின்னணியைக் கொண்டவர். எனவே பல விஷயங்கள் உங்களின் வழக்கமாக ஆகிவிடுகின்றன. ஜெய்பிரகாஷ் நாராயண் மற்றும் கர்பூரி தாக்கூர் ஆகியோரிடம் பயிற்சி பெற்ற பிறகு நீங்கள் விஷமத்தனமாக வகுப்புவாத சக்தியாக இருக்க முடியாது,” என்று லாலு யாதவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய மூத்த பத்திரிக்கையாளர் நளின் வர்மா குறிப்பிட்டார்.
தேர்தலுக்கு முந்தைய எதிர்க்கட்சிகளும் பா.ஜ.க.வும்
பட மூலாதாரம், Getty Images
“காந்தியும் நேருவும் ஒரு சித்தாந்தத்தைக் கொண்டிருந்தனர். அதில் உறுதியாக இருந்தனர்.”
நிதிஷ் குமார் மற்றும் லாலு யாதவ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய பிரேம் குமார் மணி, எதிர்க்கட்சிகளின் ஏற்பாடுகளால் மகிழ்ச்சி அடையவில்லை. “எதிர்க்கட்சிகளின் அரசியல் சித்தாந்தம் சரியில்லை” என்று அவர் கூறுகிறார்.
“காந்தியும் நேருவும் ஒரு சித்தாந்தத்தைக் கொண்டிருந்தனர். அதில் உறுதியாக இருந்தனர். வேறொருவரின் முழக்கத்தை நீங்கள் திருடினால் அப்போதே நீங்கள் அதை எதிர்த்துப் போராட முடியாது. மென்மையான இந்துத்துவா என்றால் என்ன?” என்று அவர் குறிப்பிட்டார்.
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை தாக்கி வரும் காங்கிரஸ், மென்மையான இந்துத்துவாவின் பாதையைப் பின்பற்றுவதாக அதன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
“ராகுல் பாரத் ஜோடோ இயக்கத்தைச் செய்தார். அதை நாங்கள் பாராட்டினோம். இப்போது தேர்தல் நடக்க உள்ளது, இந்த புதிய பயணத்தை நீங்கள் தொடங்கியிருக்க வேண்டுமா என்ன? தேர்வுக்கு ஒரு நாள் இருக்கும்போது அது நோட்ஸ் எழுதும் நேரம் அல்ல. எழுதப்பட்ட குறிப்புகளை திரும்பத் திரும்ப படிப்பதற்கான நேரம்.
தேர்தல் மணி அடிக்கப் போகிறது, ஆனால் நீங்கள் ஒரு யாத்திரையில் இருக்கிறீர்கள். அரசியலை நகைச்சுவையாகக் கருத முடியாது. இது 24 மணிநேர வேலை. இங்கே தேஜஸ்வி யாத்திரையைத் தொடங்கினார், பிரதமர் பிகார் வந்துவிட்டார். பிறகு அமித் ஷா வருகிறார். அரசியலில் யார் தீவிரமாக உள்ளனர்?” என்று பிரேம் குமார் மணி கேள்வி எழுப்பினார்.
ராகுல் காந்தியின் யாத்திரையின் டைமிங் பற்றிய விமர்சனம் புதிதல்ல. இதுபோன்ற விமர்சனங்களை காங்கிரஸ் நிராகரித்து வருகிறது. எதிர்க்கட்சிகள் தனித்தனியாக யாத்திரை செய்வதற்குப் பதிலாக கூட்டு யாத்திரையை ஏன் மேற்கொள்ளவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
“நாங்கள் விஷயங்களைத் தீவிரத்துடன் எடுத்துக் கொள்ளவில்லை என்று சொல்லமுடியாது. நாங்கள் செய்கிறோம். ஆனால் நாங்கள் அப்படி இல்லை என்று காட்டுவது போன்ற சூழல் உருவாக்கப்படுகிறது,” என்று காங்கிரஸ் தலைவர் டாக்டர் ஷகீல் அகமது கான் கூறினார்.
மறுபுறம் சமூக மாற்றத்திற்கு அடித்தளமிட்ட பாஜகவின் முயற்சிகளை பிரேம் குமார் மணி பாராட்டுகிறார்.
“நிதிஷ் குமார் பதவியேற்றபோது அவருடன் 4 அமைச்சர்கள் பதவியேற்றனர். அவரது சொந்த சாதியைச் சேர்ந்த ஷ்ரவன் குமார், அக்டி சாதியைச் சேர்ந்த இருவர், யாதவர் ஒருவர். இவர்கள் (அக்டி மற்றும் யாதவ்) நிதிஷ் குமாரின் வாக்குவங்கி சாதிகள் அல்ல. நீங்கள் என்ன அரசியல் செய்கிறீர்கள்? பாஜக தனது மூன்று அமைச்சர்களை ஆக்கியது. ஒரு ஓபிசி, ஒரு இபிசி, ஒரு உயர் சாதி. அவர்கள் (பாஜக) அரசியல் செய்கிறார்களா அல்லது நீங்கள் அரசியல் செய்கிறீர்களா?,” என்று பிரேம் குமார் மணி வினவினார்.
பட மூலாதாரம், Getty Images
லாலு யாதவின் “ஜங்கிள் ராஜ்” பாரம்பரியம் தேஜஸ்விக்கு சுமை என்று கூறுகிறார் பிரேம் குமார் மணி.
பீம் சிங் (இபிசி) மற்றும் தரம்ஷீலா குப்தா (ஓபிசி) ஆகியோரை பாஜக மாநிலங்களவைக்கு அனுப்பியது. ஆர்ஜேடி, மனோஜ் ஜா மற்றும் சஞ்சய் யாதவ் ஆகியோரைத் தேர்ந்தெடுத்தது. காங்கிரஸ் அகிலேஷ் பிரசாத் சிங்கை அனுப்பியது. ஜேடியு நிதிஷ்குமாரின் நெருங்கிய ஆதரவாளர் சஞ்சய் ஜாவை மாநிலங்களவைக்கு அனுப்பியது.
ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் ஒருவர் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்கள் குறித்துக் கடுமையான மாற்றுக் கருத்தை வெளிப்படுத்தினார்.
லாலு யாதவின் “ஜங்கிள் ராஜ்” பாரம்பரியம் தேஜஸ்விக்கு சுமை என்று கூறிய பிரேம் குமார் மணி, “ஆர்.ஜே.டி., காங்கிரஸ், ஜே.டி.யு. என்ன அரசியல் செய்கின்றன? பாஜக அனைவரையும் சேர்க்க முயல்கிறது. லாலு பிரசாத் யாதவும், நிதிஷ் குமாரும் மத்திய அமைச்சர்களாக இருந்துள்ளனர். ஆனால் கர்பூரி தாக்கூருக்கு (பாரத ரத்னா) வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் ஒருபோதும் அமைச்சரவையில் குரல் எழுப்பவில்லை,” என்றார்.
“அவர்களின் (பாஜக) அரசியலை நீங்கள் பாசிஸ்ட் என்று அழைக்கலாம், அதை வலதுசாரி என்று அழைக்கலாம், நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அவர்கள் செய்யும் சமூக மாற்றத்தை நீங்கள் செய்யவில்லை. ஆனால் முழக்கம் உங்களுடையதாக இருந்தது. அவர்கள் குடியரசு தலைவர் பதவிக்கு இரண்டு வேட்பாளர்களை முன்வைத்தனர். ஒருவர் தலித், மற்றவர் பழங்குடியினர். ராஜஸ்தானில் ஒரு பிராமணர், குஜராத்தில் ஒரு குர்மி, மத்திய பிரதேசத்தில் ஒரு யாதவர் மற்றும் சத்தீஸ்கரில் ஒரு பழங்குடியினர் முதலமைச்சராக உள்ளனர்.”
லாலு யாதவின் பாரம்பரியத்தை ஒரு சுமை என்று அழைப்பதில் எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான நளின் வர்மா, உடன்படவில்லை. மேலும் மனோஜ் ஜா மற்றும் சஞ்சய் யாதவை மாநிலங்களவைக்கு அனுப்புவதன் மூலம் தேஜஸ்வி புதிய குழுவை உருவாக்குகிறார் என்று அவர் கூறுகிறார்.
“கட்சி நினைப்பது முற்றிலும் சரி. சோஷியலிச அரசியல் என்றால் அதில் பிராமணர்கள் இருக்கமாட்டார்கள் என்று அர்த்தம் இல்லை. சோஷியலிச இயக்கத்தில் சிவானந்த் திவாரி, ரகுநாத் ஜா எனப் பல பிராமணர்கள் இருந்துள்ளனர். இப்போது அவர்களுக்குப் பதிலாக புதிய முகங்கள் வந்துள்ளன,” என்று அவர் குறிப்பிட்டார்.
இயக்கங்களின் பூமியாக இருந்துள்ள பிகார், அரசியல் நிலமையை எப்போதும் சூடாகவே வைத்திருக்கிறது. சாமானிய மக்கள் மத்தியில் நிலவும் சலசலப்பு, அரசியல்வாதிகளை தங்கள் அம்புக்கூடையில் இருக்கும் ஒவ்வோர் அம்பையும் பிரயோகிக்க நிர்பந்திக்கும். ஆனால் அம்பு இலக்கைத் தாக்குமா என்பதே மிகப்பெரிய கேள்வி!
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
