பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்: நவாஸ் ஷெரீப், இம்ரான் கான் இருவரில் யார் முன்னிலை – சமீபத்திய நிலவரம் என்ன?

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்: நவாஸ் ஷெரீப், இம்ரான் கான் இருவரில் யார் முன்னிலை - சமீபத்திய நிலவரம் என்ன?

பாகிஸ்தான் பொதுத்தேர்தல், நவாஸ் ஷெரீப், இம்ரான் கான்

பட மூலாதாரம், Getty Images

நேற்று (வியாழன், பிப்ரவரி 8) நடந்த பாகிஸ்தான் பொதுத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது, முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, நவாஸ் ஷெரீப் மற்றும் இம்ரான் கான் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

சுமார் 63 தொகுதிகளுக்கு தற்காலிக முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்னும் 200 தொகுதிகளுக்கு மேல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

இதுவரை 51 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணப்பட்ட நிலையில், நவாஸ் ஷெரீப்பின் ‘பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ்’ (PML-N) கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவுடன் போட்டியிட்ட சுயேட்சைகள் 14 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர், என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) இதுவரை மொத்தம் 12 இடங்களை வென்றுள்ளதாகவும், மற்றவை கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) உடன் தொடர்பில்லாத சிறிய கட்சிகள் அல்லது சுயேட்சைகளால் வென்றுள்ளதாகவும் செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் கூறுகிறது.

இம்ரான் கானின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றிபெற்றிருப்பது ஆச்சரியமளிப்பதாக அந்நாட்டு பத்திர்கைகள் கருத்து தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் பொதுத்தேர்தல், நவாஸ் ஷெரீப், இம்ரான் கான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தேர்தலின்போது செல்போன் இணைப்புகள், இணைய வசதி ஆகியவை அதிகாரிகளால் இடைநிறுத்தப்பட்டன

சர்ச்சைகளுக்கு இடையே நடந்து முடிந்த தேர்தல்

பல சர்ச்சைகளுக்கிடையே பாகிஸ்தனின் தேர்தல் நேற்று (வியாழன், பிப்ரவரி 8)நடந்து முடிந்தது. இதில் கோடிக்கணக்கான மக்கள் வாக்களித்தனர்.

தேர்தலின்போது செல்போன் இணைப்புகள், இணைய வசதி ஆகியவை அதிகாரிகளால் இடைநிறுத்தப்பட்டன. பயங்கரவாத சம்பவங்கள் நிகழாமல் தடுக்க இந்த நடவடிக்கை அவசியமானது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

முன்னாள் பிரதமரும் கிரிக்கெட் வீரரும் அரசியல்வாதியுமான இம்ரான் கான் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் வெளியேற்றப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தேர்தல் நடந்துள்ளது.

பல ஆய்வாளர்கள் இந்தத் தேர்தலை பாகிஸ்தானின் நம்பகத்தன்மை இல்லாத தேர்தல் என்று கூறியுள்ளனர். கடந்த ஆண்டு ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட இம்ரான் கானின் கட்சி இணைய வசதி இடைநிறுத்தப்பட்டதை ‘கோழைத்தனமான செயல்’ என்று விமர்சித்தது.

பாகிஸ்தான் பொதுத்தேர்தல், நவாஸ் ஷெரீப், இம்ரான் கான்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு,

நவாஸ் ஷெரீப்

யார் இந்த நவாஸ் ஷெரீப்?

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானை விட்டு வெளியேறி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு லாகூர் தொகுதியில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2019-ஆம் ஆண்டில், உடல்நிலை காரணமாக அவர் ஜாமீனுக்கு மனு செய்ய அனுமதிக்கப்பட்டார். அவர் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் பொது பதவியில் இருக்க தடை விதிக்கப்பட்டார்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் லண்டனில் இருந்து தாயகம் திரும்பி, சிறைபடுத்தப்பட்டுள்ள தனது பரம எதிரியான இம்ரான் கானின் கட்சிக்கு எதிராக தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டார்.

ஷரீப்புக்கு அரசியல் மறுபிரவேசம் ஒன்றும் புதிதல்ல. 1999-இல் நடந்த இராணுவம் அவரது இரண்டாவது பதவிக்காலத்தை கவிழ்த்த பிறகு, 2013-ஆம் ஆண்டில் சாதனையாக மூன்றாவது முறையாக பிரதமரானார்.

பாகிஸ்தான் பொதுத்தேர்தல், நவாஸ் ஷெரீப், இம்ரான் கான்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

இம்ரான் கான்

சிறைபிடிக்கப்பட்டும் ஆதிக்கம் செலுத்தும் இம்ரான் கான்

இம்ரான் கான் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டாலும், தேர்தலில் தவிர்க்கமுடியாத சக்தியாகத் தொடர்கிறார். கணிப்புகளின்படி, 101 நாடாளுமன்றத் தொகுதிகளில் 47 இடங்களில் அவரது பிடிஐ ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

சிலருக்கு, கான் ஒரு புரட்சிகரமான ஹீரோ. அவரது எதிரிகளுக்கு, அவர் அதிகார வெறிபிடித்தவர் மற்றும் ஊழல்வாதி.

தேர்தலில் வென்று நான்கே ஆண்டுகளுக்குப் பிறகு, 2022-இல் அவர் எதிரிகளால் பாராளுமன்ற பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் இப்போது ஊழல் மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகள் உட்பட 170-க்கும் மேற்பட்ட வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார். இது அவரை தேர்தலில் இருந்து வெளியேற்ற அரசியல் உள்நோக்கம் கொண்ட முயற்சி என்று அவர் கூறுகிறார்.

ஆனால் அவர் இன்னும் கணிசமான ஆதரவைக் கொண்டுள்ளார். அவர் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இரவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாகிஸ்தான் முழுவதும் போராட்டம் நடத்தினர்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *