பட மூலாதாரம், KarthikSubbaraj/X
தீபாவளியை முன்னிட்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.
‘ஜிகர்தண்டா’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இந்தப் படத்தின் கதை, முந்தைய படத்தோடு இருக்கும் தொடர்பு, கதை நடக்கும் காலகட்டம், எஸ்.ஜே. சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோரின் நடிப்பு ஆகியவை குறித்தெல்லாம் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
கே. முந்தைய ஜிகர்தண்டா படத்திற்கும் இதற்கும் டைட்டில் தவிர வேறு என்ன தொடர்பு உள்ளது?
ப. டைட்டில் தவிர்த்து அதன் கதையோடும் இந்தப் படத்திற்குத் தொடர்பு இருக்கிறது. ஒரு கேங்ஸ்டரும் சினிமாத் துறையிலிருந்து வரும் ஒருவரும் எதிர்பாராத சூழலில் சந்திக்கிறார்கள். பிறகு ஒரு சினிமா எடுக்கிறார்கள். அந்தப் படமும், அந்தப் படம் எடுக்கும் பணியும் அவர்கள் வாழ்வை எப்படி மாற்றுகிறது என்பதுதான் முதல் ஜிகர்தண்டா படத்தின் ஒன்லைன்.
இந்தப் படத்திலும் அதே ஒன்லைன்தான். ஆனால், இதில் பேசப்படும் விஷயம் வேறாக இருக்கும். கதை நடக்கும் காலகட்டம் வேறாக இருக்கும். படம் பிரம்மாண்டமாகவும் இருக்கும்.
‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ஒரு Cowboy படமா?
பட மூலாதாரம், X/StoneBenchFilm
கே. ஜிகர்தாண்டா உங்களுடைய இரண்டாவது படம். ஒரு புதிய இயக்குநரின் படம் என்று பார்க்க வந்திருப்பார்கள். இப்போது நிறைய படம் செய்துவிட்டீர்கள். ஜிகர்தாண்டா டபுள் எக்ஸ் பார்க்கப்போகும் ஆடியன்ஸ் இந்தப் படத்தை எப்படி அணுக வேண்டுமென நினைக்கிறீர்கள்?
ப. திறந்த மனதுடன் வந்து பார்த்தால் நன்றாக இருக்கும். ஜிகர்தண்டா வெளியாகி ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டது. இதற்கு நடுவில் பல படங்களை இயக்கியிருக்கிறேன். அதில் கிடைத்த அனுபவங்கள், இந்தப் படத்தை இதுபோல எடுக்க எனக்கு உதவியுள்ளது.
கே. இந்தப் படத்தின் பின்னணி என்ன? ட்ரெய்லரை பார்த்தால், பழங்குடி, சிறு தெய்வம், காடு, கௌபாய், ஆங்கிலம் பேசும் காவல்துறை அதிகாரி எனப் பல விஷயங்கள் இருப்பதைப் போலத் தெரிகிறது…
ப. இந்தப் படத்தை 1970களில் நடப்பதைப் போல எடுத்துள்ளோம். அதற்கான தேவை கதையில் இருக்கிறது. குறிப்பாக 70களில் இருந்த சினிமா இந்தக் கதைக்கு மிகவும் தேவைப்பட்டது. இந்தக் கதையை 2000களுக்கு பிறகு நடப்பது போலவோ, இப்போது நடப்பது போலவோ வைக்க முடியாது. அதற்கான காரணமும் கதையில் இருக்கிறது.
காடு, மலை சார்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பழங்குடிகளின் கதை இதில் வருகிறது. அதேபோல யானைகளைப் பற்றியும் வருகிறது. இதையெல்லாம் அந்தக் காலகட்டத்திற்குத்தான் பொருத்த முடியும்.
ரஜினிக்கும் இந்தக் கதைக்கும் என்ன தொடர்பு?
பட மூலாதாரம், KarthikSubbaraj/X
“ரஜினியைப் பற்றிய ஒரு குறியீடு இந்தப் படத்தில் உள்ளது”
கே. 1970களில் சினிமா பெரும் மாறுதலைச் சந்தித்துக் கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோரின் காலம் முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. ரஜினியும் கமலும் அறிமுகமாகி மேலே வந்துகொண்டிருந்தார்கள். அந்தக் காலகட்டம் இந்தக் கதைக்கு எப்படிப் பொருந்துகிறது?
ப. எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோர் படங்களில் நடிப்பது குறைய ஆரம்பித்திருந்தது. ரஜினிகாந்த் நடித்த அபூர்வ ராகங்கள் 1975 ஆகஸ்ட் மாதம்தான் வெளியானது. கமல் அப்போதுதான் ஹீரோவாக வந்துகொண்டிருக்கிறார். பாரதிராஜாவும் இளையராஜாவும் 1976க்குப் பிறகுதான் நிலை பெறுகிறார்கள். ஒரு பெரிய வெற்றிடம் இருக்கக்கூடிய காலகட்டத்தில் இந்தக் கதை நடக்கிறது. அதாவது அபூர்வ ராகங்கள் ரிலீஸுக்கு முன்பாக நடக்கும் கதை. குறிப்பாக 1975இன் முதல் பாதியில் நடக்கும் கதை இது.
கே. ஒரு கறுப்பு ஹீரோ என்று சொல்கிறீர்கள். இது ரஜினியை சுட்டிக்காட்டுவதாக குறியீட்டு அளவில் வைத்துக்கொள்ளலாமா?
ப. கதைக்கு அப்படி ஓர் அம்சம் தேவைப்பட்டது. ரஜினியைப் பற்றிய ஒரு குறியீடு, அவருக்கு ஒரு ட்ரிப்யூட் என்பதைத் தாண்டி, கதையை நகர்த்துவதற்கான முக்கியமான விஷயமாகத்தான் அந்த அம்சம் வருகிறது.
அந்தக் காலகட்டத்தில், மனநிலை அப்படித்தான் இருந்தது. அதாவது சினிமாவில் நடிக்க வேண்டுமென்றால் சிவப்பாக இருக்க வேண்டும் என நினைத்தார்கள். ரஜினிதான் அதை உடைத்தார். அவருக்கு முன்பாக ஒருவர் அதை உடைக்க முயன்றால் என்ன ஆகும் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
லாரன்ஸ்தான் ‘அசால்ட் சேது’ கேரக்டரில் நடிக்க வேண்டியதா?
பட மூலாதாரம், X/StoneBenchFilm
கே. இந்தக் கதையில் எஸ்.ஜே. சூர்யாவும் ராகவா லாரன்சும் எப்படிப் பொருந்துகிறார்கள்?
ப. ராகவா லாரன்சிடம் இருந்துதான் இது துவங்கியது என்று வைத்துக்கொள்ளலாம். முதல் ஜிகர்தண்டாவிலேயே அவர்தான் நடிக்க வேண்டியது. ஆனால், அவரால் நடிக்க முடியவில்லை. அந்தப் படம் ரிலீஸ் ஆன பிறகு, இதுபோல இன்னொரு படம் செய்யலாம் என்று பேசினோம். இந்தப் படம் குறித்து ஒரு சின்ன யோசனை இருந்தது. ஆனால், அந்தத் தருணத்தில் எனக்கு பெரிய அளவுக்கு நம்பிக்கை வரவில்லை. ஸ்க்ரிப்ட் முழுமையடையவில்லை என நினைத்தேன்.
ஜிகர்தண்டாவுக்கு இரண்டாவது பாகம் எடுத்தால், முதல் பாகத்தைத் தாண்டியதாக இருக்க வேண்டும். அம்மாதிரி ஒரு கதை அப்போது பிடிபடவில்லை. ஆகவே சில வருடங்கள் ஆகட்டும் எனச் சொன்னேன். ஒரு முழுமையான கதை எனக்குள் உருவான பிறகு அதைப் பர்றி யோசிக்கலாம் என நினைத்து மற்ற படங்களை எடுக்க ஆரம்பித்தேன். அவரும் வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இதைப் பேசி ஆறேழு வருடங்கள் ஆன பிறகு, திரும்பவும் பேசினோம். அப்போது ஒரு களம் கிடைத்தது. கதை கிடைத்தது. படத்தை எடுக்கலாம் என முடிவெடுத்தோம். அப்படித்தான் லாரன்ஸ் இதில் இடம் பெற்றார்.
இந்தக் கதையை எழுதிக் கொண்டிருக்கும்போதே, இந்தப் படத்தில் வரும் இயக்குநரின் பாத்திரம் வலுவாகிக்கொண்டே வந்தது. மிகப் பெரிய ஆளுமை கொண்ட பாத்திரமாகவும் நடிப்புக்கு நல்ல வாய்ப்புள்ள பாத்திரமாகவும் உருவானது. அப்போது எஸ்.ஜே. சூர்யா நினைவுக்கு வந்தார். அப்படித்தான் இந்த இருவரையும் வைத்து படம் உருவானது.
கே. எஸ்.ஜே. சூர்யாவும் ராகவா லாரன்ஸும் வெவ்வேறு விதமான நடிப்பு பாணியைக் கொண்டவர்கள். இருவரையும் ஒரு படத்தில் பொருத்தி வேலை வாங்குவது எப்படி சவாலாக இருந்தது?
ப. சவால் எனச் சொல்ல முடியாது. இருவருமே இயக்குநர்கள். ஆகவே ஸ்க்ரிப்ட்டை அவர்களால் புரிந்துகொள்ள முடிந்தது. இருவருமே தங்கள் பாத்திரங்களை நன்றாகப் புரிந்து கொண்டார்கள். உள்வாங்கிக் கொண்டார்கள். ஷூட்டிங் நடக்கும் இடத்தில் எப்போதுமே இதைப் பற்றித்தான் பேசுவார்கள். இதைப் பற்றியே யோசிப்பார்கள்.
இதற்கு முன்பு நடித்த படங்களின் சாயல் இதில் இருக்காது என்பதால், இருவருமே புத்துணர்ச்சியோடு இருப்பார்கள்.
கார்த்திக் சுப்புராஜ் படங்களில் மதுரை அதிகமாக வருவது ஏன்?
பட மூலாதாரம், X/StoneBenchFilms
கே. உங்களுடைய பல படங்களில் மதுரை தொடர்புபடுத்தப்படுகிறது. அது உங்களுடைய சொந்த ஊர் என்பதைத் தாண்டி அதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றனவா?
ப. சொந்த ஊர் என்பதைத் தாண்டி, இந்தக் கதையை அந்த ஊரில் பொருத்திப் பார்ப்பதற்கு சரியாக இருந்தது. ஜிகர்தண்டா ஆரம்பித்தபோது மதுரையில் ஒரு கேங்க்ஸ்டர் கதை என்றுதான் ஆரம்பித்தோம். இந்தப் படத்தில் ஒரு நகரம், அங்கிருந்து சில மணி நேர பயண தூரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை இருக்க வேண்டும். அதற்கு மதுரை பொருத்தமாக இருந்தது. மதுரை எனது ஊர் என்பதால் ஆராய்ச்சி செய்வதும் எளிதாக இருந்தது.
கே. ஜெகமே தந்திரம் படத்திலும் மதுரைதான் களமாக இருந்தது…
ப. அந்தப் படத்தில் கதையை மதுரையிலும் நியூயார்க்கிலும் எடுக்கலாம் என்றுதான் இருந்தேன். இரண்டு நகரங்களுக்கும் சில ஒற்றுமைகள் இருந்தன. இரண்டு நகரங்களிலுமே வேறு வேறு ஊர்களில் இருந்து மக்கள் இங்கே குடியேறியிருந்தார்கள். இரண்டுமே வர்த்தக நகரம். அதற்காக அப்படித் திட்டமிட்டேன். இந்தக் கதையிலும் மதுரைக்கு ஒரு தேவை இருக்கிறது. தவிர, எனது சொந்த ஊர் என்பதால் ஒரு பிரியமும் இருக்கிறது.
கே. உங்களுடைய படங்களில் தொடர்ந்து சந்தோஷ் நாராயணனை பயன்படுத்துகிறீர்கள். அதற்கு ஏதும் பிரத்யேக காரணம் உண்டா?
ப. என் முதல் படத்திலிருந்து என்னோடு பணியாற்றுகிறார். அவர் மிகப் பெரிய ஜீனியஸ். இருவருக்கும் இடையில் கலை ரீதியான ஒற்றுமையும் இருக்கிறது. விரைவிலேயே எனது நண்பராகவும் ஆகிவிட்டார். ஒரு ஸ்க்ரிப்டை கொடுத்தவிட்டு, அடுத்த வாரம் பாடல் வேண்டுமென்றால், அவரே ஸ்க்ரிப்டை படித்து நான் எதிர்பார்ப்பதைவிட சிறப்பாக ஒரு பாடலைச் செய்து தந்துவிடுவார்.
‘ஏலியன் வந்து படம் எடுப்பதுகூட சாத்தியம்தான்’
பட மூலாதாரம், KarthikSubbaraj/X
“இந்தக் கதையிலும் மதுரைக்கு ஒரு தேவை இருக்கிறது. தவிர, எனது சொந்த ஊர் என்பதால் ஒரு பிரியமும் இருக்கிறது.”
கே. உங்களுடைய படங்களில் ‘அசால்ட் சேது’ போன்ற வித்தியாசமான, வலுவான பாத்திரங்களை எதிர் நாயகர்களாக படைக்கிறீர்கள்…
ப. உலகம் முழுவதுமே அப்படித்தான். ஒரு கதையில் வில்லன் வலுவாக இருந்தால்தான், கதாநாயகனின் பாத்திரமும் வலுவாகும். சற்று நிழலான பாத்திரங்களை ஆராய்வதில் எனக்கு ஆர்வம் உண்டு.
கே. உங்களுடைய படங்களில் இயல்பு வாழ்க்கையில், அதீதமான கற்பனை அம்சம் ஒன்றை வைக்கிறீர்கள்… ஜெகமே தந்திரம் படத்தில் மதுரையில் பரோட்டா மாஸ்டராக இருப்பவர் லண்டனுக்கு போவது, ஜிகர்தண்டாவில் ரவுடி சினிமா எடுப்பதைப் போல…
ப. அதைச் சினிமாவில்தானே செய்ய முடியும். அப்போதுதான் கதை சுவாரஸ்யமாக இருக்கும். மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்ப்பவர் லண்டனுக்கு போக முடியும். ஆனால், எவ்வளவு காலகட்டத்தில் என்பதில்தான் வித்தியாசம். நிஜமான வேகத்தில் எடுத்தால் அது ஒரு ஆர்ட் ஃபிலிமை போல மாறிவிடும்.
அந்தப் படத்தில் ஒரு குடியேற்றப் பிரச்னையைப் பேச விரும்பினோம். அதை எவ்வளவு வேகமாக கதையில் காட்ட முடியுமோ, எவ்வளவு நம்பகத் தன்மையுடன் காட்ட முடியுமோ அப்படிக் காட்டினோம். சினிமாவில்தான் அதைச் செய்ய முடியும்.
கே. உங்களுடைய வேறு படங்களுக்கு இதுபோல தொடர்ச்சியாக ஒரு படத்தை எடுக்கும் திட்டம் உள்ளதா?
ப. அந்த மாதிரி எந்தத் திட்டமும் இல்லை. ஜிகர்தண்டா கதையில் வேறு வேறு பாத்திரங்களைப் பொறுத்த முடிந்தது. இதே கதையை வேறு வேறு விதமாகவும் எடுக்க முடியும். ஒரு ஏலியன் வந்து படம் எடுப்பதைப் போலக்கூட எடுக்கலாம். அதற்கான இடத்தை இந்தக் கதை தருகிறது. மற்ற கதைகளை எடுத்துக்கொண்டு, வேறு பாத்திரங்களை வைத்து ஆராய்வதைவிட, வேறு வேறு கதைகளையே இயக்க விரும்புகிறேன்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
