தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு முழு விவரம்

தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு முழு விவரம்

தன்பாலின திருமணம்

பட மூலாதாரம், Getty Images

தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருமணம் என்பது அரசியல் சாசனத்தின்படி அடிப்படை உரிமை இல்லை எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

எனினும் ரேஷன் கார்டுகள், ஓய்வூதியம் உள்ளிட்டவை தொடர்பான உரிமைகளை தன்பாலின தம்பதிகளுக்கு வழங்குவது தொடர்பாக குழு அமைக்க மத்திய அரசு அளித்த பரிந்துரகளை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

தன்பாலினத் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 17) வழங்கியது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உட்பட ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, நான்கு தீர்ப்புகளை வழங்கியது.

என்ன சொல்கின்றன இந்தத் தீர்ப்புகள்?

தன்பாலினத் தம்பதிகள், இந்திய உச்சநீதிமன்றம், LGBTQ+

பட மூலாதாரம், Getty Images

‘திருமணம் அடிப்படை உரிமை கிடையாது’

ஒருமித்தத் தீர்ப்பு வழங்கப்படவில்லை எனினும், ஐந்து நீதிபதிகளும் கீழ்கண்டவற்றில் ஒத்துப்போயினர்:

  • திருமணத்திற்கான உரிமையை அடிப்படை உரிமையாக அரசியலமைப்பு உறுதிப்படுத்தவில்லை
  • ரேஷன் கார்டுகள், ஓய்வூதியம், பணிக்கொடை, மற்றும் வாரிசு ஆகிய விஷயங்கள் குறித்த தன்பாலின தம்பதிகளின் கோரிக்கைகளைப் பரிசீலிக்கவும் அவர்களுக்கு உரிமைகள் மற்றும் சலுகைகளை வழங்குவது குறித்தும் பரிசீலிக்கவும், அமைச்சரவைச் செயலர் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைப்பதாக சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தாவின் முன்மொழிவு ஏற்கப்படுகிறது.
  • சிறப்பு திருமணச் சட்டம் மற்றும் வெளிநாட்டு திருமணச் சட்டத்திற்கு எதிரான அரசியலமைப்புச் சட்டம் சார்ந்த எதிர்ப்பு செல்லுபடியாகாது.
  • LGBTQ+ சமூகத்தினருக்கு எதிரான பாகுபாடுகளைக் களைய சட்டம் வேண்டும்.
  • திருநர்கள் மற்றும் இடைப்பாலின நபர்கள் ஏற்கெனவே உள்ள சட்டங்களின் கீழ் திருமணம் செய்து கொள்ளலாம் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
தன்பாலினத் தம்பதிகள், இந்திய உச்சநீதிமன்றம், LGBTQ+

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்குத் தங்கள் துணையைத் தேர்ந்தெடுக்க உரிமை உண்டு, என்று கூறினார்

‘தன்பாலின ஈர்ப்பாளர்களுக்குத் தங்கள் துணையைத் தேர்ந்தெடுக்க உரிமை உண்டு’

முதலில் தனது தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், சிறப்பு திருமணச் சட்டத்தை ரத்து செய்ய முடியாது, ஆனால் தன்பாலினத் ஈர்ப்பாளர்களுக்குத் தங்கள் துணையைத் தேர்ந்தெடுக்க உரிமை உண்டு, என்று கூறினார்.

“தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கவில்லை என்பதற்காக சிறப்பு திருமணச் சட்டத்தை அரசியலமைப்புக்கு முரணாக நடத்த முடியாது,” என்று தனது தீர்ப்பில் அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், சிறப்பு திருமணச் சட்டம் ரத்து செய்யப்பட்டால், அது நாட்டை சுதந்திரத்திற்கு முந்தைய [பழமைவாத] காலகட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றார். சிறப்பு திருமணச் சட்டத்தில் புதிய வார்த்தைகளைச் சேர்ப்பது சட்டமன்றத்தின் அதிகாரத்தின்கீழ் வரும் என்றார்.

LGBTQ+ மக்களுக்கு ஒரு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்து ஒன்றாக வாழ உரிமை உண்டு என்றும், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும், இதனால் இந்த தம்பதிகள் எந்த தொந்தரவும் இல்லாமல் ஒன்றாக வாழ முடியும் என்று தலைமை நீதிபதி கூறினார்.

முக்கியமாக, தன்பாலீர்ப்பு என்பது நகர்ப்புற அல்லது உயரடுக்கு மக்களுக்கானது மட்டுமல்ல என்று தனது முடிவில் தலைமை நீதிபதி கூறினார். நாட்டின் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் வாழும் மக்களிடையேயும் இது உள்ளது என்றார்.

தன்பாலினத் தம்பதிகள், இந்திய உச்சநீதிமன்றம், LGBTQ+

தலைமை நீதிபதி அளித்த வழிகாட்டுதல்கள் என்ன?

LGBTQ+ சமூகத்தினரின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் கீழ்க்கண்ட வழிமுறைகளை வழங்கினார்:

  • LGBTQ+ மக்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டப்படக்கூடாது, இதனை உறுதிசெய்ய வேண்டும்
  • LGBTQ+ மக்கள் சேவைகளைப் பெறுவதில் பாகுபாடு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்
  • தன்பாலீர்ப்பு எனபது ஒரு மனநோய் அல்ல எனும் விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்
  • வன்முறையைச் சந்திக்கும் LGBTQ+ சமூகத்தினருக்கு உதவ பாதுகாப்பு மையங்களையும், இலவச உதவி எண்களையும் நிறுவவேண்டும்
  • இடைபாலின குழந்தைகளுக்கு பாலின மாற்றுச் சிகிச்சைகளை வலிந்து செய்யக்கூடாது
  • ஒருவர் தாம் என்ன பாலினத்தவர் என்று உணர்கிறாரோ அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்
  • யாரையும் ஹார்மோன் சிகிச்சைக்குக் கட்டாயப்படுத்தி உட்படுத்தக்கூடாது

காவல்துறையினருக்கு:

  • LGBTQ+ சமூகத்தினரை காவல் நிலையத்திற்கு வரவழைத்தோ, அவர்கள் வீட்டிற்குச் சென்றோ துன்புறுத்தலுக்கு உள்ளாக்கக் கூடாது
  • தன்பால் ஈர்ப்பாளர்களை அவர்கள் பெற்றோருடன் செல்லுமாறு வற்புறுத்தக்கூடாது
தன்பாலினத் தம்பதிகள், இந்திய உச்சநீதிமன்றம், LGBTQ+

பட மூலாதாரம், Getty Images

தன்பாலினத் தம்பதிகள் குழந்தையைத் தத்தெடுக்க முடியுமா?

மேலும், ஓரின சேர்க்கையாளர்கள் உட்பட திருமணமாகாத தம்பதிகள் கூட்டாக குழந்தையை தத்தெடுக்கலாம் என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியுள்ளார்.

ஆண்-பெண் தம்பதிகள் மட்டுமே நல்ல பெற்றோராக இருக்க முடியும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் சட்டத்தை உருவாக்க முடியாது என்றும், இது தன்பாலினத்தவர்களுக்கு எதிரான பாரபட்சத்திற்கு வழிவகுக்கும் என்றும் கூறினார்.

திருமணமான ஆண்-பெண் தம்பதிகள் மட்டுமே ஒரு குழந்தையை நிலையாக வளர்க்க முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், திருமணமாகாத தம்பதிகள் தங்கள் உறவுகளில் தீவிரம் காட்டுவதில்லை என்று கருத முடியாது என்றும் தலைமை நீதிபதி கூறினார்.

ஆனால் 3 நீதிபதிகள் இதற்கு எதிரான தீர்ப்பை வழங்கியிருக்கின்றனர்.

‘தன்பாலின திருமண உரிமையை நீதிமன்றம் வழங்க முடியாது’

தன்பாலின திருமணங்களை நாடாளுமன்றம் வரை சட்டப்பூர்வமாக்குவதற்கு நீதிபதி கவுல் ஒப்புக்கொண்டார்

அமர்வில் உள்ள இரண்டாவது மூத்த நீதிபதியான சஞ்சய் கிஷன் கவுல், தனது தீர்ப்பில், பழங்காலத்திலிருந்தே ஒரே பாலின உறவுகள் பாலியல் செயல்பாடுகளின் அடிப்படையில் மட்டுமல்லாமல், அன்பையும் உணர்ச்சிபூர்வமான ஆதரவையும் பரஸ்பர அக்கறையையும் வளர்க்கும் உறவுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றார்.

“திருமணம் என்பது வரலாற்று ரீதியாக வளர்ச்சியடைந்து பல்வேறு சமூகப் பணிகளுக்குச் சேவை செய்தது. அதன் நீண்ட வரலாற்றில் பின்னர்தான் அது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு, குறியிடப்பட்டது. இருப்பினும், இந்தச் சட்டங்கள் ஆண்-பெண் உறவுகளை மட்டுமே அங்கீகரித்தன,” என்றார்.

மேலும், இத்தருணம், LGBTQ+ மக்களுக்கு எதிரான வரலாற்று அநீதி மற்றும் பாகுபாடுகளை சரிசெய்வதற்கான வாய்ப்பு என்றார் அவர். “எனவே அத்தகைய திருமணங்களுக்கு உரிமைகளை வழங்குவதற்கு நிர்வாகம் தேவைப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

தன்பாலினத் தம்பதிகள் அடிப்படைத் தேவைகளைப் பெறுவதில் பாரபட்சம் இலாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியதை நீதிபதி கவுல் எற்றுக்கொண்டார்.

ஆனால், “LGBTQ+ நபர்களுக்குத் திருமணம் செய்வதற்கான உரிமையை நீதிமன்றம் வழங்க முடியாது, ஏனெனில் அது ஒரு சட்டப்பூர்வ நடைமுறையாகும்,” என்று அவர் மேலும் கூறினார்.

தன்பாலினத் தம்பதிகள், இந்திய உச்சநீதிமன்றம், LGBTQ+

பட மூலாதாரம், Getty Images

‘தன்பாலினத் தம்பதிகளுக்கான கட்டமைப்பை உருவாக்குவது நாடாளுமன்றத்தின் வேலை’

நீதிபதி எஸ். ரவீந்திர பட்டும், LGBTQ+ மக்கள் நகர்ப்புற உயரடுக்கில் மட்டும் இருப்பவர்கள் அல்ல என்றும், சிறப்புத் திருமணச் சட்டத்தில் நீதித்துறையால் புதிய வார்த்தைகளைச் சேர்க்க முடியாது என்றும் தலைமை நீதிபதியுடன் ஒத்துப்போவதாகக் கூறினார்.

இருப்பினும், LGBTQ+ தம்பதிகளுக்கு கூட்டாக குழந்தைகளை தத்தெடுக்கும் உரிமையை வழங்குவது உட்பட பல கருத்துக்களுடன் அவர் உடன்படவில்லை. மேலும், LGBTQ+ நபர்களுக்கு திருமணம் செய்துகொள்ளும் உரிமையை நீதிமன்றம் வழங்க முடியாது, என்றார்.

அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் LGBTQ+ மக்கள் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க உரிமை உண்டு என்று நீதிபதி பட் கூறினார்.

“ஆனால் திருமணம் ஒரு சமூகக் கட்டமைப்பு என்று ஒப்புக் கொள்ளப்பட்டால், அது போன்ற கட்டமைப்பை உருவாக்க விரும்பும் சமூகத்தின் எந்தப் பிரிவினரும் நீதிமன்றத்தின் மூலம் நிவாரணம் பெறலாம் என்று அர்த்தமா?” என்று கேள்வி எழுப்பினார்.

தன்பாலினத் தம்பதிகளுக்கான சட்டக் கட்டமைப்பை நீதிமன்றத்தால் உருவாக்க முடியாது, அது நாடாளுமன்றத்தின் வேலை, என்றார்.

வழக்கு கடந்து வந்த பாதை

2019-ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து பலதன்பாலினத் தம்பதிகளும் LGBTQ+ உரிமை ஆர்வலர்களும் நாட்டின் பல உயர்நீதிமன்றங்களிலும் தாக்கல் செய்திருந்த மனுக்களை, இந்த ஆண்டு ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துக்கொண்டது.

இந்த வழக்கு விசாரணையின் தொடக்கத்தில், தன் பாலின திருமணங்களை அனுமதிப்பதன் மூலம் இந்தியா சரித்திரம் படைக்க இருப்பது போலத் தோன்றியது.

வழக்கு விசாரணையின்போது, தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, மதம் சார்ந்த தனிப்பட்ட சட்டங்களில் தலையிட மாட்டோம் என்று கூறியது.

அதே நேரத்தில், சாதிகளுக்கிடையேயான மற்றும் மதங்களுக்கிடையேயான திருமணங்களை நிர்வகிக்கும் சிறப்புச் சட்டத்தில் LGBTQ+ மக்களையும் சேர்க்க மாற்றியமைக்க முடியுமா என்பதை பார்ப்பதாகக் கூறியிருந்தது.

விசாரணைகள் அடுத்தக்கட்டத்தை எட்டியபோது, சட்டப்பூர்வமான அங்கீகாரம் எவ்வளவு சிக்கலானது என்பது தெரியவந்தது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு கூறியதைப்போல ஒரு சட்டத்தை திருத்தி மாற்றியமைப்பதன் மூலம் மட்டும் பிரச்சனை தீராது என்பது தெரியவந்தது.

ஏனெனில், விவாகரத்து, தத்தெடுப்பு, வாரிசு, பராமரிப்பு போன்ற 35 சட்டங்களையும் மற்றும் அது சார்ந்த பிற மதம் தொடர்புடைய தனிச்சட்டங்களையும் இதில் கணக்கில் கொள்ள வேண்டும்.

