பட மூலாதாரம், PUNEET KUMAR
இரண்டு ஆண்டுகள் மட்டுமே திரையுலகில் இருந்து புகழின் உச்சியை அடைந்த நடிகை திவ்யா பாரதி 1993-இல் இறந்தபோது அவருக்கு வயது வெறும் 19. இந்தியத் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது அவரது மரணம். அவரைப்பற்றி அவருக்கு நெருங்கியவர்கள் என்ன சொல்கிறார்கள்?
மருத்துவமனை அறையொன்றில் தனது கடைசி நொடியை எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு பெண், “நேரம் கடந்துவிட்டது. என்னை அழுதுகொண்டே வழி அனுப்பாதீர்கள். இப்போது நான் மிகவும் மகிச்சியாக இருக்கிறேன். என்னுடைய நெற்றி வகிட்டில் குங்குமமும் இருக்கிறது,” என்று தனது அன்புக்குரியவர்களிடம் கூறுகிறார்.
31 ஜனவரி 1992-இல் வெளியான ‘தில் கா க்யா கசூர்’ திரைப்படத்தின் காட்சி இதுவாகும். அதில் நடிகை திவ்யா பாரதி தனது குடும்பத்தின் அரவணைப்பில் இறக்கும் போது இந்த வார்த்தைகளை கூறுகிறார்.
இந்தப் படத்திற்குப் பிறகு ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து, ஏப்ரல் 1993-இல், திவ்யா பாரதி நிஜ வாழ்க்கையில் தனது அன்புக்குரியவர்களின் அரவணைப்பில் இறந்தார். இறக்கும் போது அவருக்கு வயது வெறும் 19.
1974-ஆம் ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி பிறந்த திவ்யா பாரதி, இன்று உயிருடன் இருந்திருந்தால் அவருக்கு 50 வயது ஆகியிருக்கும். அவரது சினிமா வாழ்க்கை 2-3 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. இருந்தபோதிலும், திவ்யாவின் புகழ், திறமை மற்றும் அவரது மகிழ்ச்சியான கதைகள் இன்னும் உயிர்ப்புடன் உள்ளன.
திவ்யா மகிழ்ச்சியான, விளையாட்டுத்தனமான, சுதந்திரமான, திறமையான, அற்புதமான நடிகை. பெரிய கண்கள் மற்றும் முகத்தில் அற்புதமான வசீகரம் கொண்ட பெண். அவரை குறித்து மற்றவர்கள் விவரிக்கும்போது இந்த வார்த்தைகளையே அதிகம் பயன்படுத்தியிருக்கின்றனர்.
1992-இல் வெளியான ‘தீவானா’ திவ்யா பாரதியின் சினிமா வாழ்க்கையில் பெரிய வெற்றியைப் பெற்றது. ‘தீவானா’ தயாரிப்பாளர் குட்டு தனோவா கூறும்போது, “திவ்யா பாரதி ஒரு அற்புதமான நடிகை, ‘ஒரே டேக்’கில் நடிப்பார். நடன இயக்குநர் ஒருமுறைதான் நடன அசைவுகளை ஆடிம் காட்டுவார், உடனே திவ்யா ‘ஷாட்’ எடுங்கள் என்று சொல்வார். அவருக்கு ஒத்திகை கூட தேவையில்லை. ‘ஐசி தீவாங்கி’ படத்தின் ஷூட்டிங் சிம்லாவில் இருந்தது, திவ்யா பாரதி 104 டிகிரி காய்ச்சலையும் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். மூன்று நாட்களில் பாடலை முடிக்க வேண்டும், ஆனால் நாங்கள் மறுத்தாலும், திவ்யா ஓய்வில்லாமல் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்,” என்றார்.
ஜீதேந்திராவின் கதாநாயகியாக விரும்பிய திவ்யா
பட மூலாதாரம், PUNEET KUMAR
திவ்யா பாரதி குறுகிய காலமே திரையுலகில் இருந்தார், அவரைப் பற்றி தெரிந்துகொள்ள, அவருடைய இரண்டு மூன்று வீடியோ நேர்காணல்கள் மட்டுமே உள்ளன. அவர் கூறும் வார்த்தைகளுக்கான அர்த்தத்தை அறியும் முயற்சியில் நீங்கள் அந்த வீடியோக்களை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டியிருக்கும்.
