ஓப்பன்ஹெய்மர்: கிறிஸ்டோபர் நோலன் செய்துள்ள அதிசயங்கள் என்ன? திரைக்கதை எப்படி இருக்கும்?

ஓப்பன்ஹெய்மர்: கிறிஸ்டோபர் நோலன் செய்துள்ள அதிசயங்கள் என்ன? திரைக்கதை எப்படி இருக்கும்?

விஞ்ஞானியின் அற்புதமான கதை

பட மூலாதாரம், Universal

படக்குறிப்பு,

கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் படத்தின் கதாநாயகனாக சிலியன் மர்ஃபி நடித்துள்ளார்.

அமெரிக்காவில் நடந்த 96வது ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ஓப்பன்ஹெய்மர், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த இசை, சிறந்த எடிட்டிங், சிறந்த ஒளிப்பதிவு ஆகிய பிரிவுகளில் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் அணுகுண்டை உருவாக்கிய விஞ்ஞானியின் கதையைச் சொல்கிறது. இது தைரியமான கற்பனை மூலம் உருவாக்கப்பட்ட மிகவும் நேர்த்தியான படைப்பு என விமர்சிக்கப்படுகிறது.

ஓப்பன்ஹெய்மர் படம் முழுவதும் மிகப்பெரும் குண்டு வெடிப்புகள், பயங்கர நெருப்புடன் கூடிய காட்சிகளே நிரம்பியுள்ளன. சில காட்சிகளில் ஆயிரம் எரிமலைகள் வெடித்துச் சிதறி அனைத்தையும் நெருப்பில் மூழ்கடிக்கப் போவது போலத் தோன்றும்.

ஆனால், கிறிஸ்டோபர் நோலனின் பிரம்மாண்டமான திரைப்படத்தில் இதுபோன்ற காட்சிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன எனக் கருத முடியாது.

அணுகுண்டை உருவாக்க உதவிய ஒரு விஞ்ஞானியின் கதையை உணர்வுகளுடன் கலந்து இந்தப் படம் நமக்குக் காட்டுகிறது. அவரது வாழ்நாள் முழுவதும் கொடிய அனுபவங்களுடன் அவர் போராட்டம் நடத்தியது பற்றிய காட்சிகளும் நமக்குக் கிடைக்கின்றன.

மேலும் சில காட்சிகள் வெற்று இருட்டையும், ஓப்பன்ஹெய்மரின் மனதை ஆக்கிரமித்த அச்சத்தையும், அறிவியலையும் ஆரஞ்சு நிற ஒளியின் இழைகளுடன் சித்தரிக்கின்றன.

உணர்வுப்பூர்வமான கதை மற்றும் திரைக்கதையை ஒருபோதும் இழக்காமல் கொண்டு செல்லும் இப்படத்தில் கலைநயமிக்க காட்சிகளும் ஆங்காங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்தக் காட்சிகள் இந்தப் படத்தின் கதை எவ்வளவு தைரியமான கற்பனையின் அடிப்படையில் உறுதியான போக்கில் செல்கிறது என்பதை வெளிப்படுத்தும் விதத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஓப்பன்ஹெய்மர் என்பது கிறிஸ்டோபர் நோலனின் மிகவும் முதிர்ந்த படைப்புத் திறனை வெளிப்படுத்தும் திரைப்படம் என்பதை யாரும் மறுக்க முடியாது. குண்டுவெடிப்புகளுடன், கிறிஸ்டோபர் நோலனின் முந்தைய ஒரு திரைப்படமான ‘தி டார்க் நைட்’ படத்தில் இருந்த காட்சிகளைப் போன்ற தோற்றமும் இந்தப் படத்தில் காணப்படுகிறது.

குளிர்ந்த நீல நிறக் கண்களுடன் இருக்கும் சிலியன் மர்ஃபி, ராபர்ட் ஓப்பன்ஹெய்மராக இப்படத்தில் நடித்துள்ளார். படம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் அவர், கவர்ச்சியான மற்றும் கண்களுக்குக் குளிர்ச்சியான கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமான ஒரு கதாநாயகனாகவே தமது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஐரோப்பாவில் ஓப்பன்ஹெய்மரின் மாணவப் பருவத்திலிருந்து கதை தொடங்குகிறது. பிறகு, 1930களில் கலிஃபோர்னியாவில் பேராசிரியராக இருந்த காலத்தின் ஊடாக கதை நகர்கிறது.

பின்னர் நியூ மெக்சிகோவின் லாஸ் அலமோஸில் அணு ஆயுதங்களை உருவாக்கும் அமெரிக்க அரசின் மன்ஹாட்டன் திட்டத்தில் இணைந்து, இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக வெடிகுண்டுகளைத் தயாரிக்க அவரது குழுவினருடன் பயணித்தது வரை இப்படத்தின் கதை நம்மை அழைத்துச் செல்கிறது.

விஞ்ஞானியின் அற்புதமான கதை

பட மூலாதாரம், UNIVERSAL PICTURES

படக்குறிப்பு,

ஓப்பன்ஹெய்மர் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள சிலியன் மஃர்பி, இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் 5 படங்களில் ஏற்கெனவே நடித்துள்ளார்.

மர்ஃபியின் கதாபாத்திரம் கொஞ்சம் கடினமாகத் தோன்றினாலும், அவர் நம்மை படம் முழுக்க பார்வையாளர்களைத் தன்னுடன் மிக நெருக்கமாக அழைத்துச் செல்ல முயன்றுள்ளார்.

காய் பேர்ட், மார்ட்டின் ஜே ஷெர்வின் ஆகியோர் எழுதிய ‘அமெரிக்கன் ப்ரோமிதியஸ்: தி ட்ரையம்ப் அண்ட் ட்ராஜெடி ஆஃப் ஜே ராபர்ட் ஓப்பன்ஹெய்மர்’ (American Prometheus: The Triumph and Tragedy of J Robert Oppenheimer) என்ற வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு கிறிஸ்டோபர் நோலன் இந்தத் திரைப்படத்தை எடுத்துள்ளார்.

மேலும் அந்தத் தலைப்பு நமக்குக் காட்டும் விவரணையை அப்படியே அவர் காட்சிப்படுத்தியுள்ளார். நவீன உலகை வடிவமைக்க உதவிய ஒரு மாபெரும் விஞ்ஞானி, பிற்காலத்தில் அமெரிக்க அரசியலுக்குப் பலியாகி வேதனையின் உச்சத்தில் தவித்த கதை தத்ரூபமாகப் படமாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம், ஓப்பன்ஹெய்மர், அவரது விரோதியும், அமெரிக்க அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவருமான லூயிஸ் ஸ்ட்ராஸ் (ராபர்ட் டவுனி ஜூனியர்) ஆகியோருக்கு இடையே நடக்கும் நேருக்கு நேர் மோதலை அடிப்படையாகக் கொண்ட காட்சிகளை நம் கண்முன்னே நிறுத்துகிறது.

படம் முழுவதும், கிறிஸ்டோபர் நோலனின் திரைக்கதை, 1950களில் அமெரிக்க அரசின் இரண்டு விசாரணைகளுக்கு இடையே முன்னும் பின்னுமாக நடைபெற்ற சம்பவங்களைக் காட்டுகிறது.

இந்த விசாரணைகளின்போது, நீதிமன்றத்தில் நடைபெற்ற பதற்றம் நிறைந்த விசாரணைக் காட்சிகள் துல்லியமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. இதில், ஓப்பன்ஹெய்மரின் நீண்ட வாழ்நாட்களின் இடையே நடைபெற்ற பல முன்கதைகள் அற்புதமாக விவரிக்கப்பட்டுள்ளன.

கடந்த 1950களில் அமெரிக்காவின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, ஆளுமை மிக்க நபராக ஓப்பன்ஹெய்மர் இருந்தார். ஆனால் அவர் ஒரு ‘கம்யூனிச அச்சுறுத்தல்’ என்ற பொய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பல்வேறு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு அவருக்கு எதிராக ஏராளமான கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

படத்தின் பெரும்பகுதிக்கான திரைக்கதை ஓப்பன்ஹெய்மரின் பார்வையை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான வண்ணங்களின் பின்னணியில், பரந்த திரையில் அற்புதமான காட்சிகளை இப்படம் வழங்குகிறது.

வர்த்தகத் துறைச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டது குறித்த வாக்கெடுப்பின்போது, நாடாளுமன்ற விசாரணைக்குழுவின் முன்பு அவர் கேள்விகளை எதிர்கொண்டது குறித்த கருப்பு வெள்ளைக் காட்சிகள், ஒரு சிறிய அறைக்குள் சிக்கி, வேண்டுமென்றே அவதிப்படும் உணர்வை வெளிப்படுத்துகின்றன.

இவை, மெமெண்டோ படத்தில் இருப்பதைப் போல், முன்னர் காட்டப்படும் காட்சிகளை முறியடிக்கும் வகையில் பின்னர் காட்டப்பட்டும் காட்சிகளாக உள்ளன.

படத்தின் கதை மெதுவாக நகர்கிறது. ஆனால் படம் மூன்று மணிநேரத்துக்கும் மேல் ஓடினாலும், எவ்வளவு நேரம் போகும் என்பதை அரிதாகவே உணரத் தொடங்குகிறீர்கள்.

கலிஃபோர்னியாவில், ஜீன் டாட்லாக் (ஃபுளோரன்ஸ் ப்யூ) என்ற கம்யூனிச கொள்கைகளைக் கொண்ட, உணர்வுகளின் அடிப்படையில் பலவீனமான, நிலையற்ற தன்மையுடன் கூடிய இளம் யுவதியுடன் ஓப்பன்ஹெய்மர் ஒரு விவகாரத்தைத் தொடங்குகிறார்.

ஒரு காட்சியில், ஓப்பன்ஹெய்மருடனான பாலுறவுக்குப் பிறகு, அவர் ஒரு சமஸ்கிருத பகவத் கீதையை அலமாரியில் வைத்திருந்ததை அந்த இளம்பெண் காண்கிறார். அந்தப் புத்தகத்தில் என்ன எழுதியிருக்கிறது என்பதைத் தனக்குப் படித்துக் காண்பிக்குமாறு ஓப்பன்ஹெய்மரிடம் அவர் கேட்கிறார்.

ஓப்பன்ஹெய்மர் தமக்கு மிகவும் பிடித்தமான பகவத் கீதையின் வரிகளைப் படித்துக் காட்டி, அவற்றின் பொருளை விளக்குகிறார். லாஸ் அலமோஸில் முதன்முதலாக நடைபெற்ற அணுகுண்டு சோதனையின்போது அந்த வரிகள் அவரைப் பாதித்ததாக பிற்காலத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஓப்பன்ஹெய்மர் தெரிவித்திருந்தார்.

பகவத் கீதையில் கிருஷ்ணர் அர்ச்சுனனுடன் பேசிக்கொண்டிருந்த போது, “நானே காலம். உலகங்களை அழிக்க வந்த காலதேவன்,” எனக் கூறுகிறார். பகவத் கீதையை நன்கு அறிந்திருந்தவரான ஓப்பன்ஹெய்மர், ட்ரினிட்டி எனப் பெயரிடப்பட்ட அந்த முதல் அணுகுண்டு வெடிப்பு சோதனையின்போது, கிருஷ்ணரின் இந்த வரிகளை மேற்கோள் காட்டி, “நான் இப்போது உலகங்களை அழிக்கும் எமனாக மாறிவிட்டேன்,” என்கிறார்.

இந்த வரிகள் ஒரு பாலுறவுக் காட்சியில் பயன்படுத்தப்பட்டிருப்பது இயக்குநரின் திடுக்கிடும் தேர்வாக இருக்கிறது. பின்னர் நோலனின் காதல் காட்சியைக் காண்பிக்கும்போது, அவர்கள் இருவரும் நிர்வாணமாக ஆளுக்கொரு இருக்கையில் அமர்ந்திருக்கின்றனர். நெருக்கத்தையும், தூரத்தையும் வேறுபடுத்திப் பரிந்துரைக்கும் ஒரு நேர்த்தியான காட்சியாக இது அமைக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானியின் அற்புதமான கதை

பட மூலாதாரம், UNIVERSAL PICTURES

படக்குறிப்பு,

ஓப்பன்ஹெய்மரிடம் காதல்வயப்பட்ட அமெரிக்க மனநல மருத்துவரான ஜீன் டாட்லாக் வேடத்தில் ஃபுளோரன்ஸ் ப்யூ நடித்துள்ளார்.

மற்ற பெரிய கதாபாத்திரங்களைப் போலவே ஃப்ளோரன்ஸ் ப்யூ சிறிய பாத்திரத்தில் அனைவரையும் ஈர்க்கிறார். ஓப்பன்ஹெய்மரின் மனைவி கிட்டியாக நடித்த எமிலி பிளண்ட் கூட பெரும்பாலான நேரத்தை கதையின் பின்னணியில் செலவிடுகிறார்.

படத்தின் பிற்பகுதியில், இடம்பெற்றுள்ள இரண்டு முக்கிய காட்சிகளில், கிட்டி ஏன் தனக்கான ஒரு சக்தியாக இருந்தார் என்பதை அவர் காட்டுகிறார். அமெரிக்க ராணுவத்தின் மான்ஹாட்டன் திட்டத்தை ஏற்றுச் செயல்படுத்திய ராணுவ ஜெனரல் லெஸ்லி க்ரோவ்ஸின் கதாபாத்திரத்தை மாட் டாமன் ஏற்று நடித்துள்ளார்.

ஓப்பன்ஹெய்மரின் வழிகாட்டியாகவும், மனசாட்சியாகவும் சில காலம் செயல்பட்ட இயற்பியலாளர் நீல்ஸ் போரின் கதாபாத்திரத்தை கென்னத் ப்ரனா ஏற்று நடித்துள்ளார். ஆனால் டவுனி ஒரு முக்கியமான துணை கதாபாத்திரமாக உள்ளது. அவர் தந்திரமான, பாதுகாப்பற்ற, சக்தி வாய்ந்த ஸ்ட்ராஸாக ஒரு புத்திசாலித்தனமான, ஆற்றல்மிக்க செயல்திறனை தனது நடிப்பில் கொடுக்கிறார்.

இயற்பியல் ஆராய்ச்சியாளர்கள் ஓப்பன்ஹெய்மரை சுற்றி விவாதம் செய்யும்போதுகூட, இந்தப் படம் வெடிகுண்டு பற்றிய அறிவியலை விளக்கவில்லை, விளக்க முயலவுமில்லை. லாஸ் அலமோஸில், பரந்த பாலைவனத்தில் தவிர்க்க முடியாத சோதனையை நோக்கி கதை செல்லும்போது பதற்றம் அதிகரிக்கிறது.

டிரினிட்டி சம்பவத்துக்கு முந்தைய இரவு ஒரு பேய் மழை பெய்கிறது. குண்டுவெடிப்பு நிகழும்போது ஓப்பன்ஹெய்மர் சிறிது தொலைவில் ஒரு சிறிய குடிசையில் இருக்கிறார், மற்றவர்கள் கண்களைப் பாதுகாப்பாக மூடிக் கொண்டு தரையில் தட்டையாகப் படுத்துக் கிடக்கிறார்கள்.

அப்போது, திரையில் இருந்து பயங்கர நெருப்பு நம்மை நோக்கி கர்ஜிப்பது போலத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து ஒரு மயான அமைதி நிலவுகிறது. அந்த அதிர்ச்சியூட்டும், அதிவேகமான காட்சி மட்டுமே நோலன் விரும்பும் ஐமாக்ஸ் வடிவத்திலான படப்பிடிப்பை நியாயப்படுத்துகிறது (அது நடிகர்களின் முகத்தில் உள்ள ஒவ்வொரு ரேகை வடிவிலான வரியையும், சிறிய துளைகளையும் காட்டுகிறது).

இயற்பியலாளர் எட்வர்ட் டெல்லெர் (பென்னி சாஃப்டி), ஓப்பன்ஹெய்மர் ஓர் இயற்பியலாளரைப் போல் செயல்படாமல், அரசியல்வாதி போல் செயல்படுவதாக குற்றச்சாட்டை முன்வைக்கிறார். ஆனால் அவர் தியாகியைப் போல் நடிப்பதாக கிட்டி சொல்கிறார்.

இயக்குநர் நோலன் பயன்படுத்தியுள்ள இந்த கதாபாத்திரம், தன்னால் நேர்மையாகப் பேச முடியும் என்று தவறாக நம்பிய ஒருவருடையது. அந்த கதாபாத்திரம் அதிபர் ட்ரூமனிடம் அணு ஆயுதம் தயாரிப்பதை தவிர்க்குமாறு வலியுறுத்துகிறது.

ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீச வேண்டும் என்றும் வலியுறுத்தும் அவர், அதன் பிறகு அணு ஆயுதப் போர் என்பது யாரும் நினைக்க முடியாத ஒன்றாக இருக்கும் என்கிறார். அவர் அதைப் பற்றி நினைத்துப் பார்க்கிறார்.

அதன்பின், அவர் நினைத்துப் பார்ப்பதுபோல், ஹிரோஷிமாவில் இருந்து நமக்குப் பல காட்சிகள் கிடைக்கின்றன. அவற்றில் ஒரு பெண்ணின் உடலிலுள்ள தோல் முழுவதும் உரிந்து போனது போல் இருக்கும் காட்சியும் ஒன்று.

இந்தப் படம், ஓப்பன்ஹெய்மரின் சொந்த கண்டுபிடிப்பில் இருந்து எதிர்காலத்தை அழிவின் ஆபத்திலிருந்து காப்பாற்ற முடியாது என்பதே அவருடைய மிகப் பெரிய சோகம் என்பதை விவரிக்கும் ஒரு முயற்சியாகவே இருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *