
பட மூலாதாரம், Shanmuga Velayuthan
தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், நீலகிரி உள்பட பல்வேறு மாவட்ட மக்களை, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜ் ஸ்டேஷன் மீது முதலீடு செய்ததால் அதிக வருமானம் கிடைக்கும் என்று கூறி, பேராசையைத் தூண்டி பல கோடி ரூபாயை நூதன முறையில் மோசடி செய்துள்ளது சைபர் க்ரைம் கொள்ளை கும்பல். மோசடி கும்பல் மக்களை ஏமாற்றியது எப்படி?
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த வாரம், 20-க்கும் மேற்பட்டோர் தாங்கள் சைபர் க்ரைம் கொள்ளை கும்பலால் மோசடிக்கு உள்ளாகி பல லட்சம் ரூபாயை இழந்ததாக புகார் ஒன்றை கொடுத்தனர்.
ஓ.டி.பி பகிர்வு, பகுதி நேர வேலை (Task based work) என சாதாரணமாக பல்வேறு வகையான சைபர் க்ரைம் மோசடிகள் குறித்து புகார் வருவது வழக்கமான ஒன்று. ஆனால், இந்த 20 பேர் மோசடிக்கு உள்ளாகியதும், அவர்கள் கொடுத்த புகாரும் முற்றிலும் புதிய முறையாக உள்ளது. ஏனெனில், சைபர் க்ரைம் மோசடி கும்பல், அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான எலெக்ட்ரிக் சார்ஜ் நிறுவனத்தின் பெயரிலேயே மிக நூதனமாக மோசடியை அரங்கேற்றியுள்ளது.
அமெரிக்க நிறுவனம் பெயரில் மோசடி

பட மூலாதாரம், Shanmuga Velayuthan
மோசடி கும்பல் செயல்பட்டது எப்படி? நம்பகத்தன்மையை ஏற்படுத்தி எப்படி கோடிக்கணக்கில் ஏமாற்றியது? என பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரித்தது பிபிசி தமிழ். அவர்கள் பகிர்ந்த அனைத்துத் தகவலும் மிகவும் அதிர்ச்சிக்குரியதாக உள்ளது.
பிபிசி தமிழிடம் பேசிய கோவையை சேர்ந்த சண்முக வேலாயுதன், ‘‘எனது நண்பர்கள் சிலர், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் அமைத்து வரும் அமெரிக்காவை சேர்ந்த ஈவி கோ (EVgo) என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைப்பதாக தெரிவித்தனர். நானும் அதில் இணைய வேண்டுமென கேட்ட போது, அந்த நிறுவனத்தின் செயலி என்று கூறி ஒரு லிங்க் அனுப்பினர்.
அதில், சென்று கூகுள் பிளே ஸ்டோரில் இல்லாத (Third Party App) அந்த மொபையில் செயலியை பதிவிறக்கம் செய்து எனது விபரங்களை உள்ளீடு செய்து பதிவு செய்தேன். மொபைல் செயலியில் இருந்த அறிவுரைப்படி அவர்களின் டெலிகிராம் மற்றும் வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்து கொண்டேன். வாட்ஸ்ஆப்பில் தான் அவர்கள் முதலீடு தொடர்பான முழுத்தகவலை பகிர்ந்தனர், அதன்பின் தான் முதலீடு செய்தேன்,’’ என்றார் சண்முக வேலாயுதன்.

பட மூலாதாரம், Shanmuga Velayuthan
கவர்ச்சிகரமான முதலீட்டு திட்டங்கள்
மேலும் தொடர்ந்த அவர், ‘‘அந்த நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் குழுவில் இருந்த வைஷக் தேசாய் என்பவர் தான் அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர் என அறிமுகமாகிவிட்டு, வெளிநாட்டில் உள்ள EVgo நிறுவனத்தின் சார்ஜிங் ஸ்டேஷன்கள் மீது பணம் முதலீடு செய்வதால் கிடைக்கும் வருமானத்தை எங்களுக்கு பகிர்ந்து கொடுப்பது தான் இந்தத்தொழில் என்றார்.
680 ரூபாய் முதலீடு செய்தால் நாளொன்றுக்கு 37 ரூபாய் வீதம் 35 நாட்களுக்கு, 1,295 ரூபாய் வருமானம், 6,000 ரூபாய் முதலீடு செய்தால் தினமும் 480 வீதம் 52 நாட்களுக்கு 24,960 ரூபாய் , 58,000 முதலீடு செய்தால் தினமும் 5,200 ரூபாய் வீதம் 1,52,000 ரூபாய் வருமானம் என பலவித கவர்ச்சிகர முதலீட்டு திட்டங்களை பகிர்ந்தார்.
ஏற்கனவே என் நண்பர்கள் சிலர் இது போன்று முதலீடு செய்து வருமானம் ஈட்டியுள்ளனர். அவர்களின் வாட்ஸ்ஆப், டெலிகிராம் குழுவிலும் சிலர் தினமும் பணம் பெற்றதாக ஸ்கிரீன் ஷாட்கள் பகிர்ந்துள்ளனர். இதனை நம்பி முதலில் 680 ரூபாய் முதலீடு செய்ததற்கு வருமானம் கிடைத்தது. பின் கொஞ்சம் கொஞ்சமாக முதலீட்டை அதிகரித்து இறுதியாக, 80 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தேன்,’’ என்கிறார், சண்முக வேலாயுதன்.

பட மூலாதாரம், Shanmuga Velayuthan
எப்படி ஏமாற்றப்பட்டோம் என்பதை விளக்கினார் சண்முக வேலாயுதன்.
இது குறித்து விளக்கிய அவர், ‘‘முதலீடு செய்து வருமானம் வந்து கொண்டிருந்த நேரத்தில், திடீரென வருமானத்தை திரும்ப பெறும் (Withdrawal) முறையில் அமெரிக்காவில் புது நடைமுறை வந்துள்ளதால், பணத்தை எடுக்க குறிப்பிட்ட அளவு பணத்தை செலுத்தி ஏ.டி.எம். அட்டை ஒன்றை முதலீட்டாளர்கள் வாங்க வேண்டும், அதன்பின் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினர்.
நான் உள்பட பலரும் பணம் செலுத்தி ஏ.டி.எம். அட்டை வாங்கிய பின் வருமானத்தை பெறக் காத்திருந்த போது திடீரென அந்த செயலி செயல்படவில்லை. வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராமில் இந்த நிறுவனம் சார்பில் அறிமுகமான வைஷக் தேசாய் என்பவரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. நாங்கள் EVgo நிறுவனத்தை மெயில் மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது தான் இத்தனை நாட்கள் EVgo பெயரில் போலிச் செயலியை பயன்படுத்தி சிலர் எங்களிடம் மோசடி செய்தது தெரியவந்தது,’’ என்கிறார் சண்முக வேலாயுதன்.

பட மூலாதாரம், Shanmuga Velayuthan
நம்பிக்கையை ஏற்படுத்தி மோசடி
மோசடிக்கு உள்ளான கோவையைச் சேர்ந்த வீரா என்பவர், ‘‘என் நண்பர்கள் பகிர்ந்ததால் நானும் EVgo முதலீட்டு திட்டத்தில் இணைந்தேன். முதலீடு மட்டுமின்றி ஆட்களை சேர்த்து விட்டால் மாதம் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைப்பதாகவும் கூறியிருந்தனர்.
இந்தியாவில் 5 கோடி ஆட்கள் சேர்ந்துள்ளனர், 7 கோடி ஆட்கள் சேர்ந்துள்ளனர் என்று கூறி வாட்ஸ்ஆப் குழுவில் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் EVgo நிறுவனம் சார்பில் கேக் வெட்டி கொண்டாடுவது, பார்ட்டி வைப்பது, பணியில் சேர்ந்தவர்கள் மற்றும் முதலீடு செய்தவர்களுக்கு அதற்கான ஆவணங்கள் வழங்குவது போன்ற படங்கள், வீடியோக்களை பகிர்ந்தனர்.
மிகவும் படித்த என் நெருங்கிய நண்பர் சொல்லியதால் நான் இந்த முதலீட்டில் சேர்ந்தேன். எனக்கும் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ப வருமானத்தை அவர்கள் கொடுத்து வந்ததால் EVgo நிறுவனத்தின் மீது அதீத நம்பிக்கை ஏற்பட்டது. இதனால், சேர்ந்த பத்து நாட்களில் முதலீட்டை சிறிது சிறிதாக அதிகரித்து இறுதியாக 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தேன். திடீரென செயலி செயல்படாமல் போன பின்பு தான் மோசடிக்கு உள்ளானதை கண்டறிந்தேன்,’’ என்கிறார் வீரா.
‘குறைந்தபட்சம் ரூ.500 கோடி மோசடி’
மேலும் தொடர்ந்த வீரா, ‘‘எனக்கு தெரிந்து கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி என தமிழகம் முழுவதிலும் பலரும் முதலீடு செய்துள்ளனர். தவிர, கர்நாடகா, ஆந்திர மாநிலத்திலும் முதலீடு செய்துள்ளனர். நான் இருந்த வாட்ஸ்ஆப் குழுவிலேயே 180-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.
இது போன்று பல குழுக்களை அவர்கள் நடத்தி வந்தனர். மோசடிக்குப்பின் குழுவில் இருந்து 50-க்கும் மேற்பட்டோரிடம் நான் பேசியுள்ளேன். ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 50 ஆயிரம் – 7 லட்சம் வரையில் முதலீடு செய்ததாக கூறுகின்றனர். குறைந்தபட்சமாக 500 கோடி ரூபாய்க்கும் மேல் இந்த கும்பல் மோசடி செய்திருக்கும். தற்போது வேறு ஒரு பெயரில் மீண்டும் தங்கள் வேலையை துவங்கியுள்ளனர்.
இனிமேல் எங்களைப் போல யாரும் ஏமாற்றம் அடையக்கூடாது என்பது தான் எங்களின் நோக்கம். ஆனால், அரசும், தமிழக போலீஸாரும் இதை சாதாரண மோசடியாக பார்க்கின்றனர். பல கோடி ரூபாயை மோசடி செய்த இந்த கும்பலை கண்டறிய வேண்டும், மீண்டும் அவர்கள் மக்களை ஏமாற்றும் முன் தடுத்து நிறுத்த வேண்டும்,’’ என கோரிக்கையை முன்வைக்கிறார் வீரா.

பட மூலாதாரம், Shanmuga Velayuthan
காவல்துறையினர் சொல்வது என்ன?
இதுதொடர்பாக, கோவை சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் அருணிடம் பேசியது பிபிசி தமிழ். அதற்குப் பதிலளித்த காவல் ஆய்வாளர் அருண், ‘‘இந்த வழக்கு தொடர்பாக புகார் பெற்று விசாரணை நடத்தி வருகிறோம். ஆன்லைனிலும் சிலர் இன்னமும் புகார்கள் தெரிவித்து வருகின்றனர். மோசடி குறித்த விசாரணையை பொருளாதார குற்றப்பிரிவுடன் இணைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது,’’ என்றார்.
பிபிசி தமிழிடம் பேசிய தமிழக பொருளாதார குற்றப்பிரிவின் காவல் கண்காணிப்பாளர் (SP) ஜோஸ் தங்கையா, ‘‘குறிப்பிட்ட சில தொகைக்கு மேல் குற்றம் நடந்திருந்தால் தான் அந்த வழக்கு சைபர் க்ரைம் மற்றும் இதர போலீஸாரிடம் இருந்து பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்படும். கோவையில் EVgo மோசடி தொடர்பான வழக்கு இன்னமும் எங்களுக்கு வரவில்லை. இருந்தாலும் குற்றத்தின் பின்னணி, மோசடி செய்யப்பட்ட தொகை குறித்த விவரங்களை சேகரித்து விசாரணையை துவங்குவோம்,’’ என்றார் சுருக்கமாக.
”தனிப்பட்ட விவரங்களையும் திருடும் மோசடி கும்பல்”
EVgo போன்ற மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்துவதனால், மோசடி கும்பல் பயனர்களின் தகவல்களைத் திருடியும் விற்பனை செய்யக் கூடும் என்று எச்சரிக்கின்றனர் சைபர் க்ரைம் வல்லுநர்கள்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய சைபர் க்ரைம் வல்லுநர் வினோத் ஆறுமுகம், ‘‘பாதிக்கப்பட்டவர்கள் EVgo செயலியை கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோரில் அல்லாமல் மூன்றாம் தரப்பு (Third party) செயலியாக, தனி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துள்ளனர். பெரும்பாலும் நமது தகவல்களை சேகரித்து அதை விற்பனை செய்வோர் மற்றும் அதை தவறாக பயன்படுத்துவோர் தான் தனி இணையதளத்தில் மூன்றாம் தரப்பு செயலியாக வெளியிடுகின்றனர்.
இதை நாம் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தினால், அவர்கள் நிச்சயம் நம் மொபைலில் உள்ள ஒட்டுமொத்த தகவல்களையும் திருடுவார்கள். சில வழக்குகளில் சைபர் க்ரைம் மோசடி செய்தோர், பாதிக்கப்பட்டவரின் மொபைல், மெயிலை மீண்டும் தொடர்பு கொண்டு வேறு வகையான மோசடி செய்ய முயற்சித்துள்ளனர். தனி இணையதளத்தில் மூன்றாம் தரப்பு செயலி என்றாலே அது மோசடியாகத்தான் இருக்குமென்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்,’’ என்கிறார் அவர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்