
பட மூலாதாரம், Getty Images
அமலாக்கத்துறை தனக்கு எதிராக விடுத்திருக்கும் சம்மன், ‘எதிர்க்கட்சித் தலைவர்களைப் பணிய வைத்து அவர்களை பா.ஜ.க.வில் இணைய வைக்க சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை வெளிப்படையாகப் பயன்படுத்தப்படுவதைக் காட்டுகிறது’ என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வியாழன் அன்று கூறினார்.
கெஜ்ரிவால் தான் கைது செய்யப்படுவது குறித்த அச்சத்தை வெளிப்படுத்தினார். அமலாக்கத்துறையின் சம்மன்கள் சட்டவிரோதமானது என்றும் கூறினார்.
கடந்த ஜனவரி 3-ஆம் தேதி கெஜ்ரிவாலை நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை உத்தரவிட்டிருந்தது. முன்னர் நவம்பர் 2 மற்றும் டிசம்பர் 21 ஆகிய தேதிகளின் தரப்பட்டிருந்த அமலாக்கத்துறை கெஜ்ரிவால் ஆஜராகாமல் இருந்தார். இப்போது அவர் ஆஜராகாமல் இருப்பது மூன்றாவது முறையாகும்.
மதுபான ஊழல் வழக்கில் கெஜ்ரிவாலை விசாரிக்க நினைக்கிறது அமலாக்கத்துறை. இந்த வழக்கில் ஏற்கனவே பல கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமலாக்கத்துறை சம்மன் பற்றி பேசிய கெஜ்ரிவால், “ஒரு கட்சித் தலைவர் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ வழக்குகள் நிலுவையில் இருந்ததற்கு எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. அந்தத் தலைவர் பா.ஜ.க.வில் சேர்ந்தவுடன், அவரது பழைய வழக்குகள் அனைத்தும் மூடப்படும் அல்லது கிடப்பில் போடப்படும்,” என்று கூறினார். மேலும், “பா.ஜ.க.வில் சேர்ந்தால், அவர்களின் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும், இல்லையெனில் சிறையில் அடைக்கப்படுவார்,” என்றார்.
ஆம் ஆத்மி கட்சி எம்.பி ராகவ் சத்தாவும் சில மாதங்களுக்கு முன்பு, “பா.ஜ.க அரசுகள் இருக்கும் மாநிலங்களில் விசாரணை அமைப்புகள் அமைதியாக இருக்கின்றன. பா.ஜ.க அரசுகள் இல்லாத இடங்களில் விசாரணை அமைப்புகள் தீவிரம் காட்டி வருகின்றன,” என்றார்.
உண்மையில் அப்படித்தான் நடக்கிறதா?
அதைத் தெரிந்துகொள்ள முதலில் புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்.

புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன?
ஜூலை 2023-இல், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் (Prevention of Money Laundering Act – PMLA), அமலாக்கத்துறை முந்தைய மூன்று ஆண்டுகளில் 3,110 வழக்குகளை பதிவு செய்துள்ளதாக அரசாங்கம் பாராளுமன்றத்தில் தெரிவித்தது.
- 2022-23: 949 வழக்குகள்
- 2021-22: 1,180 வழக்குகள்
- 2020-21: 981 வழக்குகள்
கடந்த மூன்று ஆண்டுகளில் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அதாவது (Foreign Exchange Management Act-FEMA) கீழ் 12,233 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- 2022-23: 4,173 வழக்குகள்
- 2021-22: 5,313 வழக்குகள்
- 2020-21: 2,747 வழக்குகள்
செப்டம்பர் 2022-இல், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்குகள் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.
அந்த அறிக்கையின்படி, 18 ஆண்டு கால தரவுகளைப் பார்த்தால், அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்ட அல்லது கைது செய்யப்பட்ட 147 தலைவர்களில், 85% பேர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள்.
சி.பி.ஐ விசாரணை வளையத்தில் இருந்த 200 தலைவர்களில் 80% பேர் எதிர்க்கட்சித் தலைவர்கள். இந்த 18 ஆண்டுகளில், மத்தியில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் அரசுகள் இருந்துள்ளன.
பணமோசடி தடுப்புச் சட்டம் 2005, 2009 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் திருத்தப்பட்டது. அப்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது.
2019-ஆம் ஆண்டில், மோதி ஆட்சியின் கீழ் இந்தச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்தது. அதன்மூலம் அமலாக்கத்துறைக்கு வீடுகளில் சோதனை செய்யவும் கைது செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டது.
முன்னதாக, எஃப்.ஐ.ஆர் மற்றும் குற்றப்பத்திரிகையில் இச்சட்டத்தின் பிரிவுகள் குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே அமலாக்கத்துறை விசாரிக்கும். ஆனால் இப்போது அமலாக்கத்துறை சுயமாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து கைது செய்ய முடியும்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, 2014 முதல் 2022 வரை அமலாக்கத்துறையால் குறிவைக்கப்பட்ட 95% அதாவது 115 தலைவர்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள்.
2004-இல் இருந்து 2014 வரை 26 தலைவர்களை அமலாக்கத்துறை விசாரித்தது. இதில் 54% பேர், அதாவது 14 தலைவர்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள்.
இருப்பினும், இந்தப் புள்ளிவிவரங்கள் 2022 வரையானவை மட்டுமே. இதற்குப் பிறகு, 2023-இல் ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதன் போது, பல்வேறு மாநிலங்களில் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ நடத்திய சோதனைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன.

பட மூலாதாரம், FB/MK STALIN
தமிழ்நாட்டில் தி.மு.க அமைச்சர்கள் மீது நடவடிக்கை
கடந்த 2023-ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் இருந்த அமைச்சர்களின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
ஜனவரி 4, 2023 அன்று, அவரது காவல் ஜனவரி 11 வரை நீட்டிக்கப்பட்டது.
அதேபோல் முன்னாள் உயர்கல்வி அமைச்சர் பொன்முடிக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
மத்திய புலனாய்வு நிறுவனங்களை பா.ஜ.க அரசு தவறாக பயன்படுத்துவதாக முதல்வர் ஸ்டாலின் பலமுறை குற்றம்சாட்டியிருக்கிறார்.
இந்நிலையில் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவரை தமிழகக் காவல்துறை கைது செய்தது.

பட மூலாதாரம், FB/AK
அரவிந்த் கெஜ்ரிவால்
தில்லியில் கெஜ்ரிவாலுக்கு சம்மன்
தில்லியில் 2013-ஆம் ஆண்டு முதல் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார்.
2023 பிப்ரவரியில் அப்போதைய தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ கைது செய்தது. டெல்லியின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் காரணமாக இந்தக் கைது செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்.பி சஞ்சய் சிங்கும் இதே வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் டெல்லியின் கலால் கொள்கை, 2021 உடன் தொடர்புடையது. இது ஜூலை 2022-இல் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவால் உத்தரவிடப்பட்டது.
2021 நவம்பரில் புதிய மதுக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதன் கீழ் டெல்லி 32 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திலும் 27 கடைகள் திறக்கப்படவுள்ளன. இதன்படி தனியார் கடைகளில் மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்ய முடியும்.
மது மாஃபியா, கறுப்புச் சந்தைக்கு முடிவுகட்டுவது மற்றும் சமமான விநியோகத்தை உறுதி செய்வதே அதன் நோக்கம் என்று தில்லி அரசு கூறியது.
இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தி எப்.ஐ.ஆர் பதிவு செய்தது.
புதிய மதுபானக் கொள்கையின்படி, கொரோனா காலகட்டத்தில் மதுபான வியாபாரத்தால் ஏற்பட்ட நஷ்டத்தைக் காரணம் காட்டி உரிமக் கட்டணம் ரத்து செய்யப்பட்டதாக சி.பி.ஐ எப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது. இதனால் டெல்லி அரசுக்கு சுமார் ரூ.140 கோடி இழப்பு ஏற்பட்டது.
உரிமம் வழங்க லஞ்சம் வாங்கப்பட்டதாகவும், பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி இந்த பணத்தை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கை சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் விசாரித்தன.
அக்டோபர் 2023-இல், உச்ச நீதிமன்றம் ‘மதுக் கொள்கையால் ஆம் ஆத்மி கட்சி பயனடைந்தால், இந்த வழக்கில் ஏன் அதை முக்கிய குற்றவாளியாக்கவில்லை?’ என்று அமலாக்கத்துறையிடம் கேட்டிருந்தது.
நவம்பர் மாதம், அமலாக்கத்துறை கேஜ்ரிவாலுக்கு முதல் சம்மன் அனுப்பியது.
கேஜ்ரிவாலின் பெயர் குற்றப்பத்திரிகையில் இல்லை, அவர் குற்றம் சாட்டப்பட்டவரும் இல்லை, சாட்சியும் இல்லை என்று ஆம் ஆத்மி கூறுகிறது, எனவே அவர் எந்தத் தகுதியில் அழைக்கப்படுகிறார்?
ஜனவரி 4-ஆம் தேதி கெஜ்ரிவால், தனக்கு அனுப்பப்பட்ட சம்மன்கள் சட்டவிரோதமானவை என்றார். “பா.ஜ.க.வின் நோக்கம் விசாரணை அல்ல. லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் இருந்து என்னை தடுக்க நினைக்கின்றனர். எட்டு மாதங்களுக்கு முன்பு சி.பி.ஐ அழைத்தது, நானும் சென்றிருந்தேன். இரண்டு வருடங்களாக நடந்து வரும் விசாரணையில் இப்போது ஏன் அவரை அழைக்கிறீர்கள்?” என்றார்.
அவர்மீது குற்றம் இருப்பதால்தான் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை விசாரணைக்குச் செல்லவில்லை என்று பா.ஜ.க தலைவர்கள் கூறுகிறார்கள்.