உதாரணமாக, ஒரு பழைய வீடியோ நேர்காணலில், அவரது லட்சியம் என்ன என்று கேட்டால், “உச்சத்தை அடைவதே என் கனவு,” என்று கூறுகிறார். “ஆனால் யாருடைய உதவியும் தேவையில்லை. நான் என்னவாக விரும்புகிறேனோ, நானாகவே அதை அடைவேன்,” என்கிறார்.
இதைக் கேட்டதும், உலகை வெல்ல விரும்பும் தன்னம்பிக்கை, பெருமை மற்றும் லட்சியம் கொண்ட ஒரு இளம்பெண்ணின் பிம்பம் வெளிப்படுகிறது.
மும்பையில் வசித்துவந்த திவ்யா பாரதி, மாணிக்ஜி கூப்பர் டிரஸ்ட் பள்ளியில் படித்து வந்தார். அங்கு ஃபர்ஹான் அக்தர் மற்றும் ஷர்மான் ஜோஷி ஆகியோரும் அவரது ‘பேட்ச்’சில் இருந்தனர். ஆனால் திவ்யா படிப்பில் ஆர்வம் காட்டவில்லை.
பட மூலாதாரம், RT CHAWLA
திவ்யா பாரதியின் பெற்றோர் இப்போது இந்த உலகில் இல்லை, ஆனால் அவர்கள் 2012-இல் பாலிவுட் ஹங்காமாவுக்கு ஒரு நீண்ட, மூன்று பகுதிகள் கொண்ட பேட்டிகளை வழங்கியுள்ளனர். இதில் திவ்யாவின் தாயார் திவ்யா பற்றி மனம் திறந்து பேசியிருந்தார்.
“திவ்யா பாரதிக்கு படிப்பில் நாட்டம் இல்லை. நான் அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பேன். ஆனால் அவள் கண்ணாடி முன் ‘ஹிம்மத்வாலா’ படத்தின் ‘ஸ்டெப்’களைச் செய்து கொண்டிருப்பாள். ஜீதேந்திரா அவளுக்கு மிகவும் பிடித்த ஹீரோவாக இருந்தார். ஜீதேந்திராவுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என விரும்பினாள். திவ்யா பள்ளியில் படிக்கும்போதே நடிப்பதற்கான வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. கோவிந்தாவின் சகோதரர் கீர்த்தி குமார் திவ்யாவை ‘ராதா கா சங்கம்’ படத்திற்காக ஒப்பந்தம் செய்தார். ஆனால், அந்த படத்திலிருந்து திவ்யா வெளியேற்றப்பட்டார்,” என்று அந்த பேட்டியில் அவருடைய அம்மா கூறியுள்ளார்.
சதீஷ் கவுசிக், ‘பிரேம்’ படத்துக்கு திவ்யா பாரதியின் பெயரை பரிந்துரைத்தார். ஆனால் பின்னர் அவர் தபுவுடன் இணைந்து நடித்தார். திவ்யா அந்த படத்திலிருந்தும் வெளியேறினார். ‘சௌதாகர்’ படத்தில் சுபாஷ் கய்க்கும் இதேதான் நடந்தது.
இன்னும் சொல்லப்போனால் இந்திக்கு முன்பே 1990-இல் வெங்கடேஷுடன் திவ்யா பாரதி நடித்த ‘போபிலி ராஜா’ தெலுங்கு படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
இந்திக்கு முன்பே தெலுங்கில் பிரபலமான திவ்யா
பட மூலாதாரம், PUNEET KUMAR
பிபிசி தெலுங்கின் கவுதமி கானிடம் பேசிய திவ்யா பாரதியின் முதல் படத்தின் இயக்குனர் பி கோபால், “எங்கள் தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவிடம் திவ்யாவை அறிமுகப்படுத்தியவர் போனி கபூர். உடனே அவரை தெலுங்கு படத்துக்கு ஒப்பந்தம் செய்தோம். திவ்யாவுக்கு படங்களில் ஆர்வம் இல்லை. அவள் ஒரு குழந்தை. ஷாப்பிங்கிற்கு வந்திருப்பது போல் இருந்தார். அப்போது சுரேஷ் பாபு, திவ்யா நடிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அதன்பிறகு எல்லாம் தானாகவே சரியாகிவிடும் என்றும் அன்புடன் விளக்கினார். அவள் மிகவும் இனிமையாக இருந்தாள். அவர் தெலுங்கு படங்களில் இருந்து பெரிய நட்சத்திரமானார், பின்னர் பாலிவுட்டிலிருந்தும் வாய்ப்புகள் வரத் தொடங்கின,” என்றார்.
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களின் வெளியீட்டுக்குப் பிறகு, ராஜீவ் ராய் 1992-இல் ‘விஸ்வாத்மா’ படத்தில் அவருக்கு இந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
1992-ஆம் ஆண்டு ‘விஸ்வாத்மா’, ‘ஷோலா அவுர் ஷப்னம்’, ‘தில் கா க்யா கசூர்’ — ஒரே மாதத்தில் புதிய கதாநாயகி நடித்த மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. ஜூன் 1992-இல் வெளியான ‘தீவானா’ ரிஷி கபூர் மற்றும் ஷாருக்கான் இடையே திவ்யபாரதி அனைவரையும் கவனிக்கும்படி செய்தார். இந்த படத்தின் மூலம் அவர் பிரபலமானார்.
ஃபிலிம்பேர் இதழின் இந்த வரியிலிருந்து திவ்யா பாரதியின் பிரபலத்தை அறியலாம், “சுனில் ஷெட்டியின் முதல் படம் ‘பால்வான்’ வெளிவந்தபோது, திவ்யபாரதி ஒரு நட்சத்திரமாகிவிட்டார். அவர் அதிக சம்பளம் கோரினார்.”
குறும்புக்காரப் பெண் நடிப்பில் செய்த அற்புதம்
பட மூலாதாரம், PUNEET KUMAR
திவ்யா பாரதியின் நடிப்பு பற்றி, பாலிவுட் ஹுங்காமாவுக்கு அளித்த பேட்டியில், திவ்யாவின் தாயார் கூறியிருப்பதாவது, “பஹ்லஜ் நிஹலானியின் ‘ஷோலா அவுர் ஷப்னம்’ படத்தில் திவ்யாவுக்கு சீரியஸான காட்சி இருந்தது. ஆனால் திவ்யா கிரிக்கெட் விளையாடுவதில் மும்முரமாக இருந்தாள். இயக்குனர் டேவிட் தவான் திவ்யாவை சீரியஸாக இருக்கச் சொன்னார். திவ்யா திரும்பி, ‘நான் இறக்கும் காட்சி இருந்தால், நான் உண்மையில் சாக வேண்டுமா? நீங்கள் கேமராவை ‘ஆன்’ செய்யுங்கள், நான் தவறு செய்தால் படத்தை விட்டு வெளியேறுகிறேன்’ என்று திவ்யா கூறினார். அப்போது அந்த சோகமான பாடல் படமாக்கப்பட்டது. இரவில் அந்த பாடல் படமாக்கப்பட்டது. அப்போது இயக்குனர் டேவிட்டின் கண்களில் நாங்கள் கண்ணீரை பார்த்தோம்,” என்றார்.
திவ்யா பாரதியின் மரணத்திற்குப் பிறகு முதலில் மருத்துவமனைக்கு வந்தவர்களில் தயாரிப்பாளர் பஹ்லஜ் நிஹலானியும் ஒருவர்.
பிபிசி செய்தியாளர் மது பாலுடன் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட நிஹலானி, “திவ்யா பாரதி வேடிக்கையான பெண். ‘ஷோலா அவுர் ஷப்னம்’ படத்தில் எமோஷனல் காட்சி இருந்தது, ஆனால் அந்த வசனம் வந்தவுடன் சிரிக்க ஆரம்பித்தார். ஒருமுறை 32 ‘டேக்’குகள் எடுத்தாலும் அவர் சிரிப்பை நிறுத்தவில்லை. ஆனால் அவள் தன் வேலையில் அர்ப்பணிப்புடன் இருந்தாள். படப்பிடிப்பின் போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது, ஆனால் படப்பிடிப்பை நிறுத்த அவர் என்னை அனுமதிக்கவில்லை. சண்டை காட்சிகளில் தொடர்ந்து நடித்தார். அப்போது அவர் காலில் ஒரு ஆணி குத்தியது. இதனால், நான் மறுநாள் காலை படப்பிடிப்பை ரத்து செய்திருந்தேன். ஆனால், அவள் காலை 6 மணிக்கு வந்து படப்பிடிப்பை முடித்தார்,” என்றார்.
‘தீவானா’ இயக்குனர் குட்டு தனோவா கூறுகையில், அவர் வேலையின் போது அற்புதங்களைச் செய்ததாகவும், வேலைக்கு வெளியே குறும்பு செய்ததாகவும் கூறுகிறார். அவர் கூறுகையில், “அவள் மிகவும் குறும்புத்தனமாக இருந்தாள். ‘தீவானா’ படத்துக்கான ‘பயலியா…’ பாடலை ஊட்டியில் படமாக்கிக் கொண்டிருந்தோம். ‘ஷாட்’டுக்கு முன் அனைவரும் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். இயக்குனரும் ரிஷி கபூரும் நாற்காலியில் அமர்ந்திருந்தனர். காலி நாற்காலி இல்லாததால், திவ்யா பாரதி ரிஷியின் மடியில் அமர்ந்து அவருடன் விளையாடிக் கொண்டிருந்தாள். ரிஷி கபூர் திவ்யபாரதியிடம், ’உனக்கு சுமார் 18 வயது, எனக்கு 39 வயது. நான் உன்னைவிட சுமார் 21 வயது மூத்தவன்’ என்றார். ஆனாலும் திவ்யாவின் குறும்புகள் தொடர்ந்தன,” என்றார்.
சஜித் நதியாத்வாலாவுடன் திருமணம்
பட மூலாதாரம், RT CHAWLA
திவ்யா பாரதியைப் பற்றி புகைப்படக் கலைஞர் ஆர்.டி.சாவ்லா என்னிடம் கூறுகையில், “அன்று திவ்யாவின் பிறந்தநாள். எந்த நட்சத்திரம் வந்தாலும் திவ்யா குதூகலமாகி அவருடன் புகைப்படம் எடுக்குமாறு கூறுவார். ஜாக்கி ஷெராஃப், கோவிந்தாவோடு புகைப்படம் எடுக்குமாறு என்னிடம் கூறியிருக்கிறார். ஆனால் கடைசி நாட்களில் திவ்யாவின் குணம் கொஞ்சம் மாறியிருந்தது. அந்த நாட்களில் மெஹபூப் ஸ்டுடியோவில் ‘ரங்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. நான் அவருக்கு ’ஹாய்’ சொன்னேன் ஆனால் திவ்யா பதில் சொல்லவில்லை. நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்,” என்றார்.
அதேசமயம், திவ்யா பாரதியின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருந்தன. குறிப்பாக, தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவை திவ்யா திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வந்தன. அப்போது திவ்யாவுக்கு 18 வயதுதான். இருவரும் ‘ஷோலா அவுர் ஷப்னம்’ படப்பிடிப்பில் சந்தித்தனர். திவ்யாவின் தாயாரின் பேட்டியின்படி, ஆரம்பத்தில் இந்த திருமணத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லை, ஆனால் பின்னர் அனைவரும் அதை ஏற்றுக்கொண்டனர்.
1993-ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி இரவு திவ்யா பாரதியின் மரணச் செய்தி ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அன்று இரவு நடந்த விவரங்கள் அன்று முதல் நாளிதழ்களில் எண்ணற்ற தடவைகள் வெளிவந்துள்ளன.
ஆனால் அவரது பெற்றோர் தங்கள் பேட்டியில் கூறியது இதுதான். “அன்று மாலை திவ்யபாரதி தனக்கு சொந்த வீடு வேண்டும் என்று கூறினார். நாங்கள் அனைவரும் வீட்டைப் பார்க்கச் சென்றோம். நான் வழியில் இறங்க, திவ்யாவின் அண்ணன் அவளை ‘டிராப்’ செய்ய சென்றான். எங்கள் பணிப்பெண் நீதா லூலாவும் அவள் கணவரும் திவ்யாவின் வீட்டில் இருந்தார்கள். 15 நிமிடங்களுக்குப் பிறகு திவ்யா பால்கனியில் இருந்து கீழே விழுந்ததாக அழைப்பு வந்தது. அவள் குறும்புத்தனமாக இருந்தாள். ஜாலியாக இருக்கும்போது விபத்து நடந்திருக்க வேண்டும். அவர் தற்கொலை செய்துகொள்பவள் அல்ல. அவரை யார், ஏன் கொல்ல வேண்டும்?” என்றனர்.
அந்த நாளைக் குறிப்பிட்டு திரைப்பட புகைப்படக்கலைஞர் ஆர்.டி.சாவ்லா கூறுகையில், “நானும் எனது மகனும் இறுதிச் சடங்குக்கு சென்றபோது, திவ்யபாரதியின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. அவரது உடலை பார்த்து அழுது கொண்டே இருந்தேன். எனக்கும் திவ்யாவுக்குமான உறவு எவ்வளவு ஆழமானது என்பது யாருக்கும் தெரியாது,” என்றார். புகைப்படக் கலைஞரான அவர், கட்டாயத்தின் பேரில், இறுதிச் சடங்கின் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டிருந்தார்.
திவ்யா பாரதியின் மரணம்
பட மூலாதாரம், PUNEET KUMAR
திவ்யா பாரதியின் மரணத்திற்குப் பிறகு திரைப்பட பத்திரிகையாளர் ட்ராய் ரிபீரியா ‘ஸ்டார்டஸ்ட்’ பத்திரிகையில் ‘தேசத்தை உலுக்கிய சோகம்’ என்ற பெயரில் கட்டுரை எழுதினார்.
அதில், “அவரது மரணம் குறித்து முதலில் அறிந்தவர்களில் நானும் ஒருவன். நள்ளிரவு 1:30 மணியளவில் திவ்யாவின் உடல் விபத்து சிகிச்சை பிரிவில் உள்ள ஸ்ட்ரெச்சரில் வைக்கப்பட்டது. கருப்பு நிற பேண்ட்டும் கருப்பு-வெள்ளை ‘போல்கா டாட்’ டாப்பும் அணிந்திருந்தார். திவ்யாவின் தந்தை மோசமான நிலையில் இருந்தார். திவ்யாவின் பெற்றோர் குழந்தைகளைப் போல அழுது கொண்டிருந்தனர். திவ்யாவின் தம்பி குணாலும் மனம் உடைந்திருந்தார். நான் என் தங்கையை விட்டு சென்றிருக்கக்கூடாது என்று அழ ஆரம்பித்தார்,” என எழுதியுள்ளார்.
பட மூலாதாரம், RT CHAWLA
“ஒரு மணி நேரம் கழித்து அவரின் கணவர் சஜித் வந்தார். திவ்யாவை பார்த்த சஜித் தரையில் விழுந்த நிலையில் அவருடைய வாயிலிருந்து நுரை வர ஆரம்பித்தது. பின்னர் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், தயாரிப்பாளர் பஹ்லஜ் நிஹலானி வந்து நிலைமையைச் சமாளித்தார். அதற்குள் போனி கபூர், கோவிந்தா, கமல் சாதனா, சைஃப் எல்லோரும் வந்து சேர்ந்தனர். திவ்யா பாரதியின் தாயார் வந்ததும் மகளின் மார்பில் தலை வைத்தாள். பின்னர், அமைதியாக கிளம்பிய அவர், சிறிது நேரம் கழித்து மீண்டும் திரும்பினார்,” என குறிப்பிட்டுள்ளார்.
திவ்யா பாரதி இறந்த பிறகு, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சியில் இருந்தனர். பிபிசியிடம் பேசிய கரீஷ்மா கபூர், “நாங்கள் ‘கூலி நம்பர் ஒன்’ படப்பிடிப்பில் இருந்தோம். ஆனால், படப்பிடிப்பில் நாங்கள் அனைவரும் மிகவும் சோகமாக இருந்தோம். காட்சியின் நடுவில் இடைவேளையின் போது, எங்கள் கண்களில் கண்ணீர் வந்தது. ஒருபுறம் நாங்கள் மிகவும் வேடிக்கையான பாடலைப் படமாக்கினோம், ஆனால் கேமராவுக்குப் பின்னால் நாங்கள் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்தோம்,” என்றார்.
மரணத்திற்குப் பிறகு நடந்த விசித்திரம்
பட மூலாதாரம், RT CHAWLA
திவ்யாவின் இறுதிச் சடங்குக்கு திரையுலகினர்.
அவரின் மரணத்துக்குப் பிறகு ‘ரங்’, ‘சத்ரஞ்ச்’, ‘தோளி முத்து’ ஆகிய படங்கள் வெளியாகின. ஆயிஷா ஜுல்காவும் திவ்யபாரதியும் ‘ரங்’ படத்தில் இணைந்து பணியாற்றியவர்கள், இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
ஆயிஷா பிபிசியிடம் பேசும்போது, ”அவர் எப்போதும் ‘சீக்கிரமாக செய்யுங்கள், வாழ்க்கை மிகச் சிறியது’ என்று கூறுவார். அவர் அதை தெளிவாகச் சொல்லவில்லை. ஆனால், அவருக்கு ஓர் உந்துதல் இருந்தது. அவர் எல்லாவற்றையும் விரைவாகச் செய்தார். தனக்கு ஒன்றுமே புரியவில்லை என அவரே கூறியிருக்கிறார்,” என்றார்.
“நம்மோடு அதிக காலம் இருக்க மாட்டோம் என்பது அவருக்கு தெரிந்திருக்கும் போலிருக்கிறது. அவர் இறந்த பிறகு, ஒரு விசித்திரமான விஷயம் நடந்தது. சில மாதங்களுக்குப் பிறகு, நாங்கள் ‘ரங்’ திரைப்படத்தின் வெள்ளோட்டக் காட்சியை பார்க்கச் சென்றோம். அப்போது, திவ்யா பாரதி திரையில் வந்தவுடன் அந்த திரையே விழுந்துவிட்டது. இது, எங்களுக்கு விசித்திரமாக இருந்தது,” என்றார்.
திவ்யபாரதியின் கணவர் சஜித் பற்றி குறிப்பிடுகையில், அவரின் மரணத்துடன் தொடர்புடைய சதி பற்றிய ஊகங்கள் மற்றும் பேச்சுக்கள் இருந்தபோதிலும், திவ்யபாரதியின் பெற்றோருக்கும் சஜித்துக்கும் இடையிலான உறவு மிகவும் நன்றாக இருந்தது. 2004 வரை, சஜித்தின் எல்லா படங்களிலும் ஆரம்பத்தில் திவ்யபாரதியின் புகைப்படம் இருந்தது, அதில், ‘என் அன்பு மனைவி நினைவாக’ என எழுதப்பட்டிருந்தது.
பின்னர் சஜித், வர்தா கானை மணந்தார். சஜித் இந்த விவகாரம் குறித்து ஊடகங்களில் மிகக் குறைவாகவே பேசியுள்ளார். ஆனால் வர்தா திவ்யபாரதி தொடர்பான விஷயங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்கிறார்.
அவர் ’எக்ஸ்’ தளத்தில், “திவ்யா பாரதி கடைசியாக தொட்ட அவருடைய வாசனை திரவியம் இன்னும் சஜித்திடம் உள்ளது. திவ்யா எங்கள் வாழ்வின் அங்கமாக இன்னும் இருக்கிறார். என் குழந்தைகள் திவ்யபாரதியின் படங்களை பார்க்கும் போதெல்லாம், அவரை ‘பெரியம்மா’ என்று அழைப்பார்கள். சஜித் தனது முதல் படமான ‘கிக்’ படத்தை இயக்கியபோது, அதில் ‘சாத் சமந்தர்’ பாடலைச் சேர்த்தார். திவ்யா பாரதியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தன்று நான் சஜித்தை நேர்காணல் செய்யச் சென்றிருந்ததால், எனக்கு சஜித்தை அறிமுகப்படுத்தியதில் திவ்யபாரதிக்கு தொடர்பு உள்ளது,” என பதிவிட்டுள்ளார்.
1993-இல் திவ்யபாரதியின் மரணத்திற்குப் பிறகு, லாட்லா (ஸ்ரீதேவி), மொஹ்ரா (ரவீனா), ஹசில் (கஜோல்), விஜயபாத் (தபு), தத்தா (ஜூஹி) போன்ற அவரது படங்கள் மற்ற கதாநாயகிகளால் முடிக்கப்பட்டன.
பஹ்லஜ் நிஹலானி கூறுகையில், “நடிகர்களின் நடத்தை குறித்து தயாரிப்பாளர்கள் சில சமயங்களில் பதற்றம் அடைகிறார்கள். ஆனால் திவ்யா பாரதி வித்தியாசமாக இருந்தார். படப்பிடிப்பில் குடும்பத்தினர் போல இருப்பார். கடினமான உணர்ச்சிகளை மிக எளிதில் செய்வார். ‘ஸ்ரீதேவி பார்ட் 2’ என்று அவரை சொல்வார்கள். ஒரு நல்ல நடிகை என்பதைத் தாண்டி, ஒரு நல்ல மனிதரை இத்துறை இழந்தது. அவள் கடவுளின் குழந்தை,” என்றார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
