கர்பூரி தாக்கூர் : உயர் சாதியினரின் எதிரியாக கருதப்பட்டவருக்கு மோதி அரசு பாரத ரத்னா வழங்குவது ஏன்?

கர்பூரி தாக்கூர் : உயர் சாதியினரின் எதிரியாக கருதப்பட்டவருக்கு மோதி அரசு பாரத ரத்னா வழங்குவது ஏன்?

கர்பூரி தாக்கூர்

பட மூலாதாரம், RAMNATH THAKUR

படக்குறிப்பு,

முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூரின் பிறந்தநாள்

ஜனவரி 24ஆம் தேதிக்கான அரசியல் முக்கியத்துவம் பிகாரில் கடந்த சில ஆண்டுகளாகவே வேகமாக அதிகரித்து வருகிறது. முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூரின் பிறந்த நாளான இன்று, அவரது அரசியல் பாரம்பரியத்தை உரிமை கோருவதில் மாநிலத்தின் பிரதான அரசியல் கட்சிகளிடையே பரஸ்பர போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் அவரது நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது கர்பூரி தாக்கூருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிகார் மாநில உரிமைகளுக்காகவும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் தனது அரசியல் வாழ்க்கை முழுவதிலும் குரல் கொடுத்த ஒரு மாபெரும் தலைவராக அறியப்படும் இவரின் அரசியல் வரலாறு பிகார் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இது போன்ற சூழலில், எழும் கேள்வி என்னவென்றால் பீகாரின் 2% மக்கள்தொகையே கொண்ட முடிதிருத்துபவர் சமூகத்தின் மாபெரும் தலைவரான கர்பூரி தாக்கூர் இறந்து பல வருடங்கள் ஆனபோதும் கூட, அவரது அரசியல் பாரம்பரியம் குறித்து இத்தனை சர்ச்சை எழுவது ஏன்?

இதற்கு மிக முக்கிய காரணம், கர்பூரி தாக்கூர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் (EBC) மாபெரும் தலைவராக பார்க்கப்பட்டார். குறைந்த மக்கள்தொகை கொண்ட பல்வேறு சாதிகளின் குழுவான EBC- யில் 100க்கும் மேற்பட்ட சாதிகள் அடங்கியுள்ளன.

இவற்றில் தேர்தல் கணக்கின் அடிப்படையில் தனியாக எந்த சாதியும் முக்கியமாக கருதப்படுவதில்லை. ஆனால் ஒவ்வொன்றும் இணைந்து கூட்டாக 29 சதவீத வாக்கு வங்கியை கொண்டுள்ளது.

2005ஆம் ஆண்டு நிதிஷ் குமாரை முதல்வராக்கியதில் இந்தக் பிரிவினருக்கு முக்கிய பங்குள்ளது. இந்தக் கண்ணோட்டத்தில், பிகாரில் அரசியல் ரீதியாக இந்த பிரிவு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால், ஒவ்வொரு கட்சியும் இந்த வாக்கு வங்கியை தங்கள் அணியில் சேர்த்துக் கொள்ள விரும்புகின்றன.

கர்பூரி தாக்கூர்

பட மூலாதாரம், RAMNATH THAKUR

படக்குறிப்பு,

கர்பூரி தாக்கூர் பிகாரில் ஒரு சமூக இயக்கத்தின் அடையாளமாக இருந்து வருகிறார்

கர்பூரி தாக்கூரின் அரசியல்

உண்மையில் மண்டல் கமிஷன் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே, பிகார் அரசியலில் தன்னை போல பின்னணியில் இருந்து வரும் வேறு ஒருவர் அடைய முடியாத இடத்தை அடைந்திருந்தார் கர்பூரி தாகூர். பிகார் அரசியலில் ஏழைகளின் குரலாக அவர் கருதப்பட்டார்.

ஜனவரி 24, 1924 அன்று சமஸ்திபூரின் பிடவுஞ்சியா (தற்போதைய கர்பூரிகிராம்) பிறந்தவர் கர்பூரி தாக்கூர். இவர் பிகார் மாநிலத்தில் ஒரு முறை துணை முதல்வராகவும், இரண்டு முறை முதல்வராகவும், பல ஆண்டுகள் எம்எல்ஏவாகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். 1952ல் நடந்த முதல் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அவர் ஒருமுறை கூட தோல்வியே அடையவில்லை.

