பட மூலாதாரம், Getty Images
பெங்களரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சவும், வாகனங்கள் கழுவுவதற்கும் குடிநீரைப் பயன்படுத்தினால், ரூ 5,000 அபராதம் விதிக்கப்படும் என பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவின்படி, கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கும், கட்டுமானப் பணிகளுக்கும், வாகனங்களை சுத்தம் செய்யவும், மற்றும் இதர பொழுதுபோக்கு விஷயங்களுக்கும் மறு-சுத்திகரிக்கப்பட்ட நீரைப் பயன்படுத்தக்கோரி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மக்கள் அனைவரும் கூடுமானவரை குடிநீரை சேமிக்கும்படியும் அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 33 நீர் தொட்டிகளில் சுமார் 130 கோடி லிட்டர் தண்ணீர் தினமும் கிடைக்கிறது. இதைத்தவிர, தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் தினமும் 60 கோடி லிட்டர் அளவிலான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் இருக்கிறது. இவையே, குடிநீர் தவிர இதர பணிகளுக்கு போதுமானதாக இருக்கும்,” என பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் தலைவர் ராம் பிரசாத் மனோகர் கூறினார்.
திங்கள்கிழமை பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் சார்பில் ஒரு மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்படும் என்றும் அதன்மூலம் கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டுள்ளோர் தங்களுக்குத் தேவையான மறு-சுத்திகரிக்கப்பட்ட நீரை வாங்கிக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
சுத்திகரிக்கப்பட்ட நீரை எடுத்துச் செல்லும் தண்ணீர் லாரிகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படும். “அதனால், குடிநீரை எடுத்துச் செல்லும் லாரிகள் மற்றும் மறு-சுத்திகரிக்கப்பட்ட நீரை எடுத்துச் செல்லும் லாரிகளை மக்கள் அடியாளம் காண முடியும்,” என்றார்.
ஆனால், பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் இந்த சமீபத்திய நடவடிக்கை விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. குடிநீரை மாற்று விஷயங்களுக்காக பயன்படுத்துவதை எப்படி கண்டுபிடிக்க முடியும் என்றும், ஒவ்வொரு வீட்டையும் அதிகாரிகளால் சோதனையிட முடியாது என்றும் சிலர் விமர்சித்துள்ளனர்.
ஏன் இந்த தண்ணீர் பற்றாக்குறை?
பட மூலாதாரம், BANGALORE NEWS PHOTOS
பெங்களூருவில் தினமும் தேவைப்படும் குடிநீரில் சுமார் 20 கோடி லிட்டர் தண்ணீர் கிடைக்காதது தான் தற்போது குடிநீர் தட்டுப்பாட்டிற்கு காரணமாக உள்ளது.
பெங்களூரு நகரில் உள்ள சுமார் 1.5 கோடி மக்களுக்கு தினமும் 145 கோடி லிட்டர் தண்ணீர் 95 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து கொண்டு வரப்படுகிறது. மீதம் உள்ள 60 கோடி லிட்டர் தண்ணீர் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் பெறப்படுகிறது.
தென்-மேற்கு பருவ மழையும், வட-கிழக்கு பருவ மழையும் பொய்தும்போனதால், நிலத்தடி நீர் மட்டத்தின் அளவு குறைந்ததுதான் தற்போது குடிநீர் பற்றாக்குறைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, பெங்களூரு பெருநகரத்துடன் இணைக்கப்பட்ட 110 கிராமத்தைச் சேர்ந்த மக்கள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அசாதாரண சூழல் ஏற்பட காரணம் என்ன?
பட மூலாதாரம், Getty Images
சில அடுக்குமாடி குடியிருப்போர் சங்கங்களில், உறுப்பினர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே கார்களைக் கழுவ வேண்டும் என்றும், இன்னும் சில குடியிருப்போர் சங்கங்களில், மக்கள் அரை வாளி தண்ணீரில் தான் குளிக்க வேண்டம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆனால், இரண்டு கட்டடங்களில் 25 குடும்பங்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீரை சேமிக்க நூதன முறையை அமல்படுத்தியுள்ளனர்.
“மேல் உள்ள நான்கு மாடிகளுக்கு மோட்டார் மூலம் தண்ணீர் வழங்க முடியாது எனக் கூறியுள்ளனர். அதனால், நாங்கள் எங்களுக்கு தேவையான தண்ணீரை கீழே வந்து வாளியில் எடுத்துச் செல்ல வேண்டும். இதன் முழு நோக்கமும் நாங்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பது தான்,” என அந்த அடுக்குமாடி குடியிருப்பை நிர்வகிக்கும் நாகராஜூ கூறினார்.
“மூன்று போர்வெல்களும் வறண்டுவிட்டன. தலா 4,000 லிட்டர்கள் கொண்டு வரும் ஐந்து டேங்கர்கள் மூலம் தற்போது தண்ணீரை பெற்று வருகிறோம். முன்பு ஒரு டேங்கர் லாரிக்கு ரூ.700 செலுத்தி வந்தோம். இப்போது, ஒரு டேங்கருக்கு ரூ.1,000 செலுத்த வேண்டியுள்ளது,’’ என்றார்.
இந்தக் குடியிருப்புகள் பெங்களூருவின் எலெக்ட்ரானிக் சிட்டிக்கு மிக அருகில் உள்ள சோமசுந்ர்பால்யாவில் அமைந்துள்ளன.
என்ன பிரச்னை?
