பட மூலாதாரம், Getty Images
இங்கிலாந்துக்கு எதிராக லக்னோவில் இன்று நடந்து வரும் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
உலகக் கோப்பைத் தொடரின் 29-வது லீக் ஆட்டம் லக்னோவில் இன்று இங்கிலாந்து, இந்தியா இடையே நடந்து வருகிறது. இந்திய அணி இதுவரை ஆடிய 5 போட்டிகளிலும் வென்று 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.
இந்திய அணி இன்னும் 2 வெற்றிகள் பெற்றால், அரையிறுதிச் சுற்றை உறுதி செய்துவிடும், ஆனால், இங்கிலாந்துக்கான வாய்ப்பு மிகவும் குறைவு.
டாஸ் வென்ற இங்கிலந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை இந்திய அணி சேஸிங்கை மட்டும் செய்துவந்தது. ஆனால், முதல்முறையாக முதலில் பேட் செய்து, தாங்கள் அடித்த ஸ்கோரை டிபென்ட் செய்ய இருக்கிறது.
லக்னோ ஆடுகளம் எப்படி?
லக்னோ ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றது, கறுப்பு மண்ணால் அமைக்கப்பட்ட ஆடுகளமாகும். இந்த ஆடுகளத்தில் முதல் 10 ஓவர்கள் விக்கெட் விழாமல் நிலைத்துவிட்டாலே நல்ல ஸ்கோரை அடிக்க முடியும். இந்த மைதானத்தில் 250 ரன்களை முதலில் ஆடும் அணி சேர்த்துவிட்டாலே, அதை சேஸிங் செய்வது கடினமாக இருக்கும்.
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக கூடுதல் வேகப்பந்துவீச்சாளராக முகமது ஷமி சேர்க்கப்பட்டிருந்தார். மற்றவகையில் அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
ரோஹித் சர்மா, சுப்மான் கில் ஆட்டத்தைத் தொடங்கினர். சுப்மான் கில் தொடக்கத்திலிருந்தே இங்கிலாந்து வேகப்பந்துவீச்சுக்குத் திணறினார். ஆனால் டேவிட் வில்லே வீசிய 3வது ஓவரில் ரோஹித் சர்மா 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்து வெளுத்து வாங்கினார்.
வோக்ஸ் வீசிய 4வது ஓவரில் சுப்மான் கில் 9 ரன்னில்கிளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்துவந்த விராட் கோலி ரன் ஏதும் சேர்க்காமல் டேவிட் வில்லே வீசிய ஓவரில் மிட் ஆப் திசையில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இப்படியா ஆட்டமிழப்பீங்க..!
3வது விக்கெட்டுக்கு வந்த ஸ்ரேயாஸ் அய்யர், ரோஹித்துடன் இணைந்தார். ஸ்ரேயாஸ் ஷார்ட் பந்துக்கு தொடர்ந்து திணறி விக்கெட்டை இழந்து வந்ததை இங்கிலாந்து அணி கவனித்தது. நியூசிலாந்துக்கு எதிராகவும் ஸ்ரேயாஸ் ஷார்ட் பந்தில் ஆட்டமிழந்திருந்தார்.
அதேபோன்று இந்த முறையும் வோக்ஸ் வீசிய ஷார்ட் பந்துவீச்சு இரையாகி ஸ்ரேயாஸ் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். வோக்ஸ் வீசிய பந்து சாதாரண பவுன்ஸர் அதை தேவையில்லாமல் தூக்கி அடித்து ஸ்ரேயாஸ் விக்கெட்டை இழந்தது ரசிகர்களால் கடுமையாக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகிறது.
இந்திய அணி 40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பவர்ப்ளே ஓவரில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்களைச் சேர்த்தது.
பவர்ப்ளேயில் கடைசி 6 ஓவர்களில் இந்திய அணி, 9 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 5 முதல் 10 ஓவர்களில் குறைவான ரன்கள் சேர்த்த அணியாக 2007ம் ஆண்டுக்குப்பின் இந்திய அணி உள்ளது.
பட மூலாதாரம், Getty Images
தப்பிப் பிழைத்த ரோஹித் சர்மா
4-வது விக்கெட்டுக்கு கேஎல் ராகுல், ரோஹித் ஜோடி இணைந்தது. மார்க் உட் வீசிய 15-வது ஓவரில் ரோஹித் சர்மா கால்காப்பில் வாங்கியதற்கு கள நடுவர் அவுட் வழங்கினார். ஆனால், ரோஹித் 3வது நடுவரிடம் மேல்முறையீடு செய்யவே, ஆய்வுக்குப்பின் அவுட் இல்லை என முடிவு வந்தது. அதன்பின் ராகுல் அமைதி காக்க, ரோஹித் சர்மா ஓவருக்கு ஒரு பவுண்டரி விளாசினார்.
1,000 ரன்களை எட்டிய ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா 42 ரன்களை எட்டியபோது, 2023ம் ஆண்டில் ஒருநாள் தொடரில் ஆயிரம் ரன்களை எட்டிய பேட்டர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்குமுன் இந்த ஆண்டில் இலங்கையின் நிசாங்கா, சுப்மான் கில் ஆயிரம் ரன்களை எட்டியிருந்தனர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