முதலமைச்சராக இருந்த இரண்டரை ஆண்டு காலத்தில் பிகார் சமூகத்தில் அவர் ஏற்படுத்திய தாக்கத்திற்கு வேறு உதாரணமே தேவையில்லை. அதிலும் இவர் பிகாரின் முதல் காங்கிரஸ் அல்லாத முதல்வர் என்பதுதான் சிறப்பு.

கர்பூரி தாக்கூர்

பட மூலாதாரம், RAMNATH THAKUR

படக்குறிப்பு,

இவரது முயற்சியின் மூலம் மிஷனரி பள்ளிகள் இந்தியில் கற்பிக்க தொடங்கினர்

சமூக மாற்றங்களின் தொடக்கம்

1967ஆம் ஆண்டு அவர் முதன்முதலில் துணை முதலமைச்சராக பதவியேற்ற போது, ஆங்கில மொழிக்கான தேவையை ஒழித்தார் கர்பூரி. இதற்காக பல விமர்சனங்களுக்கு உள்ளான போதிலும், இதன் மூலம் எளிய மக்களிடமும் கல்வியை எடுத்து சென்றார் என்றே அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த காலகட்டத்தில், மெட்ரிகுலேசன் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் ‘நான் கர்பூரி பிரிவில் தேர்ச்சி பெற்றேன்’ என்று சொல்லியே கேலி செய்யப்பட்டனர்.

மேலும் இந்த சமயத்தில், கல்வித்துறை அமைச்சர் பதவியையும் இவர் பெற்றார். இவரது முயற்சியின் மூலம் மிஷனரி பள்ளிகள் இந்தியில் கற்பிக்க தொடங்கினர். மேலும் இவர் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு பள்ளிக் கட்டணத்தையும் தள்ளுபடி செய்துள்ளார். இவர்தான் இந்தியாவிலேயே முதல்முறையாக மாநிலத்தில் மெட்ரிகுலேஷன் கல்வி வரை இலவச கல்வியாக அறிவித்த முதல்வராவார். மேலும் மாநிலத்தில் உருது மொழிக்கு இரண்டாவது அலுவல் மொழி அந்தஸ்து வழங்க பல்வேறு முயற்சிகளையும் எடுத்தார்.

1971ஆம் ஆண்டு முதலமைச்சரான பின், விவசாயிகளுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில் லாபம் இல்லாத நிலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வருவாய் வரியை நிறுத்தினார்.

பிகார் மாநிலத்தின் அப்போதைய தலைமை செயலக கட்டடத்தில் இருந்த மின்தூக்கி வசதி நான்காம் வகுப்பு ஊழியர்களுக்கு அனுமதிக்கப்படாமல் இருந்தது. தான் முதல்வராக பதவியேற்றவுடனேயே, அவர்களும் மின்தூக்கியை பயன்படுத்துவதை உறுதி செய்தார்.

1977ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக முதலமைச்சரான பிறகு, முங்கேரிலால் கமிஷன் மற்றும் மாநிலத்தில் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு ஆகியவற்றை அமல்படுத்தியதால் எப்போதும் உயர் சாதியினரின் எதிரியாக மாறினார் கர்பூரி தாக்கூர். ஆனாலும் அவர் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன்களுக்காக தொடர்ந்து பணியாற்றினார்.

முதலமைச்சராக இருந்த போது, மாநிலத்தின் அனைத்து துறைகளும் இந்தியில் பணியாற்றுவதை கட்டாயமாக்கினார். அது மட்டுமின்றி, மாநில அரசு ஊழியர்களுக்கும் ஒரே ஊதியக் குழுவை மாநிலத்தில் அமல்படுத்திய முதல் முதல்வரும் இவர்தான்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதில் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பு அளப்பரியது. வேலைவாய்ப்பு முகாம் நடத்தி 9000க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு ஒரே நேரத்தில் வேலை கொடுத்தார். இன்றுவரை, இவ்வளவு பெரிய அளவில் மாநிலத்தில் பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் மீண்டும் பணியமர்த்தப்படவில்லை.

அரசியலில் ஏழைகளின் குரலாக அறியப்பட்ட கர்பூரி இலக்கியம், கலை, கலாச்சாரம் ஆகியவற்றிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

கர்பூரி தாக்கூர்

பட மூலாதாரம், RAMNATH THAKUR

படக்குறிப்பு,

கர்பூரி இறந்தபோது, அவர் பெயரில் சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை.

“நேர்மையாக வாழ்ந்தவர்”

அரசியலில் தனது நீண்ட நெடிய பயணத்திற்கு பிறகு அவர் இறந்தபோது, அவர் பெயரில் சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை. பாட்னாவிலோ அல்லது அவரது பூர்வீக வீட்டிலோ அவரால் ஒரு அங்குல நிலம் கூட சேர்க்க முடியவில்லை. இன்னமும் அவரின் நேர்மை குறித்த பல கதைகளை பிகாரில் கேட்க முடியும்.

கர்பூரி தாக்கூர் முதலமைச்சராக இருந்த சமயத்தில் , அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் தனது வேலைக்காக அவரிடம் சிபாரிசுக்கு சென்றதாகவும், அதை கேட்டு கோபமடைந்த கர்பூரி, தன் சட்டைப் பையிலிருந்து ஐம்பது ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்து, “இந்த பணத்தில் சவரக்கத்தியை வாங்கி பூர்வீக தொழிலை செய்யுமாறு கூறியதாகவும்” கர்பூரி தாக்கூரோடு நெருக்கமாக பணிபுரிந்த சிலர் கூறுகின்றனர்.

இவர் முதலமைச்சராக இருந்த சமயத்தில், இவரது கிராமத்தை சேர்ந்த சில நிலவுடைமைதாரர்கள் இவரின் தந்தையை அவமானப்படுத்த முயற்சி செய்துள்ளனர். இந்த தகவல் பரவியதையடுத்து, மாவட்ட நீதிபதி அந்த இடத்திற்கு விரைந்து சென்று அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால், கர்பூரி தாக்கூர் அவரை தடுத்து ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் எல்லா கிராமங்களிலும் தான் அவமானப்படுத்தப் படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

மற்றுமொரு உதாரணமாக, கர்பூரி தாக்கூர் முதல்முறையாக துணை முதல்வர் அல்லது முதலமைச்சராக பதவியேற்ற போது தனது மகன் ராம்நாத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதம் குறித்து ராம்நாத் கூறுகையில், “அதில் மூன்று விஷயங்கள் மட்டுமே எழுதப்பட்டிருந்தது, இதன் மூலம் நீ பலனடைய கூடாது. அப்படி யாரவது தூண்டினால் அதற்கு நீ ஆளாகி விடாதே. என் மீது அவதூறு சுமத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

கர்பூரி தாக்கூர்

“எளிமையாக வாழ்ந்த” கர்பூரி மீதான விமர்சனங்கள் என்னென்ன?

தனது தந்தையின் எளிமை குறித்து ராம்நாத் ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார், “ஜனநாயக் 1952இல் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். ஒரு தூதுக்குழுவின் நிமித்தமாக ஆஸ்திரியா செல்ல வேண்டியிருந்தது. ஆனால், அவரிடம் ஒரு கோட் இல்லை. அதற்காக நண்பர் ஒருவரிடம் அவர் உதவி கேட்க வேண்டியிருந்தது. அங்கிருந்து அவர் யூகோஸ்லாவியாவுக்குச் சென்றார். அப்போது அவரது கோட் கிழிந்திருப்பதைக் கண்டு மார்ஷல் டிட்டோ அவருக்கு ஒரு கோட்டை அன்பளிப்பாக வழங்கினார்.”

எளிமையானவராகக் கருதப்பட்டாலும் அவர் மீதான விமர்சனங்களும் இல்லாமல் இல்லை.

கர்பூரி தாக்கூர்

பட மூலாதாரம், RAMNATH THAKUR

பிகார் அரசியலில் அவர் கட்சி தாவியது மற்றும் அழுத்தத்திற்கு மத்தியில் அரசியல் செய்ததாகவும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். அவர் அரசியல் ஏமாற்று வித்தையில் வல்லவர் என்றும் விமர்சனம் செய்யப்பட்டார். சாதி சமன்பாடுகளை வைத்து தேர்தலில் வேட்பாளர்களை தீர்மானிப்பதில் அவரது பங்கு குறித்து மக்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பினர்.

ஆட்சி அமைக்க நெகிழ்ச்சியான அணுகுமுறையைக் கடைப்பிடித்து, எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தாலும், ஆட்சி தன் விருப்பம் போல் நடக்கவில்லை என்றால் கூட்டணியை உடைத்து விட்டு வெளியேறிவிடுவார் என்றும் விமர்சிக்கப்பட்டார்.

இதனாலேயே அவரது நண்பர்கள் மற்றும் எதிரிகள் என இரு அணியினரும் அவரின் அரசியல் முடிவுகள் குறித்து நிச்சயமற்றவர்களாக இருந்தனர். பிப்ரவரி 17, 1988 அன்று தனது 64வது வயதில் மாரடைப்பால் இறந்தார் கர்பூரி தாக்கூர்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *