இந்தியா: சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறைகள் – மனித உரிமை அறிக்கை கூறுவது என்ன?

இந்தியா: சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறைகள் - மனித உரிமை அறிக்கை கூறுவது என்ன?

இந்தியா, சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்.

பட மூலாதாரம், Getty Images

மனித உரிமைகளுக்காகச் செயல்படும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, இந்திய அரசு மத சிறுபான்மையினருக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது ‘உலக அறிக்கை 2024’இல், மனித உரிமைகள் மீதான இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் கொள்கைகள் குறித்துப் பல கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

வியாழன் அன்று வெளியிடப்பட்ட உலக அறிக்கை 2024இல், உரிமைகளை மதிக்கும் ஜனநாயக நாடு என்ற பெயரில் உலகளாவிய தலைமைக்கு உரிமை கோரும் இந்திய அரசின் திட்டம் இந்தக் குற்றச்சாட்டுகளின் மூலம் பலவீனமடைந்துள்ளது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் கிட்டத்தட்ட 100 நாடுகளில் மனித உரிமைகள் சார்ந்த கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளைக் கண்காணித்து வருகிறது. இதன் அடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் உலக அறிக்கையைத் தயாரித்து வெளியிடுகிறார்கள்.

740 பக்கங்கள் கொண்ட அதன் சமீபத்திய அறிக்கையில், மணிப்பூரில் நடந்த இன மோதல்கள் முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம், ஜம்மு காஷ்மீர் அரசியல் வரை அனைத்தையும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதுபோன்ற செய்திகளை இந்திய அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இந்த சமீபத்திய அறிக்கைக்கு அரசாங்கம் இன்னும் பதிலளிக்கவில்லை.

அறிக்கையில் என்ன இருக்கிறது?

இந்தியா, சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்.

பட மூலாதாரம், REUTERS

படக்குறிப்பு,

பிபிசி அலுவலகங்களில் சோதனை

கடந்த ஆண்டு இந்தியாவில் பல மனித உரிமை மீறல்கள், அடக்குமுறைகள், துன்புறுத்தல் சம்பவங்கள் நடந்துள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் கூறுகிறது. அந்த அமைப்பு தனது அறிக்கையில், இந்தியாவில் பாஜக தலைமையிலான அரசை இந்து தேசியவாத அரசு என்று கூறியுள்ளது.

கடந்த ஆண்டு சமூக சேவகர்கள், ஊடகவியலாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை அரசாங்கம் கைது செய்ததாகவும் கூறியுள்ளது. இவர்கள் மீது அரசியல் உள்நோக்கத்துடன் பயங்கரவாதம் உள்ளிட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, “அரசுத் துறைகளின் சோதனைகள், நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் மூலமும், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தைப் பயன்படுத்தியும் (அரசு சாரா நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதை கண்காணிக்கும் சட்டம்) பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் துன்புறுத்தப்பட்டனர்.”

அமைப்பின் ஆசிய துணை இயக்குநர் மீனாட்சி கங்குலி கூறுகையில், “பாஜக அரசின் பாரபட்சமான மற்றும் பிரித்தாளும் கொள்கைகளால் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது. இதனால் அரசை விமர்சிப்பவர்கள் மத்தியில் அச்ச உணர்வு உருவாகியுள்ளது,” என்றார்.

மேலும், “அரசாங்க இயந்திரம் சம்பந்தப்பட்டவர்களை கேள்வி கேட்காமல், பாதிக்கப்பட்டவர்களைத் தண்டித்து, கேள்வி எழுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது கவலையளிக்கும் விஷயம்,’’ என்றார்.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் யாவை?

இந்தியா, சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மணிப்பூர் வன்முறை

கடந்த ஆண்டு பிப்ரவரியில் பிபிசி அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகள், மணிப்பூர் வன்முறை மற்றும் தலைநகர் டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டங்கள் குறித்து அறிக்கை பேசுகிறது.

இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்ட ஆவணப்படம் தொடர்பாக டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் அரசு சோதனை நடத்தியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் நரேந்திர மோதியின் அரசு தோல்வியடைந்துவிட்டதாக ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்தியாவிலும் இந்த ஆவணப்படத்தை அரசாங்கம் தடுத்துள்ளது.

பிபிசி “இந்தியா: தி மோதி கொஸ்டீன்” (India: The Modi Question) என்ற பெயரில் இரண்டு அத்தியாயங்களைக் கொண்ட ஆவணப்படத்தை உருவாக்கியது. இதன் முதல் அத்தியாயம் ஜனவரி 17 அன்று பிரிட்டனில் ஒளிபரப்பப்பட்டது. இரண்டாவது எபிசோட் ஜனவரி 24 அன்று ஒளிபரப்பப்பட்டது.

முதல் அத்தியாயம் நரேந்திர மோதியின் ஆரம்பக்கால அரசியல் வாழ்க்கை பற்றியும், அவர் பாரதிய ஜனதா கட்சி சார்பாகப் போட்டியிட்டு குஜராத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றதையும் பேசியது.

நூஹ் நகரில் வகுப்புவாத வன்முறை

இந்தியா, சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

நூஹ் பகுதியில் இடிக்கப்பட்ட முஸ்லிம்களின் கடைகள்

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையின்படி, ஜூலை மாதம், ஹரியானாவில் உள்ள நூஹ் நகரில் இந்து மதத்தைப் பின்பற்றும் சிலர் ஊர்வலம் நடத்தினர், அப்போது அங்கு ஏற்பட்ட வன்முறை மிக வேகமாகப் பரவியது.

ஹரியானா அரசு முஸ்லிம்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததோடு மட்டுமல்லாது, பல முஸ்லிம்களின் சொத்துகளை அரசாங்கம் அழித்து, அவர்களைக் கைது செய்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, ஜூலை 31 அன்று, பஜ்ரங் தள் நூஹ் நகரில் ஒரு மத யாத்திரையை ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஆயிரக்கணக்கான பஜ்ரங் தள் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

நூஹ் நகரிலுள்ள கோவிலுக்கு முன்னால் யாத்திரை சென்றபோது, ​​கல் வீச்சு தொடங்கியது. சிறிது நேரத்தில் கூட்டத்தினர் தீவைப்பு சம்பவங்களில் ஈடுபடத் தொடங்கினர். நகரின் தெருக்களிலும் கோவிலுக்கு வெளியேயும் கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிலில் சிக்கியிருந்த ஏராளமானோர், நிர்வாகத்தின் உதவியுடன் மீட்கப்பட்டனர்.

அறிக்கையின்படி, இந்த விவகாரம் மிகவும் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம், பாஜக தலைமையிலான ஹரியானா அரசாங்கத்திடம் கடுமையான கேள்விகளைக் கேட்டது.

மணிப்பூரில் வன்முறை

இந்தியா, சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்.

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஆண்டு மே மாதம், நாட்டின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையான மெய்தேய் மற்றும் சிறுபான்மை குக்கி சமூகத்தினரிடையே கடுமையான வன்முறை வெடித்தது. பல வாரங்களாகத் தொடர்ந்த இந்த வன்முறையில், சுமார் 200 பேர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் தேவாலயங்கள் அழிக்கப்பட்டன.

தொடர் வன்முறை காரணமாக, இந்தப் பகுதியில் பல நாட்களுக்கு இணைய வசதி தடை செய்யப்பட்டது. குகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போதைப்பொருள் கடத்துவதாகவும், மியான்மரில் இருந்து வருபவர்களுக்கு அடைக்கலம் தருவதாகவும் அம்மாநில முதல்வர் என். பிரேன் சிங் குற்றம் சாட்டியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் அறிக்கை வன்முறையைத் தூண்டியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் இருந்து அதிகளவில் வரும் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளின் அச்சுறுத்தலை மணிப்பூர் எதிர்கொள்கிறது என்று கடந்த ஆண்டு மே 2ஆம் தேதி அவர் கூறியதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே 3ஆம் தேதி வன்முறை தொடங்கியது. மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பிரேன் சிங் தலைமையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி நடக்கிறது.

மணிப்பூரின் பெரும்பான்மையான மெய்தேய் சமூகம், பட்டியல் பழங்குடியினர் அந்தஸ்தை தங்களுக்கு வழங்க வேண்டுமென விரும்புகிறது. ஆனால் மலைகளில் வாழும் குக்கி மற்றும் நாகா பழங்குடியினர் இதற்கு எதிராக இருந்தனர்.

மெய்தேய் பழங்குடியினர் சங்கத்தின் மனுவை விசாரித்த மணிப்பூர் உயர்நீதிமன்றம், அதைப் பரிசீலிக்குமாறு மாநில அரசை கேட்டுக் கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து பழங்குடியின மாணவர் சங்கத்தினர் மே 3ஆம் தேதி, சூராசந்த்பூரில் ‘பழங்குடியினர் ஒற்றுமை பேரணி’ என்ற பெயரில் பேரணி நடத்தினர், அங்கிருந்து வன்முறை வெடித்தது.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. நிலைமை மாநில காவல்துறையின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. இந்தக் காலகட்டத்தில் நடந்த வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க சிறப்புக் குழுவை அமைக்குமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

இந்த விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையிலும் வருத்தம் தெரிவிக்கப்பட்டதுடன், மணிப்பூரில் பெண்கள் மற்றும் சிறுமிகளைக் குறிவைத்து நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை குறித்த செய்திகள் மற்றும் படங்கள் கவலை அளிப்பதாக அந்த அமைப்பு தெரிவித்தது.

ஜம்மு காஷ்மீர் வழக்கு

இந்தியா, சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்.

பட மூலாதாரம், TAUSEEF MUSTAFA/AFP VIA GETTY IMAGES

மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கையில், ஜம்மு காஷ்மீரில் கருத்து சுதந்திரம் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து குறிப்பிட்டுள்ளது. பாதுகாப்புப் படையினரால் நடந்ததாகக் கூறப்படும் சட்டத்திற்குப் புறம்பான மரணங்கள் குறித்தும் அறிக்கை பேசுகிறது.

ஆகஸ்ட் 5, 2019 அன்று, ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்பின் 370வது பிரிவை இந்திய அரசு ரத்து செய்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. ஜம்மு காஷ்மீரில் ஹுரியத் மாநாட்டின் தலைவர் மிர்வைஸ் உமர் ஃபாரூக், ஆகஸ்ட் 2019 முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.

இதற்கிடையில், சாமானியர்களின் மரணச் செய்திகளும் அங்கிருந்து வந்துகொண்டே இருக்கின்றன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. டிசம்பரில் பூஞ்ச் ​​மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, ராணுவம் 9 பேரை விசாரணைக்காக அழைத்துச் சென்றது. இதில் 3 பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம்

இந்தியா, சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்.

பட மூலாதாரம், @SAKSHIMALIK/TWITTER

கடந்த ஆண்டு முழுவதும், மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் நடத்திய போராட்டம் நாட்டின் ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டது.

பிரிஜ் பூஷண் ஷரண் சிங், கூட்டமைப்பின் தலைவராக இருந்தபோது, ​​பத்தாண்டுகளாக தங்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டியதாக அந்த அறிக்கை கூறுகிறது. இந்த மல்யுத்த வீராங்கனைகளில் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களும் அடங்குவர்.

பிரிஜ்பூஷன் சரண் சிங்கைக் காப்பாற்ற அரசாங்கம் முயன்றதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மல்யுத்த வீராங்கனைகள் நடத்திய போராட்டம் வலுக்கட்டாயமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும், அவர்கள் மிக மோசமான முறையில் நடத்தப்பட்டனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில், இந்திய மல்யுத்த சங்க தேர்தல் முடிவுகள் வந்தன, இதில் சங்கத்தின் முன்னாள் தலைவரும் பாஜக தலைவருமான பிரிஜ்பூஷன் ஷரன் சிங்குக்கு நெருக்கமான சஞ்சய் சிங் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்குப் பிறகு, ஒரு மல்யுத்த வீராங்கனை பத்திரிகையாளர் சந்திப்பில் மல்யுத்தத்தை விட்டு வெளியேறுவது பற்றி கண்ணீருடன் பேசினார். செய்தியாளர் சந்திப்பின்போது தனது காலணிகளை கழற்றி மேசையில் வைத்தார்.

வேறு சில மல்யுத்த வீரர்களும் தங்களுக்கு அரசு கொடுத்த விருதுகளைத் திருப்பிக் கொடுப்பதாகப் பேசினர். இதையடுத்து, மத்திய விளையாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து, மல்யுத்த சங்கத்தின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகியை இடைநீக்கம் செய்தது.

இந்தியா, சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்.

பட மூலாதாரம், ANI

கடந்த ஆண்டு இந்தியாவில் டிஜிட்டல் வசதிகளை அதிகரிக்க இந்திய அரசு உழைத்ததாகவும், இந்த வசதிகளை சாமானிய மக்களுக்கும் கிடைக்கச் செய்ய முயன்றதாகவும், ஆனால் இணைய வசதிகள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் தரவு பாதுகாப்பு இல்லாதது இந்த நோக்கத்தை அடைவதில் பெரும் தடையாக இருப்பதாகவும் அறிக்கை கூறியது.

அது தவிர, கிராமப்புறங்களுக்கு இணைய வசதியைக் கொண்டு செல்வதும் பெரும் பிரச்னையாக இருப்பதாகக் கூறுகிறது.

கடந்த ஆண்டு ஜி20 மாநாட்டிற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து, இந்தியா தலைமை தாங்கியதையும் மனித உரிமை கண்காணிப்பகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவின் முயற்சியின் காரணமாக, ஜி20 அமைப்பை மேலும் பரவலான அமைப்பாக மாற்ற ஆப்பிரிக்க ஒன்றியமும் ஜி20இல் நிரந்தர உறுப்பினராக ஆக்கப்பட்டது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *