தமிழ்நாடு: மோதிக்கு யாரும் இணையில்லை என்று கார்த்தி சிதம்பரம் பேசியது ஏன்?

தமிழ்நாடு: மோதிக்கு யாரும் இணையில்லை என்று கார்த்தி சிதம்பரம் பேசியது ஏன்?

கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதா

பட மூலாதாரம், Getty Images

பிரதமர் நரேந்திர மோதி மற்றும் ராகுல் காந்தி குறித்தும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்தும் பேசிய சில கருத்துகளுக்காக சிவகங்கை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான கார்த்தி சிதம்பரத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு நோட்டீஸ் அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. இரு தரப்புமே இதனை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்த மறுக்கிறார்கள். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?

சிவகங்கை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான கார்த்தி சிதம்பரம் சில நாட்களுக்கு முன்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் ராகுல் காந்தி குறித்தும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் குறித்தும் அவர் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியதாக இரு நாட்களுக்கு முன்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.

ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு இந்தத் தகவலை உறுதிப்படுத்த மறுத்துவிட்டது. கார்த்திக் சிதம்பரம் தனக்கு அப்படி ஏதும் நோட்டீஸ் வரவில்லை என்று சொல்லிவிட்டார். மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பிலும் அதிகாரபூர்வமாக செய்திக் குறிப்பு ஏதும் இது தொடர்பாக வெளியிடப்படவில்லை.

ஆகவே, இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது மர்மமாகவே இருந்தது. இதற்கிடையில் காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் கூட்டம் ஜனவரி 10ஆம் தேதியன்று சத்யமூர்த்தி பவனில் நடைபெற்றது. இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காகத்தான் அந்தக் கூட்டம் கூட்டப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

கூட்டம் முடிந்து வெளியில் வந்த ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் கே.ஆர். ராமசாமி, கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதா, இல்லையா என ஊடகத்தினர் கேள்வி எழுப்பினர். ஆனால், அந்தக் கேள்விக்கு அவர் நேரடியாகப் பதில் சொல்லவில்லை. “கூட்டத்தில் பல விஷயங்களை விவாதிப்போம். அதைப் பற்றி வெளியில் சொல்ல முடியாது” என்று மட்டும் சொல்லிவிட்டுப் போய்விட்டார். கூட்டத்தில் கலந்துகொண்ட பிறரும் அதைப் பற்றி பேச மறுத்துவிட்டனர்.

கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதா

பட மூலாதாரம், X/@KartiPC

இதற்கிடையில், அந்தப் பேட்டி குறித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் கார்த்தி சிதம்பரம். அதில், “டெல்லி தலைமையிடம் கோள்மூட்டுபவர்களுக்கும், நான் கூறிய கருத்தை தமிழ் தெரியாதவர்களிடம், வேண்டுமென்றே திரித்து சொன்னவர்களுக்கும் இதனை சமர்ப்பிக்கிறேன்” என்று குறிப்பிட்டு வீடியோ துணுக்கு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ துணுக்கில் தனியார் தொலைக்காட்சிக்கு கார்த்தி சிதம்பரம் அளித்த பேட்டியின் சில பகுதிகள் இடம்பெற்றுள்ளன. அதில், நிகழ்ச்சித் தொகுப்பாளர் கார்த்திக் சிதம்பரத்திடம் ‘மல்லிகார்ஜுன கார்கே மோதிக்கு சமமானவரா?’ என்று கேட்கிறார். “இன்றைக்கு உள்ள பிரச்சார பலத்தில் யாருமே மோதிக்கு இணையில்லை என்றுதான் சொல்வேன்” என்கிறார் கார்த்திக் சிதம்பரம்.

நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அடுத்ததாக “ராகுல் காந்தியும் மோதிக்கு சமமில்லை என்கிறீர்களா?” என்று கேட்கிறார். அதற்கு, “ஒருவருக்கெதிராக ஒருவரை நிறுத்தினால், அவர்களிடம் இருக்கும் பிரச்சார எந்திரம், பிரதமராக இருப்பதால் அவர்களுக்கு இயல்பாக இருக்கும் சாதகமான அம்சங்கள் போன்றவற்றை வைத்துப் பார்க்கும்போது கஷ்டம்தான். ஆனால், பா.ஜ.கவை தோற்கடிக்க முடியுமா என்று பார்த்தால் நிச்சயம் முடியும். தேர்தல் கணக்குகளை சரியாகப் போட்டால் ஒரு அரசியல் கட்சியாக பா.ஜ.கவை கண்டிப்பாக தோற்கடிக்க முடியும். மோதியின் பிரபலம் ஒரு விஷயமாக இருந்தாலும் மோதிக்கு இணையாக ஒரு நபரை உருவாக்குவது என்றால் உடனடியாக ஒரு பெயரை என்னால் சொல்ல முடியாது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, ராகுல் காந்தியை முன்னிறுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். ஆனால், கூட்டணிக் கட்சிகள் காங்கிரஸ் கட்சியின் தலைவரை முன்னிறுத்த வேண்டும் என்கிறார்கள். அதற்கு வியூகரீதியான காரணங்கள் இருக்கின்றன” என்று பேசியுள்ளார்.

கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதா

பட மூலாதாரம், Getty Images

மேலும், “பெர்சனாலிட்டி வார்ல மோதியை தோற்கடிக்க முடியுமா என்றால் முடியாது. ஆனால், பிரச்சனைகளில் அரசியல் யுத்தங்களில், கூட்டணி அரசியலில் தோற்கடிக்க முடியும். இவர்கள் ஆட்சியால் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். அதற்கு மாறாக எல்லாரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய ஆட்சியை எங்களால் அளிக்க முடியும் என்பதுதான் எங்கள் கருத்து. அதற்கு மாறாக, அதனை ஒரு ஆளுமை சார்ந்த யுத்தமாக மாற்றி, அதிபர் தேர்தலைப் போல மாற்றி, அதில் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதுதான் எனது கருத்து” என வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார் கார்த்தி சிதம்பரம்.

இந்தப் பேட்டியில் ராகுல் காந்தி குறித்துக் கூறியதற்காகவும் இன்னொரு பேட்டியில், மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் பிரச்சனை இல்லை என்று கூறியதற்காகவும்தான் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவராக கே.ஆர். ராமசாமி இருக்கிறார். அவர் தவிர முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலராமன், மொடக்குறிச்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம். பழனிச்சாமி, வழக்கறிஞரான தம்பி விஜயகுமார், ஊடகப் பேச்சாளரான இதயத்துல்லா ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதா என கே.ஆர். ராமசாமியிடம் பிபிசி கேட்டபோது, நேரடியாக அவர் பதில் சொல்லவில்லை. “ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் பல விஷயங்கள் பேசப்படும். அதெல்லாம் உட்கட்சி விவகாரம். இதைப் பற்றி வெளியில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நடவடிக்கை எடுப்பதையெல்லாம் காங்கிரஸ் மேலிடம்தான் முடிவுசெய்யும்” என்று மட்டும் சொன்னார்.

கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதா

பட மூலாதாரம், Facebook

இதற்கிடையில் மற்றொரு திருப்பமாக அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள ஆர்.எம். பழனிச்சாமி, ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில் கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறித்து அவர் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

“10 ஜனவரி 2024 அன்று சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிந்தேன். கூட்டத்தின் நோக்கம் குறித்து கேட்டபோது, ‘கூட்டம் நடைபெறுவதாகத்தான் கே.ஆர். ராமசாமி சொல்லச்சொன்னார்’ என்று கூறப்பட்டது. வீட்டில் நிகழ்ச்சிகள் உள்ள காரணத்தால் என்னால் இக்கூட்டத்திற்கு வர இயலாது என்று கூறியிருந்தேன்.”

“இன்று சமூக வலைதளங்கள் மற்றும் செய்திகளில் தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் கே.ஆர். ராமசாமி, கார்த்திக் சிதம்பரத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் அதற்கு விரைவில் பதிலளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருப்பதாகத் தெரியவந்தது. அவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி குறித்து நீங்கள் கடிதத்தில் விளக்கம் கேட்டிருப்பதாக செய்திகளில் வெளிவந்துள்ளது. நீங்கள் கடிதம் அனுப்பியது உண்மையா?”

“என்னைப் பொறுத்தவரை இதுபோன்று ஒழுங்கு நடவடிக்கை குழுவின் மற்ற உறுப்பினர்களுடன் கலந்து பேசாமல் நீங்கள் நோட்டீஸ் அனுப்புவதும் கூட்டத்தின் நோக்கம் குறிப்பிடாமல்கூட, கூட்டத்திற்கு அழைப்பதும் ஏற்புடையது அல்ல. பேட்டி வெளியாகி இவ்வளவு நாட்கள் கழித்து விளக்கம் கேட்பது ஏன்?”

“விளக்கக் கடிதம் குறித்த தகவல்கள் குழு உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமல் ஊடகங்களுக்கு தெரிவித்தது ஏன்? சம்பவத்தின் பேரில் புகார் கடிதம் வந்தால், அதன் உண்மைத் தன்மையை அறிந்து குழு உறுப்பினர்களோடு கலந்து பேசி சம்பந்தப்பட்டவர்களுக்கு விளக்கக் கடிதம் அனுப்பும் முறையைத்தானே இதுவரை பின்பற்றியுள்ளோம்?”

“தமிழ்நாடு ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிற்கு இதுபோன்ற அதிகாரங்கள் கிடையாது. ஏற்கனவே ஒரு முறை இதுபோன்ற ஒரு நிகழ்வு நடந்திருந்தது என்பதைப் பதிவுசெய்ய விரும்புகிறேன். அன்றே இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறக் கூடாது என்பதையும் கூட்டத்தில் பதிவுசெய்திருந்தேன். மீண்டும் மீண்டும் இதுபோன்ற தவறுகள் தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு பேரில் நடைபெறும்போது, அதன் நோக்கம் பொதுவெளியில் கேள்விக்குறியாகிறது. அசிங்கப்படுகிறது.”

கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதா

பட மூலாதாரம், Facebook

“கார்த்தி சிதம்பரத்தின் பேட்டியை முழுமையாகப் பார்த்து அதற்குப் பிறகு அதில் தவறுகள் இருக்கும் என்று சொன்னால் அதைப் பற்றிக் குறிப்பிடலாம். நான் பார்த்தவரை அவரது பேட்டியில் ஊடகங்களில் வெளிவந்துள்ள வார்த்தைகளோ நீங்கள் குறிப்பிட்டு விளக்கம் கேட்கும் அளவுக்கு எதுவும் இல்லை என்பதைத் தெரிவித்து எனது எதிர்ப்பைப் பதிவுசெய்கிறேன். ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பேரில் இப்படி ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தால் அதற்கு என்னுடைய எதிர்ப்பைப் பதிவுசெய்கிறேன்” என்று அந்தக் கடிதத்தில் ஆர்.எம். பழனிச்சாமி கூறியிருக்கிறார்.

இது குறித்து ஆர்.எம். பழனிச்சாமியிடம் கேட்டபோது, “கார்த்திக் சிதம்பரத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறதா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. ஆனால், பத்தாம் தேதி நடந்த கூட்டத்தில் என்னுடைய எதிர்ப்பு பதிவுசெய்யப்பட்டிருப்பதாக மட்டும் சொன்னார்கள். என்னுடைய வீட்டில் நடந்த ஒரு துக்க நிகழ்வின் காரணமாக என்னால் கூட்டத்திற்குப் போக முடியவில்லை” என்று தெரிவித்தார்.

கார்த்திக் சிதம்பரம் தரப்பைப் பொறுத்தவரை இதுபோல நோட்டீஸ் ஏதும் வரவில்லை என்றே கூறுகிறது. கார்த்திக் சிதம்பரம் இதைப் பற்றிப் பேச மறுத்துவிட்டார். இது தொடர்பாக ட்விட்டரில் தான் தெரிவிக்கும் கருத்துகள் மட்டுமே தன்னுடைய கருத்துகள் எனக் கூறுகிறார் அவர்.

தமிழ்நாடு காங்கிரசின் அடுத்த தலைவராக கார்த்திச் சிதம்பரம் வரவிரும்பும் நிலையில், அதற்கு ‘செக்’ வைக்கும் விதமாகவே இதுபோன்ற ஒரு தகவல் பரப்பப்படுவதாக காங்கிரசைச் சேர்ந்த சிலர் தெரிவிக்கின்றனர். “ஒரு நாள் முழுவதும் இந்தச் செய்தி தேசியத் தொலைக்காட்சிகளில் வந்தது. கோடி ரூபாய் கொடுத்தாலும் இதுபோல விளம்பரம் கிடைக்குமா? அதனால் செய்கிறார்கள். ஆனால் கட்சித் தலைமை கார்த்தி சிதம்பரத்திடம் இது குறித்து எந்த விளக்கமும் கேட்டதாகத் தெரியவில்லை” என்கிறார்கள் அவர்கள்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *