
பட மூலாதாரம், Getty Images
நியூயார்க் நகரின் ஒரு சூப்பர் மார்க்கெட்டில், கிராப்ட் (craft) பீர் பிரிவில் வண்ணமயமான வடிவங்கள் கொண்ட நான்கு பீர் பேக்குகள் வைக்கப்பட்டுள்ளன. பழ சுவை கொண்ட பீரை விரும்புவோரை ஈர்க்க இவை வைக்கப்படுகின்றன.
பிபிசி வர்க்லைஃப் செய்தி நிறுவனத்தின் லிலியன் ஸ்டோன் கூறுகையில், “பார்ப்பதற்கு இவை மிகவும் ‘பெண்மையானவை’ எனத் தோன்றுகின்றன. இவை பெண்களுக்காக உருவாக்கப்பட்டது போலத் தோன்றுகிறது.
இதற்குக் காரணம், இவற்றின் அருகில் வைக்கப்படும் மற்ற பீர்களின் விளம்பரம். அவை ‘ஆண்மையானவை’ என்று காட்டப்படும் வகையில் செய்யப்படுகின்றன,” என்கிறார்.
இந்த அழகான பேக்கேஜிங்கை தாலியா பீர் நிறுவனம் செய்தது. அமெரிக்காவின் ப்ரூக்ளின் நகரில் உள்ள இந்த பிரூவரி அல்லது பீர் தயாரிக்கும் தொழிற்சாலையை லீன் டார்லண்ட் மற்றும் டாரா ஹாக்கின்சன் என்ற பெண்கள் நடத்துகின்றனர். அவர்கள் 2019ஆம் ஆண்டு இதைத் தொடங்கினர்.

பட மூலாதாரம், TALEA
பெரிய இயந்திரங்களின் உதவியின்றி சிறிய அளவில் பீர் தயாரிக்கும் சிறிய தொழிற்சாலைகள் கிராப்ட் பீர் தொழிற்சாலை என்று அழைக்கப்படுகிறது.
இந்த முறையில் தயாரிக்கப்படும் பீர், கிராப்ட் பீர் என அழைக்கப்படுகிறது. சமீப காலங்களில் இந்த வகை பீர் பிரபலமடைந்து வருகிறது.
கிராப்ட் பீர் தயாரிக்கும் நிறுவனங்கள் எங்களைப் போன்ற பெண்களைத் தங்கள் வாடிக்கையாளர்களாகக் கருதவில்லை என்பதே தாலியாவை நிறுவும்போது எங்களுக்கு இருந்த எண்ணம்,” என்று டார்லண்ட் மற்றும் ஹான்கின்சன் பிபிசி வர்க்லைஃபுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தனர்.
“எங்கள் குறிக்கோள் கிராப்ட் பீரை அனைவருக்குமானதாக மாற்றுவதுதான். நீங்கள் பெண், எல்ஜிபிடிக்யூ+ சமூகத்தைச் சேர்ந்தவர், சிறுபான்மையினர் அல்லது முதல் முறையாக கிராப்ட் பீரை முயன்று பார்ப்பவர் என யாராக இருந்தாலும் அவர்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்,” என்று இருவரும் கூறுகிறார்கள்.
பீர் பெண்களுக்கான பானம் இல்லையா?

பட மூலாதாரம், KEEPING TOGETHER
உலகம் முழுவதும் ஏராளமான பெண்கள் பீர் குடிப்பதை விரும்புகிறார்கள். ஆனால் பீர் குடிக்கும் வழக்கத்தில் இருந்து பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
குருகிராமில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் அதிதி சிங் பிபிசி செய்தியாளர் ஆதிர்ஷ் ரத்தோரிடம் கூறுகையில், “பெண்கள் பீர் விரும்புவதில்லை என்பது ஒரு பொதுவான கருத்து. நானும், எனக்குத் தெரிந்த பல பெண்களும் பீரை விரும்புகிறோம். ஆனால் ஒரு பார்ட்டிக்கு செல்லும்போது,நான் குடிப்பது வோட்காவா அல்லது ஒயினா என்றுதான் கேட்கிறார்கள். அதாவது, பெண்ணாக இருந்தால் பீர் குடிக்க மாட்டார்கள் என்று அனுமானித்துக் கொள்கிறார்கள்,” என்றார்.
பீர் விளம்பரங்கள் மற்றும் பிராண்டிங்கிலும் இந்தக் கருத்தே எதிரொலிக்கிறது. பீர் பெண்களின் பானம் அல்ல என்ற சிந்தனையை அவை பிரதிபலிக்கின்றன.
உலகம் முழுவதும் உள்ள பீர் பல உலகளாவிய பிராண்டுகள் மற்றும் உள்ளூர் கிராப்ட் பிரூவரிகள் ஆண்களையே முக்கிய வாடிக்கையாளர்களாகக் கருதுகின்றன. இந்தியாவில், மதுபான விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் யூடியூபில், உலகின் பல்வேறு பகுதிகளில் பிரபலமான நிறுவனங்களால் வெளியிடப்பட்ட விளம்பரங்கள் ஆண்களை மையப்படுத்தியே உருவாக்கப்படுகின்றன.
இருப்பினும், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் பல பிரூவரிகள் இப்போது பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டும் விளம்பர உத்தியைத் தவிர்க்க முயல்வதாகத் தெரிகிறது.
மில்லர் லைட் மற்றும் கொரோனா போன்ற பிராண்டுகள் தங்கள் விளம்பரங்களைப் பெண்களை நோக்கி உருவாக்கத் தொடங்கியுள்ளன என்று பிபிசி வர்க்லைஃப் கூறுகிறது. அமெரிக்காவில் பெண்கள் மது அருந்துவதில் ஆண்களைப் பின்னுக்குத் தள்ளி வருகின்றனர் என்று கணக்கெடுப்புகள் சொல்கின்றன.
இதை பீர் உற்பத்தி நிறுவனங்களும் கவனித்து வருகின்றன. இதுவரை ஆண் ஆதிக்கம் செலுத்திய தங்களது அணுகுமுறையில் மாற்றங்களைக் கொண்டு வருகின்றன.
இந்தியாவில் அதிகரித்து வரும் கிராப்ட் பீர்

பட மூலாதாரம், Getty Images
கடந்த ஆண்டு மகளிர் தினத்தையொட்டி பெங்களூருவை சேர்ந்த ஜிஸ்ட் என்ற ஒரு கிராப்ட் பிரூவரியானது ‘விமென் ஹூ லாகர்’ பிரசாரத்தின் கீழ் ஒரு சிறப்பு கிராப்ட் பீரை அறிமுகப்படுத்தியது. லாகர் என்பது குறைந்த வெப்பநிலையில் மெதுவான செயல்முறையில் நொதித்துத் தயாரிக்கப்படும் பீரை குறிக்கிறது.
‘விமென் ஹூ லாகர்’ என்பதன் பொருள்- லாகர் வகையான பீரை தயாரிக்கும் பெண்கள். இந்த பிரசாரத்தில் இந்தியாவில் பீர் தொழில்துறையுடன் தொடர்புடைய ஆறு பெண்கள் பங்கேற்றனர்.
சிலருக்கு சொந்த பிரூவரிகள் உள்ளன, சிலர் சிறிய பிரூவரிகள் நடத்துபவர்களுக்கு ஆலோசகர்களாக உள்ளனர். சிலர் பீர் தயாரிக்கத் தேவையான பொருட்களை வழங்குகிறார்கள்.
அவர்கள் ஸ்ட்ரேடோஸ்ஃபியர் என்ற பெயரில் அறிமுகப்படுத்திய பீர் சிறிது காலம் சந்தையில் கிடைத்து வந்தது. ஆனால் இந்த பீர் பெண்களுக்கு மட்டுமல்ல.
இந்த முயற்சியில் பங்கேற்ற பெண்கள் கூறுகையில், அவர்களின் நோக்கம் பெண்கள் தயாரிக்கும் பீர் பெண்களுக்கு மட்டுமே என்ற கருத்தை உடைத்தெறிய வேண்டும் என்பதுதான்.
புதிய மாற்றம்: பீர் நிறுவனங்களின் உயர் பதவிகளில் பெண்கள்

பட மூலாதாரம், Getty Images
பீர் சந்தை குறித்து தொடர்ந்து எழுதி வரும் கேட் பெர்னோட், பிபிசி வர்க்லைஃப் பிரிவைச் சேர்ந்த லிலியன் ஸ்டோன்னிடம் பேசுகையில், அவர் இப்போது விளம்பர உத்திகளின் முறையில் ஏற்படும் மாற்றத்திற்குப் பின்னால் பொருளாதார கட்டாயமும் இருப்பதாகக் கூறுகிறார்.
“மாறி வரும் கலாசாரம் பாலின அடிப்படையிலானது அல்ல. பல பெண்களும் ஆண்களும் இப்போது புதிய, புத்திசாலித்தனமான கருத்துகளை விரும்புகிறார்கள். எனவே நிறுவனங்களுக்கு இப்போது முன்பைவிட அதிக சவால் இருக்கிறது,” என்றார் பெர்னோட்.
“இதுவரை வரலாற்று ரீதியாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த பீர் தொழில்துறையின் நிறுவனங்களில் உயர் பதவிகளில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்கள் இப்போது திறந்த மனதுடன் முடிவுகளை எடுக்க முடிகிறது. பீர் சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு இதுவொரு முக்கிய காரணம்,” என்று சுட்டிக்காட்டுகிறார் பெர்னோட்.
ஹெனிகேன் அமெரிக்காவின் தலைமை நிர்வாக அதிகாரியாக மேகி டிமோனி 2021ஆம் ஆண்டில் பொறுப்பேற்றார். அதேபோல் மோல்சன் கூர்ஸ் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரியாக மிஷெல் செயின்ட் ஜாக் உள்ளார்.
இந்தியாவில் பெண்கள் நடத்தும் பல கிராப்ட் பிரூவரிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், பெரிய மது நிறுவனங்களில் உயர் பதவிகளில் பெண்கள் தங்கள் இருப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
பெண்களை மனதில் கொண்டு தயாரிக்கப்படும் பீர்

பட மூலாதாரம், Getty Images
பழைய நிறுவனங்கள் மட்டுமல்ல, புதிய நிறுவனங்களும் இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு பெண்களுக்கு கவனம் செலுத்தி வருகின்றன.
இதற்காக பேக்கேஜிங்கில் தொடங்கி பீருக்கு பெயர் வைப்பது வரை கருத்தில் கொள்ளப்படுகிறது. அது மட்டுமல்ல, புதிய வகையிலான பீரும் தயாரிக்கப்படுகிறது. உதாரணமாக, தாலியா பீர் நிறுவனம் மென்மையான சுவைகள் மற்றும் பழங்களின் சுவை கொண்ட பீரை தயாரிக்கிறது.
இந்தியாவின் கிராப்ட் பீர் நிறுவனங்களும் இதேபோன்ற உத்திகளைப் பின்பற்றுகின்றன. இந்தியாவில் வசிக்கும் தீபிகா சர்மா பிபிசி செய்தியாளர் ஆதிர்ஷ் ரத்தோரிடம் கூறுகையில், கசப்பு காரணமாக அவருக்கும் அவரது பெரும்பாலான நண்பர்களுக்கும் பீர் பிடிக்கவில்லை என்று கூறினார்.
மேலும், “ஒருமுறை சிம்லாவில் உள்ள ஒரு பிரூவரியில் நான் மாம்பழ சுவை கொண்ட கிராப்ட் பீரை சுவைத்தேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்போது நான் அவ்வப்போது ஏதாவது கிராப்ட் பிரூவரியின் சுவையான பீரை முயன்றுவிடுவேன்,” என்றார்.
பாரம்பரியமாக ஒரே மாதிரியான சுவை கொண்ட பீர்களில் இருந்து வேறுபட்ட சுவைகளை கிராப்ட் பிரூவரிகள் வழங்கத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக பீர் பெண்களிடம் முன்பைவிட அதிக பிரபலமாகிவிட்டது.
தாலியாவின் இணை நிறுவனரான டாரா ஹான்கின்சன், “நாங்கள் பீர் குடிப்பவர்களின் தரவுகளை அலசும் இணையதளத்தில், பெண்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதைக் கண்டறிந்தோம். அதை வைத்து நாங்கள் பழச்சுவை கொண்ட பீர்களை உருவாக்கினோம். அவை குறைவான கசப்பு கொண்டவை.
பெண்களுக்கு அவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்த, பிடித்த சுவைகளில் பீர்களை அறிமுகப்படுத்த வேண்டும். அதன் பின் அவர்கள் மற்ற வகையான பீர்களை சுவைத்துப் பார்ப்பார்கள்,” என்கிறார். அவர்களின் இந்த உத்தி வெற்றி பெற்றது. தாலியாவின் நிறுவனர்கள் தங்கள் வாடிக்கையாளர்களில் 70 சதவீதம் பெண்கள் என்று கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவில் மதுபான துறை குறித்து விரிவாக எழுதி வரும் கேட் பெர்னோட் கூறுகையில், பெண்களின் வாங்கும் திறன் அதிகரித்ததன் காரணமாகவும் பீர் உற்பத்தித் துறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.
“நீங்கள் ஒரு பீர் நிறுவனமாக பெண்களின் எதிர்பார்ப்புகளைப் நிறைவேற்றினால், தற்போது கிடைக்கும் பீரை விரும்பாத ஆண்களையும் உங்கள் பக்கம் ஈர்க்க முடியும்,” என்கிறார் அவர்.
அதேநேரம் அதிதி சிங், “சந்தையில் இப்போது பல பிராண்டுகள் வந்துள்ளன. அவை பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. பெண்களிடம் தயாரிப்புகளை விற்க வேண்டுமானால், அவர்களின் விருப்பத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பீர் உற்பத்தி நிறுவனங்கள் உணர்ந்துள்ளன என்பதை இது காட்டுகிறது,” என்றார்.
கேட் பெர்னோட் “மகளிர் இப்போது நன்கு சம்பாதிக்கிறார்கள். அவர்கள் கல்லூரிக்குச் செல்கிறார்கள். நல்ல வேலையில் இருக்கிறார்கள். அவர்களிடம் பணமும் சக்தியும் உள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு விருப்பமான பொருட்களை தேடிக் கொள்ளலாம்,” என்கிறார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்