ஏனெனில், விவாகரத்து, தத்தெடுப்பு, வாரிசு, பராமரிப்பு போன்ற 35 சட்டங்களையும் மற்றும் அது சார்ந்த பிற மதம் தொடர்புடைய தனிச்சட்டங்களையும் இதில் கணக்கில் கொள்ள வேண்டும்.

தன்பாலின திருமணச் சட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, காதலிப்பதும் இணைந்து வாழ்வதும் ஒரு அடிப்படை உரிமை எனக் கூறினார்

தன்பாலின தம்பதிகளின் வாதம் என்ன?

திருமணம் என்பது இருவர் இணைந்து வாழும் வாழ்க்கை. ஆனால் அது ஆணும் பெண்ணும் மட்டுமே இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல என மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதாடினர்.

இந்திய அரசியலமைப்பு, அனைத்து குடிமக்களுக்கும் அவர்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ளும் உரிமையை அளிக்கிறது. பாலினத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை அரசியலமைப்பு சட்டம் தடை செய்கிறது என மனுதாரர்கள் நீதிமன்றத்தில் பலமுறை வலியுறுத்தினர்.

திருமணம் செய்து கொள்ள முடியாததால், கூட்டு வங்கிக் கணக்குகளை வைத்திருக்கவோ, இருவரும் இணைந்து சொந்தமாக ஒரு வீட்டை வைத்திருக்கவோ அல்லது ஒன்றாக குழந்தைகளைத் தத்தெடுக்கவோ முடியாமல் இருப்பதை மனுதாரர்கள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.

மேலும், திருமணத்தின் மூலம் கிடைக்கும் மரியாதை தங்களுக்கு மறுக்கப்படுவதாகவும் அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

தன்பாலின தம்பதிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது

மத்திய அரசு என்ன சொன்னது?

LGBTQ+ சமூகத்திற்கான திருமணச் சட்டத்தை கடுமையாக எதிர்த்த மத்திய அரசு, திருமணத்தின் சமூக-சட்டப் பிரச்னையை நாடாளுமன்றம் மட்டுமே விவாதிக்க முடியும் என்றும் நீதிமன்றம் இந்த விஷயத்தை விசாரிக்க உரிமை இல்லை என்றும் வாதாடினர்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, காதலிப்பதும் இணைந்து வாழ்வதும் ஒரு அடிப்படை உரிமை எனக் கூறினார். ஆனால், திருமணம் “முழுமையான உரிமை அல்ல” என்று வாதிட்டார்.

தடைசெய்யப்பட்ட உறவுகளின் பட்டியல் ஒன்று இருப்பதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். அதில், ஒரே குடும்பத்தில் உள்ள உடன் பிறந்தவர்களுடன் உறவு வைத்துக்கொள்வது கூட தடை செய்யப்பட்டதுதான் என சுட்டிக்காட்டினார்.

தன்பாலின திருமணத்தைச் சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பதற்குப் பதிலாக, தன்பாலின தம்பதிகளின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண, மத்திய அரசின் ஒரு உயர் அதிகாரி, ஒரு அமைச்சக செயலாளர் தலைமையில் குழு ஒன்று அமைப்பதாக மத்திய அரசு சார்பில் பரிந்துரைக்கப்பட்டது.

இந்தியாவில் எத்தனை LGBTQ+ மக்கள் இருக்கின்றனர்?

இந்தியாவில் LGBTQ+ மக்கள்தொகை 14 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. டிசம்பர் 2018ல் தன்பாலின உறவு குற்றமற்றதாக உச்சநீதிமன்றம் அறிவித்ததிலிருந்து, தன்பாலினசேர்க்கையை ஏற்றுக்கொள்வது அதிகரித்துள்ளது.

சமூகத்தில் இந்த மாற்றங்கள் இருந்தபோதிலும், பாலினம் மற்றும் பாலியல் மீதான அணுகுமுறைகள் பெரும்பாலும் பழமைவாதமாகவே இருக்கின்றன. இந்த சமூகத்தினர் தொடர்ந்து பாகுபாடுகளை எதிர்கொள்வதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

விசாரணையின் போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களில் ஒருவரான முகுல் ரோஹத்கி, அரசியலமைப்பின் கீழ் LGBTQ+ நபர்களை சமமாக ஏற்றுக்கொள்ள சமூகத்திற்கு சில சமயங்களில் தூண்டுதல் தேவைப்படுவதாகவும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகத்தை ஏற்றுக்கொள்ளச் செய்யும் என்றும் கூறினார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *