
தமிழில் பிக் பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர் 1 முதல் நடைபெற்று வருகிறது.
சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் (ட்விட்டர்) கடந்த சில நாட்களாக டிரெண்டாக உள்ள ஹேஷ்டேக்குகளில் ஒன்று #Pradeepantony (பிரதீப் ஆண்டனி). இதற்கான காரணம் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே அனுப்பியது தான்.
தமிழில் பிக் பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த சீசன்களில் இல்லாத வகையில் இந்த முறை ’பிக் பாஸ்’ வீடு, ‘ஸ்மால் பாஸ்’ வீடு என, இரண்டு வீடுகளாக பிக் பாஸ் வீடு பிரிக்கப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு வாரமும் தேர்ந்தெடுக்கப்படும் ‘கேப்டன்’ 6 பேரை தேர்ந்தெடுத்து ‘ஸ்மால் பாஸ்’ வீட்டுக்கு அனுப்புவார். இப்படி, பல்வேறு புதிய விஷயங்களை அமல்படுத்தியுள்ளனர்.
சீசன் தொடக்கத்திலேயே பவா செல்லதுரை ’இதற்கு மேல் என்னால் இங்கு இருக்க முடியாது’ என தாமாகவே முன்வந்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனையடுத்து ஜோவிகா ’கல்வி அவசியமில்லை’ என கூறியது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பின் போட்டிகள், ’வைல்ட் கார்டு என்ட்ரி’ மூலமாக 5 பேர் உள்ளே நுழைந்தது என நிகழ்ச்சி நகர்ந்து கொண்டே இருந்தது.
சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் பிரதீப்பின் நடவடிக்கைகள் மிகவும் மோசமாக இருக்கிறது என சக போட்டியாளர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. பிரதீப் அநாகரிகமாக நடந்துகொள்கிறார் என்றும் சக போட்டியாளர்களிடம் தகாத முறையில் பேசுகிறார் என்றும் அவர்கள் புகார் கூறினர்.
இதையடுத்து, கடந்த சனிக்கிழமை (நவ. 04) வார இறுதியில் மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ரவீனா உள்ளிட்டோர் இதுகுறித்து கமல்ஹாசனிடம் முறையிட்டனர். ‘கூல்’ சுரேஷ், விஷ்ணு உள்ளிட்டோரும் தாங்கள் பிரதீப்பால் பாதிக்கப்பட்டதாக கூறினர். கமல்ஹாசனும் பிரதீப்புக்கு கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து, பிரதீப்பிற்கு ‘ரெட் கார்டு’ கொடுத்து வெளியேற்ற வேண்டுமா என ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக வாக்கெடுப்பு நடத்தினார் கமல். இதில், பெரும்பாலான போட்டியாளர்கள் ‘ரெட் கார்டு’ கொடுக்க வேண்டும் என கூறியதையடுத்து அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
யார் இந்த பிரதீப் ?
சென்னையை சேர்ந்த பிரதீப் ஆண்டனி அருவி, டாடா, வாழ் போன்ற திரைப்படங்களில் நடித்து உள்ளார். பிரதீப்பிற்கு பிக் பாஸ் புதிது அல்ல. சீசன் 3-ல் கவினின் விருந்தினராக வீட்டுக்குள் வந்த பொழுது கவின் கன்னத்தில் அறைந்து ’நீ விளையாடுவது வெளியில் உள்ளவர்களை ஏமாற்றுகிறது’ என தெரிவித்து சர்ச்சைக்கு உள்ளானார். மேலும் கலைத் துறையில் அதீத ஆர்வம் கொண்டவராகவும் தன்னை முன்நிறுத்துகிறார்.
சமூக வலைதளங்களில் பிரதீப்பிற்கு ஆதரவாகவும் கமல்ஹாசன் செய்தது தவறு, பிரதீப் பேச கூட வாய்ப்பு அளிக்கவில்லை என தங்களது ஆதங்கத்தை அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பட மூலாதாரம், Idealist/Twitter
சமூகவலைதளங்களில் தொடர்ந்து விவாதங்கள் இடம்பெற்றுவருகின்றன.
”பேச ஏன் வாய்ப்பு தரவில்லை?”
இது குறித்து தனது X தளத்தில் பதிவு செய்துள்ள நடிகரும் நடன கலைஞருமான சதீஷ், “பிரச்னை, பிரச்னை என கூறுகிறீர்கள். ஆனால் என்ன பிரச்னை? ஏன் பிரதீப்பிற்கு பேச வாய்ப்பு தரவில்லை? இது நன்றாக இல்லை. யாருக்கு என்ன ஆனால் என்ன, நிகழ்ச்சி வெற்றிகரமாக தொடர வேண்டும். சோகம், மிகவும் சோகம்” என பதிவிட்டு உள்ளார்.

பட மூலாதாரம், Sathish Krishnan / Twitter
“உன்னை தெரிந்தவர்களுக்கு நீ எப்படி என தெரியும்” என பிரதீப்புடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் நடிகர் கவின்.
“பெண்களும் ஆண்கள் மீது பொய் குற்றச்சாட்டுகளை தெரிவிப்பர் என்பதற்கான சரியான உதாரணம், இதே போல தான் சீசன் 1-ல் பரணிக்கும் செய்தனர். இதுதான் நீதியா?” என்று கூறி ஜோவிகா, மாயா மற்றும் பூர்ணிமாவின் காணொளியை பகிர்ந்துள்ளார்.
64 கேமரா மீது நம்பிக்கை இல்லையா?
இந்த நிகழ்வு குறித்து கவிஞரும் பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளருமான சினேகன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “64 கேமராக்களுக்கும் அங்குள்ள போட்டியாளர்களுக்கும் தான் தெரியும். எந்த சூழ்நிலையில் அவர் தவறுகளை செய்தார் என்றும், வெளியில் இருந்து ஒன்றரை மணி நேரம் பார்க்கும் நம்மால் அதற்கு ஒரு தீர்ப்பை அளிக்க முடியாது” என்றும் கூறினார்.
“ஒருவரை பிடித்திருக்கிறது என கண்மூடித்தனமாக அவர் செய்வதையும் நான் சரி என சொல்ல விரும்பவில்லை. தவறு செய்வதற்கான நிறைய வாய்ப்புகள் அனைவருக்கும் அங்கு இருக்கும். தடுமாறுவதற்கும் தடம் மாறுவதற்கும் அங்குள்ள பிரச்னைகளின் அழுத்தம் அனைவருக்கும் இருக்கும். சில நேரங்களில் வார்த்தைகளை அதிகமாக பேசுவதற்கும் உடைந்து அழுவதற்கும் வேறு ஒருவரை மன ரீதியாக உடைப்பதற்கும் நிறைய வாய்ப்புகள் அங்கு இருக்கிறது.”
தொடர்ந்து பேசிய அவர், “ஒட்டுமொத்தமாக கமல் மேல் மட்டுமே குறை சொல்ல மாட்டேன். அங்கு நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனம் இருக்கிறது. வாக்களிக்கும் பொதுமக்கள் இருக்கிறார்கள். இவர்களில் யாராவது அவருக்கு பேச சிறிது நேரம் கொடுத்து இருக்கலாம்,” என்றார்.
“இந்த பிரச்னையைக் கேட்டுச் சென்று நிறுவனத்துடன் பேசுகிறார் கமல். அது இல்லாமல் மறுபரிசீலனை செய்ய போட்டியாளர்களிடம் தனித்தனியாக பேசுகிறார். இந்த முடிவை எந்த மனநெருடலோடு எடுத்தார் என்பது அவருக்கு தான் தெரியும். திருந்துவதற்கோ, திருத்திக் கொள்வதற்கோ ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம் என்பது தான் என்னுடைய ஆதங்கம்,” என்கிறார் சினேகன்.

பட மூலாதாரம், Kavin/Twitter
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா?
மேலும் தொடர்ந்த சினேகன், “பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து மீது எனக்கு நிறைய கேள்விகள் இருக்கின்றன. 64 கேமராக்கள் மீது இவர்களுக்கு நம்பிக்கை இல்லையா? அந்த 64 கேமராக்களை மூன்று காலகட்டமாய் இயக்கிக்கொண்டு இருக்கும் மனிதர்கள் மீது இவர்களுக்கு நம்பிக்கை இல்லையா? பிக் பாஸ் என்கிற மிகப் பெரிய ஆளுமை மீது இவர்களுக்கு நம்பிக்கை இல்லையா? இதன் மீதெல்லாம் நம்பிக்கை இல்லாமல் இதனை பிரதீப் மீது வீசிவிட்டார்கள் என எனக்கு தோன்றுகிறது,” என்றார்.
“பல் துலக்கும் பொழுது கூட கேமராவை பார்த்து துலக்க பழக்கப்பட்ட இவர்களுக்கு கேமரா மீது நம்பிக்கை இல்லையா அல்லது இந்த நிகழ்ச்சி நிறுவனத்தின் மீது நம்பிக்கை இல்லையா என தெரியவில்லை.”
உண்மையில் நான் பிரதீப் உடன் பேசியதோ, பழகியதோ இல்லை. என்னை பொறுத்த வரை பாதிக்கப்பட்டவன் பக்கம் நிற்க வேண்டும் என்பதே அறம்.

பட மூலாதாரம், Pradeep Antony/Twitter
பிரதீப் உடன் நின்ற பெண்கள்
பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டதும் தனக்கு கொடுக்கப்பட்ட ரெட் கார்டை வைத்து பெண்களோடு சேர்ந்து மகிழ்ச்சியான பதிவை பகிர்ந்து உள்ளார்.
மேலும் என்னுடைய பிக் பாஸ் கோப்பைகள் என, தான் போட்டியில் வாங்கிய பொருட்களை பகிர்ந்து உள்ளார்.
“என்னுடன் நின்றவர்களுக்கு நன்றி. என்னால் முடிந்தவரை ஒரு நல்ல கலைஞனாக முயற்சி செய்கிறேன்,” என பதிவிட்டு உள்ளார்.
மற்றொரு பதிவர், “நெறிமுறைகள் மற்றும் ஒழுக்கத்தை காட்டியதற்கு கமல்ஹாசனை தலைவணங்குகிறேன்,” என பதிவிட்டு உள்ளார்.
மேலும் ஒருவர், “டாய்லெட் போனா கதவைக் கூட மூட தெரில இவனுக்குல ரசிகர்கள் வேற,” என கடுமையாக பிரதீப்பை விமர்சித்துள்ளார்.
குழந்தைகள் பார்க்கக் கூடாத நிகழ்ச்சி
இந்த நிகழ்வு குறித்து பேசிய சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமியிடம் பேசினோம். அவர் கூறுகையில், ,”பிரதீப் கெட்ட வார்த்தைகள் பேசுகிறார், சில நேரங்களில் சண்டைக்கு போகிறார், கழிவறையை திறந்து வைத்துவிட்டே சிறுநீர் கழிக்கிறார், ஒரு பொதுவெளியாக இருந்தாலும் சரி, பிக் பாஸ் வீடாக இருந்தாலும் சரி இது எல்லாம் மிக தவறான செயல்கள்”. ஆனால், அவர்கள், பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதை கூறி “ரெட் கார்டு” கொடுத்து வெளியில் அனுப்பியது தான் ஏற்க முடியாதது” என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், பொதுமக்கள் வோட்டிங் செய்கின்றனர். ஆனால், அதனது முடிவுகள் வெளிப்படையாக மக்களுக்கு அந்த தரவுகளோடு காண்பிக்கப்படுவதில்லை. இது நிறுவனம் ஒருதலைபட்சமாக இருக்கிறது என்பதையே குறிக்கிறது. நிறுவனம் மற்றும் போட்டியாளர்கள் முடிவை கேட்ட கமல்ஹாசன் ஏன் பொதுமக்களிடம் பேசவில்லை என்ற கேள்வியும் இருக்கிறது?” என தெரிவித்தார்.

பட மூலாதாரம், Prasanth Rangasamy
பிரசாந்த் ரங்கசாமி-சினிமா விமர்சகர்
“குழந்தைகள் பார்ப்பதற்கான நிகழ்ச்சி பிக் பாஸ் இல்லை என்று நான் நினைக்கிறன். இந்த நிகழ்ச்சியை முழுக்க முழுக்க 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்க வேண்டிய நிகழ்ச்சியாக அவர்கள் தொடர வேண்டும். தற்போது அந்த வீட்டில் உள்ள சிலர் வெறும் அடல்ட் கண்டெண்ட்களை மட்டுமே பேசி தங்களது டிஆர்பியை ஏற்றுகின்றனர். சொல்லப்போனால் இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து பார்வையாளர்கள் வெறும் வன்மத்தை மட்டும் தான் எடுத்து செல்கின்றனர்” என்கிறார் பிரசாந்த் ரங்கசாமி.

பட மூலாதாரம், kishen das
இந்த நிகழ்ச்சி குறித்து தனது X தளத்தில் பதிவிட்டு உள்ள நடிகர் கிஷன் தாஸ், “நான் பொதுவாக கருத்து தெரிவிப்பவர் அல்ல, ஏனெனில் அது பின்னர் வந்து என்னை தாக்கக்கூடும் என்று நான் பயப்படுகிறேன், ஆனால் பிக் பாஸ் இந்த சீசன் உண்மையில் நச்சுத்தன்மை வாய்ந்தது.
ஒளிபரப்ப அனுமதிக்கப்படும் ஒவ்வொரு கருத்தும் பிரச்னைக்குரியது. இந்த நிகழ்ச்சியிலிருந்து யாரும் எதையும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்” என தனது கருத்தை பதிவிட்டு உள்ளார்.
பிரதீப்பிற்கு ‘ரெட் கார்டு’ கொடுத்ததற்கு எதிரான கருத்துகள் இருந்தாலும், அது சரியே என்ற வாதத்தையும் சிலர் முன்வைத்து வருகின்றனர்.
தங்களிடம் பிரதீப் தகாத வார்த்தைகளில் பேசியிருந்தால் அந்த கணமே அவரை எதிர்த்து கேள்வி கேட்டிருக்க வேண்டும் என, சக போட்டியாளர்கள் விசித்ரா, தினேஷ் உள்ளிட்டோர் வாதிட்டனர்.
இது தொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள பாடகி சின்மயி, அத்துமீறல்கள், பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவான மனநிலை குறித்தும் இதனால் பாதிக்கப்படும் பெண்களையே கேள்வி கேட்பது குறித்தும் ‘எக்ஸ்’ தளத்தில் கவலை தெரிவித்துள்ளார்.
”பிரதீப்பிற்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பிய அனைத்து போட்டியாளர்களுக்கும் பாராட்டுகள்” என, Zan என்ற பயனர் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Zan / Twitter

பட மூலாதாரம், Abi / Twitter
“பிரதீப் பெண் போட்டியாளர்களிடம் அத்துமீறுகிறார் என நான் கூறியபோது, நான் போட்டியையும் வேலையையும் இணைத்து குழப்பிக்கொள்கிறேன் என இங்கிருந்தவர்கள் என்னை குற்றம்சாட்டினர். ஆனால், அங்குள்ள போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் வீடு வேலை செய்யும் இடமே. எனவே, அவர்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்” என அபி என்ற பயனர் தெரிவித்துள்ளார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்