
இங்கிலாந்தின் ‘அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய’ ஆலைக்குள் பயிர்களை வளர்க்கும் வயல் க்லௌசெஸ்டர்ஷைர் பகுதியில் செயல்படத் துவங்கியிருக்கிறது.
வெர்டிகல் வயல் என்று அழைக்கப்படும் இதில், சாதாரண வயல்களில் வளர்க்கப்படுவதைவிட பேசில், லெட்யூஸ், மற்றும் கீரை வகைகள் மூன்று மடங்கு விரைவாக வளர்க்கப்படும்.
எப்படி? முழுவதும் கட்டுப்படுத்தப்பட தட்ப வெப்பநிலையால் இது சாத்தியமாகிறது.
“இது விவசாயத்தை ஒரு அதிநவீன தொழில்நுட்பத் தொழிற்சாலையாக மாற்றியிருக்கிறது,” என்கிறார் இந்த வயலின் தலைமை விவசாயி க்ளென் ஸ்டீஃபன்ஸ்.
ஸ்டீஃபன்ஸ் வாழ்க்கை முழுவதும் விவசாயியாக இருந்திருக்கிறார். அனைத்து வகையான பயிர்களையும் விளைவித்திருக்கிறார். “ஆனால் இது முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கிறது,” என்கிறார் அவர்.
“இதில் நிறைய தொழில்நுட்பம் உள்ளடங்கியிருக்கிறது. நிறைய பொறியியல் இருக்கிறது. நாள் முழுவதும் ஒரு கட்டடத்திற்குள்ளேயே இருக்க வேண்டியிருக்கிறது,” என்கிறார்.

தரையிலிருந்து கூரை வரை, 15 அடுக்குகள் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன
பயிர்களை விளைவிக்கும் தொழிற்சாலை செயல்படுவது எப்படி?
பார்ப்பதற்கு இது ஒரு வயலைப் போல் இல்லை. ஒரு குடோனைப்போல இருக்கிறது. பல டிரேக்களில் பலதரப்பட்ட கீரை வகைகள், பலவண்ண விளக்குகளின் கீழ் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.
தரையிலிருந்து கூரை வரை, 15 அடுக்குகள் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் தான் இதனை ‘வெர்டிகல் விவசாயம்’ என்று அழைக்கப்படுகிறது.
“மொத்தத்தில் இங்கு 14,500 சதுர மீட்டர் விளைநிலம் இருக்கிறது. இதன் வெப்பநிலை 27 டிகிரிகளில் கட்டுப்படுத்தப்படுகிறது, இதன் ஈரப்பதம் 75%-த்தில் கட்டுப்படுத்தப்படுகிறது. இது பயிர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கிறது. பேசில் எனப்படும் துளசி குடும்பத்தைச் சார்ந்த கீரை வகை விதையிலிருந்து முளைத்து அறுவடை ஆவதற்கு 18 நாட்கள்தான் ஆகிறது, இது சாதாரண விவசாய முறையைவிட மூன்று மடங்கு விரைவானதாகும். அதாவது, சாதாரண விவசாயத்தை விட இந்த முறையில் 3 மடங்கு வேகமாக கீரை வளரும்.,” என்கிறார் ஸ்டீஃபன்ஸ்.
பட மூலாதாரம், Getty Images
தலைமை விவசாயி க்ளென் ஸ்டீஃபன்ஸ்
பிரிட்டனில், சூப்பர் மார்க்கெட்களில் இந்த இலைகள் ஆண்டு முழுவதும் பைகளில் அடைத்து விற்கப்படுகின்றன. ஆனால் குளிர் காலங்களில் இவை இறக்குமதி செய்யப்பட வேண்டும்.
தான் வளர்க்கும் பயிர்கள், இறக்குமதி செய்யப்படும் பயிர்களைவிட மிகக் குறைந்த அளவே கார்பனை உமிழ்கின்றன, என்கிறார் ஸ்டீஃபன்ஸ். “ஐரோப்பா முழுதும் ட்ரக்குகளில் இந்தப் பயிர்களை கொண்டுவந்தோ, விமானங்களில் இவற்றைக் கொண்டுவருவதையோ காட்டிலும், நாம் கார்பனை மிச்சப்படுத்துகிறோம்,” என்று விளக்குகிறார் அவர்.

பேசில் எனப்படும் துளசி குடும்பத்தைச் சார்ந்த கீரை வகை
அதிகமான மின்சக்தி பயன்பாடு
ஆனால் இந்த வயல்களில் அதிகப்படியான மின்சக்தி பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக எல்.ஈ.டி விளக்குகளுக்காக. இவை அறிவியல் ரீதியாகக் கணக்கிடப்பட்ட ஒரு வண்ண விளக்கின் மூலம் பயிர்களின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. மெலும், காற்றோட்டம், நீரோட்டம், எண்ணற்ற தட்பவெப்பக் கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்களுக்காக மின்சக்தி செலவிடப்படுகிறது.
ஆனால், இது புதுப்பிக்கப்படக்கூடிய மின் ஆற்றல் முறைகளில் தயாரிக்கப்படுகிறது, மிகக் கவனமாகச் செலவிடப்படுகிறது.
இத்தகைய ‘வயல்கள்’ காலநிலையிலிருந்தும், வெள்ளம், வறட்சி, பூச்சிகள் ஆகியவற்றிலிருந்து மிகவும் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. இதனால், வெள்ளம், வறட்சி, பூச்சிகள் குறித்த பயம் இல்லாமல் ஆண்டு முழுவதும் பயிர்களை விளைவிக்கலாம்.
ஆனால், இதற்கு மிக அதிகப்படியான மின்சக்தி தேவைப்படுகிறது. இதனாலேயே அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் உள்ள மிகப்பெரிய வெர்டிகல் வயல் நிறுவனங்கள் சென்ற 2022 முதல் திவாலாகியும், ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வருகின்றன.
ஐரோப்பிய நிறுவனமான ‘இன்ஃபார்ம்’, ஐரோப்பியாவின் அதிகப்படியான மின்கட்டணத்தால், அங்கிருந்து வெளியேறி, குறைந்த மின்கட்டணம் வசூலிக்கும் பிற நாடுகளுக்குச் செல்வதாக அறிவித்தது.
ஜோன்ஸ் ஃபுட் கம்பெனி என்ற நிறுவனத்தின் நிறுவனராக ஜேம்ஸ் லாய்ட்-ஜோன்ஸ், க்லௌசெஸ்டர்ஷைரில் திறக்கப்பட்டிருக்கும் புதிய வெர்டிகல் வயல் மின் ஆற்றலை திறம்பட உபயோகிப்பதால் மற்ற வயல்களைக் காட்டிலும் வெற்றிகரமாகச் செயல்படும் என்றார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
