
அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையிலான கூட்டணி முறிந்துவிட்டதாக இன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு, அ.தி.மு.க. அறிவித்துள்ளது.
கூட்டணியாக இருந்த பாரதீய ஜனதா கட்சிக்கும் அ.தி.மு.கவுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டிருந்த நிலையில், அ.தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 69 மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய பலரும் பா.ஜ.கவுடனான கூட்டணி தேவையில்லை என்பதையே வலியுறுத்திவந்தனர்.
இதற்குப் பிறகு, பா.ஜ.கவுடனான கூட்டணியிலிருந்து வெளியேறுவது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி அந்தத் தீர்மானத்தை வாசித்தார். “தேசிய ஜனநாயக் கூட்டணியில் உள்ள பா.ஜ.கவின் மாநிலத் தலைமை கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டு, வேண்டுமென்று, உள்நோக்கத்தோடு, அ.தி.மு.க. மீதும் பேரறிஞர் அண்ணாவையும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவையும் அவதூறாகப் பேசியும் எங்களது கொள்கைகளை விமர்சித்தும் வருகிறது.

மேலும் பா.ஜ.கவின் மாநிலத் தலைமை கடந்த 20.8.2023ல் மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும் எங்கள் பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல் கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்று பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் நடந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும் விருப்பத்திற்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து பா.ஜ.கவிலிருந்தும் தே.ஜ.கூட்டணியிலிருந்தும் அ.தி.மு.க. விலகிக்கொள்கிறது. வருகின்ற 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவின் தலைமையில் பொதுச் செயலாளர் தலைமையில் மற்ற கட்சிகளுடன் இணைந்து போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது” என அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
கூட்டணியிலிருந்து வெளியேறுவது என்ற அ.தி.மு.கவின் தீர்மானம் குறித்த அறிவிப்பு வெளியானதும் அங்கு கூடியிருந்த அக்கட்சியின் தொண்டர்கள் பெரும் உற்சாகத்துடன் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடினர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