பட மூலாதாரம், Getty Images
கடந்த 2007 முதல் பெங்களூரு நகரின் ஒரு பகுதியாக மாறியுள்ள கிராமங்களில் உள்ள அளவுக்கு நகரத்தில் பிரச்னை இல்லை. இந்த கிராமங்களில் சில காவிரி குடிநீர் திட்டம்- ஸ்டேஜ்-4-ன் மூலமாக தண்ணீர் பெற்று வருகின்றன.
“காவிரி ஸ்டேஜ்-4 திட்டத்தில் இருந்து மகாதேவபுரத்திற்கு 35 எம்எல்டி (ஒரு நாளுக்கு 10 லட்சம் லிட்டர்) தண்ணீர் கிடைக்கிறது. ஆனால், 2013 முதல் தற்போது வரை, மகாதேவபுரத்தில் தினமும் 1,000 பேர் புதிதாக தங்க வருகிறார்கள். அதனால், புதிய குடியிருப்புகளும், வீடுகளும் இங்கு வந்துள்ளன. ஆனால் வழங்கப்படும் தண்ணீரின் அளவு மாறாமல் உள்ளது. இதனால் ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறையை டேங்கர் லாரி தண்ணீர் மூலம் பூர்த்தி செய்து கொண்டோம்,” என வைட்ஃபீல்ட் வார்டு 103-இல் வசிக்கும் முரளி கோவிந்தராஜுலு பிபிசியிடம் தெரிவித்தார்.
ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ருச்சி பஞ்சோலி வேறு ஒரு பிரச்னையையும் எழுப்புகிறார்.
“ஆறு முதல் எட்டு மாதங்களுக்கு நாங்கள் காவிரி நீரைப் பெற்று வந்தோம். அது நின்ற பிறகு, நாங்கள் எங்கள் வளாகத்தில் உள்ள 256 குடியிருப்புக்காக தண்ணீர் லாரி மூலம் குடிநீர் பெற்று வந்தோம். ஆனால், தற்போது கட்டுமானப்பணிகள் நடக்கத்தொடங்கியுள்ளது. அதற்கு அதிகளவு தண்ணீர் தேவைப்படுவதால், அதற்கும் சேர்த்து தண்ணீர் எடுக்கப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது,” என்றார் ருச்சி பஞ்சோலி.
“அவசர காலங்களில் மட்டும், ஒயிட்ஃபீல்டில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தண்ணீர் லாரிகள் 250 ரூபாய்க்கு வரவழைக்கப்பட்டன. ஆனால். தற்போது அதே தண்ணீர் லாரிகள் தங்களின் கட்டணத்தை ரூ.4,000-ஆக உயர்த்தியுள்ளன. இந்தத் தண்ணீர் தட்டுப்பாடு புதிய பிரச்னை இல்லை என்றாலும், முன்பு 250 அடி ஆழத்தில் கிடைத்த நீர், தற்போது 1,800 அடியில் தான் கிடைக்கிறது,” என்றார் பிரஜா சேனா சமிதியைச் சேர்ந்த என்.வி.மஞ்சுநாதா.
ஒரு புறம் பருவ மழை பொய்த்ததால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. மறுபுறம், சிவில் சமூக உறுப்பினர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் செயல்பாட்டின் காரணமாக புத்துயிர் பெற்ற ஏரிகளைத் தவிர, நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் உள்ள ஏரிகளும் கூட வறண்டு போயுள்ளன.
“பெரிய மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யப்படவில்லை. உதாரணமாக, வர்தூரில், ஆறு முதல் ஏழு ஏரிகள் உள்ளதால், மழை பெய்யாததால், நிலத்தடி நீர் ஆதாரங்களை நிரப்ப முடியவில்லை. இந்தப் பகுதியில் புனரமைக்கப்படாத பல ஏரிகள் உள்ளன,” என்று வர்தூர் ரைசிங்கைச் சேர்ந்த ஜெகதீஷ் ரெட்டி பிபிசியிடம் கூறினார்.
குடிமை ஆர்வலர் ஸ்ரீனிவாஸ் அல்வல்லி பிபிசியிடம் பேசுகையில், “பெங்களூருவின் மிகப்பெரிய பிரச்னையாக போக்குவரத்து நெரிசல் என்று அடிக்கடி கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் தண்ணீர்தான் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது,” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
மே மாதம் வரை மட்டுமே பிரச்சனை
பட மூலாதாரம், Getty Images
தற்போதைய நெருக்கடி அடுத்த 100 நாட்களுக்கு மேல் நீடிக்காது என்று அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கருதுகின்றனர்.
காவிரி நதிநீர் திட்டத்தின் பல்வேறு கட்டப் பணிகள் துவக்கப்பட்ட பின், மக்கள் தொகைப் பெருக்கம் அனைத்து கணிப்புகளையும் தாண்டியுள்ளது என்பதை உயர் அதிகாரிகள் ஒப்புக்கொள்கிறார்கள்.
“ஒட்டுமொத்தமாக, காவிரி நீர் வழங்கல் அமைப்பில் மிகப்பெரிய அழுத்தம் உள்ளது,” என்று பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் தலைவர் ராம் பிரசார்த் மனோகர் வி பிபிசியிடம் தெரிவித்தார்.
காவிரி நீர் வழங்கல் திட்டத்தின் 5-ஆம் கட்டம், முதலில், 2023-ஆம் ஆண்டின் மத்தியில் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகளாக கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட இடையூறு காரணமாக அது தாமதமானது. காவிரி 5வது கட்டம் முடிவடைந்தால், 110 கிராமங்களில் உள்ள 50 லட்சம் மக்கள் பயனடைவார்கள். இந்த திட்டத்திற்கு 4,112 கோடி ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
