பட மூலாதாரம், ANI
உத்தராகண்ட் மாநிலம் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் அங்கு பணிபுரிந்த 36 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 12) அதிகாலை இந்தச் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாக செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா மற்றும் தண்டல்கான் ஆகிய கிராமங்களை இணைக்கும் வகையில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வந்தது.
பிரதமர் நரேந்திர மோதி, உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் தாமியை அழைத்து மீட்புப் பணிகள் குறித்து தகவல் கேட்டறிந்தார்.
சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்களுக்கு வெளியில் இருந்து ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களுடன் இன்னும் தொடர்பு ஏற்படவில்லை.
சிக்கியிருக்கும் தொழிலாளர்கள் எங்கிருந்து வந்தவர்கள்?
சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருக்கும் தொழிலாளிகளில் ஒருவர் மட்டும் உத்தராகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
மீதமுள்ளவர்கள் பீகார், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
மாநிலப் பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த நிவாரணப் பணியாளர்கள் உள்ளூர் காவல்துறை மற்றும் நிர்வாகத்துடன் இணைந்து சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜே.சி.பி மற்றும் பிற இயந்திரங்கள் மூலம் சுரங்கப்பாதைக்கு அருகில் உள்ள இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
பட மூலாதாரம், ANI
சுரங்கப்பாதையில் சிக்கியவர்களைக் காப்பாற்ற 13மீ அகல பாதையில் ஜே.சி.பி, பொக்லேன் இயந்திரங்கள் ஆகியவை இயக்கப்பட்டு வருகின்றன
தடையின்றி நடந்துவரும் மீட்புப் பணிகள்
இதுகுறித்து, உத்தரகாசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர்பன் யதுவன்ஷி ஒரு செய்தி நிறுவனத்திடம், சுரங்கப்பாதையின் முகப்பு பகுதி 200மீ நீளத்திற்கு உடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
சுரங்கப்பாதையின் முகப்பினைக் கட்டும் பணி நடந்தபோதுதான் அது இடிந்து விழுந்ததாக அவர் தெரிவித்தார்.
தற்போது வரை சுரங்கப்பாதையில் சிக்கிய அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில், நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதையின் சில்க்யாரா வாயிலில் இருந்து 230மீ உள்ளே இருந்த பகுதி இடிந்து விழுந்தது,” என்றார்.
“சிறிது நேரத்தில், வாயிலில் இருந்து 30மீ முதல் 35மீ உள்ளே லேசான இடிபாடுகள் விழத்துவங்கின. பின்னர் திடீரென கனமான இடிபாடுகள் விழ ஆரம்பித்தன. சுரங்கப்பாதையில் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். இடிபாடுகளால் சுரங்கப்பாதையின் ஆக்ஸிஜன் விநியோகம் தடைபட்டது,” என்றார்.
சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை விரைவில் பத்திரமாக வெளியேற்றுவதே தங்களது முதற் குறிக்கோள் என காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
இதற்காக 24 மணி நேரமும் போலீஸ் படை மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபடுவார்கள். மீட்புப் புதுப்பிப்புகள் மற்றும் உதவிக்காக உத்தரகாசி காவல்துறை +917455991223 என்ற உதவி எண்ணையும் வழங்கியுள்ளது.
பட மூலாதாரம், ANI
உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு பத்து மணி நேரத்திற்குப் போதுமான ஆக்ஸிஜன் இருப்பதாக மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி தேவேந்திர பட்வால் தெரிவித்தார்
விபத்து எப்படி நடந்தது?
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக,உத்தராகண்ட் மாநில சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் ஏபி அன்ஷுமன் கூறினார்.
சுரங்கப்பாதையின் சில்க்யாராவை நோக்கிய பகுதியில் வாயிலிலிருந்து சுமார் 200மீ தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். அப்போது தொழிலாளர்கள் வாயிலுக்குள் சுமார் 3கி.மீ. தொலைவில் இருந்தனர், என்றார் அவர்.
சில ஊடக அறிக்கைகளின்படி, உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு 400மீ காலி இடம் இருப்பதாகவும், அதில் அவர்கள் நகர முடியும் எனவும், அவர்களுக்கு பத்து மணி நேரத்திற்குப் போதுமான ஆக்ஸிஜன் இருப்பதாகவும் மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி தேவேந்திர பட்வால் தெரிவித்தார்.
சுரங்கப்பாதையில் சிக்கியவர்களைக் காப்பாற்ற 13மீ அகல பாதையில் ஜே.சி.பி, பொக்லேன் இயந்திரங்கள் ஆகியவை இயக்கப்பட்டு வருகின்றன.
விபத்துக்குப் பிறகு உத்தரகாசியில் நடந்த சம்பவம் குறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் பிரதமர் நரேந்திர மோடி தகவல் கேட்டறிந்தார். சிக்கியவர்களை மீட்க அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர் முதல்வர் தாமிக்கு அவர் உறுதியளித்துள்ளார்.
சம்பவத்திற்குப் பிறகு அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக தாமி கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “நான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். விபத்து குறித்து முழுமையான தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநில, மத்திய பேரிடர் நிவாரணல் குழுக்கள் சம்பவ இடத்தில் உள்ளன. அனைவரும் பாதுகாப்பாக திரும்ப பிரார்த்தனை செய்கிறேன்,” என்றார்.
சுரங்கப்பாதை திட்டம்
‘ஆல் வெதர்’ சாலை திட்டத்தின் கீழ் உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் நவ்யுக் இன்ஜினியரிங் இந்தச் நிறுவனம் சுரங்கப்பாதையை கட்டி வருகிறது.
இந்தச் சுரங்கப்பாதை தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் மேற்பார்வையின் கீழ் கட்டப்பட்டு வருகிறது.
அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் முடிவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