பட மூலாதாரம், FB/HEMANT SOREN
ஹேமந்த் சோரன்
ஜார்கண்டில் ஹேமந்த் சோரனுக்கு எதிரான விசாரணை
ஜார்கண்டில் 2019-ஆம் ஆண்டு முதல் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா அரசு உள்ளது. ஹேமந்த் சோரன் முதல்வராக உள்ளார்.
பா.ஜ.க மீது குற்றம் சாட்டிய ஹேமந்த் சோரன், “2019-ஆம் ஆண்டு முதல், ஜார்கண்டின் ஜே.எம்.எம் அரசாங்கத்தைக் கவிழ்க்க பா.ஜ.க முயற்சித்து வருகிறது. அதில் வெற்றி பெறாததால், அமலாக்கத்துறை அதிகாரிகள் அந்தப் பணியில் அமர்த்தப்பட்டனர்,” என்றார்.
சோரனின் குற்றச்சாட்டுக்குப் பின்னால், கடந்த ஐந்தாண்டுகளாகப் பல சம்பவங்கள் உள்ளன. சோரனும் அவருக்கு நெருக்கமானவர்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.
அமலாக்கத்துறை 7 முறை ஹேமந்த் சோரனுக்கு சம்மன் அனுப்பி அவரை ஆஜராகுமாறு கூறியுள்ளது. ஆனால் சோரன் ஏழாவது முறையாக கூட அமலாக்கத்துறை முன் ஆஜராகவில்லை.
அமலாக்கத்துறை இதை தனது இறுதி அழைப்பு என்றது. சோரனுக்கு முதல் சம்மன் 14 ஆகஸ்ட் 2023 அன்று அனுப்பப்பட்டது.
அமலாக்கத்துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஹேமந்த் சோரன், தான் விசாரணையில் சொத்து பற்றிய தகவலை அளித்தவுடன், அது சட்டப்பூர்வ வழிகளில் கையகப்படுத்தப்பட்டது. அதற்குமேல் எதையும் தெரிந்து கொள்ள விரும்பினால், கடிதம் மூலம் கேட்கலாம், என்றிருந்தார்.
அமலாக்கத்துறை நடவடிக்கை தொடர்பாக ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் சோரன் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் சோரனுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.
நில மோசடி தொடர்பான வழக்கில் சோரனை அமலாக்கத்துறை விசாரிக்க விரும்புகிறது.
நவம்பர் 2022-இல், சட்டவிரோத சுரங்கம் தொடர்பான வழக்கில் சோரன் அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டார். அதே வழக்கில், ஜூலை 2022-இல், சோரனின் நெருங்கிய கூட்டாளி பங்கஜ் மிஸ்ரா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

பட மூலாதாரம், FB/TEJASHWI YADAV
தேஜஸ்வி யாதவ்
பிகாரில் தேஜஸ்வி யாதவுக்கு நெருக்கடி
பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் அமலாக்கத்துறையின் வளையத்தில் உள்ளார்.
ஜனவரி 5-ஆம் தேதி தேஜஸ்வியையும் அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்துள்ளது. இந்த விவகாரம் ‘வேலைக்கு நிலம்’ வழக்கு தொடர்பானதாகக் கூறப்படுகிறது.
2023 டிசம்பர் 22 மற்றும் 27 ஆகிய தேதிகளில் ஆஜராகுமாறு தேஜஸ்வி மற்றும் லாலு யாதவ் ஆகியோரை அமலாக்கத்துறை கேட்டுக் கொண்டது. ஆனால் இருவரும் ஆஜராகவில்லை.
பிப்ரவரி 2023-இல் கூட, டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றம் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி, மகள்கள் மற்றும் பலருக்கு சம்மன் அனுப்பியது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் பீகாரில் பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
லாலு யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்த காலத்தில் இந்த ஊழல் நடந்துள்ளது. ரயில்வே அமைச்சகத்தில் வேலை வழங்குவற்குக் கைம்மாறால மக்களிடம் நிலம் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பட மூலாதாரம், FB/DK SHIVAKUMAR
டி.கே.சிவகுமார்
கர்நாடகாவில் சோதனை வளையத்தில் டி.கே.சிவகுமார்
கர்நாடகா காங்கிரஸ் அரசின் துணை முதல்வர் டி.கே.சிவகுமாரும் பல ஆண்டுகளாக அமலாக்கத்துறையின் இலக்கில் உள்ளார்.
2019 செப்டம்பரில், காங்கிரஸ் ஆட்சியில் இல்லாதபோதே, டி.கே. சிவகுமாரை அமலாக்கத்துறை கைது செய்தது.
கர்நாடகாவில் முந்தைய காங்கிரஸ்-ஜே.டி.எஸ் மற்றும் முந்தைய காங்கிரஸ் அரசுகளில் டி.கே.சிவகுமார் அமைச்சரவையில் இருந்தார்.
ஜனவரி 2024-இல், டி.கே.சிவகுமாரின் சேனலில் முதலீடு செய்வது குறித்த தகவல்களைக் கேட்டு கேரளாவின் ஜெய்ஹிந்த் சேனலுக்கு சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியது. ஜனவரி 11, 2024 அன்று ஆஜராகுமாறு அந்த சேனலின் நிர்வாக இயக்குநர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
பி.டி.ஐ செய்தி நிறுவனத்தின்படி, சி.பி.ஐ 2020-இல் சிவகுமார் மீது வழக்கு பதிவு செய்தது.
2013-2018-இல் ரூ.74 கோடி வருமானம் தொடர்பாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மே 2022 இல், அமலாக்கத்துறை சிவகுமாருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
பா.ஜ.க.வில் இணைந்த தலைவர்கள் மீதான வழக்குகள் என்ன ஆயின?
பாஜகவில் இணைந்த தலைவர்கள் மீது மத்திய அமைப்புகள் பதிவு செய்த வழக்குகள் கிடப்பில் போடப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது உண்மையா?
ஹிமந்த பிஸ்வா சர்மா
ஒரு காலத்தில் அசாமின் காங்கிரஸ் அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹிமந்த பிஸ்வா, இன்று பா.ஜ.க அரசில் அஸ்ஸாமின் முதல்வராக உள்ளார்.
சாரதா சிட் ஃபண்ட் மோசடியில் ஹிமந்த பிஸ்வாவின் பெயரும் வந்தது.
ஹிமந்தா ஆகஸ்ட் 2015-இல் பாஜகவில் சேர்ந்தார்.
முதல்வராக பதவியேற்ற பிறகு ஹிமந்தாவை சிபிஐ விசாரணைக்கு அழைக்கவில்லை.

பட மூலாதாரம், FB/SUVENDU OFFICIAL
சுவேந்து அதிகாரி
சுவேந்து அதிகாரி
ஒரு காலத்தில் மமதா பானர்ஜி ஆட்சியில் சக்தி வாய்ந்த தலைவராக இருந்த சுவேந்து அதிகாரி, தற்போது பா.ஜ.க.வில் உள்ளார்.
2014-ஆம் ஆண்டு நடந்த ஸ்டிங் ஆபரேஷனில், சுவேந்து அதிகாரி உட்பட பல தலைவர்கள் லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்ட காட்சிகள் வெளியாகின. அது நாரதா ஸ்டிங் என்று அழைக்கப்பட்டது.
2021-இல் சுபேந்து அதிகாரி பா.ஜ.க.வில் இணைந்தார்.
மமதாவின் வெற்றிக்குப் பிறகு நான்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை சி.பி.ஐ கைது செய்தது. அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஆனால் சுவேந்து அதிகாரியின் பெயர் அதில் இல்லை.

பட மூலாதாரம், FB/AJIT PAWAR
அஜித் பவார்
அஜித் பவார்
தற்போது மகாராஷ்டிர அரசில் அஜித் பவார் துணை முதல்வராக உள்ளார்.
அவர் பா.ஜ.க.வில் இல்லாதபோது, தேவேந்திர ஃபட்னாவிஸ் உட்பட பல தலைவர்கள் அவர் ஊழல்வாதி என்று குற்றம் சாட்டினர்.
2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அஜித்தின் உறவினர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சர்க்கரை ஆலைகளில் ஊழல் தொடர்பான வழக்குகளில் அவர் மீதான தனது பிடியை அமலாக்கத்துறை மேலும் இறுக்கத் தொடங்கியது.
ஏப்ரல் 2023-இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளிவந்த அறிக்கையின்படி, மாநில கூட்டுறவு வங்கி மோசடி தொடர்பாக அஜித் பவார் மற்றும் சுனேத்ரா பவாருடன் தொடர்புடைய நிறுவனத்திற்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. ஆனால் அதில் அஜித் பவாரின் பெயர் இடம்பெறவில்லை.
இந்தத் தலைவர்கள் இப்போது பா.ஜ.க.வுடன் இருப்பதால் மத்திய அமைப்புகள் எடுத்த நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளன.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்